மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மம்மியும் ஆங்கில வழிக்கல்வியும்

ஆச்சாரி

Feb 22, 2014

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளைகள் சிறப்பான முறையில் படித்து வாழ்வில் உயர் நிலையை அடைய வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக உள்ளது. ஆனால் சிற்றூர் முதல் நகரங்களில் வாழ்பவர்கள் வரைத் தன்னுடைய வசதிக்கு மீறி பல ஆயிரங்களையும், சில இலட்சங்களையும் கொட்டிக்கொடுத்து ஆங்கில வழிப்பள்ளிக்கு அனுப்பினால்தான் அந்த கனவை நிறைவேற்ற முடியும் என்ற மாய எண்ணத்தில் சிக்கி கொண்டுள்ளனர்.

ஆங்கில மொழியைக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை, அது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு மொழி என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் ஆங்கில வழிக்கல்விதான் உங்கள் பிள்ளைகளை அறிவாளிகளாக்குகிறது என்று நினைப்பது அறிவுடைமையன்று.

தாய்மொழி வழிக் கல்விதான் ஒரு குழந்தையின் சிந்தனையைத் தூண்டும் என்பதை மறந்தும், மறுத்தும் ஆங்கில வழிப்பள்ளியில் படிப்பதாலேயே உங்கள் பிள்ளைகள் வெற்றியின் உச்சிக்குப் போவது உறுதி என நினைக்கும் சிந்தனை உள்ளவர்களை நோக்கி ஒரு வினா? அம்மா என்ற சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் ஓலிப்பும் உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியுமா? பெற்றோர்களுக்கு தெரியவில்லை என்றால் தவறில்லை, ஆனால் இலட்சங்களைக் கொட்டிக்கொடுத்து படிக்க அனுப்புகின்றீர்களே அந்த ஆங்கில வழிப் பள்ளிகளுக்குத் தெரியுமா? அவர்கள் சரியாகத்தான் சொல்லிக் கொடுத்துள்ளார்களா? அப்படி சரியாகப் பயிற்சி கொடுத்து இருந்தால், உங்கள் பிள்ளைகள் அம்மாவை ‘மம்மி’ என அழைக்கமாட்டார்கள். பதப்படுத்தப்பட்ட பிணத்தைக் குறிக்கக் கூடிய ஆங்கிலச் சொல்லான Mummy என்ற சொல்லுக்குத்தான் ‘மம்மி’ என்ற ஒலிப்பு வரும். அம்மா என்ற சொல்லுக்குரிய ஆங்கில மொழிபெயர்ப்புச்  சொற்கள் எதற்கும் ‘மம்மி’ என்ற ஒலிப்பு கிடையாது.

கீழே உள்ள சொற்கள் மட்டுமே ஆங்கிலத்தில் அம்மா எனும் பொருளுடையவை.

Momma (மாமா), Mama (மாமா), Mam (மேம்), Mom (மாம்), Mother (மதர்)

பெற்றோர்களே! அம்மா என்ற சொல்லுக்கே சரியான ஆங்கிலச் சொல்லைப் பயிற்றுவிக்காத இந்த ஆங்கிலப் பள்ளிகளா உங்கள் பிள்ளைகளை முன்னேற்ற வந்திருக்கும் கடவுளாக நினைத்து, கடனை வாங்கி கட்டணம் செலுத்திக்கொண்டு இருக்கின்றீர்கள்? சற்று சிந்தியுங்கள்.

தாய்மொழியில்தான் ஒரு குழந்தை, பாடப் பொருளை எளிதாகப் புரிந்துகொண்டு கற்கிறது என்பது பல ஆய்வுகளின் முடிவு. ஆனால் ஆங்கில வழிக்கல்வியில் குழந்தை பாடத்தைக் புரிந்துகொள்ளாமல் கற்கிறது என்று சொல்வதைவிட, மனனம் செய்கிறது என்றே சொல்லலாம். எங்கு பார்த்தாலும் ஆங்கிலம்தானே பேசுகிறார்கள் எனவே ஆங்கில  வழியில் படித்தால்தானே வேலையும், மரியாதையும் கிடைக்கும் என நினைக்கிறீர்கள், அந்த நினைப்புதான் தவறு. வெளிநாட்டு அலுவலகங்களில் பணிபுரியவும், உரையாடவும்  ஆங்கில  மொழி மட்டும் கற்றிருந்தால் போதும். அதற்கு ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வேண்டும் என்று பொருள் இல்லை.

ஒருவர் எழுதிய ஆய்வுக்  கட்டுரையை ஆங்கிலத்தில் படித்து மனனம் செய்து தேர்வில் அப்படியே வரிவிடாமல் எழுதி மதிப்பெண் எடுப்பதை விட, அதே ஆய்வுக் கட்டுரையை தாய் மொழியாம் தமிழில் புரிந்துகொண்டு படிக்கும்போது, தாமும் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட உறுதுணையாக இருக்கும். தாய் மொழிக் கல்வியே  சிறந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

பணத்தை கடன் வாங்கி தனியார் பள்ளிகளிடம் ஏன் தேடிச் சென்று கொடுக்கின்றீர்கள்? அரசுப்பள்ளிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன நட்டம் நமக்கு? அரசுப்பள்ளியில் ஆசிரியர், கட்டமைப்புப் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையை மாற்றி அமைக்க நாம்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நம் வீட்டிற்கு அருகில், நம் ஊரில் இருக்கம் அரசுப் பள்ளி தரமானதாக இருக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நாம்தான் நெருக்கடி கொடுக்க வேண்டும். தாய்மொழிக்  கல்வியை ஊக்குவிக்க  அரசு எந்த முயற்சியும் எடுக்காது. பொது மக்களாகிய நாம் தான் அரசை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதற்கு அடித்தளமாக அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் உதவியாளர் முதல் மாவட்ட ஆட்சியர், அரசியல்வாதிகள் வரை தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தாய் மொழிவழியில் படிக்கவைக்க வேண்டும்  என்பதைக் கட்டாயமாக்க அரசை வலியுறுத்த வேண்டும். பிறகு தானாக அனைத்து வசதிகளும் அரசு பள்ளிக்குத் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்களும் தங்கள் தவறை உணர்ந்து தாய்மொழி வழிக்கல்வியை பின்பற்ற முன்வர வேண்டும். புட்டிப்பாலை விட தாய்ப்பாலே சிறந்தது என்பதை மக்கள் உணரும் நாள் மிகத்தொலைவில் இல்லை.

“தாய் மொழியாம் தமிழில் கற்போம்

உலகினில் சாதனைகள் பல புரிவோம்!”

Difficulties must be communicated http://essayclick.net at the time they are encountered

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மம்மியும் ஆங்கில வழிக்கல்வியும்”

அதிகம் படித்தது