மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்கள் மன்றம் மகேஸ்-ஜெஸ்ஸி நேர்காணல்

ஆச்சாரி

Nov 1, 2011



சகோதரி செங்கொடியை தமிழ் வரலாறு மறக்காது காதலும் கனவுமாக இருக்க வேண்டிய வயதில் தன்னையே மாய்த்துக்கொண்டு தமிழ் சமூகத்துக்கு சொரணையேற்றிய

அந்த தியாகச்சுடரை வார்த்த இடம் தான் இந்த மக்கள் மன்றம் அதனை நடத்தி வரும் தோழர்களான மகேஸ், ஜேஸ்ஸி ஆகியோரை சந்தித்து உரையாடிய பகிர்தல்….

சிறகுஉங்கள் பின்னணி குறித்து சொல்லுங்கள்

மகேஸ் -

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் , சமூகப்பணியில் ஆர்வம் ஏற்பட்ட காலத்தில் நானும் ஜெஸ்ஸி அவர்களும் ஒரு தருணத்தில் சந்தித்தோம் அன்று முதல் இன்று வரை இணைந்து செயல்பட்டு வருகிறோம்

சிறகுஎல்லோருக்கும் வாழ்க்கையில் என் பாதை இதுதான் என தீர்மானிக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படும், உங்களை சமூகப் போராளியாய் மாற்றிய அந்த திருப்பு முனை கட்டம் எது ?

மகேஸ் -

அடிப்படையில் என் தந்தை பெரியாரிய மார்க்சிய கொள்கையில் ஈர்ப்புடையவர். அதனால் இயல்பிலேயே சமூக பார்வை எனக்கு இருந்தது. ஆனால் எனக்குள் சமூகப் பணியே என் வாழ்க்கை என மாற்றிய முக்கியமான தருணங்கள் பள்ளியில் எனக்கு கிடைத்த புறக்கணிப்பே. பள்ளி மேடைகளில் பங்கெடுக்க கூடிய ஆர்வமும் திறமையும் எனக்கு இருந்தும் நிறமான அழகான பெண்களை மட்டுமே மேடையேற்றுவார்கள். முதன்முதலில் புறக்கணிப்பின் வலியை எனக்கு உணர்த்தியது அதுதான். பின்னர் பள்ளிகளில் சாதிய சமூக ரீதியாலான புறக்கணிப்பு இருப்பதையும் கண்ட பிறகு என் வாழ்க்கை ஒடுக்கப்பட்டோருக்கான போராட்டமாக்த்தான் இருக்கப் போகிறது என்று தீர்மானித்தேன், அறியாமையில் இருக்கும் கிராமிய மக்களுக்காக சேவை என்பதை விட போராடுவதும், அவர்களை போராட வைப்பதும் எங்களது மக்கள் மன்றத்தின் பணியாக உள்ளது

சிறகுநீங்கள் பணியாற்றும் களம் குறித்து சொல்லுங்கள் ?

மகேஸ் ஜெஸ்ஸி -

15 வயது முதலே கலை இலக்கிய ஆர்வம் எனக்கு இருக்கிறது, நாங்கள் தீவிரமாக இயங்கும் களம் பழங்குடி மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் தான். தலித் மக்களை விட மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் இருளர் இனம் போன்ற பழங்குடி மக்களே. சமூகத்தால் மிகவும் நிற்கதியாய் துச்சமாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் இவர்களே. தங்களுக்கான உரிமைகளையே உணராமல் இருக்கும் இம்மக்களுக்காகத்தான் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

மற்றும ஒடுக்குமுறைக் கெதிரான அனைத்து போராட்டத்திலும் மக்கள் மன்றம் பங்கு கொள்ளும்.

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேரி கிராமத்திலும் ரெட்ஹில்ஸ் பகுதியிலும் அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த மக்களை மீட்டோம். அம்மக்கள் எங்களோடு இன்று வசிக்கின்றனர் ,

பழங்குடி மக்கள் பிரச்சினையில் அக்கரை காட்டாத, சந்திக்க சென்ற போராளிகளையும் மதிக்காத மாவட்ட ஆட்சியரை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் முன்பே கழுதைக்கு மனு கொடுப்பது போல் நாங்கள் நடத்திய நூதன போராட்டம் மக்களிடையே மிகவும் பிரசத்தி பெற்றது.  நாங்கள் மனுவை குடுக்க குடுக்க அதுவும் தன் போக்குக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது, அரசு அதிகாரிகளுக்கு மனு குடுப்பதும் கழுதைக்கு மனு குடுப்பதும் ஒன்று தான் என்று சித்தரிக்கும் போராட்டம் அது , போராட வர பயந்தவர்களெல்லாம் பின்னர் ஆர்வத்தோடு வந்து பங்கு பெற்றனர்.

மேலும் சங்கராச்சாரியார் கைதையடுத்து நடு இரவு 1 மணிக்கு நாங்கள் பறையடித்து ஊர் முழுக்க அறிவித்ததும், அர்ச்சகர் தேவ நாதனை செருப்பால் அடித்த போராட்டமும் எங்களது வீரியமான போராட்டங்களில் சில.

