மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் (முன் கட்டுரையின் தொடர்ச்சி)
ஆச்சாரிJan 4, 2014
(மபொ-மரபணுப் பொறியியல், மமா-மரபணு மாற்றப்பட்ட)
நம் நாட்டிலும் ரிலையன்ஸ், மோர், ஹெரிடேஜ் போன்ற பெருநிறுவனங்கள் கடைகளை நடத்தத் தொடங்கிய போதே மமா உணவுப் பொருள்கள் மிகுதியாக நாட்டில் பெருகிவிட்டன. தனியாக அடையாளமிடப் படாததால் மக்கள் தாங்கள் மபொ உணவுகளை உண்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் இன்றும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீட்சா, பர்கர் போன்ற உணவுகளில் மமா நஞ்சு மிகுதி.
இதற்கு மேல் நமது அரசாங்கம் வால்மார்ட் போன்ற அமெரிக்கக் குழுமங்களைச் சிறிய அளவிலான கடைகள் வைக்கவும் அனுமதி அளிக்கிறது. அமெரிக்கா தான் மபொ நஞ்சுகளின் தாயகம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கெனவே மான்சாண்டோ குழுமத்தின் விதைகளை வாங்கிப் பயிரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது அரசாங்கம். இதுவரை கிரீன் பீஸ் போன்ற சில தனி அமைப்புகளே இவற்றை எதிர்த்து வருகின்றன. மக்களுக்கு இதுபோன்ற விசயங்கள் தெரியவும் இல்லை, அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைப் போராட்ட நிலையில் இவற்றின்மீது அக்கறையும் இல்லை.
மபொ உணவுகள் பாதுகாப்பானவையா?
1989 -இல் ஒரு புத்தம்புதிய கொள்ளைநோய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியது. அதற்கு பலியானவர்கள் கடுமையான தசை வலியாலும் மிக அதிக எண்ணிக்கையிலான இரத்த வெள்ளை அணுக்களாலும் பாதிக்கப்பட்டனர். பக்கவாதம், நீண்டகால நரம்பியல், இதயப் பிரச்சினைகள், தோலில் வலிமிக்க வீக்கங்களும் வெடிப்புகளும், தன்னிச்சையான நோயெதிர்ப்புக் குறைபாடுகள், ஒளியைத் தாங்கமுடியாமை போன்றவை அவர்களைப் பீடித்த மற்ற சில அறிகுறிகள். சில மாதங்களுக்குள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 5000 பேரில் 37 பேர் இறந்தனர், 1500 பேர் நிரந்தரமாக ஊனமாயினர். மருத்துவர்கள் இந்த வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான இரத்தச் சீர்கேட்டுக்கு ஈசனோ ஃபீலியா-மையால்ஜியா குறைபாடு என்று பெயரிட்டனர். அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் குறிப்பிட்ட உணவுக்கடைகளில் விற்கப்பட்ட ஓர் உணவுச்சேர்க்கையை ட்ரிப்டோஃபன் என்பதை உண்டனர் என்று கடைசியாக நோய்க்கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்தது. இந்த ட்ரிப்டோஃபன், ஒரு ஜப்பானியக் குழுமத்தினால் (ஷோவா டெங்கோ-ஜப்பானின் மூன்றாவது மிகப்பெரிய வேதிக் குழுமம் அப்போது) செய்யப்பட்ட மபொ உணவு என்பதை மேலும் செய்த ஆய்வுகள் கண்டுபிடித்தன.
எனவே சந்தேகமின்றி ஒரு மபொ உணவு, உடல் நலத்துக்கு பாதுகாப்பானது என்று கூறமுடியாது. நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டுச் சேகரித்த அனுபவத்தினால் பாதுகாப்பானவை என்று நமக்குத் தெரியும். மாறாக இந்தப் புதிய தொழில் நுட்பம் நீண்டகால விளைவுகள் ஏற்படுவதைக் கணிப்பதில்லை. மபொ உணவுகள், விரும்பத்தகாத பக்கவிளைவுகளைத் தருபவையாக இருக்கக்கூடும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் டிடிடி -யினை உண்ட பசுக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆரோக்கியத்துக்கு மாறான அந்த விளைவுகளைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆயிற்று.
