மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மது நாட்டுக்கு நல்லது, வீட்டுக்கு அல்ல

ஆச்சாரி

Feb 8, 2014


இந்தியாவில் மதுபான தொழிற்சாலைகள் 1805ம் ஆண்டு கான்பூரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் நோக்கம் இராணுவ வீரர்களுக்கு ரம் தயாரிப்பதாக மட்டுமே இருந்தது ஆனால் இன்றோ நிலை வேறு மதுபானம்  பெருந்தொழிலாக மாறி உள்ளது.

(சாராய) மதுபான உற்பத்தி இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதிகரித்தது. ஏனெனில், சர்க்கரை தொழிற்சாலைகள் மதுபான உற்பத்தியைத் தொடங்கியதுதான் மதுபான உற்பத்தித் திறனை பெருக்கியது. இந்தியாவில் மகாராட்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் சர்க்கரை ஆலைகளை அதிகமாக நிறுவி அதில் இருந்து தேவைக்கு அதிகமான சர்க்கரை உற்பத்தியை ஆங்கில அரசு உருவாக்கியது. இதனால் சர்க்கரையின் கூட்டுப் பொருளான வெல்லப்பாகு அதிகமாகி தேக்கநிலை உண்டானது.

இந்த வெல்லப்பாகு சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கியது. அதனை சரிசெய்ய உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டுக்குழுவை அமைத்தன.அதன் முடிவாக வெல்லப்பாகில் இருந்து எத்தனால் தயாரித்து, அதனை 5 முதல் 10 சதவீதம் பெட்ரோலுடன் கலக்க அந்த நான்குபேர் கொண்ட குழு  பரிந்துரை செய்தது.

1993-ஆம் ஆண்டு முதல் வெல்லப்பாகு தேக்கநிலை சரிசெய்யப்பட்டது. ஆனால், எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படவில்லை, மாறாக எத்தனாலில் இருந்து மதுபானங்களை உருவாக்க கற்றுக்கொண்டது நமது அரசாங்கம். இதன் இன்றைய விளைவே அரசு மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலைகள்.

இன்றைய இளையதலைமுறையினரிடம் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மதுவினால் குற்றங்களும், குற்றவியல் வழக்குகளும், வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் அதிகரித்து இன்று 27% மரணங்கள் மதுப்பழக்கத்தால் ஏற்பட்டவை என்று 2012ம் ஆண்டின் அறிக்கை பறைசாற்றுகிறது.

இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு (Associated chambers of Commerce and Industry of India (ASSOCHAM)) 2015ம் ஆண்டில் இந்தியாவில் மதுபான உற்பத்தி 19,000 மில்லியன் லிட்டரைத் தாண்டும் என்கிறது. எத்தனால் தயாரிப்பில் மதுபான உற்பத்தி மட்டுமே அதிகரிக்கிறது அதனால் நம்நாடோ மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கின்றது. உதாரணமாக விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் இது போன்ற எதிர் விளைவுகளால் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகின்றது.

இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. 2011-12ம் ஆண்டில் இறக்குமதியானது சுமார் $139.690 பில்லியன் டாலர் என்று இருந்தது. ஆனால் 2012-13ல் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்தது. சுமார் $144.293 பில்லியன் டாலர் என்று மாறியுள்ளது.

இந்தியா இறக்குமதி செய்த கச்சாஎண்ணெயில் இருந்து 27,888(mt) எரிபொருட்கள் பெட்ரோல், டீசல், நாப்தாவாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் டீசல் இந்தியாவின் மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது 2025ம் ஆண்டில் மேலும் 90 மேட்ரிக் டன் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் பட்சத்தில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். இதனால் நாட்டில் பண மதிப்பு குறையும், பணவீக்கம் அதிகரிக்கும், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.

கச்சா எண்ணெயின் இறக்குமதியின் விளைவோ வேறுசில பரிமாணங்களில் உள்ளது. என்னவென்றால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதனை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இந்த பிரச்சினைகளின் தீர்வாக, இந்தியாவில் கரும்பை அதிகமாக பயிர்செய்யும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கமுடியும் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும்.

அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் அதன் உற்பத்தித்திறன் மிகக் குறைவாகவே உள்ளது. கரும்பு உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது நாடு. மேலும் கரும்பு ஒரு பணப்பயிர் ஆகும், இது ஒரு உயிரி பரிமாற்றத் திறன் கொண்ட சூரிய ஆற்றலை நிலைப்படுத்தும் தன்மையுள்ள பயிராகும். அத்தகைய கரும்பு உற்பத்தியினை அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும். மேலும் சர்க்கரையில் இருந்து பெறப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உயிரி-எரிபொருள் எனப்படும் எரிவாயுவை (Gasoline) உருவாக்க முடியும்.

பிரேசிலும் இந்தியாவை போன்ற விவசாய நாடு அங்கு பயிர் செய்யப்படும் கரும்பின் அளவிற்கும் இந்தியாவில் பயிர் செய்யப்படும் கரும்பின் அளவிற்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை, ஆனால் பயன்படுத்தும் விதத்தில் வித்தியாசம் உள்ளது. பிரேசில் நாடு கரும்புச் சாறிலிருந்தும், வெல்லப்பாகுவிலிருந்தும் எத்தனாலை எடுக்கிறது. இந்நாடு ஆல்ககால்(Alcohol) எரிபொருளுக்கான ஒரு தேசிய கொள்கையாகக் கொண்டுள்ளது. பிரேசில் நாடு 42% எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து எரிவாயுவாகவும், 58% எத்தனாலில் கலப்பிடம் இல்லாத நேரடி வாகன எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றது.மொத்த எத்தனால் உற்பத்தியும் எரிபொருளாகவே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் சர்க்கரை ஆலைகளில் உருவாகும் வெல்லப்பாகில் இருந்து மட்டும் எத்தனால் தயாரிக்கப்படுகின்றது. இதில் 58% மதுபான உற்பத்தியிலும், 48% தொழிற்சாலைகளுக்கும், எரிபொருள் கலப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்று அனைத்திந்திய வடிகட்டல் சங்கம் (AIDA (All India Distiller Association)) தெரிவிக்கின்றது.