சற்று கலைத்தன்மையோடு கூடிய எங்கள் போராட்டங்கள் மக்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக நாங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் நம் மண்ணின் கலைகளை வளர்த்தெடுக்கும் நிகழ்வே அது

இங்கிருக்கும் சிறார்கள் அனைவருக்கும் சமூக அறிவை கலை உணர்வோடு போதிக்கிறோம்  (ஒடுக்குமுறையை சித்தரித்த ஒரு அருமையான பாடலை பாடிக் காட்டுகிறார் அங்கிருக்கும் ஒரு சிறிய தோழர்)

அடிப்படையாக தோழர், சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் போதிய வாழ்க்கை பாதுகாப்பின்றியே வாழ்கின்றனர். திடீரென வெகு சுலபத்தில் அவர்கள் சமூகத்தில் கையறு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். திடீரென கணவன் இறந்து போனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் தன் முகத்தை மாற்றிக்கொள்கிறது. இது போன்ற நிலைமைகளை மற்றுவதில் தான் எங்களது போரட்ட களமே இயங்குகிறது.

சிறகுமார்க்சிய அடித்தளத்தில் உருவான நீங்கள் தமிழ் தேசியத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

மகேஸ் -

மார்க்சியம் இன சுய நிர்ணயத்தை வலியுறுத்துவது தான் … நான் பெரியாரியம் அம்பேத்காரியம் மார்க்சியத்தின் நீழ்ச்சியாகத்தான் தமிழ் தேசியத்தையும் மதிப்பிடுகிறேன். குறிப்பாக 2009ம் ஆண்டு நட்ந்த இலங்கை இனப்படுகொலையின் கொடூரங்களுக்கு பிறகு நாங்கள் தீவிரமான தமிழ் தேசிய ஆதரவாளரானோம். அது குறித்த பதிவுகளை நிறைய உள் வாங்கினோம், மக்கள் தொலைக்காட்சியின் ஈழம் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தோம், இயக்குனர் கவுதமன் அவர்களது பதிவுகளை எங்களை மிகவும் பாதித்தவைகள். தமிழ் இன விடுதலையை எங்கள் தலையாய கொள்கையாக வைத்துள்ளோம்

சிறகுமக்கள் மன்றம் குறித்தும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து நீங்கள் எப்படி மாறுபடுகிறீர்கள் என்றும் விளக்குங்களேன் ?

ஜெஸ்ஸி -

நான் சமூகப்பணியில் ஆர்வம் வளர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் மகேஸ் தோழரும் சமூகப்பணியில் ஆர்வம் கொண்டிருந்தார், நாங்கள் இருவரும் சந்தித்த புள்ளியே மக்கள் மன்றத்திற்கான துவக்கம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் சமூக போராட்டமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. நாங்கள் இதுவரைக்கும் வளர்ச்சி பணிகள் என்று எதையும் செய்ததில்லை, செய்யபோவதுமில்லை. மக்களது உரிமைகளை மக்களுக்கு உணர்த்தும் பணியே மக்கள் மன்றத்தின் பணி. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை போல் பெரும்புள்ளிகளிடம் பெரும் நன்கொடைகள் நாங்கள் பெற்றுவிட்டு மக்களை முடக்கும் பணி அல்ல எங்கள் பணி. இது மக்கள் ஆதரவோடு நடந்து வரும் மக்கள் இல்லம் நாங்கள் தான் இங்கு விருந்தினர்கள்.

சிறகுசகோதரி செங்கொடி குறித்து சொல்லுங்கள்

மகேஸ் ஜெஸ்ஸி –
செங்கொடி மிக அமைதியான ஆழமான பெண் , சமூக கோபம் அவளுக்கு நிறைய உண்டு. பரந்த வாசிப்பு அவளுக்கு அதை கொடுத்தது. ஈழ வரலாறு , இந்திய வ்ரலாறு, காஷ்மீர் பிரச்சினை, கிழக்கு மாநில பிரச்சினை, மார்க்சியம்,பெரியாரியம் அம்பேத்காரியம் என அனைத்திலும் அவளுக்கு அறிவு உண்டு. அதிகம் பேசவே மாட்டாள். சொல்லுக்கு முன் செயலாக இயங்கியவள் எங்கள் குழந்தை செங்கொடி. குறிப்பாக இருளர் இன மக்களுக்கான பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவள். அவர்களோடு தங்கி உண்டு உறங்கி அவர்கள் வாழ்க்கை முன்னேற்றதுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவள். அவர்களோடு உண்ணும் போது அவர்கள் உண்ணும் எலிக்கறியை தான் உண்ணுவாள். கலை இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டவள். எங்கள் கலை நிகழ்சியில் அனைத்திலும் பங்கு கொள்வாள் அந்த குழந்தை. நடனம் பாட்டு என அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்படுவாள்

சிறகுசெங்கொடி அவர்களை தீக்குளிப்பு வரை இட்டுச் சென்றது நிச்சயம் மூவர் தூக்கு என்ற அந்த ஒரு சம்பவம் மட்டுமாயிராது தொடர்ச்சியாக அவரை பெறும் விரக்திக்குள்ளாக்கியது எது ?

