மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள்
ஆச்சாரிDec 14, 2013
மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் முதலியன நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன. இவற்றைக் கேள்வி கேட்க ஆளில்லை. நாம் தினந்தோறும் வேலையுடனும், பசியுடனும், உழைப்புடனும், ஊழல்போன்ற மோசமான சமூக நிலைகளுடனுமே போராடிக்கொண்டிருக்கும்போது இதில் எப்படிக் கவனம் செலுத்தமுடிகிறது? மேலும் உணவுப்பொருள்களின் விலைகளும் ஏறிக்கொண்டே செல்கின்றன.
இந்த ஆண்டு பணவீக்கம் மிக அதிகமாகச் சென்றதற்கு வெங்காய விலைதான் காரணம் என்கிறார் நிதியமைச்சர், ஆனால் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தான் இல்லை. இம்மாதிரி நிலைமைகளின் மத்தியில் வாழுகின்ற மத்தியதர வர்க்கத்தினர், மரபணுப் பொறியியலில் உருவான உணவா? அல்லது இயற்கையாக உருவான உணவா? என்பதில் எல்லாம் என்ன அக்கறை காட்டப்போகிறார்கள்?
இந்த நம்பிக்கையில் தான் மரபணுத் தொழில் நுட்பக் குழுமங்கள் செயற்கை உணவுப்பொருள்களைத் தயாரித்து நம்மிடையில் சந்தடியில்லாமல் விடுகின்றன. இவற்றால் எவ்வளவோ பாதிப்புகள் நிகழலாம். இவற்றை நாம் கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.
உதாரணமாகக் காலங்காலமாகப் பழங்கள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்போது மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை தான் கிடைக்கின்றன. (சிலசமயம், இயற்கைப் பழங்களோடும் சேர்த்து, இரண்டு வகையான பழங்கள் கடைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.) சென்னை, பெங்களூர் முதலாகச் சிறுநகரங்கள் வரை ரிலையன்ஸ், மோர் போன்ற பெருங்குழுமங்கள் நடத்தும் கடைகளில் இப்படிச் செயற்கையாகத் தயாரான பழங்கள் மட்டுமே கிடைக்கின்றன. (உங்களுக்கு எப்படி சார் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம், அதற்கு பதில் சொல்வதற்கு முன், இப்படி எந்த வித லேபிலும் இன்றி-இது இயற்கையா, செயற்கையா என்ற அறிவிப்புக்கூட இன்றி, விற்பதுதான் இலாபம் கொள்ளையடிக்கும் பெருங்குழுமங்களுடைய வேலை என்பதைச் சொல்லிவிடுவோம்.
வழக்கமாக நான் பப்பாளிப்பழம் சாப்பிடுபவன். அதில் கரிய நிறமுள்ள விதைகள் மிகுதியாக உள்ளே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிலகாலமாக நான் வாங்கி உண்ணும் பப்பாளிகளில் விதைகளே இருப்பதில்லை. வெறுமையாக இருக்கும் உட்கூடு. விசாரித்த பிறகுதான் தெரிந்தது – இது செயற்கைப் பப்பாளி என்று. இதுபோலத்தான், சிவப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, இதுதான் நல்ல ஆப்பிள் என்று நம்பி வாங்கிவிடாதீர்கள்.
மரபணுப் பொறியியல் என்றால் என்ன? அது எவ்விதம் செய்யப்படுகிறது?
ஒரு மீனைத் தக்காளியுடனோ, அந்துப்பூச்சியுடன் கோழிக்குஞ்சையோ ஒரு விவசாயி கலப்பின வளர்ப்புச் (ஒட்டுச்) செய்வதாகக் கற்பனை செய்யுங்கள். அபத்தமான சிந்தனையாக இருக்கிறதே என்கிறீர்களா? இது இயலாதது என்று நமக்குத் தெரியும், காரணம் இயற்கை இதை அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று மரபணுப் பொறியியலாளர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஓர் உயிரியின் பாரம்பரிய வரைபட வார்ப்பினை மாற்றுவதன் வாயிலாக.
