மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரதமர் திரு.உருத்திரகுமார் நேர்காணல்

ஆச்சாரி

Jun 1, 2012

பல நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி ஜனநாயக முறைப்படி நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. உருத்திரகுமார் அவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நார்வே உட்பட பனிரெண்டு நாடுகளில் செயல்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசின் கொள்கைகள் மற்றும் விவரங்களை http://www.tgte-us.org இணையதளத்தில் காணலாம்.  நேர்காணலில் திரு. உருத்திரகுமார் அவர்களுடன் உரையாடி இருப்பவர் திரு. சாகுல் அமீது.

 

சிறகு: உங்களின் வாழ்க்கை, பின்னணி அதைப்பற்றி கூறுங்கள்.

திரு.உருத்திரகுமார்: நான் சட்டத் திறனியாக நியூயார்க் நகரில் கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். தமிழீழ விடுதலை போராட்டத்தின்போது சுயநிர்ணய உரிமைதான் என்னுடைய கல்வியின் அடிப்படையாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் எங்களுடைய போராட்டம் சுய நிர்ணய போராட்டமாக இருந்தபடியால், போராட்டத்திற்கு சட்ட அந்தஸ்தை பெற்றுக்கொள்ள அந்த கல்வி பயின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நார்வே அனுசரணையுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகனாக அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல வருடங்களாக சுயநிர்ணய அடிப்படையில் போராட்டத்திற்கான எனது பங்களிப்பையும் செய்துவருகிறேன்.

சிறகு: நாடு கடந்த தமிழீழ அரசு தொடங்கப்பட்ட சூழ்நிலை, பின்னணி, அதன் முக்கியமான நோக்கம் என்ன என்று விளக்குங்கள்.

திரு.உருத்திரகுமார்: இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அரசியல் வழி இருக்கவில்லை. அந்த அரசியல் வழி இல்லாத காரணத்தால் எங்கள் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இலங்கையில் உள்ளது. அதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டம் வந்தது. ஆயுதப் போராட்டம் நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசை உருவாக்கியது. அந்த நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசு அரசியல் வழியை நமக்குத் தந்துள்ளது. அந்த நிகழ்வுபூர்வ அரசின் மூலம் நாங்கள் எங்கள் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு துரதிருஷ்டவசமாக அந்த நிகழ்வுபூர்வ தமிழீழ அரசு அழிக்கப்பட்டபோது அரசியல் வழியும் அழிந்துபோனது. எனவே இலங்கையில் தமிழ் மக்களுக்கு திறந்த அரசியல் வழி இல்லை. குறிப்பாக ஆறாவது அம்ச அரசியல் சட்டத் திருத்தம் எங்கள் அரசியல் அமைப்பில் உள்ளது. அந்த ஆறாவது அம்ச சட்டத் திருத்தத்தின் கீழ் சுதந்திர தமிழீழம் கேட்பது –சாத்வீக முறையில் அகிம்சை முறையில் கேட்பது கூட கிரிமினல் குற்றமாக பாவிக்கப்பட்டது. எனவே அரசியல் அமைப்பின் ஊடாகவும் சரி –அங்குள்ள ராணுவ கெடுபிடியாலும் அடக்குமுறையாலும் ஒரு அரசியல் வழி இல்லை. தாயகத்தில் அரசியல் வழி அற்ற காரணத்தால் அரசியல் வழி துவக்க வேண்டிய பொறுப்பை நாங்கள் உணர்ந்தோம். எங்களுக்கு திறந்த அரசியல் வழி தேவை என்ற அடிப்படையில் துவக்கினோம். அந்த அரசியல் வழியில்கூட –ஜனநாயக ரீதியில் அந்த அரசியல் உரிமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி பன்னிரண்டு நாடுகளில் தேர்தலை நடத்தி  – தேர்தல் நடத்த முடியாத நாடுகளில் உறுப்பினர்களை நியமித்து அரசியல் வழியில் ஜனநாயக ரீதியாக எங்கள் அரசியல் விருப்பங்களை எடுத்து சொல்கிறோம்.

