மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

ஆச்சாரி

Sep 1, 2011

தொடர்வண்டி நிலையத்தில் குதிரை வண்டியில் பயணிகளை ஏற்றி செல்லும் குதிரைதான் நம் ரங்கு. அதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று கவலைப் பட்டுகொண்டிருந்தது. சே.. வாழ்க்கையே ரொம்ப மோசம். இரவு, பகல் என்று  நேரம் காலம் கிடையாது, எப்போ நிலையத்திற்கு தொடர்வண்டி வருகிறதோ, உடனே  வரும் பயணிகளை சுமந்து சென்று அவர்கள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட வேண்டும். ஓய்வு ஒழிச்சலே கிடையாது, ஒரே மாதிரியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தால்  என்ன சுகம் என்று நினைத்தது.

ஒரு நாள் ஆற்றில் குளிக்க செல்லும் போது தன்னை போன்ற மற்ற குதிரைகளை பார்த்தது. மற்ற குதிரைகள் எல்லாம் பளிங்கு சுரங்கம், காட்சி கொட்டகை, பந்தயத்திடல், மற்றும் பல்வேறு  இடங்களில் இருந்து வந்திருந்தன. அவைகள் எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக தோன்றின. நாமும் மற்ற குதிரைகள் போல் மகிழ்ச்சியாக மாற வேண்டும் என்று நினைத்தது.

உடனே ஆற்றில் குதிரை வண்டிக்காரர் கவனிக்காத நேரம் பார்த்து அங்கிருந்து ஓட்டம் எடுத்தது. காடு வெளிகளில் சுற்றித் திரிந்து கடைசியில் ஒரு பளிங்கு சுரங்கத்தை வந்து அடைந்தது. அங்கு சில குதிரைகள் வேலை செய்துக் கொண்டிருந்ததை பார்த்தது. ஆகா நாமும் இங்கு வேலைக்கு சேர்ந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தது. சுரங்கத்தில் வேலை செய்கிறோம் என்று வெளியில் சொன்னால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று எண்ணி மற்ற குதிரைகளோடு வரிசையில் நின்று சுமைகளை ஏற்றிக்கொண்டு பிற  குதிரைகளை தொடர்ந்தது. மாலை நெடுநேரம் ஆகி விட்டது, ஆனாலும் வேலை முடிந்த பாடு இல்லை. பக்கத்தில் உள்ள குதிரையிடம் எப்போ வேலை முடியும் பசிக்கிறது, கால் வலி உயிர் போகிறது என்றது. இன்னும் சிறிது நேரத்தில் வேலை முடிந்து விடும் பின்பு நல்ல உணவு தருவார்கள்,  இரவு முழுவதும் ஓய்வு எடுத்த பின் அதிகாலையிலே வேலை கொடுத்து விடுவார்கள்,  சும்மா தொல்லை செய்யாமல் வேலையை பார் இல்லை என்றால் அடிப்பார்கள் என்றது.  ஐயோ இந்த வேலை நமக்கு சரிப்படாது,  விடிந்ததும் வேறு இடம் பார்க்க வேண்டியது தான் என்று நினைத்தது ரங்கு.

காலையில் எழுந்து, ஓடி ஓடி ஒரு ஊரை வந்தடைந்தது. அந்த ஊரின் நடுவில் இருந்த குதிரை பந்தயத்திடலைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தது. குதிரை பந்தயத் திடலில் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த குதிரைகளுடன் தானும் சேர்ந்துக் கொண்டது. போட்டி முடிந்ததும் ஓய்வில் விட்டு விடுவார்கள் என்று நினைத்தது. ஆனால் பயிற்சி என்று வேலை பின்னி எடுத்து விட்டனர்.

பிறகு ஒரு காட்சி கொட்டகையில் சேர்ந்தது, கோமாளிகள் இதை தாண்டி  குதித்து செய்யும் வித்தைகள் எரிச்சலை ஊட்டியது. நெருப்பு வளையம் தாண்டும் போது உயிரே போய் விட்டது. குரங்கு சவாரி செய்யும் போது நகத்தால் முதுகை கீறி ரத்தம் வழிந்து வலித்தது .

ஐயோ இதெல்லாம் நமக்கு தேவையா? தொடர்வண்டி நிலையத்தில் எவ்வளவு இன்பமாக இருந்தோம். புத்தி கெட்டுப்போய் இப்படி வந்து வலிய மாட்டிக்கொண்டோமே. எப்பொழுது பார்த்தாலும் இந்த பயணிகளுக்காகக் காத்து கிடக்க வேண்டி இருக்கிறதே என்று நினைத்து மனம் வருந்தினோமே, அது எல்லாம் ஓய்வு நேரம் என்று உணர வில்லையே. இரவானாலும் பகலானாலும் நம் முதலாளி எப்போது தான் உணவு அருந்தினாலும் நமக்கும்  இரை போட்டு எவ்வளவு அன்பாக தடவிக்கொடுத்து வைத்துக்கொண்டார். இப்படி செய்து விட்டோமே என்று மனம் வருந்தியது குதிரை  ரங்கு.

குட்டிகளா ரங்கு செய்தது சரியா? இருப்பதை கொண்டு மன நிறைவு அடைவது என்பது மிகவும் நல்ல குணம், என்பதை ரங்கு உணர்ந்து, வாழ்நாளின் மீதி காலத்தை “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற சொல்லுக்கேற்ப தொடர்வண்டி நிலையத்திலையே மகிழ்ச்சியாக  கழித்தது.

Here are two examples as for me, I frankly cleave to the greeks and enjoy it not to the indians, and I aspire to be a rational animal rather than a pure spirit

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”
  1. ராஜபாளாயத்தான் says:

    கட்டுரையாளரின் நோக்கம் என்னவென்று எனக்கு சரியாக புரியவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்ன வென்றால், இந்த கட்டுரை குழந்தைகளின் மாற்று முயற்சிகளுக்கு / சுதந்திரமாக சிந்திக்கும் திறனுக்கு / சுயமாக யோசிக்கும் திறனுக்கு முட்டுகட்டையாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அதிகம் படித்தது