மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணியமும், பெண் கவிதைகளும் . (பாகம் – 1) (கட்டுரை)

ஆச்சாரி

Apr 15, 2013

சங்க காலத்தும், சங்கம் மருவிய காலத்தும் எழுந்த இலக்கியங்களில் பெண்ணடிமை நிலையும், சில சூழல்களில் பெண்ணுரிமை நிலையும் காண முடிகிறது. பெண் விடுதலை அமைப்புகளை முதலில் அமைத்தவர் பாரதியாரே ஆவார். தொல்காப்பியர் தொடங்கி இலக்கியவாதிகள் பலர் ஆணாதிக்கவாதிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழிலக்கியம் முழுவதும் ஆணாதிக்கப் பார்வைதான் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

ஆங்கிலத்தில் பெமினிசம் (Feminism) என்ற சொல்லுக்குத் தமிழில் பெண்ணியம், பெண்ணிய வாதம், பெண்ணிலை ஏற்பு, மகளிரியல், பெண்ணியக் கொள்கை எனப் பல சொற்கள் வழங்கப்படுகின்றன.

1890-க்கு முன்பு ‘Womanism’ என்றிருந்தது. பிறகு ‘Feminism’ என அழைக்கப்படுகிறது. 1894-இல் வெளிவந்த ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘பெமினிசம்’ என்ற சொல்லுக்குப் பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது என்று பொருள் கூறப்படுகிறது.

பெண்ணுரிமை, ஆணாதிக்கம், என்றெல்லாம் பேசுகிறோம்; ஒரு காலகட்டத்தில் நம் சமூகம் ‘பெண் வழிச் சமூகம்தான்’. ‘மூன்றாம் விழி சிவனுக்குரியது’ என்றாலும் அவ்விழியைச் சிவனுக்கு அளித்ததே ‘பார்வதிதான்’ என்கிறது புராணக்கதை. ஆகவே நம் சமூகம் பெண்வழிச் சமூகமாக இருந்துள்ளது.

மேலும் ஆணின் துணை இல்லாததுகூடப் பெண் ‘படைக்கும்’ தன்மையுடையவளே என்கிறது மற்றொரு புராணம். அது ‘பகீரதன்’ தொடர்பானது. சாபம் ஒன்றினால் ‘சாகரர்’ வம்சம் அழிந்து போயிற்று. வாரிசு இல்லாதிருந்த மன்னனும் இறந்துபோகவே, அவனது மனைவியர் இருவரும் வேதனை கொள்கின்றனர். வம்சத்தை விருத்தி பண்ணுவது எப்படி? என்று தம் குலகுருவிடம் யோசனை கேட்கின்றனர்.

‘ஒரு நன்னாளில் இருவரும் நிர்வாணக் கோலத்தில் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டால் சக்தி உண்டாகும் என்கிறார் குலகுரு’. ஆணின் பங்கு இல்லாது பிறந்த ஆண் குழந்தை எலும்புகளின்றி இருந்தது. நாணிக் கோணி நடக்கும் அவன் தன்னைப் பரிகாசிக்கின்றார்கள் என்று சபிக்க உடனே ‘சுஷ்பவக்திரர்’ என்னும் முனிவருக்கு விசயம் தெரியவந்ததும் அவன் குறைபோக்கி இயல்பானவனாக ஆக்கிவிடுகிறார். அவனே ‘பகீரதன்’ ஆவான். கர்த்தரால் முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.

மரபு ரீதியான பெண்ணடிமைக் கருத்துக்கள் தொல்காப்பியரின் நூற்பாக்கள் வழி நின்று அறியமுடிகிறது.

பெருமையும் உரனும் ஆடூஉமேன                        

(தொ -பொரு -களவியல் -7)

இதன் அடிப்படையில் ஆண்மகன் உரனுடையவனாக, பெருமைக் குரியவனாக உருவாக்கப்படுகிறான்.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும்
பெண்பாற் குரிய

என்று பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ‘கற்பு’ பெண்ணிற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. பெண்மகள் அச்சம், நாணம், மடம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக, இரக்க முடையவளாக, அடக்கம், அமைதியின் உருவாகவும், ஆற்றல் இல்லாதவளாக, செயல் திறனற்றவளாக உருவாக்கப்படுகிறாள்.