மரபணுப் பொறியியலுக்கு 25 வயதுதான் ஆகிறது. வாழும் உயிரிகளின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்ற விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். அவர்கள் டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏ -வுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள். மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்யும் இந்த முறைக்குப் பலவேறு பெயர்கள் உண்டு-நவீன உயிர்த்தொழில் நுட்பம், மரணுத் தொழில்நுட்பம், மரபணு மாற்றம், மரபுக்குறுக்கீட்டு மறுசேர்க்கைத் தொழில்நுட்பம். மரபணுக்களின் அடுக்கினைக் கலைத்துப்போட்டு இதுவரை இல்லாத புதிய உயிரிகளைப் படைக்கும் செயலாக இது சொல்லப்படுகிறது. இப்படித்தான் நாம் பழங்களில் மீனின் மரபணுக்களையோ, தாவரங்களில் அல்லது வைரஸ்களில் பூச்சிகளின் மரபணுக்களையோ, மீன்களில் கோழியின் மரபணுக்களையோ, பன்றிகள் அல்லது ஆடுகளில் மனித மரபணுக்களையோ, பலவாறாகக் காண முடிகிறது.
புதுச் செல்லில் படையெடுப்பற்கோ அல்லது மரபணுத் துப்பாக்கி மூலமாக மரபணுவைப் புதுச் செல்லில் செலுத்துவதற்கோ செய்கின்ற மாற்றம், ஒரு பாக்டீரியத்தை அல்லது வைரஸை மரபணுவுக்கு வாகனமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. (இது உயிரியல் தொழில்நுட்பத் தொழில்துறையினர் செய்வதை அவ்வளவு துல்லியமாக எடுத்துரைப்பதல்ல. சுமாரான விவரிப்புதான்.) எந்த மரபணுப் பொறியியலாளரும் டிஎன்ஏவில் எங்கே புதிய மரபணு செருகப்படப் போகிறது என்பதைச் சொல்ல இயலாது. இது ஒரு குருட்டுத்தனமான, மாமரத்தின் கீழிருப்பவன், மாங்காய்க்குக் கல்லெறிவது போன்ற செயல். விழுந்தால் மாங்காய், விழாவிட்டால் கல்லோடு போயிற்று.
இடையில் ஒரு குறிப்பு-மரபணுப் பொறியியலுக்குள் நாம் செல்வதற்குமுன் டிஎன்ஏ என்றால் என்ன என்று சற்றே தெரிந்துகொள்வோம்.
டிஎன்ஏ: வாழ்வின் குறியமைப்பு:
ஒவ்வொரு தாவரமும், மனிதரும் அல்லது விலங்கும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதற்குக் காரணம், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான டிஎன்ஏ (டிஆக்ஸி ரிபோநியூக்ளியிக் அமிலம்) என்ற மரபணு வரைபடம் இருப்பதுதான். தன் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு உயிரியும் இதைப் பெறுகிறது. ஓர் உயிரி வளர்வதற்கும், செயல்படுவதற்கும் அல்லது வாழ்க்கையைக் காப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான முழுமையான தகவல்களின் தொகுப்பு இது. இந்தத் தகவல்கள், நடைமுறையில் உடலின் எல்லாச் செல்களிலும் காணப்படுகிறது. டிஎன்ஏவின் பகுதிகளில்-மரபணு என்று சொல்லப்படுபவற்றில்-குறிகளாக அமைந்துள்ளன. பாரம்பரியத்தின் அலகுகளான இவையே ஓர் உயிரியின் எல்லாச் சிறப்புப் பண்புகளையும் நிர்ணயிக்கின்றன. காக்கையா அல்லது சிட்டுக்குருவியா, பூவின் நிறமா, அல்லது உங்கள் தோற்றமா-எல்லாம் நிர்ணயமாவது இவற்றினால்தான். மரபணுக்கள், புரோட்டீன்களை உருவாக்கவும் செய்கின்றன. புரோட்டீன்கள்தான் நம் வாழ்க்கையின் அடிப்படைப்பொருள். உடலைக் கட்டும் தசைகளுக்காக, நாளமுள்ள, நாளமற்ற சுரப்பி நீர்களுக்காக, நமது ஆற்றல்நிலைகளைச் செயல்படுத்த, உடல் இயக்கங்களுக்காக, இன்னும் சிந்திப்பதற்காகக் கூட இப்படிப் பல காரணங்களுக்காக எல்லா உயிரிகளுக்கும் புரோட்டீன்கள் தேவை.