மபொ டிரிப்டோஃபனின் விசயத்தில், அதை மேலும் உற்பத்தி செய்ய ஒரு பாக்டீரியத்தில் நான்கு மரபணுக்கள் செருகப்பட்டன. அந்த மரபணுக்கள் உண்டாக்கிய என்சைம் பாக்டீரியத்தின் வேதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் அது மேலும் மேலும் இந்த அமினோ அமிலத்தை உற்பத்தி செய்யலாயிற்று. அந்த அமிலம் புதிய வேதி மாற்றங்களைப் பக்கவிளைவாக ஏற்படுத்திப் புதியதொரு கூட்டுப்பொருளை உருவாக்கியது. அது டிரிப்டோஃபனை ஒத்ததாக இருந்தாலும் மனிதர்களுக்கு மிகுந்த நச்சுப்பொருள். புதிதாக உருவாகிய டிரிப்டோஃபன், 98.5% தூயதாக இருந்தாலும் அதில் மிகச் சிறிய அளவில் கலந்திருந்த நச்சுப்பொருளே மனிதர்களைக் கொல்லவோ செயலிழக்கச்செய்யவோ போதுமானதாக இருந்தது. (இந்தப் பிரச்சினை தெரியவந்தவுடனே அந்தக்குழுமம் எல்லா மாதிரிகளையும் அழித்துவிட்டது. அதற்கு லேபில் இட்டிருந்தால் தேடுதல் வேகமாக நிகழ்ந்திருக்கும்-இந்த வழக்கு இதுவரை தீர்க்கப்படாமலே இருக்கிறது.)
இயற்கையான பாக்டீரியா தயாரிக்கும் டிரிப்டோஃபன் நஞ்சானதல்ல. ஆகவே மாற்றப்பட்ட பாக்டீரியாதான் நச்சுப்பொருளை உற்பத்திசெய்த காரணி என்று நாம் சுட்டிக்காட்டலாம்.
நீண்டகாலம் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால் ஒழிய மபொ உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று யாரும் 100% உறுதிகூற முடியாது.
தாறுமாறான முறையில் மரபணுக்களைத் தாவரத்திலோ விலங்கிலோ செருகுவது, எதிர்பாராத மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தி, புதிய அல்லது உயர் அளவிலான தீங்கு பயக்கும் பொருள்களை உணவில் சேர்த்துவிடுகிறது. மபொ உணவுகளில் தீங்கான பொருள்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.
ஒரு புதிய மருந்து முழுமையாகச் சோதிக்கப்பெறவில்லை. அதன் மோசமான விளைவுகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதாலேயே நீங்கள் அதைப் பயன்படுத்திப் பார்ப்பீர்களா? இதைத்தான் நாம் மபொ உணவுகள் விசயத்திலும் கடைப்பிடிக்கச் சொல்கிறோம். ஆனால் தொழிலகங்களும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை முழுமையாக ஏற்கத்தக்கவை என்று அழுத்திச் சொல்கின்றன.
உள்ளார்ந்த உடல்நல அபாயங்கள் நிகழ்ந்த சில சந்தர்ப்பங்கள்
* உயர்ந்த வேதிமாற்ற வீதம் இருக்குமாறு ஈஸ்டை மபொ வாயிலாக மாற்றினார்கள். அதனால் நொதித்தல் வேகமாக நிகழும், ரொட்டி செய்தல் அல்லது பீர் வடித்தலை விரைவுபடுத்தமுடியும். குளூகோஸில் வேதிமாற்றங்களை விரைந்து ஏற்படுத்தும் மரபணுக்கள் ஈஸ்டில் செருகப்பட்டன. இதனால் நஞ்சான மரபணுமாற்றப் பொருளான மெதில் கிளையோக்ஸால் என்பதன் சேர்க்கை ஈஸ்டில் ஏற்பட்டுவிட்டது என்று 1995 இல் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.
