மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மட்டைப்பந்து சூதாட்டம் – மக்கள் ஏமாற்றம் (கட்டுரை)

ஆச்சாரி

Jun 1, 2013

மட்டைப்பந்து (கிரிக்கெட்) சூதாட்டம், இன்று உலகெங்கிலும் பரபரப்பாக அனைவராலும் முணுமுணுக்கப்படுகின்ற விடயமாகும். ஐ.பி.எல் மட்டைப்பந்தில் நடந்த சூதாட்டப்பிரச்சனைகள் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம். ஐ.பி.எல். என்பது 20 ஓவர்கொண்ட ஒரு மட்டைப்பந்துப் போட்டியாகும். முதலில் 20ஓவர்போட்டியைஇந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் லலித்மோடி என்கின்ற தொழில் அதிபர். அதன் பிறகு BCCI(Board Cricket Control of India)மட்டைப்பந்து வாரியத்துடன் சேர்ந்து 20 ஓவர்போட்டியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 20 ஓவர் மட்டைப்பந்துப்  போட்டியை அறிமுகப்படுத்தியபொழுதே பலருக்கும் இது செயல்பட்ட விதம், போட்டிகள் நடத்தப்பட்ட விதம் பிடிக்கவில்லை. ஏனெனில் இதில்  (கிளாமர்) கவர்ச்சிதான் மிக அதிகமாக இருந்தது.

மட்டைப்பந்துப் போட்டி நடக்கும் பொழுது பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்கும், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கும், பார்வையாளர்கள் பொழுதை நன்கு கழிக்கவுமே கவர்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மட்டைப்பந்து விளையாடக் கூடிய அரங்கிலே கவர்ச்சியாக ஆடக்கூடிய பெண்களுக்கு என்ன வேலை? என்பது பலருடைய கேள்வியாக அமைந்தது. இதன் அடிப்படையிலே ஐ.பி.எல். போட்டிகள் அனைத்திலும், அனைவருக்கும் ஒரு சந்தேகப் பார்வை இருந்து கொண்டே இருந்தது. இந்தப் போட்டிகள் உண்மையாக நடைபெறுகின்றனவா? அல்லது இப்போட்டிகளில் மட்டைப்பந்து சூதாட்டம் நடைபெறுகின்றதா? என்ற பெரும் ஐயப்பாடு தொடக்கத்தில் இருந்தே இருந்தது.

இந்தப்போட்டி மக்களிடையே மிகப்பிரபலம் அடைந்தது. இதற்கு முக்கிய காரணம், இப்போட்டியில் இருபது ஓவர்கள் என்பதால் ஆட்டம் மிக விரைவாக முடிந்துவிடும். அதோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்களைக் கவர்வதற்குக் கவர்ச்சி ஆட்டங்கள் வெளிநாட்டுப் பெண்கள் வாயிலாக அரங்கேறியது. பல முக்கிய அரசியல்வாதிகள் ஐ.பி.எல். அணிகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டைப்பந்து வாரியத்தின் தலைவர் சீனிவாசன் அவர்கள் (இந்தியா சிமெண்ட் கம்பெனிக்குச் சொந்தமானது) தத்தெடுத்துக்கொண்டார்.  அதே போல் பிரபல நடிகர்,நடிகைகளும்  தங்களுடைய பணத்தை மட்டைப்பந்து அணிகளிடையே முதலீடு செய்தனர். பஞ்சாப்லெவன் அணியைப் நடிகை பிரித்திஜிந்தா அவர்களும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை நடிகர் ஷாருக்கான் ஆகியோரும் உரிமையாளராக உள்ளனர். பல தொழில் அதிபர்களும் மட்டைப்பந்து விளையாட்டில் பெரும் பணம் ஈட்டலாம் என்ற வகையிலே சில அணிகளைக் கைப்பற்றினர். சகாரா நிறுவனம் புனே வாரியர்ஸ்  அணியையும், மும்பை இந்தியன்ஸ் அணியை உலகின் பெரும் பணக்காரனான முகேஷ் அம்பானி அவர்களும் தங்கள் பண பலத்தைப் பயன்படுத்தி மேற்சொன்ன ஐபிஎல் அணிகளின் முதலாளிகளாக உருவெடுத்தனர்.

