மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனம் கிழிக்கும் பணிச் சுமை: ஒரு நடத்துனரின் குரல்

ஆச்சாரி

Apr 15, 2012

சென்னைப் பெருநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதனோடு போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் இரு சக்கர வாகனம் கண்டிப்பாக இருக்கிறது. இப்படி சொந்த வாகனங்கள் அதிகம் பேர் வைத்திருந்தாலும் மாநகரப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை. சென்னை மாநகரில் 3,200  பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தப் பேருந்துகளில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற வேளைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் பேருந்தில் பயணம் செய்தால் எப்போது கீழே இறங்குவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படும். காரணம் போக்குவரத்து நெரிசலில் பேருந்து நகர்ந்து கொண்டுதான் போகும். பேருந்தின் உள்ளே மக்கள் கூட்டத்தின் வெப்பத்தாலும் சூரியன் சூட்டாலும் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். இப்படி பேருந்து பயண சிரமத்தை வீட்டுக்கு வந்தவுடன் மறந்துவிடுவோம். இந்த நிலையில் பேருந்து நடத்துனர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டு ஒரு நடத்துனர் நண்பரின் துணையோடு அவருடன் பயணமானோம். கே.கே. நகரில் இருந்து மெரீனா கடற்கரை செல்லும் பேருந்தில் நடத்துனர் நண்பரிடம் இடை இடையே பேசிக்கொண்டு சென்றோம்.

மெரீனா கடற்கரையை பேருந்து சென்றதும் கிடைத்த சிறிது ஓய்வில் நடத்துனர் நண்பர்- நடத்துனர் பணியில் இருக்கும் சிக்கல்களை சொன்னார். அவர் பணியில் சேர்ந்த புதிதில் சரியாக பணி தரமாட்டார்களாம். நடத்துனர் பணி ஆணை கிடைத்தவுடன் 220  பணி நாட்கள் (டியூட்டி) செய்ய வேண்டுமாம். அதன் பிறகுதான் பணி நிரந்தரம் செய்வார்களாம். அந்த  220 பணி நாட்களில் எந்தத் தவறும் செய்யக்கூடாது, செய்தால் பணி நிரந்தர நாட்கள் தள்ளிப்போகும் என்று நடத்துனர் பணியின் சிக்கல்களை விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அந்த நண்பர் , ’நாளை விடியற்காலை ஐந்து மணிக்கு  பணிக்கு வந்துவிடு என்று முதல் நாள் நேரக் காப்பாளர் சொல்வார். காலையில் போனால் பேருந்து இல்லை, ஓட்டுநர் விடுமுறை என்று சொல்லி வேறு ஒரு நேரம் சொல்லி அப்போது வா என்று பல நேரங்களில் திருப்பி அனுப்பிவிடுவார்கள். இதனால் எங்களின் சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போய்விடும்’ என்று விரக்தியுடன் கூறினார். எப்போது பணி தருவார்கள் என்று காத்திருந்து விட்டு பல நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்கிறாராம். ‘பயணச் சீட்டுப் பரிசோதகர்கள் எங்களிடம் சோதனை நடத்தும்போது பயணிகளிடம் கொடுத்த பயணச் சீட்டுக்கும் பையில் இருக்கும் பணத்துக்கும் கணக்கு சரியாக இருக்க வேண்டும். ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தால் கூட குறிப்பிட்ட நடத்துனரின் ஊதியத்தில் பிடித்தம் செய்துவிடுவார்கள்’ என்று குறிப்பிட்ட அவர், ‘இதனால்தான் பயணிகளிடம் சரியான சில்லறைக் கேட்டு வாங்குகிறோம். இதனால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் சண்டைகூட வரும். அந்த நேரத்தில் இதை எல்லாம் பயணியிடம் சொல்ல முடியுமா’ என்று ஆதங்கப்பட்டார்.