* புகையிலைத் தாவரங்கள் மபொ வாயிலாக காமா-லினோலீயிக் அமிலத்தை உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்டன. இது உடல்நல உணவுத் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1996 இல், இந்தத் தாவரம் எதிர்பாராதவிதமாக வேறொரு நச்சுப் பொருளை (ஆக்டாடெகாடெட்ரேனிக் அமிலம்) உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்த நஞ்சு இயற்கையான புகையிலைத் தாவரங்களில் இருப்பதில்லை.
* 1998இல், பூச்சிகளைக் கொல்வதற்காக உருவாக்கப்பட்ட மபொ உருளைக்கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள், முடமாக்கப்பட்ட உறுப்புவளர்ச்சி, தொண்டைக்குழல் உட்புறத்தோலில் மாற்றங்கள் எனப் பல கடுமையான உயிரியல் பிரச்சனைகளை எலிகளில் சோதித்தபோது ஏற்படுத்தியது என்று ஆய்வாளர் ஆர்பத் புஸ்டாய் காட்டினார். இந்த மபொ உருளைக்கிழங்கை உண்ணும் மனிதர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்குமா?
மபொ உணவை உண்பதால் வேறு பக்க விளைவுகள் உண்டா?
ஒவ்வாமை பற்றிய பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்களுக்கு 2% வீதமும் குழந்தைகளுக்கு 8% வீதமும் உணவு ஒவ்வாமை இருக்கிறது, ஏறத்தாழ நான்கிலொரு வீத மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதற்குக் காரணம் புரோட்டீன்கள். புரோட்டீன் உற்பத்தியில் தான் மபொ ஈடுபடுகிறது. பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் மூலங்களான பருப்புகள், மீன்கள், முட்டைகள் மற்றும் பால் பொருள்களிலிருந்து மட்டுமல்ல. மபொ உணவு, கூருணர்ச்சி மிக்க எவரிடமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத, இதுவரை தெரியவராத ஒவ்வாமை விளைவிக்கும் பொருள்கள் உணவில் தோன்றுவதே இதற்குக் காரணம். ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பாக இருந்த உணவு, மபொ மாற்றத்திற்குப் பிறகு அபாயகரமானதாக மாறிவிடக்கூடும். புதிய புரோட்டீன்கள் அவற்றில் உற்பத்தி ஆவது ஆபத்தான வேதிவினையைத் தூண்டுவதாகிவிடலாம்.
களைக்கொல்லிகளை எதிர்க்குமாறு உருவாக்கப்பட்ட மபொ சோயா அவரையில் பாக்டீரியா, பெடூனியா, ஹெபாடைடிஸ் பி மற்றும் எச்ஐவியை உண்டாக்கும் வைரஸ் போன்றவை அடங்கியுள்ளன.
அதிகமான புரோட்டீனைத் தருவதற்காக சோயா அவரைக்குள் பிரேசில் பருப்பிலிருந்து எடுத்த ஒரு மரபணு செலுத்தப்பட்டது. ஒவ்வாமை உடைய நபர்கள் எல்லோருக்கும் இந்த சோயா அவரையால் மோசமான எதிர்வினை உண்டாயிற்று என்று பின்னர் நடந்த சோதனைகள் காட்டின. அந்த உற்பத்திப் பொருள் நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மபொ சோயா அவரையினால் உணவு ஒவ்வாமை 50% கூடுதலாக அதிகரிக்கிறது என்று காட்டினார்கள். செரித்த பிறகுதான் இந்த புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குடல் எரிச்சல் உணர்வு, செரிமானப் பிரச்சினைகள், தோல்நோய்கள், மிகுகளைப்பு அறிகுறிகள், தலைவலை, வேலைசெய்ய இயலாமை போன்றவை ஏற்படுவதாகப் புகார் கூறினர்.
