மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிறவி பிழை – காதல் திருத்தம்

ஆச்சாரி

Mar 1, 2013

இந்தியத் திரைப்படங்களைப் பார்த்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி “இந்தியாவில் திருமணம் செய்வது என்பது இவ்ளோ கஷ்டமா ?  எல்லாப்  படங்களும் திருமணம் ஆனதும் முடிந்து விடுகிறதே” என்று கூறினார்.
யாயும் யாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”       

 _குறுந்தொகை

      என்று காதலை ஏற்று மகிழ்ந்த சமூகம் நம் தமிழ் சமூகம். ஆனால் பிற்கால சமூகத்தில் காதல் கசப்பான ஒன்றாக மாறியது எப்படி? இடையில் நடந்தது என்ன?

 தமிழ் இலக்கியத்தில் “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம்”செய்து நடந்த முதல் திருமணம் கோவலன் கண்ணகி திருமணம்தான். அந்தத் திருமணம் என்ன கதியானது என்பது அனைவரும் அறிந்ததே.

 கோயில் புனிதமாகவும், காதல் இழிவாகவும் கருதப்படுகிறதே ஏன்? கோயிலில் சாதி வாழ்கிறது. காதலில் சாதி வீழ்கிறது.

 சரியோ, தவறோ, 60 ஆண்டுகால தமிழ் சினிமா காதலைப் பேசியிருக்கிறது. அவர்களின் நோக்கம் சமூகம் சார்ந்து அல்லாமல் வியாபாரம் சார்ந்ததுதான் என்றாலும் புல்லுக்கு பாய்ச்சிய நீர் கொஞ்சம் நெல்லுக்கும் பாய்ந்திருக்கிறது.

    சினிமாவில் காதலைக் காட்டியதாலோ என்னவோ சினிமாவையே இழிவாகப்  பார்க்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களைத் தவிர பெரும்பாலான தமிழ் சினிமா, காதலின் உண்மையான எதிரியை அடையாளம் காட்டவில்லை.

 காதலுக்கு, காதல் திருமணத்திற்கு உண்மையான எதிரி சாதிதான். இல்லையென்றால் இன்றுவரை இளவரசன்களும்-திவ்யாக்களும் வாழ மூன்று கிராமங்கள் தீக்கிரையாகியிருக்குமா?

    நாட்டின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவர்களுக்குத் தன் வாழ்க்கை இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லையென்றால் எப்படி?

        ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர்களை மாற்றலாம், இணையை மாற்ற முடியுமா என்று சில அறிவாளிகள் கேட்கலாம், வயது வந்த ஆணும் பெண்ணும் இணைவதற்கு எப்படி உரிமை உள்ளதோ அவ்வாறே பிரிவதற்கும் உரிமை உள்ளது. திருமணம் புனிதமானதும் அல்ல, விவாகரத்து பாவமானதும் அல்ல. அதைவிட இந்த உலகத்தில்  புனிதமானது என்றோ பாவமானது என்றோ எதுவுமே இல்லை.

     காதலர் தினத்தன்று மெரினாவில் கூடும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க போவதாக சிவசேனா கூறியுள்ளது.

      ஒருவனின் திறமை, அறிவு, உழைப்பு யாவும் தனக்கு சொந்தமில்லை என்ற நிலையில் இருந்தால் அவன் அடிமையே. அதேபோல் ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீதான அதிகாரம் இல்லை என்றால் அவளும் அடிமையே.

        தன் உடல் மீதே அதிகாரம் இல்லாத ஒரு பெண், தன் உடலுக்கு வெளியில் தனக்கான இணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்றாலும், அவ்வாறு, துணிந்த பெண்களே நமக்கான முன்மாதிரிகள

1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்ய வேண்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, அதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில்கொண்டு வந்தார். இது சட்டமன்ற  விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, 17-01-1968-ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, 20-01-1968-ல் அரசிதழில் வெளியிடப்பட்டு ”சுயமரியாதைத் திருமணச் சட்டம்” என்று சட்ட வடிவமாக்கப்பட்டது.

சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று அரசு சட்டம் இயற்றிய பிறகு நடந்த திருமணங்களை விட அதற்கு முன்னதாக நடந்த காதல் கலப்பு திருமணங்கள்தான் உண்மையில் புரட்சிகரமானவை.

காதல் ஓர் உணர்வு, காதல் ஒரு புனிதம், காதல் உயர்வானது என்பதற்காகவெல்லாம் நாம் காதலை ஆதரிப்பதைக் காட்டிலும், காதல் திருமணம் செய்த அனைவரும் சாதி ஒழிப்பு போராளிகள் என்ற வகையில் இந்த சமூக மாற்றத்திற்குத் துணை நின்றவர்கள் என்பதாலேயே நாம் காதலை ஆதரிக்கிறோம்.

சாதிதான் காதலுக்கு எதிரி என்றால்,  அந்தக்  காதலையே சாதிக்கு எதிராய் நிறுத்துவோம்.

யாக்கைத்  திரிகாதல் சுடர்
ஜீவன் நதிகாதல் கடல்
பிறவி பிழைகாதல் திருத்தம்

ஆம், பிறவியினால் நேர்ந்த இந்தச் சாதி இழிவை, காதலினால் துடைப்போம்.

காலமெல்லாம் காதல் வாழ்க,காதலிக்கும் காதலர்கள் வாழ்க.

By race and ethnicity, the distribution how to write a research paper in apa of young working learners reflects that of the national population

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பிறவி பிழை – காதல் திருத்தம்”
  1. sathya moorthy says:

    காதலை வாழவைபொம் சாதியை ஒழிபொம்…

    வாழ்கா காதல்….

    நன்றி

அதிகம் படித்தது