மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்களையும் ஊழல் சகதியில் தள்ளும் இடைத் தேர்தல்கள் தேவையா?

ஆச்சாரி

Mar 15, 2012

தன் உயிரைக் கொடுத்து சங்கரன்கோவிலை தமிழகத்தின் ஒரு மாத தலைநகராக்கிச்  சென்றுவிட்டார் கருப்பசாமி. நம் தொகுதி தேவைகளை சட்டமன்றத்தில் பேசுவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, சட்ட மன்றத்தையே  தொகுதிக்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றிருக்கிறார். தமிழகத்தின் அத்தனை  முக்கிய புள்ளிகளும் வரிசையில் சென்று சங்கரன்கோவில் மக்களை தரிசனம் செய்து வந்துகொண்டிருக்கின்றனர்.

தேய்ந்துபோன சக்கரங்களுடன் உராய்ந்துக் கொண்டிருந்த சாலைகள் இன்று புத்தம் புது வண்ண வண்ண வாகனங்களுடன் வழுக்கி  விளையாடிக் கொண்டிருக்கின்றன. வீதிகள் எங்கும் தாழ்த்து கட்டப்பட்ட கரை வேட்டிகள் தினம் பலமுறை கூட்டி சுத்தமாக்கி செல்கின்றன. டேய் என்ற வார்த்தை அண்ணனாகிப் போகி, கிழவிகள் எல்லாம் பாட்டியாகி, பெருசு எல்லாம் தாத்தாவாகி, மரியாதை குறைவான வார்த்தைகள் எல்லாம் திடீரென்று மறைந்துவிட மொழியே மலைத்து நிற்கின்றது. நூறு ரூபாய் கொடுத்தால் சில்லரை இல்லை என்று  சொன்ன பெட்டிக்கடைகளில் இன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் சில்லரையாகி விட்டன. முதல்வர் படமிட்ட மின்விசிறியின் காற்றில் அமர்ந்து நமக்கே இந்த மின்வெட்டு சிரமமா இருக்கே, மற்ற ஊர்களில் எல்லாம் எப்படி தான் மக்கள் சமாளிக்கிறார்களோ என்ற பேச்சில் சங்கரன்கோவில் பெண்களின் சமூக அக்கறையை காண முடிகிறது.

கொண்டு வந்த நான்கு வேட்டி சட்டைகளை தினம் அவசர சலவைக்கனுப்பி பெற்று கலையாத கரைவேட்டிகளுடன் காளை போல் காலையில் கிளம்பி கழுதை போல் மதுக்கடைகளில் பொழுதை முடிக்கும் கட்சிக்காரர்களின் நிலை தான் சற்று கவலைக்கிடமாக இருக்கிறது. உணர்வுகளை உள்ளடக்கி உதட்டில் புன்னகையுடன் நாள் முழுவதும் விமானப் பணிப்பெண்கள் போன்று வலம் வருவதில் இருக்கும் சிரமம்  அவர்களுக்குத் தானே தெரியும்.தெருவில் நுழைந்ததுமே வீட்டுக் கதவை சாத்தும் பெண்கள்,  ஆளைப் பார்த்ததும் அகப்பட்டு விடக்கூடாது என்று கலைந்து செல்லும் ஆண்கள்,  சும்மா சும்மா வர்றீங்க, எப்ப பண உரை கொடுப்பீங்க என்று விரட்டும் விடலைகள் என்று அனைவரையும் சமாளிப்பது சாதாரண வேலையா. இடை இடையே பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதைப் போன்று பெரியவர்களின், சிறியவர்களின் காலில் விழுந்து எழ வேண்டியிருப்பது கூடுதல் கொடுமை.