ஒவ்வாமை வேதிகள் இருக்கின்றனவா? என்று உங்களால் சோதித்துத்தான் அறிய முடியும். ஒவ்வாமை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சநேரம் கழித்துத்தான் எதிர்வினைகள் நிகழ்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள், தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிரிகளிலிருந்துதான் மரபணுக்கள் எடுக்கப்படுகின்றன. இவை உணவில் இதுவரை சேர்க்கப்படாதவை. எனவே அவை உற்பத்திசெய்யும் பொருள்கள் (புரோட்டீன்கள்) என்ன, எப்படிப்பட்ட பாதிப்பைத் தரும் என்பது தெரியாது.
உங்களுக்கு இதுவரை தெரியவராத ஒன்றை எவ்விதம் சோதிக்க முடியும்? இவற்றைப் பற்றிய லேபில்கள் (அறிவிப்பு ஒட்டிகள்) இன்றி இவற்றையும் இயற்கை உணவையும் வேறுபடுத்தி அறியமுடிவதில்லை என்பதால், மேலும் கேடு நிகழ்கிறது, நுகர்வோரால் இம்மாதிரி உணவுகளைத் தவிர்க்கமுடிவதில்லை.
மபொ உணவுக்கும் எதிருயிரி எதிர்ப்புக்கும் உள்ள தொடர்பு என்ன?
உயிர்த்தொழில்நுட்பத்தில் எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களின் பயன்பாடு இன்னொரு பிரச்சினை. கிருமிகளுக்கெனப் பயன்படுத்தும் எதிருயிரிகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்-நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் சிகிச்சைக்கெனப் பயன்படுத்தும் பயனுள்ள மருந்துவேதிகள்) எல்லாக் கிருமிகளையும் அழிப்பதில்லை. சில கிருமிகள் ஏற்கெனவே மருந்து எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டதால் பிழைத்துவிடுகின்றன. பாக்டீரியாக்களில் எதிருயிரிமருந்துக்கு எதிர்ப்பு உருவாக்கும் மரபணுக்களை மரபணுப் பொறியியலாளர்கள் “காட்டி”களாகப் பயன்படுத்துகிறார்கள்.
புதிய உயிரிக்குள் வேண்டப்பட்ட மரபணுக்களோடு இவையும் செலுத்தப்படுகின்றன. இந்தக் காட்டிகளைக் கொண்டு, இந்த அந்நிய மரபணுக்களை ஏற்றுக்கொண்ட செல்களை விஞ்ஞானிகள் பிரித்தறிய முடியும். (காட்டிகளை ஏற்ற செல்கள் மட்டும்தான் எதிருயிரிமருந்து இருக்கும் நிலையில் பிழைத்திருக்கமுடியும், பிற செல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)
சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களும், எளிய உயிரிகளும் மபொ பயிரிலிருந்து இந்த எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுதான் அபாயம். சிறிதுகாலத்தில் இவை இவற்றைப் பண்ணையிலிருக்கும் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் கடத்திவிடும். எனவே மபொ உணவின் பரவலான பயன்பாடு, தொற்றுகளுக்கும் நோய்களுக்கும் பயன்படுத்தும் மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தியைப் பரப்புவதாகவே முடியும்.
எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட மபொ உணவை நாம் உண்ணும்போது எவ்வித பாதிப்பு நமக்கு ஏற்படுகிறது?
டிஎன்ஏவும், மரபணுக்களும் மிகத் தயாராக பாக்டீரியாக்களுக்கும் பிற எளிய உயிரிகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மபொ தொழிலகங்கள் சொல்வதற்கு மாறாக, அவை முழுமையாக மபொ உணவிலிருந்து பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் வாய், உணவுப்பாதை வழியாகப் புகுந்துவிடமுடியும்.