சிறகு: நாடு கடந்த தமிழீழ அரசு பன்னிரண்டு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொன்னீர்கள். அதன் தலைமையகம் அமெரிக்காவில் செயல்படுவது போல் தெரிகிறது. எந்தெந்த நாடுகள் இதில் பங்கு பெற்றுள்ளன? குறிப்பாக தமிழகம் இருக்கிறதா?

திரு.உருத்திரகுமார்: அமெரிக்காவை தலைமையகம் என்று கூறமுடியாது. அமெரிக்காவில் நான் இருப்பதால் இங்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர தலைமையகம் அமெரிக்காவில் இல்லை. செயலகத்தை ஜெனீவாவில் வைத்திருக்கிறோம். பன்னிரண்டு நாடுகளில் தேர்தல்களை வைத்தோம் என்று கூறி இருந்தேன். இந்தியாவிலும் தேர்தல்களை வைத்து ஈழத் தமிழ் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக செயல் திட்டங்களை மேற்கொண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவில் தேர்தல்களை வைத்து பிரதிநிதகளை தேர்வு செய்யும் சாத்தியம் அங்கு இல்லை. ஏனென்றால் அங்குள்ள ஈழத் தமிழ் அகதிகளின் சட்ட நிலைப்பாடும் அவர்களுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது என்ற நிலைப்பாடும் இல்லாத காரணத்தால் வெளிப்படையாக தமிழ் ஈழம் தொடர்பான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் தங்கும் இடத்துக்கு பிரச்சினை வந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான் நாங்கள் அங்கே தேர்தல் வைக்க முடியவில்லை. நாங்கள் ஆரம்பத்தில் யோசித்தோம், அமெரிக்காவில் சில சட்ட முறைகள் இருக்கிறது. என்ன உரிமை இருக்கிறது என்பதை நீதிமன்றம் சென்று டிக்ளரேஷன் ஜட்ஜ்மென்ட் வாங்கினோம். உதாரணமாக பயங்கரவாதம் தொடர்பாக சில சட்டங்கள் வந்தபோது நாங்கள் இங்குள்ள ஈழத் தமிழ் மக்கள், இந்திய தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தோம். பயங்கரவாத தடுப்புச் சட்டம் இருந்தாலும் அரசியல் ஆதரவு கொடுப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதற்கான உரிமையை நீதி மன்றம் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டோம். இப்படி சில சட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத்து அகதிகளின் உரிமை என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் முயன்றோம். ஆனால் அவ்வாறான நடைமுறை இந்தியாவில் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தார்கள். அந்த அடிப்படையில் அங்கு தேர்தல் வைக்க முடியாது என்ற காரணத்தினால் ஐந்து நியமன எம்.பிக்களை தற்காலிகமாக தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தேர்வு செய்தோம்.

சிறகு: சமீபத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தின் பல சரத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. உங்களின் நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் அந்த தீர்மானம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

