மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூற்றில் அரசன் ரசித்த மழலையின் குறும்பு

ஆச்சாரி

Dec 14, 2013

புறநானூறு - 188 வது பாடல்.

பாடியவர் – பாண்டியன் அறிவுடை நம்பி

துறை பொருண்மொழிக்காஞ்சி (உயிருக்கு நன்மை செய்கின்ற உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்)

காதலும் வீரமும் மட்டுமே சங்கப்பாடல்களின் பாடுபொருள் என்று சொல்லிவிடமுடியாது. கவிஞனும் சரி, காவலனும் சரி, வாழ்க்கையை அனுபவித்துப் பாடினார்கள். அறத்தோடு வாழ்வதற்கான அறவுரைகளைப் பகர்ந்தார்கள். இனி, பாடலுக்கு வருவோம்.

ஒரு சின்னக்குழந்தை செய்கின்ற குறும்புகள் அனைத்தையும் ஒரு  ஏழு அடிக்குள் பாடலாகத் தர முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் நம்மவர்களின் பதிலாக இருக்கும். ஆனால், முடியுமென்கிறார் பாண்டியன் அறிவுடைநம்பி!

குழந்தை குறுகுறுவென்று நடக்கிறதாம், உணவு உண்ணுகின்ற வேளையிலே இடையிலே வந்து தனது சின்னக்கையை நீட்டுகிறதாம், நெய்போட்டுப் பிசைந்த சோற்றைத் தரையில் கொட்டுகிறதாம். பின் அதனைத் தொடுகிறதாம், சோற்றை வாயில் கவ்வுகிறதாம், கையால் பிசைகிறதாம், சோற்றை உடம்பெங்கும் சிதறுகிறதாம், இத்தனை செயல்களையும் செய்து மயக்குகின்ற குழந்தை என்கிறார் மன்னர். குழந்தை மட்டுமல்ல மயக்கத்தைத் தந்தது, மன்னரின் பாடலும்தான்!

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்       

மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்   

பயக்குற இல்லை தாம் வாழும் நாளே.

கருத்துரை: பலவகையான செல்வங்களையும் உண்டாக்கி, பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றிருப்பவராக இருந்தாலும் உணவு உண்ணும்போது இடையே குறுகுறுவென்று நடந்து வந்து தன் சிறு கையினை நீட்டி நெய்யுடைச் சோற்றை வாங்கி அச்சோற்றைத் தரையில் இட்டும் பின் அதனைத் தொட்டும் வாயால் கவ்வியும் கையால் பிசைந்தும் உடம்பில் சிதறியும் செயல்களால்  மயக்குகின்ற குழந்தைகள் இல்லாதவர்களுக்கு அவர்கள் வாழுகின்ற நாட்கள் பயனற்றதாகும்.

சொற்பொருள் விளக்கம்: படைப்பு பல படைத்து – செல்வங்கள் பலவற்றையும் உருவாக்கி, பலரோடு உண்ணும் – பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற, உடைப்பெருஞ்செல்வர் ஆயினும் – உடைமையாகப் பெருஞ்செல்வத்தைப் பெற்றவராக இருந்தாலும், இடைப்பட குறுகுறு நடந்து – உணவு உண்ணுகின்றபோது இடையிலே குறுகுறுவென்று நடந்து வந்து, சிறு கை நீட்டி – சின்னக் கைகளை நீட்டி, இட்டும் – சோற்றில் கைகளை இட்டும், தொட்டும் – பின் சோற்றை தொட்டு எடுத்தும், கவ்வியும் – வாயால் சோற்றைக் கவ்வியும், துழந்தும் – கையால் சோற்றினைப் பிசைந்தும், நெய்யுடை அடிசில் – நெய் இடப்பட்ட உணவினை, மெய்பட விதிர்த்தும் – உடம்பில் சிதறியும், மயக்குறு மக்களை – செயல்களால் மயக்குகின்ற குழந்தைகளை, இல்லோர்க்கு- இல்லாதவர்களுக்கு, பயக்குறை இல்லை – பயன்தரத்தக்க பொருள் இல்லை, தாம் வாழும் நாளே – அவர்கள் வாழுகின்ற நாளில்.

கண்முன்னே  குழந்தையின் அத்துணை குறும்புகளையும் காண்பதுபோல், பாடலிலே படம் பிடித்துக் காட்டிய பாண்டியனின் எழுத்தாற்றலுக்கு முன்னால் – வாழ்க்கையை அனுபவிக்கின்ற பண்புக்கு முன்னால் எதுவும் ஈடாக முடியுமா?.

Several programs are available for example, endnote, reference manager, procite to help go to the service you do the citations according to the reference guide you select

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூற்றில் அரசன் ரசித்த மழலையின் குறும்பு”

அதிகம் படித்தது