மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்கள் போராட்டங்களும் காவல்துறையும்

ஆச்சாரி

Jan 1, 2012

சுதந்திர இந்தியாவில் காவல் துறைக்கும் மனித உரிமை மீறலுக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்து வருகிறது. அந்தத் துறையினர் சிலர் அரங்கேற்றிய மனித உரிமை மீறல்கள் நிரம்ப உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவை நிகழ்ந்துள்ளன.

தனி மனிதக் குற்ற நிகழ்வுகளில் காவல் துறையினர் கையாளும் முறைகள் என்பது அவர்களுக்கு சட்டம் தந்துள்ள உரிமை(?)க்கு உட்பட்டது. அதை கேள்வி கேட்கக்கூடாது. ஆனால் மக்கள் தங்கள் உரிமை மீட்புப் போராட்டங்களை நடத்தும் போதெல்லாம் காவல் துறையினர் அவற்றை கண்ணியமாகக் கையாண்டது இல்லை. ஓரிரு நிகழ்வுகள் இருக்கலாம். மற்றவைகளிலெல்லாம் அவர்கள் மனித உரிமை மீறலைப் பாய்ச்சியே இருக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டம் காவல் துறைக்கு என்று வகுத்துத் தந்துள்ள உரிமைகளை அந்தத் துறையினர் அந்த உரிமைகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறார்களா என்றால் – இல்லை என்ற வேதனை தரும் விடைதான் கிடைக்கிறது.

நீதிமன்றங்களின் கண்டனங்கள்- மனித உரிமை அமைப்பின் எச்சரிக்கைகள் பலவற்றை பலமுறை நேர்கொண்டும் –ஓர் அலட்சிய உணர்வே சில காவல் துறையினருக்கு ஏற்பட்டு விடுகிறது. அரசாங்கங்களின் உத்தரவுகளுக்கு மட்டுமே நீளத் தெரிந்த காவல்துறையினரின் கரங்களுக்கு மனித உரிமையை மட்டும் காக்கத் தெரியவில்லை.

சட்டத்தின்படி ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவர்களே- மக்கள் உரிமைப் போராட்டங்களை போர்க்களங்களாக மாற்றி விடுகின்றனர்.

தமிழகத்திலும் பல்வேறு மக்கள் போராட்டங்களில் காவல்துறையின் அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன-  எல்லா ஆட்சிகளிலும். அண்மைக் காலத்தில் கூட பரமக்குடி சம்பவம்- மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் காவல் துறையினரின் அடக்குமுறை.

அதன் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு பிரச்சனை.

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் கேரள அரசு-

‘’அப்படியா? மத்திய அரசுக்குத் தர மனு தயார்’’ என்ற ஏகாந்த நிலையில் உள்ள தமிழக அரசு.

மத்திய அரசோ தன் காதுகளுக்கு நெடுங்கதவடைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு பிரச்சினையை – தென் தமிழக ஐந்து மாவட்ட மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு போராடத் தொடங்கி விட்டனர்.

கடை அடைப்பு- சாலை மறியல்- உண்ணாவிரதம் என அறவழிப் போராட்டங்களை நடத்தியும் கேரள அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்தவில்லை. அதனால் ஏறக்குறைய லட்சம் மக்கள் ஆண்களும் பெண்களும் திரண்டனர். தங்கள் வாழ்வாதாரத்திற்கு வஞ்சனை செய்வதா? என்று கொதித்தனர்.

கேரள எல்லையான குமுளியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். முன்பு நடந்த போராட்டங்களிலெல்லாம் அமைதியாக  பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த காவல்துறையினர் அன்று மட்டும் ஏனோ  திடீரென பொது மக்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தினர்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலெங்கும் குருதி கொட்டியது. பெண்களை இழிவான வார்த்தைகளால் ஏசினர். அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் காவல் துறையினருக்கு  ஏன் வந்தது? அந்த மக்களை குருதி கொட்டக் கொட்ட விரட்டியடிக்க வேண்டிய அவசியம் என்ன? தங்களுக்கும் சேர்த்துத்தானே போராடுகிறார்கள் என்ற எண்ணம் காவலர்களுக்கு ஏற்படாதது வருத்தமானது.

இதன் உச்சமாக ஓர் உயர் பொறுப்பில் (ஐ.ஜி.) உள்ள  காவல் துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவர் காவலர்களுக்கு ஒரு கருணைமிகு (!) உத்தரவிடுகிறார்- தலைப் பகுதியை மட்டும் விட்டுவிட்டு கை கால்களை உடையுங்கள் என்று.

தன் பொறுப்பை மறந்து இப்படிப்பட்ட வன்மம் கலந்த உத்தரவைப் பிறப்பிக்க அவருக்கு அதிகாரம் தந்தது யார்? அதற்கான அனுமதியை அவர் பெற்றாரா?

