மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நேர்காணல் – ஜெ. பிரபாகர்

ஆச்சாரி

May 30, 2011

சிறகு இதழுக்காக எண்ணங்களின் சங்கமம்  திரு.ஜெ.பிரபாகர் அவர்கள் அளித்த நேர்காணல்.

நேர்காணல் நடத்தியவர் திரு. செந்தில்குமார்.

 


வணக்கம் பிரபாகர் அவர்களே, உங்களைப் பற்றி கூறுங்கள்?

ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள சீதாராம் பேட்டை, என்ற கிராமத்தில் பிறந்த நான் மேல் நிலை கல்வி வரை படித்தேன். படிக்கும் போதே எனக்கு ஓவியத்தில் பேரார்வம் இருந்தது, ஆனால் என்னால் ஓவிய கல்லூரியில் சேர முடியவில்லை. அதனால் அசோக் லேலண்ட் நிறுவனத்தில், இருபத்தைந்து ஆண்டுகள் Fitter ஆக பணி செய்தேன். அதன்பின் 2005 ஆம் ஆண்டு முதல் எண்ணங்களின் சங்கமம் என்னும் அறக்கட்டளை தொடங்கி பணி செய்து வருகிறேன்.

 

நீங்கள் செய்வது ஒருங்கிணைப்புப் பணி ஆக உள்ளது? அதனைப் பற்றி விளக்குங்கள்?
இன்றைய காலகட்டங்களில் ஊடகங்களைத் திறந்தால் வன்முறை பற்றிய செய்திகளே மிகவும் அதிகம் காணப்படுகின்றன, இதனை ஆராய்ந்தால் இது போல சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் செயல்களை செய்பவர்களுக்கு நல்லதொரு ஒருங்கிணைப்பும், பிணைப்பும், கட்டமைப்பும் இருக்கிறது. ஆனால் சமுதாயத்திற்கு தன்னலமில்லாமல் பணி செய்யும் நல்லவர்களுக்கு பிணைப்புகள் இல்லை என்று உணர்ந்தோம், அதன் காரணமாகவே இந்த அமைப்பு உதித்தது என்று கூறலாம். இதனை குறித்து நான் பெரியோர்களிடம் ஆலோசனை செய்த போது நல்ல வரவேற்பு கிடைத்தது, மேலும் அகலக்கால் வைக்காமல் குறைவாக தொடங்கி நிறைவாக செய்ய அறிவுரை தந்தனர், அதன்படி ஆரம்பத்தில் நூறு சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பது என்று எண்ணி நூறு பேருக்கு அழைப்பு அனுப்பினோம், அதில் முதல் வருடமே தொண்ணூற்று இரண்டு அமைப்புகள் கூடியது பெருத்த மகிழ்ச்சியை அளித்தது. அது முதற் கொண்டு கடந்த ஆறு வருடமாக இந்த சந்திப்பை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வருடா வருடம் நடத்தி வருகிறோம். இப்போது அறுநூறு அமைப்புகள் எங்கள் தொடர்பில் உள்ளனர்.

 

தமிழகத்திற்குள் எந்த துறைகளில் சமூகப் பணி அதிகம் தேவைப்படுகிறது?
நாங்கள் எந்த துறைகளில் பணி செய்கிறோம் என்பதை சொல்கிறேன், முதலாவதாக கல்வி, கல்வி என்றால் வெறும் பள்ளிப் பாடங்கள் என்று இல்லாமல் பண்புகள், நல்ல சிந்தனைகள் போன்றவற்றையும் பயிற்றுவிக்கிறோம். மாலை நேர கல்வி (Tuition) ஐம்பது இடங்களில் நடந்து வருகிறது, நானூறு தன்னார்வ ஆசிரியர்கள் இவற்றில் பணி செய்கின்றனர். இரண்டாவதாக மனநலம் பாதித்த குழந்தைகள், மனிதர்களுக்கான பணி செய்யப்படுகிறது, குன்னூர் பகுதியில் அறுபத்தெட்டு குழந்தைகளை, ஒரு தொண்டர் கவனித்து பணி செய்து பராமரித்து வருகிறார். மூன்றாவதாக விவசாயம், பெரும்பாலான விவசாய நிலங்கள் வேறு பயன்களுக்காக கையகப்படுத்தபட்டு விட்டது, விவசாயத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்த நிலையில்,அதனை சீர் செய்ய இயற்கை விவசாய முறையை செய்து, அதன் முறைகளையும், பலன்களையும் மக்களுக்கு பரப்பி வருகிறோம், திருநின்றவூர் பகுதியில் இருபது ஏக்கர்  பகுதியில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது.

