மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதிய கல்விக் கொள்கை, புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று

சுசிலா

Jun 15, 2019

siragu mumozhi kolgai1

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறன்றன என்று சரிவர தெரிந்துகொள்ளாமலேயே, பலர் பலவாறு தங்களின் கருத்துகளை கூறிவருகின்றனர். இதை, அவசரமாக, போகிறபோக்கில், கல்வியில் புதுமை, முன்னேற்றம் என்று ஆதரவு தெரிவித்து, அமல்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதனை, கல்வியாளர்கள் மத்தியில், கூர்ந்து படித்து, புரிந்துகொண்டு, அதிலுள்ள அனைத்தையும் உணர்ந்து, அதற்கான விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

‘தேசிய கல்விக் கொள்கை – 2019’ என்ற வரைவு, திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, 484 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை வரைவாக மத்திய அரசிற்கு அளித்துள்ளது. இது முற்றிலும் ஆங்கில மொழியினால் எழுதப்பட்டிருக்கிறது. பா.ச.க ஆட்சியில் அமர்ந்த ஒரு வாரத்திற்குள், மிக அவசரமாக செயல்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவக்கியுள்ளது என்பதை பார்க்கும்போது, எதற்கு இந்த அவசரம் என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை. மேலும், இந்த அறிக்கை வரைவைப் பற்றி கருத்துகள் கூறுவதற்கு கால அவகாசம் கொடுத்திருப்பதென்னவோ, 30 நாட்கள் மட்டுமே. அதாவது ஜூன் 30 தேதிக்குள் தெரிவிக்கப்படவேண்டும் என்று நமக்கான காலத்தை குறுகிய நேரத்தில் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த அறிக்கை, ஏற்கனவே உள்ள அறிக்கைகளின் படி இல்லாமல், முற்றிலும் வேறாக, பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் கூறிவருகின்றனர் என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. இதிலுள்ள மாற்றங்கள் அனைத்தும், தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை பதிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. இதை சற்று கவனமாக உற்றுப் பார்த்தோமானால், இதில் சொல்லப்படும் மாற்றங்கள் எல்லாமே, கல்விக்கான முன்னேற்றங்கள் என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி, தான் அமைக்கப்பட்டிருக்கிறது, அதாவது அவர்களின் ஒற்றை கல்விமுறையை நோக்கியே செல்கிறது மற்றும் அதனை அமல்படுத்துவதற்கான ஒரு திட்டம் என்ற உண்மை விளங்கும். இதனைப் பற்றி, மூத்த கல்வியாளர் திரு. எஸ்,எஸ். இராஜகோபாலன் அவர்கள், குறிப்பிடுகையில், “41 பக்கங்களில் தரவேண்டியதை, 484 பக்கங்கள் தரப்பட்டிருப்பதின் காரணம், படிப்பவர்களைக் குழப்பி, புரிந்துகொள்ள முடியாதபடி, செய்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

siragu mumozhi kolgai2

மேலும், இதன் நோக்கமே, இந்தித் திணிப்பு, சம்ஸ்கிருதத் திணிப்பு என்பது நன்றாகவே தெரிகிறது. நம் மாநிலத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்து கொடுத்த, கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு துடிப்பது வெட்ட வெளிச்சமாகிறது. தமிழ்நாட்டில், 1937 முதல் 1967 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் எத்தனை உயிர்பலிகள் இடப்பட்டிருக்கின்றன . தந்தை பெரியார் அதன் பிறகு அறிஞர் அண்ணா தலைமையில், மொழிப் போராட்டங்கள் நடத்தி, இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்து, நாம் மாபெரும் வெற்றி கண்டிருக்கிறோம் என்பது மிகப்பெரிய சாதனை. தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு இதனை மெய்ப்பிக்கிறது. முன்னாள் பிரதமர் திரு. நேரு அவர்களே, இந்தி விரும்பாத மாநிலங்கள் ஆங்கிலத்தையே இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறி, தன்னுடைய கூற்றை பதிவு செய்திருக்கிறார் என்பது இந்திய அரசியலில் ஒரு மைல்கல்.

ஆனால், தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் பா.ச.க அரசு, ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற தன்னுடைய இலக்கை நோக்கி வெகு விரைவாக பயணிக்கிறது. கடந்த முறை ஆட்சியின் போதே, புதியகல்விக் கொள்கையை அமல்படுத்த எத்தனித்தது. அதற்கு பலமாக எதிர்ப்பு கிளம்பவே, சற்று தள்ளிப்போட்டது. இம்முறை ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் இதனை கையில் எடுத்துள்ளது. இந்தி கட்டாயம், சமஸ்கிருதம் அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்பட வேண்டும், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மனிதவளத் துறை அமைச்சகம், தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டது.