தன்னால் எதையுமே கட்டுப்படுத்த முடியாதென்றாலும் அனைத்தையும் அடக்கியாளும் மனப்பான்மையுடன் சில தேர்தல் அதிகாரிகள் அங்கும் இங்கும் இருப்பதை பார்க்கையில் இரும்படிக்கும் இடத்தில் ஈக்களை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

ஆளும்கட்சி, ஆண்ட கட்சி, ஆளத்துடிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் சரி, அரசு அதிகாரிகளும் சரி நேரடியாக பதினெட்டாம் தேதி சட்டென்று வந்து இந்த நாடகம் முடிவிற்கு வந்துவிடாதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கோபுரத்தில் இருந்து குப்பைக்கு போய்விடுவோமே என்ற கவலையில் மக்கள் பலர் நாடகக் காட்சிகளில் கவனம்  செலுத்தாமல் இருப்பதையும் காண முடிகிறது. தேர்தல் உள்ள போதே ஊற்றிக்கொள் என்ற புதுமொழிக்கேற்ப மதுக்கடைகளில் கரைவேட்டிகளை கறந்து கொண்டிருக்கும்  மக்களையும் காண முடிகிறது.

திருமங்கலத்தில் துவங்கிய இடைத்தேர்தல் பணப்புயல் சங்கரன்கோவிலில் சிறிது வலுவிழந்தே காணப்படுகிறது. கடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களின்  வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு தமிழக கட்சிகள் வரலாறு படைத்ததை  நாமறிவோம். சென்ற இடைத்தேர்தல்களில் பணம் மட்டுமல்லாமல் அலை பேசி கட்டணங்கள், மட்டைப் பந்து விளையாட்டு சாதனங்கள், மூக்குத்தி, சேலை, வேட்டிகள், பாத்திரங்கள் என்று பண்டமாற்று முறைகளிலும்  கட்சிகள் வாக்குகளை வாங்கிக்குவித்தன.

வாக்களர்களுக்கு கொடுக்கும் பணம் பொருள்கள் மட்டுமல்லாது கட்சிக்காரர்களின் களப்பணிக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கோடிகளை க்கொட்டி செலவு செய்ய வேண்டியதாகிறது. முக்கியத் தலைவர்களின் ஓரிரு நாள் பரப்புரைக்கே பல கோடிகள் செலவிடப்படுகின்றன. சங்கரன்கோவில் பரப்புரைக்கு முதல்வர் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கு திருவேங்கடம் தனியார் பள்ளி, தேவர்குளம் மற்றும் ராஜபாளையம் ஆகிய மூன்று இடங்களில் ஹெலிகாப்டர்  இறங்குதளம் அமைத்திருகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். தற்போதைய  ஆளும்கட்சி மட்டுமல்ல, முந்தைய ஆளும்கட்சியும் சரி, தற்போதைய எதிர்க்கட்சியும் சரி யாரும் தேர்தல் செலவுகளுக்கு அஞ்சுவதாகத் தெரியவில்லை. இந்த செலவுகளுக்கு பயந்தே சிறிய கட்சிகள் இடைத்தேர்தல்களை புறக்கணிக்கின்றன அல்லது யாருக்கேனும் ஆதரவளித்துவிட்டு விலகிக்கொள்கின்றன.

இவ்வளவு செலவு செய்யும் கட்சிகள் இந்த செலவுகளை ஒன்றுக்கு பத்தாக எடுக்காமலா விடுவார்கள்?  இடைத்தேர்தல் சிறப்பு ஊழல்களையும் நாம் சகித்து க்கொள்ளவேண்டிதானிருக்கிறது. ஊழல் மட்டுமல்லாமல் ஒவ்வொரு இடைத்தேர்தல்களையும் நடத்த அரசும் பல கோடிகளை செலவிடுகிறது. மேலும் இடைத்தேர்தல்களால் ஒரு மாதத்திற்கு மாநில அரசே முடங்கிப் போய்விடுகின்றது.  அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணி செய்ய சென்றுவிடுவதால் எந்த ஒரு துறை முடிவுகளும் எடுக்கப்படாமல் அரசு பணிகள் தேங்கி நிற்கின்றன.