மகேஸ் -

செங்கொடியின் தியாகத்துக்கு அளவே கிடையாது , ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்து அவள் தொடர்ச்சியாக அது குறித்த பதிவுகளை, காணொலிகளை உள்வாங்கி வந்தாள் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளை, துரோகங்களை கண்டு வந்ததால் அவள் இம்முறை விரக்தியின் உச்சத்திற்கு சென்று எதிர்பாரா இம்முடிவை எடுத்து விட்டாள்.

அவள் பறந்து விளையாடிய இந்த அறையில் இன்று சிலையாக நிற்கிறாள் (கண் கலங்குகிறார்).

மங்கல்பாடி என்கிற இவ்வூரின் பெயரை செங்கொடியூர் என்று மாற்றியிருக்கிறோம், செங்கொடிக்கு நினைவு இல்லம் கட்டி வருகிறோம், அதற்கு மக்கள் மனங்களையே எதிர்பார்த்து நிற்கிறோம்.

சிறகுஅடக்குமுறையை எதிர்த்து இவ்வளவு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள் , உங்களுக்கு நெருக்கடிகள் நிறைய வந்திருக்குமே ?

மகேஸ் ஜெஸ்ஸி -

தோழர் எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. சட்ட ரீதியிலான தாக்குதலை தாண்டி, இந்த கூலிப்படை வீரர்கள் நாளைக்கு வெட்டி விடுவேன், இன்னும் ஒரு வாரத்துல கொன்னு போடுவேன்னு சொல்றத கேட்டு கேட்டு போர் அடிக்குது தோழர். மக்கள் மன்றம் என்பது தனி நபர் சொத்து அல்ல. இது ஒரு சமூக இயக்கம். நான் போனால் ஜெஸ்ஸி , ஜெஸ்ஸி போனால் மற்ற தோழர்கள் என்று இவ்வியக்கம் பயணித்துக் கொண்டேயிருக்கும் தன் சமூக களத்தில்.

சிறகுமன்றத்தில் இருக்கும் மற்ற தோழர்கள் பற்றி சொல்லுங்கள்

ஜெஸ்ஸி -

இங்கிருக்கும் பல தோழர்கள் சட்டம் படித்திருக்கிறார்கள். இருளர் சமூகத்தை சேர்ந்த அந்த தோழர்கள் சட்ட அறிஞர்களாக ஆகியிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. நான் அடிப்படையில் கணிப்பொறி மாணவி. என் தந்தை மற்றும் மாமா போன்றோர்களால் சமூக அக்கரை பெற்றேன். இப்பொழுது சமூகப் பணியே வாழ்க்கை என்றாகி விட்டது. மக்கள் மன்றம் என்கிற குடும்பம் போராட்டங்களோடு மகிழ்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

தோழர் மகேஸ் ஒரு புற்று நோயாளி, அவர்களுக்கு பெரிய பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும் என்றும் சாமன்ய மக்களை விட்டு அந்நியப் பட்டு விடக்கூடாதென்ற உறுதியுடன் காஞ்சிபுரம் பகுதியிலேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

Tip simple modifiers like only, almost, just, nearly, and barely often get used incorrectly because essaysheaven.com writers often stick them in the wrong place

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மக்கள் மன்றம் மகேஸ்-ஜெஸ்ஸி நேர்காணல்”
  1. p.thirumalaiselvan says:

    மக்கள் மன்றம் மகேஸ் அவர்களின் பணி மகத்தனது

  2. Karthi says:

    சிறப்பான பதிவு. இதைக் கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  3. kasi visvanathan says:

    மிக அழகாக வரிசப்படுத்தி கேட்கப்பட்ட கேள்விகள். நேர்காணலும் அதன் தகவல்கலும் அனைவருக்கும் பயன்படும்.1. நிறம் பார்த்து தரம் பிரிப்பது சனா தனம். அது ஒரு தொற்று நோயாக இன்று பலரிடம் இருக்கிறது. ஆனால் இந்திய சனாதனத்தில் உச்சானியில் இருந்த பல கனவான்கள் பர தேசம் சென்று தங்கள் நிறத்தையும் அதன் முன்னுரிமையும் பெற்றும் புத்தி வருவதில்லை.
    2. தன்னார்வ தொண்டு நிறுவணஙளின் இன்றைய நிலை குறித்த சரியான ஆய்வு தேவை என்பது மட்டும் இந்த நேர்காணலில் நாம் உணரப்பெறுகிறோம்.
    3. சமுதாய விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்காக சகோதரிகளின் போராட்டமும் அதன் நகர்வுகளும் தடை இன்றி செல்லட்டும்.
    4.இருளர் வாழ்விற்கு போராடி, முவர் உயிருக்காக கொடையளித்த செங்கொடி, மேட்டுக்குடி மக்களின் இருள் நேக்கி தமிழர் உரிமைக்கும் கண் திறக்க வழி பிறக்கட்டும்.
    5. சிறகு ஓடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி.

அதிகம் படித்தது