ஆனால் டிஎன்ஏவைப் பற்றி மிகக் குறைவாக-அதன் செயல்பாடுகளில் 3.5% தான் தெரியும் என்று அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மீதியிருப்பது ஒதுக்கப்பட்ட பகுதி (ஜங்க் டிஎன்ஏ எனப்படும்.) மனித மரபணுத்தொகுதி எழுதியறியப்பட்ட போதிலும் எப்படி மரபணுக்கள் செயல்படுகின்றன, தமக்குள் இடைவினை புரிகின்றன என்பது பற்றிய பகுதி இதுதான்
மரபணுப்பொறியியல்மாற்ற உணவு என்றால் என்ன?
தாங்கள் பாடப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதை மரபணுப் பொறியியலாளர்கள் நாம் உண்ணும் உணவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். அந்த உணவுகளின் பண்புகளை மேம்படுத்துவதாக அல்லது முழுமைப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, கடுங்குளிரைத் தாங்கமுடியாத தக்காளிகளை எடுத்துக் கொள்வோம். ஆர்க்டிக் நீரிலும் உயிர்பிழைத்திருக்கும் மீன்களையும் பாருங்கள். ஆர்க்டிக் குளிரைத் தாங்கக்கூடிய மரபணு ஒன்றைத் தட்டை மீன்களில் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மீனிலிருந்து அந்த மரபணுவை மட்டும் வெட்டி, தக்காளியின் டிஎன்ஏவில் ஒட்டினார்கள்.
இந்தப் புதிய தக்காளி கடுங்குளிரைத் தாங்க வல்லது. அதனால் நீண்டகால வளர்ச்சிப்பருவம் அதற்கு உண்டு. ஆனால் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற தக்காளியை நம்மால் சாதாரணத் தக்காளியிலிருந்து பிரித்துக் கண்டறிய முடியாது. மீன்களின் பக்கத் துடுப்புகளுடனோ செதில்களுடனோ தக்காளி வந்தால் அல்லவா நமக்குத் தெரியும்?
பல வாரங்களுக்கு அழுகாத, பூச்சிகளைத் தாங்கக்கூடிய தக்காளியைப் பாருங்கள். (பெங்களூர் தக்காளி என்று இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள் கடைக்காரர்கள். நம் ஊர்த் தக்காளி, நாட்டுத்தக்காளியாம்.) களைக்கொல்லிகளையும், வைரஸ்களையும், பூஞ்சணத் தாக்குதல்களையும் தடுக்கக்கூடியவை இவை. அதேபோலப் பெரிய அளவில் உள்ள, பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கக்கூடிய பழங்களையும் காய்களையும் பாருங்கள். விவசாயிகள், கப்பல்காரர்கள், உணவு விளைவிப்பவர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர்க்கு இவ்வகைப் பண்புகள் பிடித்திருக்கின்றன. அவற்றால் அதிக இலாபம் பெறமுடியும். ஆனால் இவ்வகை உணவு நமக்கு நல்லதா என்பது முறறிலும் வேறு விடயம்.
உதாரணமாக, மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் பல வாரங்களாக ரிலையன்ஸ், ஹெரிடேஜ், மோர் போன்ற பெருங்கடை அலமாரிகளில் இருந்தபோதும், அவை புதியவை என்பது போலக் காட்சியளிக்கின்றன. நன்கு சிவப்பாகவும் புதியதாகவும் காணப்படும் அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் மிஞ்சியிருக்காது. அழுகவியலாத் தக்காளிகளில் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உள்ளன. இவை எதிருயிரிகளுக்குத் தடுப்புச் சக்தியை அளிக்கின்ற
குளிர்தாங்கும் தக்காளிகளைச் செய்கிறார்களே, எப்படி?
விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து மரபணுப் பொருள்களின் துணுக்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவற்றிற்கு ஊக்கி (புரோ மோட்டர்), பிளாஸ்மிட் என்று பெயர்கள். இவை ஓரினத்திலிருந்து (மீன் என்று வைத்துக்கொள்வோம்) மற்றோர் இனத்திற்கு (தக்காளிச் செடிக்கு) ஒரு மரபணுவை மாற்றுவதற்கு உதவும். வைரஸ்களும் பாக்டீரியாவும் மரபணுவைக் கடத்திச் சென்று தாவரத்தின் டிஎன்ஏவில் செருகுவதற்காகப் பயன்படும் கடத்திகள். (குறிப்பு: ஊக்கி (புரோமோட்டர்) என்பது, தாவரம் வெளிமரபணுவைத் தன் சொந்தமரபணுவாகக் கருதி ஏற்றுக்கொள்ள வைக்கும் தந்திரத்தைப் புரிகிறது. டிஎன்ஏவுக்குத் துணைக்கருவியாகச் செயல்படுகின்ற டிஎன்ஏவின் வட்டவடிவத் துணுக்கு, பிளாஸ்மிட்.