மேற்கூறிய மனோபாவத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண்தான் மெல்லியள், இப்படித்தான் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று எல்லாம் கூறி வளர்க்கப்படும்போது அக்கருத்துக்கு மாறாக பெண் தன்னை மாற்றிக் கொள்ளாது தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள்

பொம்பளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு
                                         -என்றும்
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்

                                        -என்றும்

“பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன்

இகழ்வனவே”       – (ஒளவையார்)

 

“காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள்”   - (குலசேகர ஆழ்வார்)

என்றும் பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும், அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.

சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாக, கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.

“வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்”
                                                         (குறுந் – 135)

இவற்றிலிருந்து தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.

கேட்மில்லட் என்பவர் பெண்ணடிமைப் போக்கு வளர்ந்த வரலாற்றைப் பால் வகை அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண், பெண்ணை அதிகாரம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் பால் வகை என்பது. ஆண் தனக்குரிய சமூகக் கனவாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்றவற்றைத் தெரிந்து கொண்டான். பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளை ஆட்படுத்துகிறான்.

ஆதலால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுக, அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. ஆதலால் அவள் சுயசிந்தனை இல்லாதவளாக, ஆடவன் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. ஆண், பெண் இடையே அதிகார உறவுகள் வளர்ந்து பெருக குடும்பம் என்ற அமைப்பும் காரணமாயிற்று.

தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி.100 – 500-இல் தோன்றி இரட்டைக் காப்பியத்தில் ஒன்றான ‘மணிமேகலையின்’ நாயகி மணிமேகலை தனது தாய் மாதவியின் குலத்தொழிலான ஆடல் தொழில் செய்யாது, குடும்ப வாழ்க்கையைத் துறந்து நாட்டு மக்களின் பசி தீர்த்தும் மக்களுக்கு அறமொழிகளை எடுத்து உரைத்தும், பல நல்லறங்களையும் செய்து பௌத்த நெறியின்படி ‘முத்தி’ பெற்று அறச்செல்வியாகக் காணப்பட்டாள்.

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
  மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும், உறையும் அல்லது
கண்டதில்லை.

காப்பியத்திலேயே பெண்ணியம் மணிமேகலை வாயிலாகப் பேசப்பட்டது அறியலாம். தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறியவர்களுள் தேசிய போராட்ட காலகட்டத்தைச் சேர்ந்த பாரதியும், சுயமரியாதை இயக்கத்திற்காகப் போராடிய பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பெண் விடுதலை குறித்து பாரதியார் எழுதிய கவிதைகள் பெண்ணியக் கருத்துக்களை அறிவதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

“அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம்”

என்று சாடுவதோடு நில்லாமல்

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

கி.பி.19-ஆம் நூற்றாண்டில் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பே பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்குச் சங்ககாலப் பெண்பால் புலவர்களை ஒளவையார். ஆதிமந்தியார், நச்செள்ளையார் போன்றோர் பெண்ணுரிமை, கையறுநிலை போன்ற பல்வேறுபாடு கொண்ட பொருளில் பாடியுள்ளார். இருப்பினும் அவர்கள் ஆணாதிக்க சமூகத்தில்தான் வாழ்ந்துள்ளனர்.

பெண்ணுரிமை இயக்கங்கள் மேலை நாடுகளில் செல்வாக்குப் பெற்று விளங்குவதோடு, பிறநாடுகளிலும் பாரதத்திலும் கால்கொண்டு  வரத்தொடங்கியது. மேலை நாடுகளில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் வரவால் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை இலக்கியங்கள் எடுத்துக்காட்ட முனைந்தபோதுதான் பெண் முன்னேற்றமும் முளைவிடத் தொடங்கியது. பெண்ணியம், பெண்ணுரிமை பற்றி இன்று நிலவிவரும் சிந்தனைகள் அறுபதுகளின் தொடக்கத்தில் வடிவு கொண்டு மலர்ந்துள்ளதெனப் பெண்ணியம் குறித்த அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

                                                      -தொடரும்  . . . 

 

It’s best to avoid acting on the knowledge you have unless it’s important think of the monitoring as a type of deep background on your child’s activities http://www.spying.ninja/ and think about how their online activities are affecting them before you react to problems

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பெண்ணியமும், பெண் கவிதைகளும் . (பாகம் – 1) (கட்டுரை)”
  1. sarala.dr says:

    the essay very nice

அதிகம் படித்தது