 இந்த 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டிகள் என்பது கவர்ச்சி, பணம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டன. இங்கே நடக்கக்கூடிய போட்டிகள் அனைத்தும் ஒரு ஓவரில் சுமாராக 20 ரன்களைக் கூட அடிப்பதற்கு வீரர்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டைப்பந்து விளையாட்டை இப்படித்தான் ஆடவேண்டும் என்ற சில தொழில் நுட்பங்கள் (அதாவது Technic என ஆங்கிலத்தில் சொல்வார்கள்) உள்ளது.  அது போன்ற செய்கைகள் மிகவும் குறைந்து போய் மட்டைப் பந்து விளையாட்டை இஷ்டம் போல விளையாடலாம் என்ற மிக மோசமான ஒரு நிலைக்கு கொண்டு சென்றது. ஒரு ஒவரில் இருபது ரன்கள் அடிக்க வேண்டுமென்றால் வீரர்கள் தனது இஷ்டம் போல மட்டையைச் சுழற்றி, பந்தை அடித்துத்  தன் அணிக்கு ரன் சேர்க்க முயல்கின்றனர். மட்டைப்பந்து விளையாட்டை முறையாக விளையாடுவது என்பது வீரர்களுக்குக் கற்றுத்தரப்படவில்லை. மக்களுக்கு இந்த விளையாட்டு பொழுது போக்காக அமையும் எனச் சிலர் நினைத்தார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த சூதாட்ட சர்ச்சை ஐ.பி.எல் -லில் மிகப்பெரிய புயலாக அடித்தது. இதில் குறிப்பாக டெல்லி போலீசார் ஒருவர் ஐ.பி.எல் -லில்  சூதாட்டம் நடைபெறுகின்றது என்ற செய்தியைக் கண்டறிந்தார். இந்தச் செய்தியின் வாயிலாக அவர் பல விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அந்த டெல்லி போலிஸ் அதிகாரி மர்மமான முறையிலே படுகொலை செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த  மூன்று வீரர்களும் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதாக, மூன்று பேரையும் டெல்லி போலீஸ் கைது செய்து ரிமாண்டு செய்தது. அதோடுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி என அழைக்கக் கூடிய மெய்யப்பன் என்ற நபரையும் போலீஸ் கைது செய்தது. இவர் இந்திய மட்டைப்பந்து வாரியத்தின் தலைவரான சீனிவாசனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி போலீசார் ஒருமாதகாலமாக மட்டைப்பந்து சூதாட்டத்தில் பங்குபெற்ற வீரர்களையும், பங்குபெற்ற அணிகளையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளனர், ஒருமாதகாலமாக தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, பல ஆதாரங்களைத் திரட்டி வந்தனர். காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் போட்டி நடந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்த்தும் உறுதி செய்துள்ளனர். இதன் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களான ஸ்ரீசாந்த் , அங்கிட்சவான் மற்றும் அஜித்சண்டில்லா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். பதினொன்று சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

 இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றம் ஸ்பாட்பிக்சிங் என்பது. ஸ்பாட்பிக்சிங் என்பது ஒரு போட்டியையே சூதாட்டத் தரகர்களுக்கு சாதகமாகச் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட ஓவரையோ அல்லது ஒரு ஓவரில் சில பந்துகளையோ சூதாட்டத் தரகர்களுக்குச் சாதகமாகச் செய்யச் சொல்லி விளையாட்டு வீரர்களை உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இதன் மூலம் சூதாட்டத் தரகர்கள் மிகப்பெரிய அளவிலே தங்கள் (பெட்டிங்) பணத்தைக் கட்டி, பெரும் பணத்தைச் சம்பாதித்தார்கள்.