இவற்றை எல்லாம் விட மிக மோசமான ஒரு பாதிப்பை இடைத்தேர்தல்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.  அது மக்களையும் ஊழல்வாதிகளாக்குவது. முன்னர் ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் மட்டுமே கொள்ளையடித்து வந்தனர். பின்னர் கூட்டணிக் கட்சிகளை அமைதிப்படுத்த அவர்களையும் சேர்த்து கூட்டுக் கொள்ளைகள் அடித்தனர். தற்போது அதன் அடுத்த பரிணாமமாக மக்களையும் அந்த வளையத்திற்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியை தேர்தல் காலங்களில் மக்களுக்கு பிரித்து கொடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கொள்ளையடிக்கும் உரிமத்தை மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

உழைப்பை விற்று பணம் சம்பாதிக்கும் நம் மக்கள் தற்போது உரிமையை விற்று பணம் சம்பாதிக்கும் வழியை  ஆர்வமாக விரும்புவது மிகவும் ஆபத்தானது. இது போன்ற இடைத்தேர்தல்கள்  என்றாவது அரிதாக நடந்தால் பரவாயில்லை. கடந்த ஆட்சியில் பதினோரு  இடைத்தேர்தல்களை சந்தித்தோம். இந்த ஆட்சியில் ஓராண்டு நிறைவடைவதற்குள்ளாகவே  இரண்டாவது இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். சராசரியாக ஆறுமாதத்திற்கு ஒரு இடைத்தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணமே தேர்தல் முடிவை எழுதியிருகின்றன.

இடைத்தேர்தலில் இருக்கும் இந்த பழக்கம் பொதுத் தேர்தல்களிலும் எதிரொலிப்பதற்கு முன்னர் நாம் விழித்துக்கொள்வது அவசியம். இடைத்தேர்தல்கள்  அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமிடையேயான விருப்பமான வியாபாரமாகி விட்டதால் தேர்தல் ஆணையத்தால் தலைகீழாக நின்றாலும் வாக்கு வியாபாரத்தை  நிறுத்த முடியாது. கடந்த பல இடைத்தேர்தல்களும் இதை தெளிவாகவே  உணர்த்திவிட்டன. இடைத்தேர்தல் குற்றங்களை தடுக்க முடியாவிடின் தவிர்த்து விட்டாலென்ன?

பெரும்பாலான இடைத்தேர்தல்கள் பதவியிலிருப்பவரின் மறைவினாலே நடக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் நாம் சந்தித்த 13 இடைத் தேர்தல்களில் எட்டு இடைத்தேர்தல்கள் பதவியிலிருந்தவரின் மரணத்தினாலே நிகழ்ந்தன. இவற்றுள் ஆறு மாதத்திற்கு முன்னர் உயிர்நீத்த அமைச்சர் மரியம் பிச்சை அவர்களின் மரணம்  மட்டுமே விபத்தால் நிகழ்ந்தது. ஏனைய ஏழு சட்டமன்ற உறுப்பினர்களின் மரணமும்  உடல் நலக் குறைவினாலே நிகழ்ந்தவையே. இதைத் தவிர்த்து மேலும் மூன்று  உறுப்பினர்கள் சென்ற சட்டமன்ற ஆயுள்கால இறுதியில் உடல் நல குறைவால் உயிர் நீத்ததால் இடைத்தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஆக ஆறு ஆண்டுகளில் நாம் தேர்ந்தெடுத்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் உடல்நலக்குறைவால் உயிர்நீத்திருக்கின்றனர். நிச்சயம் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மாநிலத்தின் தலைசிறந்த மருத்துவ வசதிகள் கிடைத்திருக்கும். ஆயினும் இவர்களை குணப்படுத்த இயலவில்லை. நம் சட்டமன்ற உறுப்பினர்களின் மரண விகிதம்  தமிழகத்தின் பொதுவான மரண விகிதத்தை விட பலமடங்காகும். நாம் தேர்ந்தெடுப்பவர்கள் உடல் நலம் உடையவர்களாக இருந்தால் தான் சிறப்பாக பணி செய்வார்கள். அரசு அலுவலகப் பணி உட்பட பல பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கு மருத்துவ சோதனை செய்து நலச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மிக உயரிய பதவிகளுக்கும் அமல்படுத்தினாலே பல இடைத்தேர்தல்களை தவிர்த்து விடலாம். தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவரிடம் தகுதிச் சான்றிதழ் பெற்று வேட்பு மனுவுடன் சமப்ர்பிக்க வேண்டும்படி சட்டம் கொண்டுவர வேண்டும்.

