புகுஷிமாவில் கவலையில்லாக் காளையர் கழகம் 5
ஆச்சாரிSep 15, 2012
( கவலையில்லாக் காளையர் கழகம் என்பது பார்த்தசாரதி ( கணிப்பொறி துறை ) , மணி ( பலசரக்கு கடை ) , வேலு ( அரசியல்வாதி ) என்னும் மூன்று நண்பர்களால் உருவாக்கப்பட்ட கழகம். மேலும் அறிய முந்தைய கட்டுரைகளை படிக்கவும் ).
பார்த்தசாரதி , மணி , வேலு மூவரும் விமானத்தில் ஜப்பானை நோக்கி சிறப்பு விமானத்தில் மிதந்து கொண்டு இருந்தார்கள். விமானத்தின் மத்திய அமைச்சர் நாராயணசாமி, அப்துல் கலாம் , கருணாநிதி , ஜெயலலிதா போன்றவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்திய தேசத்திற்கே அவசியமான ஒரு பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அக்கறையும் ,கவலையும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து நம்பிக்கை ஊட்டுவதற்காக சமீபத்தில் அணு உலை விபத்து நடந்த புகுஷிமாவுக்கு பொதுமக்களுடன் இணைந்து ஒரு அரசுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து இன்று சென்று கொண்டிருக்கிறார்கள்.
நாராயணசாமி : வாங்க! வாங்க! எல்லோரும் வாங்க! யாரும் இல்லை இங்க. இனி நீங்க தைரியமா பேசலாம்!. கொஞ்ச நாளா நான் எங்க பேசினாலும் அடிக்கிறாங்க!.
வேலு: அப்போ இதுக்கு முன்னாடி?.
நாராயணசாமி: இதுக்கு முன்னாடி சும்மா சிரிப்பாங்க! இப்போ தான் இந்த நிலைமை!
பார்த்தசாரதி: நீங்க என்ன கலாம் சாரா?. எல்லோரும் உக்காந்து கேட்க?.
கலாம் ( சற்று கவலையுடன் ) : அதெல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி தான். இப்போ என்ன சொல்றதுன்னு தெரியல!.
கருணாநிதி: எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும். வாழ்வு வந்தால் கனிமொழியை வாழ வைப்பேனே!
ஜெயலலிதா: மிஸ்டர். இப்போ நாம ஒரே டீம். இந்த நேரத்தில அரசியல் பேசாதீங்க. புகுஷிமாவுக்கு போய் அங்க மக்கள் எப்படி சந்தோசமா இருக்காங்கன்னு சொல்றதோட நம்ம கூட்டணி முடிஞ்சிடுச்சு.
நாராயணசாமி: அப்படி எல்லாம் சொல்லாதீங்க. தமிழ்நாடு முழுக்க அணு மின் நிலையங்களைத் திறந்து முழு இலங்கைக்கும் மின்சாரத்தை குடுக்கற வரைக்கும் உங்க கூட்டணி எங்களுக்கு தேவை.
விமானியின் குரல்: நாம் இப்போது புகுஷிமாவின் மீது பறந்து கொண்டிருக்கிறோம்.
மணி: ( ஜன்னல் வழிகாகப் பார்த்து) : ஐயோ! என்ன இது ஆள் நடமாட்டமே இல்லை. சுடுகாடு மாதிரி இருக்கு. இங்க மக்களே இல்லை. அப்புறம் எப்படி அவங்க சந்தோசமா இருக்கிறது?.
நாராயணசாமி: அவங்க எல்லாம் வேற எங்கயும் போயிடல. நூறு கிலோமீட்டர் தூரத்தில அரசு முகாம்ல தங்கி இருக்காங்க. இன்னும் ஒரு லட்சம் வருசத்தில அவங்க இடத்துக்கு போயிடுவாங்க!.
கலாம்: ஒரு சிறிய கனவு காண மிகப் பெரிய விலை கொடுப்பது அவசியம். அக்னி சிறகுகள் சில சமயங்களில் பறவையையே சுடுவது உண்டு.
கருணாநிதி: ஆளே இல்லையா?. அய்யகோ! அணு உலையில் இவ்வளவு பெரிய ஆபத்தா?. தமிழனுக்கு இந்த ஆபத்து வந்தால் தி.மு.க சும்மா இருக்காது.
நாராயணசாமி: ஐயோ! தூங்கிட்டீங்களா?. கனிமொழி! 2G ! நல்லா நியாபகப்படுத்தி பேசுங்க!.
கருணாநிதி: பதினாறு வயதில் களம் கண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன்! அணு உலை கண்டு அஞ்ச மாட்டான் மறத்தமிழன். மீறி அஞ்சினால் அவன் ஆரிய பார்ப்பன சக்தியாகத் தான் இருப்பான்.
ஜெயலலிதா: மிஸ்டர்! திரும்ப பழைய பல்லவியா?. புதுசா சொல்லுங்க.
கருணாநிதி: சாரி! மீறி அஞ்சினால் அவன் அமெரிக்காவின் கைக்கூலியாகத் தான் இருப்பான்.
நாராயணசாமி: மிஸ்டர் கருணாநிதி! பிரதமர பத்தி தப்பா பேசாதீங்க.
வேலு: ஏன் ஆளாளுக்கு அவரை திட்டறீங்க?. வயசான காலத்தில எங்க தலைவர் இந்த பயணத்துக்கு வந்ததே பெரிய விஷயம்.