 கைதான வீரர் ஸ்ரீசாந்த் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு ஒரு குறிப்பிட்ட ஓவரில் சூதாட்டதரகர்களின் அறிவுரையின் பேரில் 15 ரன்களுக்கு மேல் எதிரணிக்கு ரன்களை விட்டுத் தர வேண்டும். அதில் இவர் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார். வீரர்களும், சூதாட்டத் தரகர்களும் நேரடித்தொடர்பில் இருந்துள்ளனர். வீரர்கள் சில செய்கைகளை விளையாடும் போது செய்து காட்டி (துண்டை இடுப்பில் சொருகி) தங்களது செய்கைகளின் தொடக்கத்தைத் தரகர்களுக்கு அறிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட சென்னை அணி உரிமையாளர் மெய்யப்பன், சென்னை அணி வகுக்கும் வியூகங்களை சூதாட்டத் தரகர்களுக்குத் தெரியப்படுதியுள்ளார். ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டத்தால் வருமானம் இழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட விவகாரம் வெடித்த பின் மக்கள் கூட்டமோ மட்டைப்பந்து போட்டியைப் பார்ப்பது குறைந்ததாகத் தெரியவில்லை. ஐ.பி.எல். இறுதிப்போட்டியை சுமார் 61, 150 நபர்கள்  கண்டு களித்தனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு போட்டி சூதாட்டமாக நடைபெறுகிறது என்பதை அறிந்தும், இந்தப் போட்டியை நேரில் சென்று பார்க்க ஆவலாக மக்கள் இருந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குறிய விடயமாகும்.

சூதாட்டம் கலந்த மட்டைப்பந்து போட்டிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். மட்டைப்பந்து விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டாக மாறிவிட்டது. யாரிடம் பணம் உள்ளதோ அவர்கள் அணியை விலைக்கு வாங்குவதும், யாரிடம் பணம் உள்ளதோ அவர்கள் இந்தப்போட்டியின் போக்கை மாற்றுவதுமாகச் செயல்படுகின்றனர். மட்டைப்பந்து என்ற ஒரு விளையாட்டு, விளையாட்டுத் துறையில்  இந்தியாவின் ஒரு நிலைப்பாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த ஸ்பாட் பிக்சிங் போன்று 2001-ம் ஆண்டில் பல வீரர்கள் இந்தச் சூதாட்டத்தில் சிக்கினார்கள். தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹன்சிகுரோனி, ஹர்சல்கிப்ஸ் மற்றும் நிக்கிபோயே, இந்தியாவைச் சேர்ந்த முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா போன்ற வீரர்கள் சிக்கி வாழ்நாள் தடைபெற்றார்கள்.

சூதாட்டப்போட்டிகள் எல்லா வருடமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் டெல்லி போலீஸ் உதவியுடன் போலீஸ்காரர்கள் வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார்கள். நாம் ஒரு விளையாட்டை ரசிக்க வேண்டுமெனில் அந்த விளையாட்டு நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடத்தப்பட வேண்டும். நம்முடைய தேசிய விளையாட்டு ஹாக்கி, மேலும் பல விளையாட்டுக்களான இறகுப் பந்து, கால்பந்து மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அனைத்தும் ஊக்கப்படுத்தப்படவில்லை. மக்கள் அனைவரும் மட்டைப்பந்து பார்ப்பதையே ஆர்வமாக கொண்டிருப்பதால் தொழில் அதிபர் முதல் அரசியல்வாதிகள் வரை மட்டைப்பந்து வாரியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டு வரவே முயற்சி செய்கின்றனர். அதுவே இவ்வாறான தவறுகள் நடக்க மிக எளிதாக வழிவகுக்கிறது.

அரசியல்வாதிகள் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கிறார்கள். விசாரிக்க விசாரணைக் கமிசன் எதுவும் கிடையாது. ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய ஆட்சியை அமைத்து விடுவார்கள். கொள்ளையடிக்கக் கூடிய அரசியல்வாதிகள் இதில் தப்பித்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் மட்டைப்பந்து வாரியத்தை விட்டு என்று ஒழிகிறார்களோ அன்று மட்டைப்பந்து விளையாட்டு மிகச் சரியான பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அரசியல்வாதிகள்  ஊழல் செய்வதை மிகப்பெரிய பொருட்டாகக் கொள்ளமாட்டார்கள். ஊழலுக்கு ஆதரவாகத்தான் எப்பொழுதும் செயல்படுவார்கள். மட்டைப்பந்து விளையாட்டு அழிந்துபோக ஒரே காரணம் அரசியல்வாதிகள் தான். செல்வந்தர்கள் இந்திய மட்டைப்பந்து வாரியத்தை தனது கைக்குள் வைத்துள்ளார்கள். இது ஒழியும் வரை மட்டைப் பந்து விளையாட்டை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

The second is that it makes you more http://www.paper-writer.org efficient in your work, and consequently saves you important time

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மட்டைப்பந்து சூதாட்டம் – மக்கள் ஏமாற்றம் (கட்டுரை)”

அதிகம் படித்தது