மக்களை அமைதிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள உயர் அதிகாரியே- நெறிமுறைகளை நசுக்கிவிட்டு அடித்து விரட்ட ஆணையிடுகிறார்.

அந்தக் கூட்டத்தில் அவரது  குடும்பத்தினரோ உறவினர்களோ கலந்துகொண்டிருந்தால் அவர்களின் கை கால்களை உடைக்கச் சொல்லி  உத்தரவிட்டிருப்பாரா? அல்லது மவுனியாக இருந்திருப்பாரா? சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி எப்படி வேண்டுமானாலும் செயல்படலாமா? அந்த அதிகாரி தன் பொறுப்பை உணர்ந்துதான் அப்படிச் செயல்பட்டாரா? அவர் மனசாட்சிக்கு பதில் சொல்லட்டும்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்பது போராடிய அந்த மக்களின் வாழ்வோடும் அவர்களின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது. தங்கள் உரிமைக்காகப் போராடும்போது சற்று உணர்ச்சி மயமாகத்தான் இருப்பார்கள். இதை அந்த அதிகாரி அறிந்திருந்தும் ஏன் தடியடி நடத்த உத்தரவிட்டார்? தமிழர்கள் மீதான வெறுப்பா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மட்டுமல்ல எந்த மக்கள் போராட்டத்திலும் காவல் துறையின் தாண்டிக் குதிக்கும்தனம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இதேநிலை நீடித்தால் மக்கள் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் எதிராகப் போராடினால்- அந்தப் போராட்டம் இந்தியாவெங்கும் ஏன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தால் என்னவாகும்? காவல் துறையினர் எண்ணிப் பார்ப்பார்களா?

கூட்டத்தைக் கட்டுப்படுத்த  காவல்துறையினர் எப்படிச் செயல்பட  வேண்டும் என்று சில நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அவை-

  • கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்து முன் மாவட்ட நீதிபதியின் அனுமதி  பெற வேண்டும்.
  • அது எந்தவிதமான முறை என்பதை குறிப்பிட வேண்டும். அது உயர் அதிகாரியால் உறுதி செய்யப்படவேண்டும்.
  • விதிமுறைகளுக்கு உட்பட்ட குறைந்தபட்சமானதாக இருக்க வேண்டும்.
  • கூட்டத்தை கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கை செய்ய வேண்டும். போகவில்லை என்றால் சிறிய அளவிலேயே தடியடி நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த விதிமுறைகள் கூறுகின்றன. இந்த விதிமுறைகளின்படிதான் காவல்துறையினர் நடக்கிறார்களா என்றால் இல்லை.

மக்கள் இந்தச் சூழ்நிலையில் ஒரு காவல்துறை அதிகாரி தன் பொறுப்பை மறந்து- திரண்ட பெரும் கூட்டத்தில் ஊடகங்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும்போதே கை காலை உடையுங்கள் என்று இரக்கமற்ற உத்தரவிடுகிறார்.

தொடர்ந்து இப்படியே நடந்தால் ஆயிரக்கணக்கான  மக்கள்  உங்களுக்கு எதிராகத் திரும்பினால் என்ன நிகழும் என்பதையும்- சமூக அக்கறை உள்ள ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் மக்களுக்குத் துணையாக அணி நின்றால் என்ன நிகழும் என்பதையும் காவல் துறையினரே எண்ணிப் பார்த்து எச்சரிக்கையுடன் இனியாவது செயல்படுங்கள்.

Are you presenting information intended to move your audience to adopt certain beliefs or take action on a http://collegewritingservice.org particular issue

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மக்கள் போராட்டங்களும் காவல்துறையும்”
  1. Karthikeyan Thangamuthu says:

    அய்ந்து ?

  2. kasi visvanathan says:

    மண்டையை பிளப்பது அவர்களின் மிக இயல்பான ஒரு செயல். கை கால்களை உடைப்பது, ஊனமாக்குவது அவர்கள் குடிமக்களுக்கு தரும் பரிசு. கொடி காத்த குமரனுக்கும், இந்த மோப்ப நாய்கள் தலையில் அடித்து தான் உயிர் குடித்தனர். சந்தீப் மிட்டால் போன்ற மோப்ப நாய்களுக்கு உயிர் குடிக்க வில்லை என்றால் தூக்கம் வராது. பரமக்குடியில் நர வேட்டையாடிய நல்ல மோப்ப நாய்களுக்கு பட்டயம் பதவி கொடுத்தால், செய்தி வெளியிட, ஊடக ஒட்டுண்ணிகள் வரிசையில் நிற்கும்.

அதிகம் படித்தது