மதுக் கூடங்கள் நிறைகிறது, மக்களின் வாழ்வு சரிகிறது
ஆச்சாரிApr 1, 2012
தமிழகம் எதில் முன்னேறுகிறதோ இல்லையோ மது விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு உற்சாக முன்னேற்றம் கண்டு வருகிறது. குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை எங்கெங்கு காணினும் அங்கெல்லாம் மதுக் கடைகள் தான் வியாபித்து இருக்கின்றன. தமிழகம் முழுதும் 6,690 மதுக் கடைகள் இருப்பதாக அரசின் எண்ணிக்கை கூறுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது தவிர பதினைந்துக்கு மேற்பட்ட மது ஆலைகள் வேறு இயங்குகின்றன. (இங்கு குறிப்பிட வேண்டியது, தமிழகம் முழுதும் உள்ள அறிவை மேம்படுத்தும் நூலகங்களின் எண்ணிக்கை வெறும் 1430.)
ஆண்டுக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் அள்ளித் தரும் மது விற்பனையை நம்பித்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அதனால் மதுக் கடைகளைத் திறப்பதில் அரசு தாராள மனத்துடன் செயல்படுகிறது. வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு தினமும் ஒரு மது பாட்டில் இலவசமாக தருவோம் என்று வாக்குறுதி அளித்தாலும் வியப்பு ஒன்றும் இல்லை. காரணம் அந்த அளவுக்கு மதுப் பிரியம் தமிழக குடிமக்களிடம் குடிகொண்டுள்ளது. தமிழகம் முழுதும் மது ஆறு பாய்ந்து குடிமக்கள் அதில் நீந்திக் களிக்கின்றனர். கரை ஏறுவார்களா என்று அவர்களின் குடும்பம் கண்ணீர் விடுவதை அவர்கள் சட்டை செய்வதில்லை.
மாலை நேரங்களில் மதுக் கடைகளின் முன்பு கூட்டம் கூட்டமாக மது வகைகளை வாங்க திரளும் கூட்டத்தைப் பார்க்கும்போது – கடினமாக உழைத்து பணத்தை இப்படி மதுக் கடைகளில் கொட்டுகிறார்களே, இதை அரசும் ஆதரிக்கிறதே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. மது அருந்தும் இடங்களைப் பார்த்தால் அங்கு சுகாதாரம் கொடிகட்டிப் பறக்கிறது. மது அருந்தும் இடங்களை நடத்துவோருக்கு நல்ல வருமானம் கிடைப்பதை அறிய முடிந்தது. ஒரு மாலை வேளையில் ஒரு மது அருந்தும் கூடத்திற்கு(Bar) சென்றோம். உள்ளே நுழையும் போதே ‘வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப் பொருட்களுக்கு இங்கு அனுமதி இல்லை’ என்ற அறிவிப்பு அட்டை தெரிந்தது. அந்த இடத்தை நடத்தும் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன தகவல்கள்:-
“ஆண்டுக்கு ஒருமுறை மது அருந்தும் நிலையங்களை (Bar) நடத்தும் உரிமையை அரசு வழங்குகிறது. இதற்கு கடும் போட்டிகள் இருக்கும். ஆளுங் கட்சியினர்தாம் அதிக அளவில் உரிமம் பெற்றுச் செல்வார்கள். காரணம் இந்தத் தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாயை வைப்புத் தொகையாக அரசுக்கு செலுத்தி நான் இந்த உரிமம் பெற்றேன். (இந்தத் தொகை இடத்துக்கு இடம் அந்த இடத்தின் மது விற்பனை விகிதம் இவை பொருத்து மாறுபடுமாம்) முதலில் பார் நடத்த இருக்கைகள், உணவுப் பொருட்கள் தயாரிக்க பாத்திரங்கள் வாங்கி விடுவோம். நான் நடத்தும் இந்த இடத்துக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை. இதன் உரிமையாளர் ஒப்புதல் கடிதம் கொடுத்த பிறகுதான் அரசு உரிமம் வழங்கியது.