அக்ரோபாக்டீரியம் என்பது தாக்குதல்சக்தி வாய்ந்த பாக்டீரியம். இது தாவரங்களில் கழலைகளை ஏற்படுத்தும். பிளாஸ்மிக்குள் ஊக்கியும் குளிரெதிர்ப்பு மரபணுவும் செருகப்படுகின்றன. இந்தப் பிளாஸ்மிட், அக்ரோபாக்டீரியத் துக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் புதிய பிளாஸ்மிடுடன் சேர்ந்த புதிய பாக்டீரியம் மில்லியன்கள் கணக்கில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
ஒரு தட்டிலுள்ள தாவரசெல்களில் மேற்கண்ட அக்ரோபாக்டீரியா பற்றித் தொற்றிக் கொள்கின்றன. குளிரெதிர்ப்பு மரபணுவையும் ஊக்கியையும் (மற்றும், எதிருயிரித் தடுப்பு மரபணுவையும்) தாவர டிஎன்ஏவுக்கு மாற்றிவிடுகின்றன. தாவர செல் பிரியும் போது, ஒவ்வொரு தாவரசெல்லும் புதிய அந்நிய மரபணுக்களைப் பெறுகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் பின்னர் ஒரு முழுத்தக்காளிச் செடியாக வளர்க்கப்பட முடியும்.
வாசனை-ருசித் தக்காளி வகை ஒன்று 1994இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறைகள் இருந்தன. அது மிக மிருதுவாகவும் எளிதில் அடிபடக்கூடியதாகவும் இருந்தது. செடியும் உறுதியாக இல்லை. நுகர்வோர் அதன் விசித்திரமான உலோகச்சுவை பற்றிக் குறைகூறினார்கள். அதனால் 1994 இல் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தத் தக்காளியின் முழு விளைச்சலும் பயன் இல்லாமல் போனது. கடைசியாகத் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.
அதேபோலப் பூச்சியெதிர்ப்புப் பருத்தி ஒன்று 1997 இல் அறிமுகமாயிற்று. இது தனக்குள்ளேயே பூச்சிக்கொல்லியை உருவாக்கிக்கொள்ளவல்லது. அமெரிக்க நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டபோது, செடிகளிலிருந்து பருத்திப்பந்துகள் தானாகவே உதிர்ந்துவிட்டன. விவசாயிகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்ட இழப்பீடு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டியது.
ஏன் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற பயிர்கள் முழுமை அடைய முடியாது?
மரபணுப்பொறியியல்மாற்ற உருவாக்கங்களின் உள்ளார்ந்த முக்கியக் குறை, அவற்றின் உருவமைப்பிலுள்ள நிலைத்தன்மையின்மை (இன்ஸ்டெபிலிடி). (இங்கிலாந்தின் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த) மரபியலாளர் டாக்டர். மே வான் ஹோ கருத்துப்படி, இம்மாதிரித் தாவரங்களின் மூலக்கூற்று மரபியல் தகவல்கள் எதுவும் நிலைத்தன்மையைக் காட்டவில்லை. செயற்கை மரபணுக் கட்டமைப்புகள் வேறு மரபணுப் பொருள்களுடனும், தவறான முறையில் உடையவும் சேரவுமான இயல்பைப் பெற்றுள்ளன என்று இதற்கு அர்த்தம். இதன் விளைவு, புதிய, முன் கணிக்கமுடியாத சேர்க்கைகள்.
மரபணு மாற்றிய மரபணு மாற்றப்பட்ட தாவரச்சேர்க்கைகளின் நிலையின்மை விஞ்ஞானிகளால் நன்கு அறியப்பட்ட ஒன்று. மமா தொழில்துறை இது ஒரு தொடரும் பிரச்சினை என்று ஒப்புக்கொள்கிறது. அடுத்தடுத்த சந்ததிகளில், இந்தத் தவறுகள் பெருக்கமடைகின்றன. நாம் விரும்பாத, தாறுமாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக எல்லா உயிர்களிலும் ஒன்றிசைந்து இருந்துவருகின்ற இயற்கையான, நிலைத்த மரபணுச் சேர்க்கைகளுக்கு இது முரணாக உள்ளது.
