மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மன்மோகன் சிங் திறமையற்ற மோசமான பிரதமரா?

ஆச்சாரி

Sep 15, 2012

சுதந்திரத்துக்கு பின் நம் நாடு 13 பிரதமர்களை சந்தித்துள்ளது. ஆனால், மன்மோகன் சிங்குக்கு மட்டுமே மிகவும் மோசமான திறமையற்ற பிரதமர் என்று அமெரிக்க பத்திரிகைகள் பல ‘பாராட்டு பத்திரம்’ வழங்கியுள்ளன. நம் பிரதமரை பற்றி சொல்வதற்கு அமெரிக்க பத்திரிகைக்கு என்ன தகுதி என்று கேட்கலாம். எனினும், அது உண்மையா என்று நாம் நமக்குள்  பரிசோதனையை முதலில் செய்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் ஊழல் ஒன்றும் புதிதல்ல. நேரு பிரதமராக இருந்த போதே பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பல அமைச்சர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். உதாரணத்துக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் மட்டுமே ஊழல் புகார்கள் பெரிதாக எழவில்லை. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சியை போல் யாருடைய ஆட்சியில் மாபெரும் முறைகேடுகள் நடக்கவில்லை. குற்றச்சாட்டுகளும் எழவில்லை.

2004ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்ற போது, நேர்மையாளர், கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர், சிறப்பு பொருளாதார மேதை என்ற பாராட்டுகள் அவருக்கு இருந்தது. அவரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவில்லை என்றாலும் தன்னுடைய மரியாதையை அவர் இழக்காமல்தான் முதலில் இருந்தார். அதனால்தான்,பெருத்த சாதனைகள் செய்யாத நிலையில், 2009ம் ஆண்டு தேர்தலில் மன்மோகன் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால், அதன்பின்தான் அவருக்கு பிரச்னைகள் ஆரம்பித்தன. அவரது செயல் திறன் இன்மை வெளிப்பட தொடங்கியது.

முதல் விவகாரம் 2ஜி அலைவரிசை முறைகேடு. இந்த முறைகேடு பற்றி வெளியானவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ஆ.ராசாவை நீக்கியிருக்க வேண்டும். மாறாக ராசா தவறே செய்யவில்லை என்றும் அவர் அரிச்சந்திரன் என்று வானளாவ புகழ்ந்தார். சுதந்திரத்துக்கு பின் நடந்த மாபெரும் ஊழல் என்று உச்ச நீதிமன்றம் கூறியபின்னும், ராசாவை அவரால் நீக்க முடியவில்லை. நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் முடக்கியதால் வேறு வழியின்றி ராசா ராஜினாமா செய்தார். இதன்பின், அலைவரிசை ஊழல் பற்றிய விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வெளிவந்து, பலர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ இன்னும் விசாரித்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து விசாரித்து கொண்டேயிருக்கும். அது தனிக்கதை.

இதன்பின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல். இந்தப் போட்டியை நடத்தியதன் மூலம் சர்வதேச அளவில் நமக்கு மாபெரும் தலைகுனிவுதான் ஏற்பட்டது என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். போட்டியை நடத்துவதில் இவ்வளவு முறைகேடா? எந்தப் பணியும் சரியாக செய்யாமல் மக்கள் பணத்தை இப்படியா கொள்ளையடிப்பார்கள் என்று வெளிநாடுகளின் தலைவர்கள், வீரர்கள்  வியந்து தான் போயினர். இன்று வரை இந்த முறைகேடு பற்றிய விசாரணை நடக்கிறது. இந்த முறைகேடு பற்றி விசாரிக்க பிரதமர், சுங்லு தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தார். அந்த கமிட்டி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியது. ஆனால், அந்த அறிக்கையே குப்பை என்று ஷீலா தீட்சித் விமர்சித்தார். அவர் மீது மன்மோகன் சிங் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் தான் நியமித்த சுங்லு கமிட்டி அறிக்கையை ஷீலா தீட்சித் கூறியது போல் குப்பையில் தூக்கி போட்டுவிட்டார். இந்தமுறைகேடுகளில் முக்கிய பங்கு வகித்த ஒருங்கிணைப்பு குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது இதுவரை நடவடிக்கை இல்லை.

3வதாக அடுத்த நிலக்கரி ஊழலை மத்திய தணிக்கை குழு கிளப்பி விட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றமே முடங்கியுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் மீதே நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது, அதை நிருபிக்க வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறலாம். நம் நாட்டில் எந்த ஊழல் குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட்டு எந்த தலைவர்க்ள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்த நம்பிக்கையில் மன்மோகன் கூறலாம்.  அதனால் ஊழல் புகார்களை விட்டுவிடுவோம்.