மரபணுக்களும் டிஎன்ஏவும் செரிப்பிலும் உயிர்பிழைத்திருக்கும்
* எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள், மபொ உணவிலிருந்து அப்படியே மனித உணவுப் பாதைக்குள் குதித்து, குடலில் பல நிமிடநேரம் உயிர்வாழ முடியும். ஆகவே மபொ உணவிலிருந்து நேராகவே எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள் மனிதருக்கும் (அல்லது விலங்குகளுக்கும்) பரவ முடியும். மபொ உணவை உண்ணும் மனிதர்கள் நோயுறும்போது எதிருயிரி மருந்துகளால் அவர்களுக்குப் பலனிருக்காது.
* உணவுப்பாதையின் செரிப்பு மாற்றங்கள் டிஎன்ஏவை பாதிப்பதில்லை. எலிகளுக்குத் தரப்பட்ட டிஎன்ஏவை அவற்றின் இரத்த வெள்ளை அணுக்கள், மண்ணீரல், கல்லீரல் செல்கள் பெற்றுக்கொண்டன. எலிகளின் டிஎன்ஏவுடன் அவற்றில் சில ஒருங்கிணைந்துவிட்டன.
எதிருயிரிக் காட்டி மரபணுக்கள் ஒருவேளை பாக்டீரியா அல்லது வைரஸ்களுக்குக் கடத்தப்பட்டால், எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்கள் வனவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்கும் மனிதருக்கும் பரவக்கூடும். இப்படிப்பட்ட காட்டி மரபணுக்களையும் அவற்றின் விளைபொருள்களையும் கொண்ட பயிர்களைப் பரவலாகப் பெருமளவில் பயிரிடுதலும் நுகர்தலும் நுணணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எல்லாரிடத்திலும் மிகப்பெரிய அளவில் எதிருயிரி மருந்தெதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.
உதாரணமாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) 90களில், பாலில் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு அதிகப்படுத்த அனுமதி அளித்தது. தங்கள் பண்ணைகளிலிருக்கும் பசுக்களுக்குத் தொற்று ஏற்படாமலிருக்க மிகுதியாக எதிருயிரி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த இது வாய்ப்புத்தந்தது. ஆனால் இதனால், எதிருயிரிகளுக்குக் கட்டுப்படாத புதிய நோய்க்கிருமிகள் அவற்றில் உருவாயின. இவற்றின் பாலைக் குடித்த மக்கள், மேலும் அதிக அளவிலான மருந்துகளையும், புதிய மருந்தெதிர்ப்பு பாக்டீரியாக்களையும் ஏற்க நேரிட்டது.
ஏற்கெனவே, அதிக எண்ணிக்கையிலான நோய்களை (காச நோய், காலரா, நிமோனியா போன்றவற்றை) குணப்படுத்த முடியவில்லை. பலவகை எதிருயிரி மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்திகொண்ட உயர்வகைக் கிருமிகள்தான் இதற்குக் காரணம். உபயோகமான மருந்துகளை மருத்துவர்கள், விவசாயிகள், பிராணிஉணவுத் தயாரிப்புத் தொழிலகத்தினர் போன்றோர் மிகுதியாகவும் தவறாகவும் பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது.
மரபணுப் பொறியியல், பக்கவாட்டு (சமதள) மரபணுப் பெயர்ப்பு என்ற கொள்கை
அடிப்படையில் நிகழ்கிறது. இதற்கு ஓர் இனத்திலிருந்து தொடர்பற்ற இன்னொரு இனத்திற்கு மரபணுக்களை மாற்றுவது என்பதுதான் அர்த்தம்.
மேலும் மோசம், பக்கவாட்டு மரபணுப் பெயர்ப்பு நிகழும் போது, நோய்க் கிருமிகள் எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதால், இம்மாதிரிச் சமதள மாற்றத்தில் அவை புதிய சேர்க்கைகளில் அல்லது இடமாற்றங்களில் புதிய நோய்களை உண்டாக்குகின்ற புதிய, அதிக ஆற்றலுள்ள கிருமிகளை உருவாக்கிவிடும்.