மரணத்திற்கு அடுத்தபடியான இடைத்தேர்தல்களுக்கான காரணம் உறுப்பினர்கள்  பதவி விலகுவதே. கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி  விலகியிருக்கின்றனர். இதில் நால்வர் கட்சி மாறுவதற்காகவே பதவி விலகினர்.  தம்பிதுரை மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக பதவி விலகினார். கட்சி மாறுவதற்காக பதவி விலகுபவர்களில் சிலர் புதிய கட்சியில் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டு வெற்றியடைந்துவிடுகின்றனர். தானாக பதவி விலகுபவர்கள் ஓராண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அவ்வொரு சட்டம் இருந்திருந்தால் திருச்செந்தூர் போன்ற இடைத்தேர்தல்களை தவிர்த்திருந்திருக்கலாம். அதே போன்று மக்களால் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவிக் காலம் முடியும் வரை மற்ற பதவிகளுக்கு போட்டியிட முடியாது என்ற சட்டத்தையும் கொண்டுவர வேண்டும். ஒரே நபர்  ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றியடைவதையும் தவிர்க்கும்படி சட்டம் இயற்ற வேண்டும். இதன் மூலம் கட்சித்  தலைவர்கள் இரண்டு தொகுதியில் நின்று இரண்டிலும் வென்று பின்னர் ஒரு தொகுதி பதவியை விடுவதையும் தவிர்த்து விடலாம்.

இந்த காரணங்களை தவிர்த்து சில நேரம் நீதிமன்ற தீர்ப்புகளும் இடைத்தேர்தல்களுக்கு காரணமாகின்றன. ஆனால் பெரும்பாலும் அது அரிதான  நிகழ்வுதான்.

எத்தனை சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத புதிய காரணங்களால் இடைத்தேர்தல்கள் நம் மீது திணிக்கப்படலாம். பல ஆண்டுகளாக அரசியல் வல்லுனர்கள் இடைத்தேர்தல்களை  தவிர்க்க சில வழிகளை முன்மொழிந்து வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலானோர் முன் வைப்பது கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது. இந்த தீர்வில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இரண்டாம் இடத்தைப் பெற்றவர் உறுதியாக அந்த தொகுதி மக்களின் பெரும்பாலானோரால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர். அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவது  மக்களின் முடிவிற்கு எதிரானதாகும். அதே போன்று பெரும் கட்சி தலைவர்கள்  இரண்டாம் இடம் பெற்று தோல்வியுற்றால் தன்னை எதிர்த்து வெற்றி பெற்றவரை பணம்  கொடுத்து பதவி விலகச் செய்து தன்னிச்சையாக மக்களின் தீர்ப்பிற்கு எதிராக  பதவியடைந்து விடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

சில அரசியல் வல்லுனர்கள் எந்த கட்சி அந்த தொகுதியில் வெற்றியடைந்திருந்ததோ அந்த கட்சியே ஒருவரை உறுப்பினராக அறிவித்துக் கொள்ளலாம் என்ற தீர்வை முன்வைக்கின்றனர். இது நம் நாட்டு தேர்தல் முறைக்கு எதிரானது. பல நாடுகளில் தேர்தலில் கட்சி சின்னத்திற்கு மட்டும் மக்கள் வாக்களிப்பார்கள்,  பின்னர் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினரை அறிவிக்கும். நம்  தேர்தல் முறையில் மக்கள் வேட்பாளருக்குத் தான் வாக்களிக்கிறார்கள்,  கட்சிகளுக்கல்ல. இந்த தீர்வை நடைமுறைப்படுத்தினால் தேர்தலில் நின்று மக்களின் அனுமதி பெற இயலாத பல அரசியல்வாதிகள் பின் வழியாக பதவிக்கு வந்துவிடும் வாய்ப்பை உருவாக்கி விடும். ஏற்கனவே ராஜ்யசபா என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஆயிரம் வாக்குகள் கூட வாங்க இயலாதவர்கள் பெரும் பதவிகளில்  அமர்ந்து கோடிக்கணக்கான மக்களை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையமே ஒவ்வொரு தொகுதிக்கும் அருகில் இருக்கும் மற்றொரு தொகுதியை நட்பு தொகுதியாக பொது தேர்தலுக்கு  முன்னரே தேர்ந்தெடுத்து விடலாம். அதன்படி ஏதேனும் ஒரு தொகுதி தனது உறுப்பினரை இழக்கும் பொழுது அந்த தொகுதியின் நட்பு தொகுதி உறுப்பினர்  கூடுதல் பொறுப்பாக உறுப்பினர் இழந்த தொகுதியையும் கவனித்துக் கொள்வார். ஒரு அமைச்சர் பல துறைகளை சமாளிக்கும் பொழுது ஒரு சட்டமன்ற உறுப்பினாரால் இரு தொகுதிகளை சமாளிப்பது கடினமானதல்ல. நட்பு தொகுதிகள் அருகருகில் இருக்குமானால் இரு தொகுதிகளுக்கும் பொறுப்பேற்பவர்கள் குறைந்த பயணத்திலே மக்களை சந்திக்க இயலும். தனித் தொகுதிகளுக்கு அருகில் இருக்கும் மற்ற தனித்தொகுதிகளையே நட்பு தொகுதியாக அறிவிக்க வேண்டும். அதே போன்று சட்ட மன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வாக்களிக்க நேரும்போது இரு தொகுதிகளை  கவனித்தாலும் உறுப்பினருக்கு ஒரு வாக்கு தான் இருக்க வேண்டும். இந்த தீர்வின் மூலம் இடைத்தேர்தல்களை எளிமையாக தவிர்க்கலாம்,  அதே நேரம் மக்களால்  நிராகரிக்கப்பட்டவர்கள் பதவிக்கு வந்துவிடாமலும் தவிர்த்து விடலாம்.