வெளிநாட்டு கொள்கைகள் முதல் உள்ளூர் பிரச்னைகள் வரை அவரால் எதற்கும் தீர்வு காண முடியவில்லை என்பது நிதர்சன  உண்மை. இலங்கையில் தமிழர்களை ராஜபக்சே அரசு கொன்று குவித்த போது, தமிழகத்தில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் உதவியுடன் மன்மோகன் சிங் வேடிக்கை பார்த்தார். இலங்கையை தட்டி அவரால் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. தமிழர்கள் கவுரவமாக வாழவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நமது எதிரி நாடான சீனாவுடன் இலங்கை கைகோர்த்து கொண்டு செயல்பட தொடங்கிவிட்டது. இலங்கை ராணுவத்துக்கு சீனா உதவி செய்வது நமக்கு பெரும் ஆபத்து, வட எல்லைதான் பாதுகாப்பு இல்லை என்றால், தெற்கு எல்லையும் நமக்கு பாதுகாப்பில்லாமல் போய்விடும். இதை தடுக்க மன்மோகன் ஏதாவது செய்தாரா? இதை பற்றி பேசுகிறரா? அருணாச்சல்  பிரதேசத்துக்கு மன்மோகன் சிங் செல்வதற்கு சீனா பகிரங்கமா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர் என்ன செய்திருக்க வேண்டும். அருணாச்சல் பிரதேசத்தில் ஒரு வாரம் முகாமிட்டு, சீனாவுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும். செய்தாரா?

இந்தியாவை எப்படி சீர்குலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் செயல்படுகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவுடன் நாம் என்ன செய்திருக்க வேண்டும். நமது நடவடிக்கையை கண்டு பாகிஸ்தான் பயந்திருக்க வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை அமெரிக்காவிடம் ஒப்பிப்பதில்தான் பிரதமரும் அவரது சகாக்களும் ஆர்வம் காட்டினர். தீவிரவாதிகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் நிச்சயம், பாகிஸ்தான் பயந்திருக்கும்.

மன்மோகன் ஆட்சியில் நமது ராணுவத்தின் மதிப்பு தரம் தாழ்ந்தது என்று கூற வேண்டும். ராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் டெல்லியில் சாதாரண போலீஸ்காரர் வாங்கும் சம்பளத்தை விட குறைவாக தரப்படுகிறது. எல்லையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து பாடுபடும் ராணுவத்தினருக்கு நாம் என்ன செய்தாலும் தகும். ஆனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க கூட மன்மோகன் அரசுக்கு மனமில்லை. வெளியுறவு விவகாரங்களில்தான் இப்படி என்றால், நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அதை தடுக்க பொருளாதார மேதையான மன்மோகன் சிங்குக்கு வழி தெரியவில்லை.

தமிழகம் & கேரளா இடையேயான பெரியாறு அணை பிரச்னைக்கு தன்னிடம் தீர்வு ஒன்று இருப்பதாக பிரதமர் முதலில் கூறினார். ஆனால், என்ன தீர்வு என்று அவருக்கே தெரியாது. அப்படியிருக்கையில் அது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. இதேபோல்தான் காவிரி பிரச்னையும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கருணாநிதியிடம் கேட்டு கொண்ட பிரதமரால் அதை கர்நாடகத்திடம் கேட்டு கொள்ள முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் என்ன அமளி நடந்தாலும் அதற்கு பிரதமர் பதில் சொல்ல மாட்டார். எல்லாவற்றுக்கும் மவுனம் சாதிப்பதே அவரது வழக்கமாகிவிட்டது.

சமீபத்தில் அசாமில் மாபெரும் கலவரம் நடந்தது. இதற்கு என்ன காரணம். வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள், பெருமளவில் அசாமுக்குள் குடியேறிவிட்டனர். சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலால் அதை செய்யவில்லை. இதனால், பாதிக்கப்பட்டது யார்? அசாம் மக்கள்தான். தங்கள் வாழ்வாதாரத்தை வங்கதேசத்தவரிடம் அவர்கள் இழந்துவருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வங்கதேசத்தினரை வெளியேற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் வங்கதேச அரசிடம் பேசி அதற்கான நிலத்தையாவது பெற்றிருக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறிவிட்டு பிரதமர் வழக்கம் போல் மௌன குருவாகிவிட்டார். சுதந்திரதின பேச்சில் அசாம் விவகாரம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தால், வங்கதேச முசுலிம்களுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.

பிரதமருக்கு தெரிந்தது ஒன்றுதான். சோனியா, ராகுலின் பேச்சை கேட்பது, அவர்களின் மனதிருப்திக்காக பாடுபடுவது மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். இப்படிப்பட்ட பிரதமரை திறமையற்ற பிரதமர் என்று கூறுவதில் தவறென்ன?…..

You can also open a support ticket, chat live with a tech support representative, or make a phone call if you still don’t find the answer free cell phone tracker by http://celltrackingapps.com/ that you need

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மன்மோகன் சிங் திறமையற்ற மோசமான பிரதமரா?”

அதிகம் படித்தது