மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொறியியல் படித்தால் இனி வேலை கிடைக்குமா? அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் பேரா.ச.கௌரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

ஆச்சாரி

Aug 15, 2013

கேள்வி: பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளின் தரம் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது.?

பதில்: அண்ணா பல்கலைக்கழகத்துடன் 536 கல்லூரிகள் இணைந்துள்ளன. அதில் தொழில்நுட்பம், மேலாண்மை, கணினி துறை, இதெல்லாம் சேர்ந்த கல்லூரிகளும் உள்ளது. இதன் தரத்தை எவ்வாறு பரிசோதிக்கிறோம் என்று பார்த்தோமானால், ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து (Centre of Affiliation -அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவதற்கான மையம்) இணைப்பிற்கான மையத்திலிருந்து  துணைவேந்தரின் ஒப்புதலோடு பேராசிரியர்கள் சேர்ந்த மூன்று பேர் அடங்கிய குழு சென்று அந்த கல்லூரி எந்த விதத்தில் செயல்படுகிறது? எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? அதன் வசதிகள் என்ன? செய்முறைப் பயிற்சிக்கான வசதி என்ன? ஆசிரியர்கள் தரமானவர்களாக இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்வார்கள். இதற்கு என்று ஒரு படிவம் (Format) உள்ளது. அந்தப் படிவத்தில் உள்ளவாறு நாங்கள் ஆய்வு செய்வோம்.

அவ்வாறு ஆய்வு செய்து அதில் அக்கல்லூரி தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு அதற்கான ஒப்புதல் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுத்த பிறகு அந்தக் கல்வியாண்டில் என்னென்ன வகுப்புகள் இருக்கின்றதோ அதை  அவர்கள் நடத்தலாம். ஒவ்வொரு வருடமும் இந்தக் கண்காணிப்புப் குழு செயல்படுவதால் அதன் தரம் குறையாமல் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கான சில வழிமுறைகளை, அகில இந்திய தொழில் நுட்ப கழகம் வகுத்துள்ளது. அந்த கழகமும், கண்காணிப்பு குழுவை இங்கு அனுப்பி  ஆய்வு செய்வார்கள். ஆனால் இக்குழு இங்கு வருடா வருடம் வருவதில்லை.

அண்ணா பல்கலைக்கழகக் கண்காணிப்பு குழு ,வருடா வருடம் கல்லூரிகளுக்குச் சென்று அதன் தரத்தினை பல்வேறு முறைகளிலே ஆராய்ந்து அதற்கான படிவத்தில் எல்லா தகவல்களையும் பதிவு செய்து  அண்ணா பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு வேறு ஒரு குழு அதனைச் சரிபார்த்து அதற்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதிப்பார்கள். அதில் கல்லூரி தரம் இல்லை என்றால், எதனால் அதற்கு தகுதி இல்லை?, கல்லூரி நடத்த இடம் போதவில்லையா? அதாவது செய்முறை வகுப்பு சரியில்லையா? இல்லை ஆசிரியர் சரியில்லையா? இவ்வாறு பல விதமாக ஆராய்ந்து நிவர்த்தி செய்வதற்கான உத்தரவை ஒரு கடிதம் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு அதன் குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்து மறுபடியும் அனுப்பும் போது அந்தக் கல்லூரி, போதிக்கக் கூடிய அளவிற்கு தரமானதாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கேள்வி: பொறியியல் மாணவர்களிடையே ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள், கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறதா?