திரு.உருத்திரகுமார்: இந்தத் தீர்மானம் நாங்கள் எதிர்பார்த்த தீர்மானமாக அமையவில்லை. அனைத்துலக விசாரணை கோருகிறோம். அப்படியாக இந்த தீர்மானம் அமையவில்லை. மாறாக உள்நாட்டிலேயே சுதந்திரமாக விசாரணை அமைக்க வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானம் கூறி இருக்கிறது. ஐ.நா. நிபுணர் குழு கூறப்பட்டிருப்பது, உள் நாட்டில் விசாரணை வைக்கும் அரசியல் முனைப்பு (political will) இலங்கை அரசிடம் இல்லை என்றும் அப்படி விசாரணை நடத்தும் அரசியல் சட்ட சூழ்நிலை இல்லை என்பதாகும். இந்நிலையில் நாங்கள் அனைத்துலக விசாரணை கோரி இருந்தோம். ஆனால் அதே சமயம், முதல் தடவையாக ஐ.நா. சபையின் தீர்மானம் இலங்கையின் மீது வந்திருப்பது அதனை நாங்கள் நன்மையாகத்தான் பார்க்கிறோம். இதை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் இது எமக்குக் கிடைத்த வெற்றியாக நாம் கருதவில்லை. ஆனால் இலங்கைக்கு தோல்வியாகக் கருதுகிறோம். இந்தத் தீர்மானம் வரக்கூடாது என்று சிறீலங்கா பகீரதப் பிரயத்தனம் செய்தது. சிறீலங்காவுக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெரிய ராஜதந்திர தோல்வி. இலங்கைக்கு இது முதல் தோல்வி. இலங்கை இன்னும் பல தோல்விகளை சந்திக்கப்போகிறது என்பதற்கு ஐ.நா. சபை தீர்மானத்தை நாங்கள் பார்க்கிறோம். ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டுவந்தபடியால், இதுபற்றி விசாரணை மீண்டும் அங்கு எடுக்கப்படும். சிறீலங்கா உள்நாட்டில் நியாயமான விசாரணை செய்ய மாட்டாது. அது செய்யாதிருக்கும்போது எங்களுடைய கோரிக்கையான அனைத்துலக விசாரணையை வலுப்படுத்தும் என்று நாம் கருதுகிறோம். தமிழ்நாட்டில் இருந்து ஒரு நண்பர் கூறினார், இது ஒரு கோடு. இந்தக் கோட்டை ஓவியமாக்குவது உங்களுடைய திறமையில் தான் இருக்கிறது என்று கூறினார். எனவே அந்த அடிப்படையில்தான் நாங்கள் பார்க்கிறோம். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கிறோம். இதற்கு இந்தியாவில் இருந்து பல அறிஞர்களை நாங்கள் சேர்க்க இருக்கிறோம். ஐ.நா. சபை இந்தத் தீர்மானம் தொடர்பாக இலங்கையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கவனித்து, அறிக்கைகளை உருவாக்கி, பல நாடுகளில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பி அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இருக்கிறோம்.

அரசியலைப் பொறுத்தவரையில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது. ஒன்று இந்த விசாரணை. இன்னொன்று அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு செய்யப்பட வேண்டும். எம்மைப் பொருத்தவரை அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எம்மைப் பொருத்தவரை எங்கள் உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுதந்திர தமிழீழத்தை வலியுறுத்துவதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் இந்தத் தீர்மானம் எங்களுக்கு சிறிய பின்னடைவு.

நான் முன்பே கூறியபடி, சிறீலங்கா இன்று ஐ.நா. சபையின் கவனத்தில் வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறீலங்காவில் என்ன நடக்கிறது என்பதை ஐ.நா. சபை கவனிக்கும். அது உலக அரங்கில் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கு உதவியாக அமையும். அதன் மூலம் எங்கள் அரசியல் கோரிக்கைகள் வலுப்படுத்தி சுதந்திர தமிழ் ஈழம் நோக்கி போகலாம் என்று கருதுகிறோம்.

சிறகு: தமிழ் ஈழம் அமைவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன- அதற்கு கால இலக்கு ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?