 

இளைஞர்கள் சமூகப் பணியை தமது வேலை தடமாக (Career) எடுக்கலாமா? மேலும் இளைஞர்கள் சமூகப் பணி செய்வதால் அவர்கள் (இளைஞர்கள்) பெறும் நன்மைகள் என்ன?

எங்கள் அனுபவத்தை பொறுத்த வரையில் இளைஞர்கள் தான் பெருமளவில் சமூகப்பணி செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சிபட்டி என்ற கிராமத்தில் இளைஞர்கள் சேர்ந்து இருநூறு மாணவர்களுக்கு பாடம், சிலம்பம், யோகா என்று பல்வேறு கலைகளை சொல்லிதருகிறார்கள். சுற்றுப்பகுதியில் எங்கு போட்டிகள் நடந்தாலும் இவர்களின் மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள், ஒரே பள்ளியில் படித்த இருபத்திரண்டு வயதே கொண்ட இளைஞர்கள், எங்களிடம் கல்வி உதவி செய்வதாக கூறி 150 மாணவர்களை கேட்டார்கள், பிறகு நாங்கள் அனுப்பிவைத்தோம், எனவே இளைஞர்கள் தான் பெரிதும் சமூகப்பணி ஆற்றுகிறார்கள்.என்ன நன்மைகள் என்றுகேட்டால், சமூகப்பணியால் அவர்கள் பெறும் நல்ல எண்ணங்களும், நல்ல ஒழுக்கமும், தன்னலமற்ற சிந்தனைகளும் பெரிய லாபம் எனலாம். அவர்களின் வாழ்வு செம்மையாகிறது, நற்பண்பு உடையவர்களாக மாறுகிறார்கள்.

 

சமூக பணி முழு எவ்வகையாக செய்யப்படுகிறது முழுநேரப்பணியா அல்லதுபகுதி நேரப்பணியா?

பகுதி நேரப்பணிதான் அதிகம்செய்யப்படுகிறது.

 

சமூக பணிக்கு அரசு உறுதுணையாக இருக்கிறதா? அரசு நிதியை கையாளும் பணிகள் பற்றி கூறுங்கள்?

அரசாங்க உதவி பெறும் பணிகளை நாங்கள் இன்னும் சந்திக்கவில்லை, சரியான முறையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அணுகினால் அரசாங்கத்தின் மூலம் பெருமளவில் பணிகள் செய்யமுடியும் என்றே கருதுகிறேன், நாங்கள் அப்படி செயல்படும் யாரையும் சந்திக்கவில்லை.

 

உங்களுக்கு ஏற்படும் தடைகள், தடங்கல்கள் பற்றி கூறுங்கள்? பணிக்கு எதிராக செயல்படும் விரோதிகளை எவ்வாறு சமாளிக்கிரீர்கள்?

பெரிதாக தடைகள், தடங்கல்கள் எதுவும் நாங்கள் சந்திக்கவில்லை, சமயங்களில் நேரமின்மை, பண செலவு இவற்றைத் தவிர பெரிய சோதனைகள் ஏற்படவில்லை. விரோதிகள் என்று யாரையும் சந்திக்கவில்லை.

 

சதவிகித அளவு கோளில் நீங்கள் செய்யும் பணி எத்தனை பயனாளர்களை சராசரியாக சென்று சேர்கிறது?

அந்த வகையில் நாங்கள் சிந்தித்து ஒரு மதிப்பீட்டை செய்தது இல்லை, இதுவரை 650 தொண்டு நிறுவனங்களை சந்தித்து இருக்கிறோம், ஒவ்வொரு நிறுவனமும் 100-200 பயனாளர்களுக்கு தொண்டுகள் செய்து வருகிறார்கள். அப்படிகணக்கிட்டால்நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானமக்களை சென்று சேருகிறோம்.

 

உங்களுக்கு மிகவும் அதிகமான மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்த தருணம் பற்றி சொல்லுங்கள்?

சமீபத்தில் சமூகத்தொண்டு செய்து வரும் என்னுடைய பழைய நண்பர் ஒருவரை சந்தித்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்ன விதமாகசெய்து பணி வந்தாரோ, அதே போல் இன்றும் செய்து வருவதாக கூறினார், கேட்ட போது பெரிய நிறைவு ஏற்பட்டது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை நாங்கள் சந்திக்கும்போது, அவர்கள் தங்கள்பணியை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பாக எண்ணங்களின் சங்கமம் இருப்பது குறித்து, பெரிதும் மகிழ்வு  தருவதாக கூறுகின்றனர், அதுவே எங்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவதாக இருக்கிறது.



In footnotes or in-text references, it is proper to refer the reader pro-academic-writers.com/ to a specific page in the cited work

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நேர்காணல் – ஜெ. பிரபாகர்”

அதிகம் படித்தது