மரபணு மாற்றப்பட்ட தொழில் நுட்பம் எவ்வளவு சரியானது?
மரபணுக்களைச் செருகும் முறைகள், முன்பே சொன்னதுபோல, வந்தால் சரி, போனால் போகட்டும் என்ற நிலையில்தான் உள்ளன. ஒருமுறை சரியான சேர்க்கையைப் பெற ஆயிரக்கணக்கான முறை போடவேண்டியுள்ளது. அப்படி வெற்றிபெறுபவையும் கட்டுப்பாடற்ற, எதிர்பாராத முடிவுகளைத் தருகின்றன. விஞ்ஞானிகள் முடிவுகளைக் கட்டுப்படுத்த இயலாத, முன்னுணர முடியாத நிலையில்தான் உள்ளனர். உதாரணமாக, வளர்ச்சி ஹார்மோன் ஒன்றின் மனித மரபணுவை எலிகளுக்குள் செலுத்தியபோது, மிகப்பெரிய எலிகள் உண்டாயின. அதே மரபணுவைப் பன்றிகளுக்குள் செலுத்திய போது மிகப் பெரிய பன்றிகள் உருவாகவில்லை, மாறாக, நோயுற்ற, வளர்ச்சி குன்றிய, மாறுகண் கொண்ட, மலட்டுப் பன்றிகள்தான் கிடைத்தன.
ஏன் இப்படி?
டிஎன்ஏ, மரபணுக்கள் பற்றிய அறிவியலும் அவற்றின் பணிகளும் இன்னும் நன்கு தெளிவாகவில்லை. உயிர்த்தொழில்நுட்ப ஆதரவாளர்கள் சொல்வதைப் போலன்றி, அவர்கள் தொழில்நுட்பம் தவறான, காலத்துக்கொவ்வாத யூகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இடையில் ஒரு தகவல்: நாம் மரபுவழி வந்த நமது நாட்டு மக்காச் சோளத்தை உண்பதை அறவே விட்டுவிட்டோம். பெரிய நகரங்களில் அது கிடைப்பதே இல்லை. மாறாக, ஸ்வீட் கார்ன், பேபி கார்ன் போன்ற பெயர்களில் எல்லாம் இறக்குமதியான மரபணு மாற்றப்பட்ட சோளங்கள்தான் கிடைக்கின்றன. அவை எப்படிச் செய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
உயிர்த்தொழில்நுட்பச் சோளத்தைச் செய்தல்:
சில பூச்சிகளுக்குக் கடுமையான விடமான ஒரு புரோட்டீனை உருவாக்குகின்ற பசிலஸ் துரிஞ்சியென்சிஸ் என்பதிலிருந்து விஞ்ஞானிகள் ஒரு மரபணுவைப் பிரிக்கின்றனர். இதை மாற்றியமைத்து, வேதிமுறையில் இதனை ஓர் எதிருயிரித் தடுப்பு மரபணுவில் இணைக்கின்றனர்.
இந்த மரபணுக்கள் மிகநுட்பமான 24 காரட் தங்கப் பொடியில் சேர்க்கப்பட்டு, கால்அளவு பிளாஸ்டிக் தட்டில் பரப்பப்படுகின்றன.
ஒரு வலைத்தடுப்பின்மீது இந்தத் தட்டு ஜீன் துப்பாக்கி ஒன்றினால் வீசப்படுகிறது. அப்போது மரபணுவைக் கடத்தும் துகள்கள் சென்று சோள செல்கள் அல்லது விதைக்கருக்கள் உள்ள தட்டின் மீது விழுகின்றன.
புதிய மரபணுக்கள் சில சோளச் செல்களுக்குள் சென்றுசேர்கின்றன. இவற்றைக் கண்டறிய, விஞ்ஞானிகள் இவற்றில் எதிருயிரித் தடுப்பு மரபணு கொண்டவற்றைத் தவிரப் பிற செல்களை அழித்துவிடும் எதிருயிரி ஒன்றைச் சேர்க்கின்றனர்.
இந்த மாறிய செல்கள் புதிய தாவரங்களாக முதிர்கின்றன. எல்லாச் செடிகளும் அல்ல இப்படிப்பட்ட ஒருசில செடிகளும் அவற்றின் சந்ததிகளும் பூச்சிக்கொல்லிப் புரொட்டீனை உற்பத்தி செய்கின்றன. இவற்றிலிருந்துதான் விதைகள் உருவாக்கப்பட்டு இப்போது நாம் விரும்பி உண்ணும் பேபிகார்ன், ஸ்வீட் கார்ன் போன்றவை உண்டாக்கப்படுகின்றன.