பதில்: அண்ணா பல்கலைகழகத்தின் நேரடிக் கண்காணிப்பில் பனிரெண்டு கல்லூரிகள் இருக்கிறது. இதனை உறுப்புக் கல்லூரி என்பார்கள். இதற்கான மொத்தச் செலவு அண்ணா பல்கலைக்கழகத்தினுடையது.  அதனால் அங்குள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து மானியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவதால் அவர்களால் உயர்ந்த வகையில் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள், கண்டுபிடிப்புகள் செய்ய முடிகிறது. மற்ற இணைக்கப்பட்ட தனியார் கல்லூரிகளுக்குச் சில விதிமுறைகளை வைத்துச் சொல்லியிருக்கிறோம், அதை அவர்கள் சொந்த செலவில் கடைபிடிக்கவேண்டும். அது போன்ற சுயநிதிக் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக தன கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது. அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முழுப்பொறுப்பேற்காது.

இன்று உலகில் பார்த்தீர்களேயானால் கல்லூரிகளுக்குள் போட்டி இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு 10 கல்லூரிகள் இருந்தால் போட்டியில்லாமல் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்று மாணவர்கள் சேரும் பொழுது இந்தக் கல்லூரி எங்கு இருக்கிறது? இதிலுள்ள மற்ற வசதிகள் எல்லாம் என்ன என்று தெரிந்து விடுகிறது. அதனால் இப்போட்டியினாலே  அவர்களாகவே கல்லூரிகளின் தரத்தை உயரத்திக் கொள்ளக்கூடிய மனப்பான்மையோடு இந்தக் கல்லூரிகள் இருக்கின்றதால், இந்த ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டு வருகிறது என்பது தான் என்னுடைய கருத்து.

கேள்வி: தனியார் கல்லூரிகளில் மாணவர்களைப், பள்ளிக் குழந்தைகள் போல மனப்பாடம் செய்யக் கட்டாயப்படுத்துவது பற்றி உங்கள் கருத்து?

பதில்: அனைத்துக் கல்லூரிகளிலும் இவ்வாறு கட்டாயப்படுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது. பனிரெண்டாம் வகுப்புப் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிறந்த கல்லூரிகளாக ஒரு 50,60 கல்லூரிகளைத் தேர்வு செய்து அதில் சிறந்த கல்லூரி எது? எக்கல்லூரியில் அதிக விழுக்காட்டில் மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள் என ஆராய்ந்து அதன் பின்பே  சேருகிறார்கள். அவர்களெல்லாம் மனப்பாடம் பண்ண வேண்டும் என்ற கட்டாயத் தேவையில்லை. அவர்களாகவே படித்துக் கொள்வார்கள்.

ஆனால் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியவர்கள் வெளியூர் கல்லூரி, கிராமத்து கல்லூரிகளுக்குச் செல்லும் பொழுது மனப்பாடம் செய்து, திரும்பித் திரும்பி படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும், சொல்லிப்பார்க்க வேண்டும் என்கிற பயிற்சி கொடுத்தால் தான் அவர்களால் எழுத முடிகிறது. அது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால் இந்த மாதிரியான பயிற்சி முறைகள் இன்றைய மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது எத்தனை மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பது மாணவர்களுடைய தரத்தையோ, அந்தக் கல்லூரிகளின் நோக்கங்களையும் பொறுத்தது. சாதாரண வயிற்று வலி என்றால் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். அப்படி செய்தால் குணமாகிறது. இன்னும் அதிகமான வலியாக இருந்தால் மருத்துவரிடம்  சென்றால் ஊசி போடுவர். இன்னும் அதிகமான நோயாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்வர். அதற்காக எல்லாருக்கும் அறுவை சிகிச்சை என்று சொல்ல முடியாது. அது போலவே இன்றைய மாணவர்களின் படிப்பு முறையை அவர்களாகவே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

கேள்வி: மாணவர்களுக்கு சுயதொழில் குறித்த கல்வி போதிக்கப்படுகிறதா?