மரபணுப் பொறியியலில் அபாயகரமான பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் பயன்படுத்துவதில் பிற ஆபத்துகள் ஏதேனும் உண்டா?
புதிய நோய்களைத் தொடங்கும் அபாயம் இருக்கிறது. உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களால் பயன்படுத்தப்படும் பல பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை கழலைகள், பற்றுகள், நோய்களைத் தாவரங்களிலும் பிராணிகளிலும் உண்டாக்கக் கூடியவை. உதாரணமாக, மபொ பயிர்களில் காலிபிளவர் மொசாய்க் வைரஸ் மரபணுக்களை செயலூக்கம் செய்யவோ செயல்மட்டுப்படுத்தவோ ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஹெபாடைடிஸ் பி-யை ஒத்தது, எச்ஐவிக்குத் தொடர்புள்ளது. நாய்க்கடி வைரஸ் (ரேபீஸ்) பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குப் பல நோய்களை எதிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் கிருமிக்கொல்லிகளில், ஒரு பூச்சியின் வைரஸில் தேளின் விசத்திலுள்ள மரபணுவைச் சேர்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அது ஒருவேளை மனிதர்களுக்குக் கடத்தப்பட்டால், நரம்புமண்டலம் அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
மரபணுப் பொறியியலில் இயற்கைக்கு மாறான முறையில் மரபணு மாற்றம் செய்வது, புதிய நோய்களின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இவை இனங்களின் எல்லைகளை மீறிக் குதிப்பதால், மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்படுபவை. இவை பாக்டீரியாவும் வைரஸ்களும் முன் கணிக்க இயலாத மாற்றங்களுக்கு உட்பட்டதால் ஏற்பட்டவை. உதாரணமாக, பழ ஈக்களிலிருந்து ஒரு மரபணு மனிதர்களுக்குத் தாண்டிக்குதித்ததால் நரம்பியல் சார்ந்த ஒரு க்ஷீணநோய் ஏற்படுகிறது என்று புதிதாகக் கண்டுபிடித்தார்கள்.
தொடர்பற்ற பல நோய்க்கிருமிகள் புதிய செல்களில் தாக்கக்கூடிய மரபணுககள் பலவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் பக்கவாட்டு மரபணு இடப்பெயர்ச்சிகளால் மட்டுமே நேர்ந்திருக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். இவற்றின் விளைவாகப் பலவேறு இனங்களுக்கிடையில், தாவரங்களிலிருந்து பூஞ்சைகளுக்கும், பூச்சிகளிலிருந்து பிற விலங்குகள், பண்ணைப் பிராணிகள் ஆகியவற்றிற்கும், இவற்றிலிருந்து கடைசியாக மனிதராகிய நமக்கும் புதிய நோய்களும் தொற்றுகளும் கடத்தப்படும்.
உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோல, பயிர்களின் மரபணுப் பொறியியல், நச்சுவேதிப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கிறதா?
இல்லை. மாறாக, அதிகமான நச்சுவேதிப் பொருள் எச்சங்களைத்தான் நாம் எதிர் பார்க்கமுடியும். மபொ பயிர்களில் பெரும்பான்மையானவை, இவற்றின் விதைகளை விற்கும் குழுமங்கள் தயாரிக்கும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளருமாறுதான் உருவாக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே இந்தக் களைக்கொல்லிகளின் விற்பனை மிகுதியாகியுள்ளது.