முன்பு மரபணு மாற்றப்பட்ட இணைப்புகள் தாறுமாறாக விளைவுகளை உண்டாக்குகின்றன என்று பார்த்தோம். அதற்குக் காரணம் என்ன?
“மரபணுக்கள் என்பவை எளிய குறியமைப்புகளை உடையவை, ஒரு குறித்த பண்புக்கு ஒரு மரபணுக்குறி மட்டுமே உண்டு” என்ற எளிமையான, குறுக்கல் வாதச்சிந்தனையின் விளைவு இது. ஓர் உயிரியின் டிஎன்ஏவை உடைத்து அதற்குள் ஓர் அந்நிய மரபணுவைச் செருகுதலாகிய செயல் எதிர்நோக்க இயலாத எதிர்பாராத விளைவுகளைக் கொண்ட வெடிப்புகளையும் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.
இயற்கையில், மரபணுக்கள் ஒன்றாக, ஒன்றுசேர்ந்து, ஒழுங்காகச் செயல்படுகின்றன, தங்களுக்குள்ளாகவும் ஒழுங்கமைப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் நினைப்பதுபோல ஒரு மரபணு மட்டும் தனித்துச் செயல்படுவதில்லை. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், சோதனைகள் நோய்பட்ட பன்றிகள் அல்லது பச்சை சால்மன் மீன்கள் போன்ற தாறுமாறான முடிவுகளைத் தருவதுதான் தொடரும்.
மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று விளம்பரம் செய்யப்படுகிறதே, இந்தக் கூற்று உண்மையா?
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் மரபாக இயற்கை உணவைப் பதப்படுத்துவதன் (ரொட்டி, பீர் அல்லது ஒயின், பதப்படுத்திய தயிர், பாலடை போன்றவை செய்தல்) மற்றும் இயற்கை வளர்ப்பின் விரிவாக்கமே மபொ என்று கூறுகின்றன.
நீங்கள் எவ்வளவு ஒட்டுவளர்ப்புச் செய்தாலும், உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் தக்காளியில் மீன் அல்லது பூச்சியின் மரபணுப் பொருள் வரவே முடியாது. நாம் இயற்கையாகக் கிடைக்கின்ற ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறோம். மனிதனாக உருவாக்கிய, செயற்கையாக மாற்றப்பட்ட மரபணுக்களை ரொட்டி, பாலடை, ஒயின் போன்றவை செய்வதற்கு யாரும் பயன்படுத்துவதில்லை. பண்ணைகளில் ஒரே அல்லது ஒரேமாதிரியான இனத்திலிருந்துதான் ஒட்டு வளர்ப்புச் செய்யத் தேர்ந்தெடுக்கிறோம்.
மரபு வளர்ப்பு நவீன மரபணுப்பொறியியல் தொழில்நுட்பங்கள்:
மரபான வளர்ப்பு முறை பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக வருவது. அதற்கு யாரும் உரிமை (பேடண்ட்) கொண்டாட இயலாது. மரபு வளர்ப்பிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடத்தான் செய்கின்றன, ஆனால் அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகக் குறைவு.
நவீன மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்லது மிகச்சில மரபணுக்கள் புகுத்தப்பட்டு, அவற்றிலிருந்து செயற்கையான வளர்ச்சியைச் செய்து, அவற்றிலிருந்து விதைகளை உருவாக்கி, பிறகு பயிர் என்ற நிலைக்கு வருகிறது.
இவற்றிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடுகின்றன, அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் உள்ளன.
தாவரங்கள், பிராணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், மனிதன் போன்ற முற்றிலும் தொடர்பற்ற உயிரிகளிலிருந்து மரபணுப் பொருள்களை ஆய்வகங்களிலும் சோதனைக் குழாய்களிலும் கலப்பதை மரபணுப் பொறியியல் செய்கிறது.
இந்த இரு முறைகளும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
செயற்கை முறையில், புதிய டிஎன்ஏவில் அந்நிய மரபணுக்களைச் செருகுவதற்கு பாக்டீரியாக்களையும் வைரசுகளையும் வைத்து மரபணுப் பொறியியலாளர்கள் அவற்றில் தாக்கி நுழைதலையும், படையெடுப்பையும் நடத்துகிறார்கள்.