பதில்: இன்று ‘சுயதொழில் முன்னேற்றம்’ (Entrepreneurship development) என்ற பாடமே இருக்கிறது. ஆனால் அந்தப் பாடப்பிரிவைப் எடுத்துப் படிக்கின்ற மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்கிச் செல்கிறார்களே தவிர எத்தனை பேர் தொழில் முனைவோராக மாறுகிறார்கள் என்பது கேள்விக்குறியே? தமிழ் நாட்டில்  கிண்டியில் தொழில் முனைவோர் மேலாண்மை மையம் இருக்கிறது. இம்மையத்தைத் தமிழக அரசே நடத்துகிறது. அவர்களோடு நாங்களும் இணைந்து முகாம்கள், சிறப்புப் பேச்சுக்கள், சிறப்பு விரிவுரைகள் இதெல்லாம் செய்வதின் மூலமாக மாணவர்களுக்கு தொழில் முனைவது பற்றி ஒரு அறிமுகம் செய்து வைக்கின்றோம். அதாவது சுயதொழில் செய்ய என்னென்ன வசதிகள் இங்கு இருக்கிறது? அதற்கு யார் கடன் தருவார்கள்? எந்த விதமான தொழில் ஆரம்பிக்கலாம்? தொழில் ஆரம்பிப்பதற்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது? என்பதை எல்லாம் இந்த சுயதொழில் மேலாண்மை மையத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்திலேயே தொழில் முனைவோர் மேலாண்மை மையம் இருக்கிறது. அது இப்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது. இருந்தாலும் மாணவர்களுடைய ஆர்வத்தைப் பொறுத்துதான் இருக்கிறது. எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், நான் இவ்வளவு சம்பளம் பெறவேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.  ஒரு தொழில் துவங்குவது என்பது சுலபமான காரியம் கிடையாது. அத்தகைய சவால்களை எதிர்கொள்ள இன்றைய இளைய சமூகம் மறுக்கிறது. அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டார்களேயானால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் வந்துவிடும். இதற்கான பயிற்சி முறைகள் எல்லாம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கேள்வி: பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

பதில்: என்றைக்குமே தேவையும், உற்பத்தியும் இருக்கத்தான் செய்கிறது. தேவை அதிகமாகி உற்பத்தி குறைவானால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அன்று பார்த்தீர்களேயானால் நான் 1975 ல் பொறியியல் படித்தேன். 1980ல் முடித்து வந்தேன். தமிழ் நாட்டிலே மொத்தம் 7 பொறியியல் கல்லூரிகள் தான் அன்று இருந்தது. அப்போது பொறியியல் படிக்கப்போவது என்பது கனவு. ஆனால் இன்று பழைய மகாபலிபுரப் பிரதான சாலையில் மட்டும் 10 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. ஆனால் அன்று தமிழ் நாட்டிலே மொத்தம் அவ்வளவு கல்லூரிகள்தான் இருந்தது. அதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் இருந்தது, ஆனால் போதிய கல்லூரிகள் இல்லை. அதனால் பொறியியல் கல்லூரிகள் நிறைய ஆரம்பித்தார்கள்.

ஒரு கால கட்டத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டே வந்தார்கள். ஆனால் இப்போது தேவைகள் குறைந்து விட்டது. ஆனால் உற்பத்தி   நிறைய இருக்கிறது.  ஒரு வருடத்திற்கு தமிழ் நாட்டில் மட்டும் 1.4 லட்சம் பொறியாளர்கள் படித்து வருகிறார்கள். மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சைனாவிலிருந்து வருடத்திற்கு 1.1 லட்சம் பொறியாளர்கள் படித்து வருகிறார்கள் மொத்த சீன நாட்டில் இருந்தே அவ்வளவு பேர்தான் வருகிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து மட்டும் பொறியியல் படித்து வரும்  இவ்வளவு பொறியாளர்களுக்கு யார் வேலை தருவர்? அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் என்ன சொல்கிறது எனில்,  நாங்கள் ஏன் இவ்வளவு பொறியாளர்களை உருவாக்குகிறோம் என்றால் அவர்கள் தொழில் முனைய வேண்டும், தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உற்பத்தி அதிகமாகி தேவை குறைவதால் அனைவருக்கும் வேலை கொடுப்பது என்பது முடியாத காரியம். இப்போது ஒரு நல்ல உணவகத்தை அதாவது சுவையான உணவைத்  தரக்கூடியவை என்று எடுத்துக் கொண்டால் என்றைக்குமே கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அருகில் பாதி விலையில் கொடுத்து உணவு சரியில்லை என்றால் நாம் அங்கு செல்ல மாட்டோம்.  அதே மாதிரி நல்ல கல்லூரியில்  நல்ல தரமான மாணவர்கள் இருந்தால் இன்றும் கூட சில நிறுவனங்கள், மாணவர்களை அங்கு தான் தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு இன்றளவும் வேலை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