திரு.உருத்திரகுமார்: தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு எங்களிடமிருந்த ராணுவ பலம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் இப்போது புதிய மென் பலத்தை பெற்றிருக்கிறோம். இந்த பலத்தில்  ராஜதந்திர அம்சங்கள் பல இருக்கின்றன. இந்த மென் பலத்தின் மூலம் தற்போதைய சர்வதேச ஒழுங்கில் பல சாதனைகளை சாதிக்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நடந்த ஒரு முக்கியமான நேர்மறையாக நாங்கள் பார்ப்பது எது என்றால், எங்களின் ஈழத் தமிழர் போராட்டம்- ஈழத் தமிழர் போராட்டமாக மட்டுமல்லாமல், உலகத் தமிழர் போராட்டமாக மாறி வருவதை நாங்கள் பார்க்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வமாக உள்ளதை நாம் காண்கிறோம். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மலேசியாவிலும். மலேசியா முதலில் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுத்தது. ஆனால் அங்கிருக்கும் இந்திய, தமிழ் மக்களின் அழுத்தம் காரணமாக மலேசியா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அடுத்தகட்டமாக நாங்கள் எதைப் பார்க்கிறோம் என்றால், உலகத் தமிழ் மக்களை ஒருமுகப்படுத்தி –இந்தப் போராட்டத்தை உலகத் தமிழ் மக்களின் போராட்டமாக கொண்டுசெல்வதின் மூலம்- தமிழ் மக்கள் உலகத்தில் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், சுதந்திர ஈழத்தை நோக்கி நாங்கள் போகலாம் என்று கருதுகிறோம். தற்போதைய சூழலில் – உலக ஒழுங்கில் – ஒரு புதிய நாடு உருவாவதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. எனவே அதை உடைத்துக்கொண்டு நாங்கள் போக வேண்டும். தற்சமயம் நாங்கள் உலக குடிசார் சமூகத்தை கருத்தில் கொண்டு அதன் மூலம் நாடுகளின் நிலைப்பாட்டை மாற்றலாம் என்று கருதுகிறோம். சுருக்கமாக சொன்னால், உலக குடிசார் சமூகத்தை ஒருமுகப்படுத்தி அவர்களின் ஆதரவை நாங்கள் பெறுவதற்கு இருக்கிறோம். குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஒரு வலுவான மையமாக உருவாக்கி எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

சிறகு: இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலையில் பல நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகள்.  இலங்கை அரசாங்கம் இந்த நாடுகளின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டுள்ளது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எந்த நாட்டை நண்பனாகவோ, எதிரியாகவோ எப்படி கருதுவது? எந்த நாட்டுடன் நட்பாகவோ அல்லது கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு.உருத்திரகுமார்: 2009க்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் பல நாடுகளைக் கொண்டு- அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா இப்படி பல நாடுகளின் துணையுடன் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முறியடித்தது. அதுசமயம் – விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளராக இருந்த கஸ்ட்ரோ, நகைச்சுவையாகக் கூறினார், அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று. ஏனென்றால் இத்தனை நாடுகளையும் ஒன்றாகக் கொண்டுவந்து வைத்து ஒரு அமைப்புக்கு எதிரான தாக்குதலை நடத்தியதற்கு அமைதிப் பரிசு எங்களுக்குத்தான் தரவேண்டும் என்று. அது சிறீலங்காவின் ராஜதந்திரத்திற்கு வெற்றியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை தன்னுடைய ராஜதந்திர வலைக்குள் சிக்கவைத்து காரியத்தை சிங்களம் சாதித்துவிட்டது. தற்சமயம் சிங்கள அரசு என்ன செய்கிறது என்றால், சீனாவிடம் கூடிய நட்புறவை வளர்த்துக் கொண்டு போவதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் இந்திய, அமெரிக்க அறிஞர்களுடன் பேசும்போது அவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள்- இலங்கையில் சீனாவின் செல்வாக்கு தங்களுக்கு கவலையைக் கொடுப்பதாக வெளிப்படையாக சொல்கிறார்கள்.