இயற்கை வளர்ப்பில் (தாவரங்கள் அல்லது பிராணிகள்) இரு பெற்றோரிடமிருந்தும் டிஎன்ஏ முழுமையாக அப்படியே குரோமோசோம் வடிவில் செல்கிறது. இயற்கையாக ஒழுங்கமைத்த சங்கிலிகள் உடையாமல், ஒருங்கிசைவுடன் உள்ளன.
ஆனால் மரபணுப்பொறியியல்மாற்ற சந்ததியில் இயற்கைச் சங்கிலிகள் எதிர்நோக்கவியலாத வழிகளில் குலைக்கப்பட்டு, மறுஅமைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.
மபொ பழங்களும் காய்கறிகளும் முற்றிலும் தொடர்பற்ற இனங்களிலிருந்து (பூச்சிகள், விலங்குகள், பக்டீரியா, மனிதர்களிலிருந்தும்) டிஎன்ஏக்களைக் கொண்டுள்ளன என்பது அவற்றை இயல்புக்கு மாறானவை ஆக்குகிறது. அவ்வாறில்லை என்றால், உயிர்த் தொழில்நுட்பக் குழுமங்கள் ஏன் அவற்றிற்கு உரிமை பதிவு செய்து, அவற்றைப் பயன்படுத்த ராயல்டி (உரிமத்தொகை) பெற்று, பல்வேறு நாட்டு விவசாயிகளையும் பல்வேறு முரண்பாடுகள் கொண்ட ஒப்பந்தங்களுக்கு ஏன் உடன்படுத்தவேண்டும்?
உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள், மபொ உணவுகள், இயற்கை உணவுகளுக்குச் சமமானவை என்று கூறுவது ஏன்?
இந்த உணவுகளை உருவாக்க மிகப் பெரிய அளவு பணம் முதலிடப்படுகிறது. பிற போட்டியாளர்களுக்கு முன்னரே பாதுகாப்பான சந்தைகளில் தங்கள் விளைபொருள்களைத் தள்ளிவிட இந்தக் குழுமங்கள் விரைகின்றன.
உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களின் விளக்கம் இப்படிச் செல்கிறது:
“ஒரு மரபணுப்பொறியியல்மாற்ற உணவின் மாற்றப்பட்ட பெரும்பான்மைப் பண்புகள் அதே போன்ற இயற்கை உணவின் பண்புகளுக்கு ஒத்தவையாக இருந்தால், அந்த மபொ உணவு இயற்கை உணவைப் போன்றே, எல்லா விதங்களிலும் இருக்கவேண்டும்”.
இந்த விளக்கம் தர்க்கத்துக்கு முரணானது. நான்கு கால்கள், மீசைகள், ஒரு வால், இரு காதுகள், உடல் முழுவதும் மயிர் போன்ற ஒரே மாதிரிப் பண்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு நாயும் எலியும் சமமாகிவிடுமா?
விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்தி, மிகுதியான செலவு பிடிக்கின்ற, காலவிரயம் செய்கின்ற, நீண்டகாலச் சோதனைகளின் தேவை இன்றியே தங்கள் விளைபொருள்களை எவ்வளவு விரைவாக விற்கமுடியுமோ அவ்வாறு விற்பதற்காக உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்கள் மேற்கண்ட சமன்மை வாதத்தை மிகச் சாதுரியமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. துரதிருஷ்டவசமாக, நம்நாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் தொழிலகங்கள் கண்டுபிடித்த இந்த “சாராம்சச் சமன்மை”யின் சட்ட நிபுணத்துவ நுட்பத்தை ஒப்புக்கொள்கின்றன. நுகர்வோரும் ஏமாற்றப்படுகிறார்கள். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறது. பெரிய பெரிய முதலாளிகள்
அதனால் மரபணுப்பொறியியல்மாற்ற விளைபொருட்கள் உணவுப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், கடுமையான நீண்டகாலச் சோதிப்புகள், அடையாளப்படுத்துதல் (அதாவது இவை செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்று லேபல் இடுதல்) உட்பட்ட செயல்களைத் தவிர்த்து வந்துவிடுகின்றன. நம் நாட்டில் நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்புமே இல்லை.
இந்தக் கட்டுரை தொடரும் . . .
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
naan ennaila erunthu eyargaiyana porulai payanpaduthuven;seyarkaiku ethiraga kural kodupen