கேள்வி: தனியார் கல்லூரி ஆசிரியர்களின் தகுதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன? இதை முறைப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் உண்டா?

பதில்: ஒரு பேராசிரியர்(Professor) என்றால் முனைவர் பட்டம் பெற்றதோடு  10 வருட முன் அனுபவம்இருக்க வேண்டும். துணை பேராசிரியர்(Asst Professor) என்றால் முனைவர் பட்டம் பெற்றதோடு  5 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். ஆசிரியர் (lecturer) என்றால் அதற்கு கீழே இருக்கலாம். அகில இந்திய தொழில் நுட்ப கழகம் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள் என அனைத்திலும் இதைத்தான் வழிமுறைப்படுத்துகிறார்கள். வருடா வருடம் கண்காணிப்பு குழு செல்லும் போது இதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைக்கு ஏற்றது போல ஆசிரியர்கள் இருக்கிறார்களா? இல்லை என்றால் அவ்வாறு ஆசிரியர்கள் இல்லை என்று குறிப்பிட்டு விடுவார்கள். இதனால் அவர்களுக்கு உரிய மதிப்பெண் விழாது. உடனடியாக உரியவருக்கு ஒரு விளக்க அறிக்கை செல்லும். அதன் பின் இக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பணிகள் விரைவாக நடக்கும். இதனால் தான் ஆசிரியர்களுடைய தரத்தை கவனித்து வருகிறோம்.

கேள்வி: எந்தப் பொறியியல் துறைக்கு தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்பு உள்ளன?

பதில்: நிறைய பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுக்கக் கூடிய துறை எது என்று பார்த்தால் கணினி துறை தான். கணினி நிறுவனங்களை ஒரு காலத்தில் கல்லூரிகளுக்கு  சென்று தேர்ச்சி பெற்றால் போதும் என்று வேலைக்கு எடுத்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை குறைந்து விட்டது. ஏனென்றால் இன்று அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதினால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் நிறைய கம்பனிகளுக்கு நிறுவனங்களுக்கு தேவை இல்லாமல் போய்விடுகிறது. அன்று 100 நபர்களை வேலைக்கு எடுத்தவர்கள்  இன்று 10 பேரோ, 15 பேரோ எடுக்கிறார்கள். ஆனால் அதனால்  வேலை வாய்ப்பு குறைந்து கொண்டிருக்கிறதே தவிர இன்றும் வேலைக்கு எடுக்கிறார்கள். வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது.

அடுத்ததாகப் பார்த்தோமானால் இந்த கட்டுமானத் தொழிலில் (Civil Engineers)  வேலை வாய்ப்பு நிறைய இருக்கிறது. அடுத்து எந்திரவியலில் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு Civil, Mechanical , Electrical  ல் கணினி கொடுக்கக் கூடிய அளவுக்கு mass recruitment  job இல்லை. ஒரே நேரத்தில் 1000 நபர்களுக்கோ அல்லது  10,000 நபர்களுக்கு வேலை கொடுக்கக் கூடிய திறன், தகவல் தொழில் நுட்பத்தால் தான் முடியுமே தவிர மற்ற யாராலும் முடியாது. ஆனால் மற்றவர்களாலும் வேலை கொடுக்க முடியும்.     Civil, Mechanical , Electrical  இந்த பிரிவில் உள்ளவர்களுக்கும் வேலை கொடுக்க முடியும், ஆனால் மிகக் குறைவு.

