மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

போர்க் குற்றங்களை உலகுக்கு உணர்த்திய மேரி கோல்வின்

ஆச்சாரி

Mar 1, 2012

உலகப் புகழ்ப் பெற்ற போர் ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியுமான மேரி கோல்வின், 56  (http://en.wikipedia.org/wiki/Marie_Colvin) அவர்கள் சிரியாவில் பிப்ரவரி 22-ம் நாள் சிரிய அரசின் குண்டுவீச்சில் மரணமடைந்தார்.

2009-ல் ஈழத்தில் நடந்தேறிய ஊடகச் சான்றில்லாத போர் போல சிரிய அரசும் பன்னாட்டு ஊடகத்திற்கு சிரியாவில் தடைவிதித்து இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இலங்கை அரசு போல் தம் மக்களையே அழிக்கும் இந்த இழிசெயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் போர்க் குற்றங்களை வெளிக்கொணரும் வகையில் திருமதி. கோல்வின் அவர்களும், பிரான்சு நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் ரெமி ஓச்லிக் அவர்களும் தடையை மீறி சிரியாவிற்குள் செல்லும் வழியில் அரசின் குண்டு வீச்சில் பலியாயினர்.

மேரி 1956ம் ஆண்டு, சனவரித் திங்கள் 12ம் நாள் நியூயார்க் மாநிலத்தில் பிறந்தார்.  இவர் பிரித்தானிய செய்தித்தாளான ‘சண்டே டைம்சு – The Sunday Times’ என்கிற பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்தார்.  1986 –ல் மத்திய ஆசியாவின் போர் ஊடகவியலாளராக தம் பன்னாட்டு பணியைத் துவங்கிய மேரி அவர்கள் செச்னியா, சியாரா லியோன், சிம்பாப்வே, இலங்கை மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் நடந்த போர் குறித்தும் உலகிற்கு அவ்வப்பொது செய்திகளை வெளிக்கொணர்ந்து வந்துள்ளார். 1999-ம் ஆண்டு கிழக்கு தீமோர் நாட்டில் 1500 பெண்களைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கோசவோவிலும் செச்னியாவிலும் அவர் ஆற்றிய பணிக்கு இவருக்கு பன்னாட்டு பெண்களின் ஊடக அறக்கட்டளையின்’ விருது அளிக்கப்பட்டது. இவர் பல போர் குறித்த குறும்படங்களில் தோன்றி உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஏப்ரல் 16, 2001 இவர் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதியிலிருந்து அரசிடமிருந்த பகுதிக்குச் செல்லும் வேளையில் இலங்கை அரசின் குண்டு வீச்சில் ஒரு கண்ணை இழந்தார். இவர் தாம் ஒரு செய்தியாளர் என்று உரக்கக் கத்திய பின்பும் இலங்கை அரசு இவர் மேல் தாக்குதல் தொடுத்தது அனைத்து ஊடகங்களையும் அன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ்ப் பகுதியில் ஏற்பட்டிருந்த மனித அவலங்களை வெளிக்கொணரும் நோக்கத்தில் இவர் 30 மைல்களுக்கு மேல் நடந்து வந்து அரசுப் பகுதிக்கு வந்த வேளையில் இலங்கை இராணுவம் இவர் மீது தாக்குதலைத் தொடுத்தது. தமிழ்ப் பகுதியில் அன்று நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் அத்யாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைக் குறித்து உலகிற்கு இவரது ஊடகப் பணியின் மூலம் உணர்த்தினார். இதனால் ஆத்திரம் கொண்ட இலங்கை அரசு, இவர் ஒரு பன்னாட்டு ஊடகவியலாளர் என்று தெரிந்தும் இவர் மீது தாக்குதல் தொடுத்தது, இவர் போல் எவரும் தமிழ்ப் பகுதிக்குச் செல்லக்கூடாது என்பதை உணர்த்த வேண்டி இக்கொடூரத் தாக்குதலை நடத்தியது.

இலங்கை அரசின் போர்க் குற்றங்களை உலகம் உணர்ந்ததற்கு இவரது பணி முதன்மையானது. மே 17, 2009-ல் புலிகளின் அரசியல் தலைவரான பாலசிங்கம் நடேசன் அவர்களும் அரசியல் இயக்ககத்தின் அதிகாரியான புலித்தேவன் அவர்களும் சரணடைய முன்வந்த போது மேரி அவர்களின் உதவியை நாடினர். ’அவர்கள் சரணடைய முயன்ற போது அரசுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக’ மேரி கோல்வின் அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்தார்.  ஐநா. பொதுச்செயலரின் ஆலோசகரான திரு விசய் நம்பியார் அவர்களை மேரி தொடர்பு கொண்டு இதற்கு ஆவன செய்ய வேண்டினார். திரு. நம்பியாரும் இலங்கை அரசிடம் பேசி இதற்கு ஆவன செய்தார். திரு. நம்பியார் இவர்கள் சரணடைந்தால் பாதுகாப்பளிக்கப் படும் என்று இலங்கை அதிபர் உத்தரவாதம் கொடுத்ததாகவும் மேரி அவர்கள் கூறியுள்ளார்.  இதை அண்மையில் திரு. நம்பியார் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். http://www.bbc.co.uk/sinhala/news/story/2012/02/120223_bandara_marie_colvin.shtml

ஈழத்தில் எவ்விதத் தடயமும், பன்னாட்டு ஊடகமும் இல்லாமல் செய்து தமிழ் மக்களை எப்படி இலங்கை அரசு கொன்று குவித்ததோ அதே பாணியில் இன்று சிரியா அரசும் தம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இன்னும் எத்தனை நாடுகள் இலங்கையைத் தொடர்ந்து தம் மக்களை அழிக்கும் போக்கை உலக நாடுகள், தமிழின அழிப்பை வேடிக்கைப் பார்த்தது போல் வேடிக்கை பார்க்கப் போகிறதா என்கிற கேள்விக்கு அவர்கள்தான் பதில் கூற வேண்டும்.

தமிழ் மக்களின் அவலத்தை உலகிற்கு உணர்த்தி வந்து கடைசிவரை அமைதிக்காக உழைத்த மனித உரிமையாளரும், போரினால் மக்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வப்போது உலகிற்கு எடுத்துச் சொல்லி வந்த திருமதி மேரி கோல்வின் அவர்களின் மரணம் அமைதி விரும்பு அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், தி சண்டே டைம்சு நிறுவனத்திற்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போர்க் குற்றங்களை உலகுக்கு உணர்த்திய மேரி கோல்வின்”

அதிகம் படித்தது