அமெரிக்க பல்கலைக் கழகங்களில் ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி பற்றி கருத்தரங்குகள் நடக்கின்றன. சீனா ஒரு பக்கமாகவும், இந்தியா அமெரிக்கா இன்னொரு பக்கமாகவும் செல்வதை நாங்கள் காண்கிறோம். இந்தியா ஐ.நா. சபையின் தீர்மானத்திற்கு வாக்களித்ததற்கு காரணமே –அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் தமிழக மக்களின் அழுத்தம் காரணம். அதேசமயம் ஒபாமா நிர்வாகம் கூறுகிறது, இருபத்தோராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் முழு கவனமும்- முழு பலத்தையும் ஆசியாவில்தான் பிரயோகிக்கப்போவதாகக் கூறுகிறது. உலகத்தில் ஆசியா முக்கிய இடத்தைப் பெறப்போகிறது,அங்குதான் எங்கள் கவனம் என்று கூறுகிறது. இலங்கை ஆசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். நிரந்தர நலன்கள் தான் இருக்கின்றன. எம்மைப் பொறுத்தவரையில் எங்களின் நலன்கள் ஜனநாயக நாட்டு மக்களின் நலன்களோடு ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் கூறிய பல்வேறு நாடுகளின் நலன்கள் முரண்படும்போது ஒரு அரசியல் வழி திறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த அரசியல் வழி சுதந்திர ஈழம் அமைவதற்கு உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறகு: நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு நாடாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இன்னாட்டிற்கென பிரதமர், அமைச்சர்கள் கொண்ட அரசமைப்பு செயல்படுகின்றது. இந்த அரசை மற்ற நாடுகளால் அங்கீகரிக்க வைப்பதற்கு, மற்ற நாடுகளில் தூதரகங்களை திறப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறீர்களா? அதில் தற்போது எந்நிலையில் இருக்கிறீர்கள்?

திரு.உருத்திரகுமார்: அங்கீகாரம் என்பதை நாங்கள் இரண்டு வகையில் பார்க்கிறோம். ஒன்று வெளிப்படையான அங்கீகாரம். அடுத்து மறைமுகமான அங்கீகாரம். தற்சமயம் எங்களின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை பல்வேறு நாடுகள் புகலிட அரசாகத்தான் கருதுகின்றன. அதனால் எங்களுடன் வெளிப்படையான தொடர்பை வைத்துக்கொள்ள சில நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. எங்களுடன் வெளிப்படையான தொடர்புகளை வைத்துக் கொள்ளும்போது அவர்கள் சிறீலங்காவின் ராஜதந்திர தொடர்பை முறிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே சில நாடுகளில் வெளிப்படையான அங்கீகாரம் கிட்டவில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. எங்களைப் பொருத்தவரை அங்கீகாரம் என்பது ஒரு தொடர் முயற்சி. படிப்படியான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும். எனவே அந்த வழியில்தான் நாங்கள் செல்கிறோம். ஆனால் பல நாட்டுத் தூதர்கள் தாங்களாகவே எம்மை தொடர்புகொண்டு பேசுகிறார்கள். இதை ஒரு அங்கீகாரமாக நாங்கள் பார்க்கிறோம். அமெரிக்காவைப் பொருத்தவரை எதையும் வெளிப்படையாகத்தான் நாங்கள் செய்கிறோம். இதனால் அமெரிக்கா எங்களுக்கு ஆதரவு தருவதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் சட்டப்படிதான் எங்கள் நடவடிக்கைகள் உள்ளன. இதை அமெரிக்காவால் தடுக்க முடியாது. ஆனால்  அரசாங்கம் நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக பல நெருக்கடிகளை தரலாம். இப்படி இடையூறுகள் விளைவிக்காததை நாங்கள் மறைமுக அங்கீகாரமாகக் கருதுகிறோம். இன்னொரு விடயம். இங்கு நாங்கள் மூன்று அமர்வுகளை நடத்தினோம். ஒவ்வொரு அமர்வுக்கும் எங்கள் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் கடிதம் அனுப்பும்போது, நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்றுதான் அனுப்பி இருந்தோம். அந்தக் கடிதங்கள் அமெரிக்கத் தூதரகத்திற்குப் போய் எந்தவித விசாரணையுமின்றி அவர்கள் இங்கு வந்தது இவையெல்லாம் நமக்குக் கிடைக்கின்ற உட்கிளையான அங்கீகாரமாகக் கருதுகிறோம். தென் சூடான் சுதந்திர விழாவிற்கு எங்களை முறைப்படி அழைத்திருந்தார்கள். வட அயர்லாந்தில் எங்கள் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு அங்கு சென்று பல அரசியல் தலைவர்களை சந்தித்தார்கள். எனவே இதை தொடர் முயற்சியாக நாங்கள் செய்துகொண்டு போகிறோம்.