நேர்மையை விற்று ஜனநாயகத்தை வாங்கும் இடைத்தேர்தல்களை நாம் எவ்வழியிலேனும் தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல்களை தவிர்க்க உங்களுடைய  ஆலோசனைகளை கீழே பின்னூட்டமாக இடுங்கள், தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்.

Be open and supportive, and encourage your teen trymobilespy.com to talk to you about their issues

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மக்களையும் ஊழல் சகதியில் தள்ளும் இடைத் தேர்தல்கள் தேவையா?”
  1. yathum uraan says:

    மக்கலின் வரிப்பனத்தை குரக்க் மட்டும் வலி சொல்லப்பட்டுல்லது நல்ல ஆச்சிக்கில்லை

  2. Karthik says:

    மிக சிறப்பான கட்டுரை. நல்ல நகைச்சுவை நடையுடன் அமைதந்ததில் சிறப்பு. மக்கள் நம்ம தொகுதியில் மண்டைய போடா மாட்டானானு
    மக்கள எதிர் பார்க்கும் அளவுக்கு இந்த இடை தேர்தல் கலாச்சாரம் நம் மக்களை மாற்றிவிட்டது.

  3. சோமாறி says:

    மதுரையைக் கெடுத்த தரித்திர பாண்டியன், இமய வ(ர)ம்பன், மதுரைச் சொக்கனுக்கே குறி சொல்லும் அஞ்சா நெஞ்சனின் இடையிடை தேர்தல் பரா(அ)க்கிரமங்களை விவரிக்காமல் இந்தக் கட்டுரையில் ஒரு வெறுமை நிலவுகிறது.
    சரித்திர என்ற சொல் ஒருங்குறியில் தரித்திர என்று தவறாக பதிவாகி உள்ளது. பிழை பொறுக்க.

  4. kondraivendhan says:

    சமூக நலன் சார்ந்து, முரன் சுவையுடன் மிக அழகாய் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரைக்காண நியதிகள் அடங்கிய எழுத்து வடிவம். முரன் சுவையாய் வரும் நகைச் சுவை வரிகள் எல்லாம் நம்மை நின்று சிந்திக்க வைக்கின்றன. மொத்தத்தில் இந்தக்கட்டுரை ஒரு கவிதை. அத்தனை உள்ளடக்கம் கொண்ட அழகிய படைப்பு. கருத்துச் செறிவுடன் நல்ல சிந்தனைகளை முன் வைத்துள்ள கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. இனி தேர்தல் புறக்கணிப்பு தான் மக்களுக்காண ஒரே வழி. நாம் அதனை நோக்கித்தான் செல்ல வேண்டும். நன்றி.

அதிகம் படித்தது