கேள்வி: தமிழில் பொறியியல் கல்வி போதிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் வழி கல்வி என்பது ஒரு நல்ல விடயம் தான். ஆங்கிலத்தில் பாடம் பயிற்றுவித்தாலும் புரியவில்லை என்றால் தமிழில் சொல்வோம். சில சமயத்தில் புரியவில்லை என்றால் சம்பவங்கள், நகைச்சுவை, உவமைகள் இவற்றை எடுத்துரைக்கும் பொழுது, அதைத் தமிழில் சொல்வதால் எளிதாகப் புரிகிறது. மொழிபெயர்ப்பு  பண்ணும் பொழுது அதன் சுவை போய்விடுகிறது. புரியாதவர்களுக்கு தமிழில் சொல்லலாம். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் முதுகலை என்னும் மேற்படிப்பு படிக்கச்செல்லும் பொழுது, Master of Engineering,  Master of Technology போன்ற பாடங்கள்  தமிழில் கிடையாது. ஆனால் இவர்கள் தமிழில் படித்தாலும், ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒரு திறமை வளர்த்துக் கொண்டார்களானால் நல்லது. இன்றைய சூழலில் மேற்படிப்பை ஆங்கிலத்தில் தான் படிக்க முடியும்.

 அதே சமயத்தில் அவர்கள் வேறொரு கல்வி நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் பொழுது ஆங்கிலத்தில் படித்து வந்தவர்களுக்கு நிகராகவோ அல்லது அவர்களை விட அதிக திறமையை வெளிக்காட்டக் கூடிய சூழலுடன்,  அவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தமிழ்வழிக் கல்வியில் படித்தாலும் அவர்கள் ஆங்கிலத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால் ஆங்கிலம்தான் இன்று பல வேலை வாய்ப்புகளை வாங்கித்தரக் கூடிய அட்சய பாத்திரமாக இருக்கிறது.  இப்போது அமெரிக்காவில் பணி ஒப்பந்தம்  பெற்றீர்கள் என்றால் அவர்களுக்குத்  தமிழில் Programme செய்து என்ன ஆகப் போகிறது? அதனால் தமிழில் படிப்பது தவறில்லை, அவர்கள் பாடத்தை நன்றாகப் புரிந்து கொள்ளலாம், ஆனால் அதே சமயத்தில் ஆங்கிலத்தை விட்டு விடக் கூடாது. கேள்வி: ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னீர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 நேரடி கல்லூரிகளில் எதைப் பற்றியாவது  குறிப்பான ஆராய்ச்சிகள் நடந்திருக்கிறதா?

பதில்: எல்லாரும் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இப்போது அமெரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில பல்கலைக்கழகம் Auto mobile லிலும், சில பல்கலைக்கழகம் தோல் பற்றிய ஆராய்ச்சியிலும், சில பல்கலைக்கழகம் textile லிலும்  ஆராய்ச்சி பண்ணுகிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. இங்கு என்னென்ன பிரிவுகள் இருக்கிறதோ அதில் ஆராய்ச்சி பண்ணுகிறார்கள். Mechanical  என்று எடுத்துக் கொண்டால் Mechanical க்கு சம்மந்தமான ஆராய்ச்சி, ஆய்வுகள் பண்ணுகிறார்கள். Textile என்று எடுத்துக் கொண்டால், இப்பொழுது கோயம்பத்தூரில் நிறைய Textile கல்லூரி இருக்கிறது. அது Textile நிறுவனத்திற்குப் பயன்படுகிறது. இந்தப் பகுதியில் இவர்கள் தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

கேள்வி: பொறியியலில் அச்சாணியாக இருக்கக் கூடியது அண்ணா பல்கலைக் கழகம். அது இல்லாமல் I.I.T. என்பது நமக்கு அருகாமையில் இருக்கிறது. அதனுடன்  தொடர்பு கொண்டு ஏதாவது ஆராய்ச்சிகள் நடக்கிறதா?