இந்தியா 1977-ல் 4 குழுக்களை அமைத்து எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து gasoline (எரிவாயு) எரிபொருளை உருவாக்க முயன்றது அரசு. இன்றுவரை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனாலை வழங்குவதற்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படவில்லை. இருந்தும் இந்திய அரசின் பெரும் முயற்சியினால் நமது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் எத்தனாலை 5 முதல் 10% வரை பெட்ரோலுடன் சேர்த்து 2017-18ற்குள் (gasoline) எரிபொருள் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளில் இருந்து பெறப்படும் எத்தனாலை, பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும், மேலும் கரிம எரிபொருட்களால் வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) கரியமிலவாயு அளவுகளை 90% இந்த எத்தனால் கலந்த எரிபொருள் குறைக்கிறது.

இதனால் பிரேசில் 20% முதல் 25%ம் USA கலிபோர்னியாவில் 30% முதல் 40%ம் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோகிக்கின்றனர்.

கரும்பு கழிவுகளில் இருந்து Biomass (உயிரிபொருள்) எனப்படும் எரிபொருளும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தக் கழிவுகளை எரிப்பதனால் மின்சார உற்பத்திக்குப் பயன்படும் நீராவியை உருவாக்கி அதன் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். மொரிசியல் நாடு இந்த மின்சார உற்பத்தி முறையை பயன்படுத்துகிறது.

கரும்பு கழிவுகளில் சில என்சைம்களை சேர்ப்பதினால் அதிக ஆற்றல் கொண்ட Bio fuel மற்றும் (Biogas) உயிரினக் கழிவுவாயு உருவாக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நமது அரசாங்கம் 2013-14ம் ஆண்டில் சர்க்கரையின் உற்பத்தியை 10.3 மில்லியன் இருக்க நிர்ணயித்துள்ளது. நம் நாட்டின் சர்க்கரை ஆலைகளில் இருந்து பெறப்படும் 4.2 டன் வெல்லப்பாகுவில் 1000 லிட்டர் ஆல்ககால்(Alcohol) தயாரிக்கப்படுகின்றது. 1 டன்னில் இருந்து 270 லிட்டர் தயாரிக்கப்படுகின்றது. 1 லிட்டர் ஆல்ககால்(Alcohol)ல் இருந்து 6 பாட்டில் விஸ்கி மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு நமது அரசு மதுபானத்திற்கு 300% த்துக்கும் அதிகமான சுங்கவரியை (excise duty) விதிக்கின்றது. இந்த சுமை இதனைப் பருகும் குடிமகன்கள் தலையில் விழுகிறது. அவர்கள் ஏழைகளாக்கப்படுகின்றனர்.

மேலும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 5% எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து gasoline எரிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டால் நம் நாட்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் சேமிக்கப்படும் இது நமது நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரிசெய்ய உதவும். அதனுடன் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும்.

எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் எரிபொருள் அதிக திறன் கொண்ட மற்றும் தரமானது. இந்தியாவில் பெட்ரோலை விட டீசல் எரிபொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது, இந்த எத்தனாலை டீசலுடன் கலந்து (Bio-diesel) உயிரி எரிபொருள் உருவாக்க முடியும். இதனால் எரிபொருளின் (flash point) திடீரென்று பற்றிக்கொள்ளும் நிலையைக்  கட்டுப்படுத்த முடியும். இதனால் வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவது தடுக்கப்படும். (சமீபத்தின் தனியார்  பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது) இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க எத்தனாலை டீசலுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை உயர்வை சரிசெய்ய நமது இந்திய அரசு மக்களை சீரழிக்கும் மதுபான தயாரிப்பை விட்டுவிட்டு நாட்டின் உயர்வுக்கு ஆல்ககால்(Alcohol)ஐ பயன்படுத்த வேண்டும். இதனால் மக்கள் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களை குறைந்த விலையில் பெறுவர். பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், கரும்பு உற்பத்தியும் பெருகும் விவசாயின் வாழ்க்கை வளம் பெரும், இந்தப் பணப்பயிர் விவசாயிக்கும், நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பணம் தரும்.

கரும்பு உற்பத்தியில் தொழிற்நுட்பத்தை புகுத்த வேண்டும். இதனால் மதுபான தயாரிப்பு என்ற போதையில் இருந்து நாட்டை காக்கவும் முடியும். நாட்டுக்கு பயன்படும் வகையில் மதுவை பயன்படுத்தவும் முடியும், சிந்திக்கவும் நமது அரசாங்கம்.

மது நாட்டுக்கு மட்டுமே நல்லது

வீட்டுக்கு அல்ல            என உணர்வோம்.

Some apps are labeled 12+, so regular monitoring is the best defense for ensuring your teens are safe www.trackingapps.org online

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மது நாட்டுக்கு நல்லது, வீட்டுக்கு அல்ல”

அதிகம் படித்தது