சிறகு: 2009 க்குப் பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகி இருக்கிறது, மற்றும் சில ஈழத் தமிழர்கள் அமைப்புகள் ஐரோப்பாவில் உருவாக்கி இருப்பதை நாங்கள் அறிகிறோம். இந்த மற்ற அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசு எவ்வாறு தொடர்பில் இருக்கிறது?

திரு.உருத்திரகுமார்: நாடு கடந்த தமிழீழ அரசு உருவாவதற்கு முன்னர் நாங்கள் பல கல்விமாண்களைக் கொண்ட ஒரு அறிக்கையை உருவாக்கி அதை வெளியிட்டிருந்தோம். 2010 ஆம் ஆண்டு மார்ச் பதினைந்தாம் தேதி இந்த அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழீழ அரசு உருவாக்கப்பட்டது. அந்த அறிக்கையில் நாங்கள் தெளிவாகக் கூறி இருக்கிறோம்- நாங்கள் ஈழம் தொடர்பாக எல்லா அமைப்புகளுடனும் வேலை திட்டத்தின் அடிப்படையில் சேர்ந்து பணியாற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தயாராக இருக்கிறது என்று. இதை நாங்கள் எங்கள் அரசமைப்பு சட்டத்திலும் சேர்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறோம். பல நாடுகளில் நாங்கள் அவ்வாறு சேர்ந்து வேலை செய்கிறோம். குறிப்பாக மே பதினெட்டு நிகழ்வைக் குறிப்பிட்டால் கூட ஐரோப்பாவிலும் கனடாவிலும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து அந்நிகழ்வை கடைப்பிடித்தோம். ஆனால் மற்ற சில நாடுகளில் முரண் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம். அமெரிக்காவில் எல்லா அமைப்புகளும் ஒன்றாகக் கூடி மே பதினெட்டாம் தேதி ஐ.நா. சபை முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அமெரிக்காவில் உள்ள எல்லா அமைப்புகளும் சேர்ந்துதான் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்கிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் மே பதினெட்டு நினைவு நிகழ்ச்சிக்கு நான் வந்திருந்தேன். அப்போது ஜி.டி.எப் தலைவர் பாதர் இம்மானுவேல் வந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினோம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரண்டு நாட்களாக அவருடனும் அவருடன் வந்திருந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் எல்லோருமாக சேர்ந்து மே பதினெட்டு தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட இருக்கிறோம். ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கி- எந்தெந்த விடயங்களில் வேலை செய்யலாம் என்று ஒரு செயல் அணியையும் உருவாக்கி இருக்கிறோம். பல அமைப்புகள் இருந்தாலும் எங்கள் குறிக்கோள் ஒன்றுதான்.

சிறகு: ஏழு கோடி தமிழக மக்களின் ஆதரவை பெறுவது ஈழத் தமிழர்களுக்கு அவசியம். தமிழ்நாட்டில் பல அரசியல்வாதிகள் ஈழப் போராட்டத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாட்டை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அவர்களுக்குக் நீங்கள் கூறும் வேண்டுகோள் என்ன?