பதில்: I.I.T அதாவது இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் உள்ள research என்ன என்றால் சில particular Branchers எல்லாம் பண்ணுகிறார்கள். அதாவது இங்கு ஏதாவது Project பண்ணும பொழுது வசதி இல்லை என்றால்  இப்ப என்னுடைய மாணவர்களே சில இயந்திரங்களை அங்கு சென்று பண்ணுகிறார்கள். அல்லது machine  பண்ணக் கூடிய result  வைத்து analyse பண்ணவேண்டும் என்றால் அங்கு உள்ள equipment ஐ வைத்து analyse பண்ணுவார்கள். ஏன் I.I.T. நூலகத்திலேயே வெளி நாட்டில் இருக்கக் கூடிய சில publications, journals  அதாவது தொழில் நுட்பம்,   கண்டுபிடிப்புகள் பற்றிய  பதிப்புகள் எல்லாம் I.I.T. யில் இருக்கிறது. இங்கிருந்து மாணவர்கள் சென்றால் அனுமதித்துப் படிக்கச் சொல்கிறார்கள். அங்கிருக்கிற ஆசிரியர்கள் இங்கு வந்து சிறப்புரை ஆற்றுவதற்கு, சிறப்புப் பேராசிரியர்கள் இங்கு வருகிறார்கள். அதே சமயத்தில் எங்களுடைய Projects போன்றவற்றை கணிப்பதற்கும், செய்வதற்கும் கூப்பிட்டாலும் வருவார்கள். அதே மாதிரி நானும் பலமுறை  போயிருக்கிறேன்.  அதாவது m.o.u என்பது புரிந்துணர்தல் என்று சொல்வார்கள், அதாவது கையொப்பமிட்டு பண்ணுவது. அது எதுவும் இல்லாமல் அருகில் இருப்பதனால் தனிப்பட்ட பழக்கத்தினால் இது நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து நிறைய துறைகளில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: வெளிநாடுகளில் கண்டுபிடிப்புகள், அதைச் சார்ந்த நிறுவனங்கள் நிறைய வருகிறது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அந்த மாதிரி உள்ளதா? உதாரணமாக வெளிநாடுகளில் MIT மாதிரி பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் google, sunjava நிறுவனம் ஆரம்பித்த மாதிரி பிற்காலத்தில் நம் ஊரில் வரவேண்டும் என்றால், அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் வேண்டும்?

பதில்: இதற்கு இரண்டு பேர் முன் வர வேண்டும். ஒன்று Academic Institutions வர வேண்டும் ,  இன்னொன்று industries வரவேண்டும்.  தாங்கள் சொல்கிற USA யில் பார்த்தீர்கள் என்றால் Industry Institute relationship நன்றாக இருக்கும். நான் Nanyan Technological University ல் சிங்கப்பூரில் வேலை செய்திருக்கிறேன். அங்கு பெரும்பாலான research பார்த்தீர்கள் என்றால் Applied research  தான்  ஆனால்  இங்கு பண்ணுவதெல்லாம் (Academic  research) கல்வியியல் சார்ந்ததாக பண்ணுவார்கள். நாங்கள் இதை கண்டுபிடித்தோம் என்று சொல்வார்கள். அது நடைமுறையில்  பயன்பட்டதா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது.