பெரும்பாலும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளதே என்று அந்த நடத்துனர் நண்பரிடம் கேட்டபோது, ‘சில பயணிகள் ஐந்து ரூபாய் பயணச் சீட்டுக்கு நூறு ரூபாய் கொடுப்பார்கள். அவர்களுக்கு சில்லறை கொடுப்பதற்குள் மற்ற பயணி அவருக்கான நிறுத்தம் வந்தவுடன் பயணச் சீட்டு வாங்காமலேயே இறங்கிப் போய்விடுவார். இதனால் நூறு ரூபாய் கொடுத்த பயணியிடம் எங்களுக்கு கோபம் வருமா வராதா’ என்று குறிப்பிட்டு விட்டு பயணிகளும் எங்கள் பணி சிரமத்தைப் புரிந்துகொண்டு நடந்தால் நல்லதுதான் என நடத்துனர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறும்போதெல்லாம் நடத்துனருக்கும் ஒட்டுனருக்கும் பயமாக இருக்குமாம். பேருந்தின் உள்ளே இடம் இருந்தாலும் அவர்கள் படிகளிலேயே பயணம் செய்வார்கள். நான் எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் பல நேரங்களில் அந்த மாணவர்கள் சாலையில் விழுந்து படுகாயம், உயிரையும் இழந்து விடுவார்கள். அப்படி உயிர் இழந்தவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் ஓட்டுனரும் நடத்துனரும் வழக்கு நடைபெறும் போதெல்லாம் நீதிமன்றம் செல்லவேண்டும். அந்த நாட்களில் எங்களுக்கு சம்பளம் கிடையாது என்று கவலையுடன் கூறினார்.

அப்படி விபத்து நடக்கும்போதெல்லாம் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படும். வீட்டுக்கு வந்து படுத்தால் உறக்கம் வராது. பணிமனை மேலாளர் அடிக்கடி எங்களைக் கடிந்து கொள்வார். இதனால் விபத்தில் இறந்தவர் மீது இரக்கம் வருவதைவிட வெறுப்புதான் எங்களுக்கு ஏற்படும் என்று மனம் நொந்தவராக நம்மிடம் தெரிவித்தார். பேருந்தில் ஏறும் மக்கள் எல்லாம் எங்களை அரசு ஊழியர்கள் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். நாங்கள் அரசின் நேரடி ஊழியர்கள் அல்ல. அரசு நடத்தும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள். இதனால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள் போல எங்களுக்குக் கிடைப்பதில்லை என்று கூறி தங்களின் பணி நிலையை விளக்கினார்.

பேருந்து பணிமனையில் எல்லா அரசியல் கட்சிகளும் சங்கம் வைத்துள்ளன. இதில் ஏதாவது ஒரு சங்கத்தில் கண்டிப்பாக நாங்கள் உறுப்பினராக சேரவேண்டும். எந்த சங்கத்திலும் சேராமல் இருக்க விடமாட்டார்கள். அப்படி சேர்ந்தபிறகு அடிக்கடி கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் என்றெல்லாம் சொல்லி சங்க நிர்வாகிகள் அடிக்கடி பணம் கேட்பார்கள். கொடுக்காவிட்டால் எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் தலையிட மாட்டார்கள் என்று சங்கங்களின் சங்கதியைச் சொன்னார்.

‘நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் என்று நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் தினப் படி கொடுப்பார்கள். ஐந்து முறை சென்று வந்தால் இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். இந்த வசூலும் நேரத்தைப் ஒட்டுனருக்கும் நடத்துனருக்கும் நூறு ரூபாய் கிடைக்கும். இந்தப் பணம் எங்களுக்கு உணவு, தேநீர் செலவுக்கு சரியாகிவிடும்’ என்று குறைபாட்டுக் கொண்டவரிடம், ஏன் குறைகளையே சொல்கிறீர்கள் நிறைகள் இந்தப் பணியில் இல்லையா என்று நாம் கேட்டதற்கு, நிறை இருக்கிறது, அரசுப் பேருந்துகளில் நாங்கள் இலவசமாகவே பயணம் செய்கிறோம். இது ஒன்றுதான் எங்களுக்கு சலுகை, நீங்கள் கேட்ட நிறை என்று சலிப்புடன் சொல்லி முடித்து வண்டியை எடு என்று ஓட்டுனரிடம் கூறியவாறு சென்றார்.

Web history one easy method many teens hide their online spyappsinsider.com/ activity is to bypass apps and use their native browser

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனம் கிழிக்கும் பணிச் சுமை: ஒரு நடத்துனரின் குரல்”

அதிகம் படித்தது