திரு.உருத்திரகுமார்: எங்களைப் பொருத்தவரை தமிழக மக்களைத்தான் முக்கியமாக நாங்கள் கருதுகிறோம். தமிழ் சமூகம் பெரியது. வர்த்தகர்கள், மாணவர்கள், சட்ட நிபுணர்கள் என பல பகுதிகள் இருக்கின்றன. இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறோம். இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பங்குகொண்டு தமிழீழம் பற்றி ஒரே வழியில் பேசி அதன்மூலம் தமிழக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதாக கருதுகிறோம். இது தொடர்பாக ஒரு தோழமை மையத்தை உருவாக்கி இருக்கிறோம். அந்த தோழமை மையத்தின் ஊடாகவும் நாங்கள் கிராமங்களுக்குச் சென்று நாடுகடந்த தமிழீழ அரசு பற்றியும் எவ்வாறு எங்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லப் போகிறோம் என்றும் அதற்கு தமிழக மக்களின் ஆதரவு முக்கியம் என்ற செய்தியையும் கூற இருக்கிறோம். குறிப்பாக இளைஞர்களைத்தான் பெரும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு செல்ல இருக்கிறோம். தயவுசெய்து தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு இந்தப் போராட்டத்தை தமிழ் மக்களின் போராட்டமாக கருத்தில் எடுத்துக் கொண்டு முன்வரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எங்களை தொடர்புகொள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம் இருக்கிறது. இதன்மூலம் எங்களை தொடர்புகொள்ளலாம். நாங்கள் வேண்டிய செய்திகளை உங்களுடன் பரிமாறிக்கொண்டிருப்போம். திரும்பத் திரும்ப நான் கூறுவது தமிழ் மக்களின் பங்களிப்பை மிகப்பெரும் பங்களிப்பாக நாங்கள் கருதுகிறோம். தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரளும்போது நிச்சயமாக ஈழம் மலரும். தமிழ் மக்களின் அழுத்தம் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. எனவே தமிழக மக்கள் பெரும் பங்காளிகளாக வரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் சர்வதேச பாதுகாப்பு குழு என்ற ஒன்றை உருவாக்க இருக்கிறோம். இதில் தமிழகத்தில் உள்ள அறிஞர்களையும் கல்வியாளர்களையும் ஒன்று சேர்த்து இதை இருவாக்க இருக்கிறோம். இதன் விவரங்களை கூடிய விரைவில் எங்கள் இணைய தளங்கள் மூலம் வெளிப்படுத்த இருக்கிறோம்.

சிறகு: நன்றி ஐயா. மிக அருமையான எளிமையான கருத்துக்களால் விளக்கினீர்கள். இதன் மூலம் தமிழக மக்களுக்கு பல தகவல்கள் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. தங்களின் நேரத்திற்கு மிக்க நன்றி.

திரு.உருத்திரகுமார்: இந்த சந்தர்ப்பத்தை தந்ததற்கு நன்றி. சிறகு இணைய தளத்திற்கு- நான் என் நேர்காணலில் கூறியபடி தமிழக மக்களின் கரங்களை நாங்கள் இறுகப் பற்றிக்கொள்கிறோம். நாளை மலரப்போகும் தமிழ் ஈழம் –ஈழத் தமிழர்கள் நலன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாது- உலகத்தில் எங்கெங்கு தமிழ் மக்களுக்கு இன்னல் நேர்ந்தாலும் நிச்சயமாக அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு குரல் கொடுக்கும். ஏற்கனவே தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோது அதுதொடர்பாக நாங்கள் குரல் கொடுத்திருந்தோம். பேரறிவாளன் மரண தண்டனை தொடர்பாக எங்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி- மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். இதுதொடர்பாக நாங்கள் ஒரு செயல் அணியை உருவாக்கி எங்களால் இயன்ற அரசியல் சட்ட உதவிகள் செய்வோம். எனவே நாளை மலரும் தமிழ் ஈழம் உலகத் தமிழர்களுக்கு என்று பிரச்சினை வந்தாலும் அதற்கு குரல் கொடுப்போம் என்று உறுதி கூறுகிறோம். உங்களின் ஆதரவைக் வேண்டிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

Because of this, http://celltrackingapps.com/ we’ll gladly share the spotlight with you

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பிரதமர் திரு.உருத்திரகுமார் நேர்காணல்”
  1. arun says:

    நல்ல பேட்டி.

  2. தியாகு says:

    மிக அருமையான நேர்காணல்.

    !! தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!

அதிகம் படித்தது