கருணாநிதி: நீ வேற ஏப்பா! வீட்டில அடிதடி தாங்க முடியல. அதான் இப்படி கிளம்பினேன். இங்க வந்தும் வாங்கிக் கட்டறேன். எல்லாம் தமிழோட தலை எழுத்து.
பார்த்தசாரதி: கலாம் சார்! ஊரே காலியா இருக்கே! எனக்கு பயமா இருக்கு. அணு உலை உண்மையிலே பாதுகாப்பானது தானே?.
கலாம்: அணு உலை வெடிக்கும் வரைக்கும் அது நூறு சதவீத பாதுகாப்பானது தம்பி. அத என்னால உறுதியா சொல்ல முடியும்.
பார்த்தசாரதி: அது போதும் சார்! எனக்கு அது போதும்!
கருணாநிதி: கலாம். நீங்க தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரா சேர்ந்து இருக்கலாம். எவ்வளவு நல்லா மக்களை ஏமாத்தறீங்க?.
மணி: எனக்கு ஆனா பயமா இருக்கு. ஒரு வேலை அணு உலை வெடிச்சால்?.
ஜெயலலிதா: மிஸ்டர் மணி! விமானம் சென்னையில இறங்கியவுடன் நீங்க தேசப் பாதுகாப்பு சட்டத்தில கைது செய்யப்பட போறீங்க.
நாராயணசாமி: இந்த கைதை மத்திய அரசு முழு மனதுடன் ஆதரிக்கிறது.
கருணாநிதி: மணி என்னும் மனிதன் மனங்கோணாத வகையில் அவரை கண்ணியமாக கைது செய்து, சதி செய்தார் என சாதுர்யமாக பேசி சாகும் வரை சிறையில் அடைக்க தி.மு.க செயல் குழுவை கூட்டி பரிந்துரை செய்யும்.
வேலு: தலைவா! உன் தமிழைக் கேட்கும் போது இந்தக் கணத்தோடு நான் செத்து போகலாம் என்று தோன்றுகிறது.
ஜெயலலிதா:மிஸ்டர். கூடிய சீக்கிரம் அவரை நான் கைது செய்யப் போறேன். அப்போ வந்து தீக்குளிங்க. இப்போ கொஞ்ச நேரம் பேசாம இருங்க. ஏதோ அறிவிப்பு வருது.
விமானியின் குரல்: விமானம் இப்போது புகுஷிமாவில் இறங்கப் போகிறது.
கலாம்: யாரும் விமானிக்கு சொல்லலியா?. விமானத்த திருப்ப சொல்லுங்கப்பா! அங்க இன்னும் கதிரியக்கம் இருக்கும். நான் இன்னும் ரொம்ப நாள் வாழ வேண்டி இருக்கு. நிறைய புத்தகம் எழுத வேண்டி இருக்கு.
பார்த்தசாரதி: சார்! நாம அப்போ அங்க போய் மக்களை சந்திக்க வேண்டாமா?.
கலாம்: நோ! நோ! அது ஆபத்து. அது சும்மா நம்பிக்கையை உருவாக்கிறதுக்கு சொன்னது. நாம இப்படியே திரும்பிடலாம்.
கருணாநிதி: ஆமாம்ப்பா! எனக்கு ஒன்னுக்கு மூணு குடும்பம் இருக்கு.
பார்த்தசாரதி: அப்போ ஊருக்கு போய் என்ன சொல்றது?.
கலாம்: இந்தப் புத்தகத்தை படிங்க. அங்க போய் என்ன சொல்லனும்னு தெளிவா தெரியும்.
பார்த்தசாரதி: சார்! எப்படி போய் சொல்றது?.
கலாம்: வள்ளுவரே சொல்லி இருக்கார் தம்பி! ” வாய்மை எனப்படுவது யாதெனின் அது முதலாளிகளுக்கு யாதொரு தீங்கும் இலாத சொலல்” அப்படின்னு.
கருணாநிதி: தமிழ்ப் பாட்டன் சொல்லி விட்டான் ! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகுத்தறிவு பகலவன் பகர்ந்து விட்டான். தமிழகம் செல்வோம். புகுஷிமாவில் மக்கள் நலமுடன் வாழ்வதாக நாக்கூசாமல் பொய்யுரைப்போம்.
ஏன் மனசாட்சி இனி நிம்மதியாக உறங்கும்.
ஜெயலலிதா: ஏன் மிஸ்டர் கத்தறீங்க! சென்னை போகிற வரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க. ஒரு ஆங்கில நாவலை படிச்சு முடிக்கணும்.
கலாம்: இந்த அனுபவத்தை வைத்து நான் “அணுவின் மடியில் அமைதிக் குழந்தை” அப்படின்னு ஒரு புத்தகம் எழுதப் போறேன்.
பார்த்தசாரதி, வேலு இருவரும் புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கின்றனர். மணி பயத்தில் புத்தகத்தை ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விட்டான். விமானம் திரும்ப ஆரம்பித்தது.
விமானியின் குரல் ( விமானம் இப்போது சென்னையை நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது ).
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அருமை!
கவலை இல்லாத காளையர்கள் இதுவரை தமிழர்களின் மனசாட்சியாக இருந்து, இன்று தன் இனம் கருவறுக்கக் கூடிக்களிக்கும் கொடுங்கோளர்களையும் தொட்டுத் தொடரச் செய்தது, மிக அருமை.