நூறு தண்ணீர் உறைகள் கொண்ட ஒரு மூட்டையை 80 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம்.. ஒரு தண்ணீர் உறை நான்கு ரூபாய்க்கு விற்கிறோம். 300 ரூபாய் இதில் மட்டும் லாபம். நூறு குவளை (டம்ளர்கள்) இருக்கும் பாக்கெட் அறுபது ரூபாய்க்கு வாங்கி ஒரு குவளை நான்கு ரூபாய்க்கு விற்றால் முன்னூறு ரூபாய் வருவாய். அதேபோல நொறுக்குத் தீனி பொட்டலங்கள் விற்பனையில் நல்ல வருவாய் கிடைக்கும். இரண்டு கிலோ கோழி கறி வாங்கி பத்து இருபது தட்டுகளாக்குவோம். ஒரு தட்டு கோழி கறி நாற்பது ரூபாய். இதிலும் நல்ல லாபம். மாதத்திற்கு ஒரு முறை காலியான மதுப் புட்டிகளை விற்பதில் கணிசமான தொகை கிடைக்கும். மதுக் கடையில் எத்தனை புட்டிகள் விற்பனை ஆகின்றதோ அதன் எண்ணிக்கை அடிப்படையில் மாதாமாதம் அரசாங்கத்திற்கு தொகை கட்ட வேண்டும்.
மதுக் கூட வாடகை, மின் கட்டணம், உணவுப் பொருட்கள் வாங்குதல், அரசாங்கத்திற்கு பணம் செலுத்துதல், மதுக்கூடப் பணியாளர்கள் ஊதியம், அவர்களின் உணவு போன்றவை எல்லா செலவு போக மாதம் 30,40 ஆயிரம் ரூபாய் வரை இந்தத் தொழிலில் வருமானம் கிடைக்கிறது. நல்ல வருமானம் தரும் இந்தத் தொழிலில் உள்ள சிக்கல், பல நேரங்களில் மது குடித்துவிட்டு, உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் தந்து விட்டேன் என்று சிலர் சண்டை போடுவார்கள், ஆத்திரத்தில் பாட்டில்களை உடைப்பார்கள். இப்படி பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள் நடந்து கொள்வார்கள். அவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது, அதனால் அவர்களிடம் அனுசரணையாகப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவரங்களைக் கேட்ட பிறகு மது விற்பனையின் துணைத் தொழிலான மதுக் கூடம் நடத்துபவர்களுக்கே நல்ல வருமானம் என்றால் அரசுக்கும் மது ஆலை அதிபர்களுக்கும் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தோன்றியது. ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்குக் கேடு” என்று கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் அச்சடித்து விட்டு மது வகையின் பெயரை பெரிய அளவில் அச்சிட்டு மது வகைகளை விற்பனை செய்கின்றனர். இதைக் கண்ணுறும்போது, அடடா அரசாங்கத்திற்கு மக்கள் மீது என்னே அக்கறை(?) என்று நினைவு வருகிறது. கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள், இன்னபிற உடல் உழைப்புத் தொழிலாளர்கள், நாள் முழுதும் கடினமாக உழைத்து கிடைக்கும் வருமானத்தில் பெரும் பங்கு மதுக் கடைகளில் வீணடிப்பதை யாரால் தடுக்க இயலும்? மக்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு, வேலை வாய்ப்பு இவைகளை ஏற்படுத்தித் தருவதே நல்ல மக்கள் அரசு. இதில் மிக முக்கியம் மக்களின் சுகாதாரம்.
ஆனால் தமிழகத்தில் ஒரு பக்கம் இலவச அரிசி போன்ற இலவசங்களைக் கொடுத்துவிட்டு, மக்களின் சுகாதாரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் இன்னொரு பக்கம் மது விற்பனையின் மூலம் மக்கள் பணத்தை வாங்கிக் குவித்துக் கொள்கிறது அரசு. மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆயினும் தமிழக மக்கள் இன்று செல்லும் போக்கைப் பார்த்தால் கவலை அளிப்பதாக உள்ளது. மது விற்பனையை நம்பி அரசு உள்ளது. குடும்பத் தலைவனை நம்பி ஒவ்வொரு குடும்பமும் இருக்கிறது என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக் கூடங்கள் நிறைகிறது, மக்களின் வாழ்வு சரிகிறது”