அங்கு நான் வேலை செய்த துறை பார்த்தீர்கள் என்றால் அது applied research .  நீங்கள் என்ன செய்தாலும் அது நிறுவனத்திற்கு போகும். ஏனென்றால் அந்த company product செய்யும் போது மக்களுக்குப் பயன்படும். அப்படிப்பட்ட research தான் பண்ணுவார்கள். Academic research இருந்தது,  ஆனால் நாங்கள் வேலை செய்தது applied research . பெரிய பெரிய company interaction இருந்தது.  அதில் பார்த்தீர்கள் என்றால் Sony, Canon, GE, Air Craft manufacturing Companies, Contact Lens Manufacturing Companies  போன்ற நிறுவனங்களோடு பணி செய்தேன். அவர்கள் வந்து ஒரு m.o.u புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டு இணைந்தே வேலை செய்யலாம் என்பர். என்னிடம் Equipment இருக்கிறது, Problem இருக்கிறது, உன்னிடம் அறிவு இருக்கிறது, வாருங்கள் சேர்ந்து வேலை செய்யலாம் என அழைப்பர். அமெரிக்காவில் இருக்கின்ற இந்த மனப்பான்மை இந்தியாவில் கிடையாது. தொழிற்சாலை நிறுவனத்தார் என்ன நினைக்கிறார்கள் என்றால், எனக்கு வேலை இருக்கு order இருக்கு நான் செய்து கொண்டே இருக்கிறேன். நீ கற்றுக் கொடுப்பதைச் செய்துகொண்டே இரு என்கின்றனர். இன்று நிறுவனங்கள் எல்லாம், நாம் சேர்ந்து வேலை செய்வோம், ஒவ்வொருவரும் ஒரு ஆய்வுக்கூடம் தயார் செய்வோம் வாருங்கள் அப்படிச் சொல்லி எல்லோரும் வேலை செய்தார்கள் என்றால் பெரிய அளவில் நாம் வளர முடியும்.

கேள்வி: இந்த கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை வீதம் குறைந்துள்ளது அதைப்பற்றி?

பதில்: ஏன் என்றால் நிறைய கல்லூரிகள் வந்து விட்டது. போன வருடமே 70 ஆயிரம், 80 ஆயிரம் பேர் சேராமல் இருந்தார்கள், இந்த வருடம் மட்டும் 13  கல்லூரி தமிழ் நாட்டில் புதிதாக வந்திருக்கிறது. திருச்சிப் பகுதியில் ஒரு கல்லூரியில் வெறும் 110 பேர் தான் சேர்ந்திருக்கிறார்கள், ஆனால்  300  பேரை சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்கள், ஆனால் 110 பேர் தான் சேர்ந்திருக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட புதுக் கல்லூரிகள் வந்துவிட்டது. ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைவாகும் சூழலில் நிலைமை போய்க்கொண்டிருக்கும் பொழுது புதுக் கல்லூரிகள் முளைத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.  Counselling (கலந்தாய்வு)  வரும் பொழுது பார்த்தீர்கள் என்றால் a level, b level, c level, d level இதில் இன்று சொல்லக் கூடிய நிறைய பேர் சேரவில்லை. இன்று பார்த்தீர்கள் என்றால் a leval , b leval கல்லூரிகளில் மாணவர்கள் சேருகின்றனர். இந்த , c level, d level, e level கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை. பேர் சொல்ல விரும்பவில்லை ஒரு பிரபலமான கல்லூரி ஒன்றுக்கு இன்று  4 கல்லூரி இருக்கிறது, இன்னொன்றுக்கு  ஆறு கல்லூரி இருக்கிறது. அவை எல்லாமே நிரம்பிவிட்டது. இந்தக் கல்லூரி எல்லாம் சென்னையைச் சுற்றி உள்ளது. இன்று கிராமத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வதில்லை. மாறாக அவர்கள் எல்லாம் சென்னையில் வந்து சேர்கின்றனர். காரணம் இங்கு வேலை கிடைக்கும் என்ற காரணத்திற்க்காக … இது ஒன்று.  இன்னொன்று பார்த்தீர்கள் என்றால் இங்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இங்கு ஒரு தகப்பனார் அவர் மகனுடன்  வந்திருந்தார். அவர் நினைத்த கல்லூரி கிடைக்கவில்லை மற்றக் கல்லூரிகளில் சேர்த்தால் வேலை கிடைக்காது, என் மகள் இதைப் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறாள் என்று கூறி தன் கிராமத்திற்கே அவர் சென்றுவிட்டார். கொடி பறக்கிறது என்றால் பறக்கும் இடத்தில் பறந்து கொண்டுதான் இருக்கிறது.

