மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்மையின் தற்காக்கும் பண்பும், எச்சரிக்கை உணர்வும்- குறுந்தொகைப் பாடல்-1

ஆச்சாரி

Nov 30, 2013

குறிஞ்சித்திணை

பாடலை இயற்றியவர் திப்புத் தோளார்.

தலைவன் கொடுத்த கையுறையைத் தோழி மறுத்துக் கூறியதாக அமைந்துள்ள பாடல்.

தலைவன். தலைவிக்கு அன்புப் பரிசொன்றைக் கொடுக்கின்றான். அதனை வாங்க மறுக்கின்றாள் தோழி! மிகவும் அரிதான, அழகான கருத்துச்செறிவும் கடமையுணர்வும் மிக்க பாடல் இது! பெண்மையின் தற்காக்கும் பண்பினைப் பகரும் பாடலும்கூட! காதலன்,  தன் காதலைச் சொன்னவுடன், உடனே சம்மதம் தெரிவிப்பதாகப் பெண்மை இருக்கக்கூடாது என்பதை  இயம்புகின்ற பாடல்! பெண்ணுக்கு எச்சரிக்கை உணர்வு வேண்டும் என்பதைத் தோழியின் கூற்றாக அறியத்தரும் பாடல்!

தலைவன் கொடுத்தக் கையுறையைப் பெற்று களவிலே கலப்பதல்ல காதல் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் தோழியின் செயலே இப்பாடல்! இந்தப்பாடலை மேம்போக்காக்கப் பார்க்கின்றபோது ஏதோ முருகனின் பெருமைகளைச் சொல்லுவதுபோலத் தெரியும். இப்பாடலில் வரும் செங்களமும் செங்கோலும் சேயும் செங்கோடும் குருதிப்பூவும் அச்சமூட்டும் செந்நிறத்தைக் குறிப்பன. கையுறை கொடுக்கின்றான் தலைவன்; வாங்க மறுக்கின்றாள் தோழி! பாடலிலே சிவப்பு நிறம் ஐந்து இடங்களிலே இழையோடுகிறது. சிவப்புநிறம் அச்சத்தைத் தருவது. இங்கே அச்சப்படவேண்டியது எதற்கு? என்ற வினாவும் எழுகிறது.

தலைவன் நல்லவனா,வல்லவனா என்பதில் அச்சம்! அவன் எந்த இடத்தை, இனத்தைச் சார்ந்தவன் என்பதை அறியாதபோது எழுந்த அச்சம், இத்தனை அச்சமும் பெண்மைக்கு வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்ற அழகான பாடலிது! அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழிலல்லவா? தோழியும் அறிவுடையவள்! ஆதலின் காதலனின் கையுறையை மறுக்கின்றாள் தோழி! இதோ பாடல். இதுதான் குறுந்தொகையின் முதல் பாடல்.

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

கருத்துரை

போர்க்களம் செந்நிறமாகுமாறு அவுணர்களைக் கொன்று அழித்தவன், இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினைக் கொண்டவன், சிவந்த தந்தங்களையுடைய யானையையும் உடையவன்,  கழலுகின்ற தொடி அணிந்தவன், சிவந்த நிறமுடையவன் (குறிஞ்சி நில முருகன்). அவனின்  இக்குன்றம், இரத்த நிறத்தில் குலை குலையாகப் பூத்திருக்கும்  காந்தளை உடையது.

சொற்பொருள் விளக்கம்

செங்களம்- (போர்) களம் செம்மையாக, பட – தோன்ற, கொன்ற- அழித்த, அவுணர் தேய்த்த – அவுணர் இல்லையாகும்படி செய்த, செங்கோல் அம்பின் – சிவந்த நீண்ட அம்பினையும், செங்கோட்டி யானை – சிவந்த கொம்பினையுமுடைய யானையையும், கழல்தொடி – கழன்று விழுகின்ற தோள்வளை, சேஎய் – சிவந்த நிறமுடையவன்(குறிஞ்சிநில முருகன்), குன்றம் – குன்றம், குருதிப் பூவின் – இரத்த நிறமுள்ள பூவின், குலை – கொத்து, காந்தட்டு ஏ – காந்தளை உடையதே.

தோழி, தன் மலையிலுள்ள முருகனின் வீரத்தையும் ஈரத்தையும் மட்டுமே புகழ்ந்துரைத்த பாடலா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவள் எதிர்பார்ப்பது தலைவனும் வீரமும் ஈரமும் நிறைந்தவனாக இருக்கவேண்டும் என்பதே.  தலைவன் கொடுக்கின்ற கையுறையை உடனடியாக  பெறக்கூடாது என்பது தோழியின் எண்ணமாக இருந்தபோதிலும் அதனையும் தலைவனிடம் நாசூக்காக மறுக்கின்ற திறன் வியக்கவைக்கிறது.  “நீ கொடுக்கின்ற காந்தள்பூக்கள், எங்கள் மலையிலேயே நிறைய இருக்கின்றன” என்று மறுப்பைச் சொல்லாமல் சொல்லும் தோழியைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

Will the universe everyone or everything in the population group frequent be studied, or will there be a sample

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பெண்மையின் தற்காக்கும் பண்பும், எச்சரிக்கை உணர்வும்- குறுந்தொகைப் பாடல்-1”
  1. veerapandi says:

    I need more can u send 2 my mail id

அதிகம் படித்தது