இப்பொழுதும் முதலில், தமிழகத்தின் திராவிடக் கருத்தியல்களை உள்வாங்கிய உணர்வாளர்கள் அனைவரும் முற்றாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கருநாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. இந்நிலையில், அறிவிப்பு வந்த மறுநாளே மூன்றாவது மொழியாக இந்தி என்று இல்லாமல், வேறு இந்திய மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்று திருத்தம் செய்திருப்பதாக கூறியது. உடனே, இந்த திருத்தம் யாரால் செய்யப்பட்டது, யாரையெல்லாம் வைத்துக்கொண்டு செய்தார்கள், அதில் மாநில அரசின் பிரதிநிதிகள் யாராவது இருந்தார்களா என்ற எந்த விவரமும் தெரியவில்லை. “எங்களுக்கு ஜனவரி மாதமே, இந்தி கட்டாயம் என்ற முதல் நிலை வரைவு வந்து விட்டது. நாங்கள் இப்போது அதனை நிராகரித்துவிட்டோம்” என்று சொல்கிறார்கள். ஆனால், அப்போதே, இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை ஏற்க மாட்டோம் என்று மனிதவளத் துறை அறிவித்ததை, சமூகஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என பா.ச.க-வின் இரட்டை வேடம் இதில் வெளிப்படுகிறது. ஏன் இதில் இவ்வளவு அவசரம்? நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இதில் ஏன் மத்திய அரசு இவ்வளவு முனைப்பு காட்டுகிறது? இங்கு தான் நமக்கு சந்தேகம் வருகிறது!

மூன்று மொழி கல்வி என்பது தேவையில்லாத ஒன்று மற்றும் மாநில உரிமைப் பறிப்பு என்பது தமிழக மக்களின் நிலைப்பாடு. இப்போது கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படும் திருத்தம் கூட மடைமாற்றும் சூழ்ச்சியாகத்தான் தெரிகிறது. மக்களின் எதிர்ப்பைக் கண்டவுடன், தமிழக அரசு இருமொழிக் கொள்கையே தொடரும். மும்மொழிக் கொள்கை வராது என்று அறிவித்தது. அதன் பிறகு, தமிழக அரசின் செயல்பாடு என்ன என்றும், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இவ்விசயத்தில் ஒரு தெளிந்த நிலை என்பது இல்லாமல் இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. 30 நாட்களுக்குள், 484 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முழுவதுமாக படித்து, புரிந்துகொண்டு, கூட்டங்கள், விவாதங்கள் மூலம் விவாதித்து அறிதல் என்பது மிகவும் கடினம் என்பது தான் நிதர்சனம். அவசர கதியில், ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால், நம் வருங்கால தலைமுறையினர் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் உணரவேண்டும். மேலும், இந்த புதிய கல்விக் கொள்கை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவமான, கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிரானது. அவைகளை முற்றிலுமாக அழிக்கக்கூடிய பேராபத்து நிறைந்தது என்பதை அறிந்து, அதற்கான எதிர்ப்பை தீவிரமாக காட்டி, முனைப்புடன் செயல்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட, இந்தியா போன்ற ஒரு மிகப் பெரிய துணை கண்டத்தில், ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றை கல்விமுறை என்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், ஐந்தாம். எட்டாம் வகுப்புகளில் தேர்ச்சிப் பெறாதவர்கள் தொழிற்கல்வி படிக்கலாம் என்ற முறை நவீன குலக்கல்வி திட்டமேயன்றி வேறில்லை. ஏற்கனவே, மருத்துவம் படிக்க நீட் தேர்வு என்ற முறையை கொண்டுவந்து, ஆண்டுதோறும் நம் பிள்ளைகளை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது மத்திய பா.ச.க அரசு. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்பது நம்முடைய கோரிக்கையாக இருக்கும்போது, இந்த வரைவு அறிக்கை இந்தியா முழுவதிற்குமானது என்ற ஒரு சர்வாதிகார நிலையை ஏற்படுத்தி, ஏழை, எளிய, மக்களின் கல்வியை பாழ்படுத்தி , மீண்டும் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக நம்மை மாற்றிவிடக்கூடும் என்ற ஐயம் மேலோங்குகிறது.

Siragu education3

அடிப்படை கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்விகள் என கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டிற்கு இந்த புதியகல்விக்கொள்கை என்பது தேவையில்லாத ஒன்றாகும். தற்போது நடைமுறையிலிருக்கும் கல்வி முறையே போதுமானது. அதுவே கடைபிடிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், இதைவிட முன்னேற்றத்தை, சமத்துவத்தை, எளிய வகையில் அளிக்கும் முறை கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, பின்னோக்கி செல்லக்கூடிய இந்த நவீன குலக்கல்வித்திட்டம் வருவதற்கு நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும், தங்களின் மற்ற கருத்துவேறுபாடுகளை சற்று தள்ளிவைத்து விட்டு, ஓரணியில் நின்று, புதிய கல்விக் கொள்கையின், இந்த ஆபத்தானப் போக்கை எதிர்த்து முறியடிக்க வேண்டும். இல்லையென்றால், கல்வி என்பது நமக்கு மீண்டும் எட்டாக்கனியாக மாறிவிடும் பேராபத்து ஏற்பட்டுவிடும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தனித்தனியாக நம்மை நோக்கி வீசப்படும் அம்புகளான, இந்தித் திணிப்பு, சம்ஸ்கிருதத் திணிப்பு, நீட் தகுதி தேர்வு, மும்மொழிக் கொள்கை, நவீன குலக்கல்வித் திட்டம் உள்ளிட்டவைகளை தன்னகத்தே அடக்கிக்கொண்டிருக்கும் இந்த புதிய கல்விக்கொள்கையை தடுத்து நிறுத்தி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துவோம்!

புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக புறக்கணிப்போம்!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிய கல்விக் கொள்கை, புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று”

அதிகம் படித்தது