கேள்வி: நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் என்று தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு உங்களுடன் தொடர்பு உள்ளதா?

பதில்: தொடர்புகள் இல்லை. ஆனால் அங்கு இளங்கலை படித்து வந்தார்கள் என்றால் இங்கு முதுகலை படிக்கிறார்கள், B.E படித்தவர்கள் M.E  படிக்க வருவார்கள், M.E.படித்தவர்கள் இங்கே P.hd  படிக்கிறார்கள். தகுதி அடிப்படையிலேயே நாங்கள் அனுமதிக்கிறோம். நிகர் நிலைப் பல்கலைக் கழகம் என்று இங்கு யாரையும் ஒதுக்குவது கிடையாது. விதிமுறை தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்களை சேர்க்கிறோம்.

கேள்வி: சிறகு இணைய இதழ் பற்றிய உங்கள் கருத்து?

பதில்: சிறகு இணைய இதழை பார்த்தேன் படித்தேன். இதில் உள்ள படைப்புகளில் தமிழாக்கம் மிகவும் அருமையாக உள்ளது. இதில் click என்ற ஆங்கில வார்த்தைக்கு சொடுக்கு என அழகான தமிழில் எழுதி இருந்தீர்கள். நல்ல ஒரு தமிழாக்கம். இதில் இடம்பெற்ற சிறுகதைகளை குறிப்பாக “பல்லக்குத் தூக்கிகள்” என்ற கதையை நான் விரும்பிப் படித்தேன்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான படைப்புகளை சிறகில் வெளியிட்டு வருவது பெருமைக்குரியதாகும். வட அமெரிக்கத் அமெரிக்க தமிழர்கள்        நடத்துகிறார்கள் என்றதும் என்னுடைய நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்களை ஞாபகம் வந்தது. அவர் FETNA தமிழ் விழாவில் பேசியதை என்னோடு பகிர்ந்து கொண்டார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் கொண்டிருக்கும் அவர்களின் அளவற்ற பற்றினைக் கண்டு வியக்கிறேன். மேலும் சிறகு வளர வாழ்த்துக்கள்.

The low-carb essay help online solution a slimmer you in days carbohydrates, fats and chapter writing from research what will I learn

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பொறியியல் படித்தால் இனி வேலை கிடைக்குமா? அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் பேரா.ச.கௌரி அவர்களுடன் ஒரு நேர்காணல்”
  1. Mr Calvin says:

    நல்ல நாள்,

    நான் ஒரு பதிவு தனியார் பணம் கடன் இருக்கிறேன். நாம் உலகின் எந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு திருப்பி கால காலம் ஒரு வருடத்திற்குள் 3% ஆக குறைந்த மிக குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதங்கள் உலகெங்கிலும் தமது நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் மக்கள், நிறுவனங்கள், உதவ கடன் கொடுக்க. நாம் 100,000,000 யூரோ வரை 5,000 யூரோ எல்லைக்குள் கடன் கொடுக்க. நமது கடன்கள், நன்றாக காப்பீடு அதிகபட்ச பாதுகாப்பு எங்கள் ப்ரிஒரிட்ய்.ஈன்டெரெச்டெட் நபர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று: (சல்வின்கிங்லொஅன்ஃபிர்ம்@க்மைல்.சொம்)

    கடன் வழங்குகின்றன.

அதிகம் படித்தது