ஆகவே எப்போதையும் விட இன்று நச்சுவேதிப்பொருள்களைச் சார்ந்திருப்பது மிகுதியாகியிருக்கிறது. மபொ பயிர்கள், களைக்கொல்லிகளின் செயலை எதிர்ப்பதால், முன் போலன்றி, விவசாயிகள் இப்போது தங்கள் பயிர்களைப் பாதுகாக்க, மேலும் அதிக நச்சுப் பொருள்களைத் தெளிக்கக்கூடும். இதன்விளைவாக, நாம் உண்ணும் பயிர்களில் முன் எப்போதையும்விட அதிக நச்சுப்பொருள்கள். சில மபொ பயிர்கள், தங்கள் ஒவ்வொரு செல்லிலுமே பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்குமாறு உருவாக்கப்படுகின்றன. (அமெரிக்காவில் இப்பயிர்களே பூச்சிக்கொல்லிகளாகத்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன.) ஆனால் எதிருயிரித் தடுப்புக் கிருமிகளைப் போலவே, இவற்றில் பிழைத்திருப்பவை எதிர்ப்பை ஏற்று, ‘மீயுயிரி’களாக மாறிவிடும். இது விவசாயிகளுக்குப் புதிய சுற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும், மேலும் அதிகப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நேரிடும்.
இம்மாதிரி தங்கள் செல்களுக்குள்ளாகவே உள்கட்டமைக்கப்பட்ட நஞ்சுகளைக் கொண்ட பயிர்கள், நாம் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சாதிக்கின்றன.
ஆனால் இவை புதிய பயிர்களாக இருப்பதாலும், மனிதர்களிடம் இவற்றைச் சோதிக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதாலும், இவை சோதிக்கப்படுவதே இல்லை. இவற்றின் பக்க விளைவுகள் தெரியவரப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். இதுவரை மனிதர்கள்மீது எவ்வித ஆய்வும் நடத்தப்பட்டதில்லை என்பதால் அவை பற்றி யாருக்கும் தெரியாது.
சில பயிர்கள், பூச்சிகளைக் கொல்லுமாறும், களைக்கொல்லிகளை எதிர்க்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உணவுகள், நம்மை அதிக அளவு நச்சு வேதிப் பொருள்களை நாம் விழுங்க வைக்கும் என்பது உறுதி.
பிடி (Bt) பயிர்கள்: பூச்சிக்கொல்லி உள்அமைப்பு ஒவ்வொரு செல்லிலும் தங்கள் பூச்சிக்கொல்லிகளைத் தாங்களே படைத்துக்கொள்ளுமாறு உருவமைக்கப்பட்டவை.
இன்று பல தாவரங்கள், தாங்களே தங்களுக்குள் நஞ்சு உருவாக்கிப் பூச்சிகளைத் தடுக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மிகப் பிரபலமான ஒன்று, Bt எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் பசிலஸ் தூரிஞ்சியென்சிஸ். இது இயல்பாக மண்ணில் காணப்படுவது. இது உருவாக்கும் நஞ்சு இப்போது எல்லா உணவுகளிலும் உள்ளது. இயற்கைப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் விவசாயிகள் மிக ஆர்வத்தோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நஞ்சைத் தெளித்து வருகிறார்கள். சில பூச்சிகளின் உணவுப்பாதையில் சேரும்போது மட்டுமே நஞ்சாகுமாறு இவ்வேதி அமைந்துள்ளது. இந்த நச்சுக்குக் காரணமான பிடி மரபணுவைப் பலவேறு பயிர்களில் (உருளைக்கிழங்கு, சோளம், தக்காளி, ஆப்பிள், புகையிலையிலும்கூட) செருகினார்கள். இந்தத் தாவரங்கள் உருவாக்கிய Bt நஞ்சு, பரந்த எண்ணிக்கையிலான பூச்சிகளை-வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைசெய்யும் பிற பூச்சிகள் போன்ற நன்மை செய்பவற்றையும்கூடக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தீங்கு செய்யும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது.
Bt தொழில்நுட்பத்தால் நஞ்சு உட்புகுத்தப்பட்ட பயிர்களில் தாவரங்கள் தாமே இந்த நஞ்சைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதால், செல்களில் உயர்அளவில் இது தேங்கி விடுகிறது. இந்த நஞ்சு பூச்சிகளின் உணவுப்பாதைகளைத் தகர்த்து ஒழிக்கிறது. விலங்குகளிலும், மனிதர்களிலும்கூட, உயர்அளவிலான இந்த நஞ்சு ஏதேனும் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. Bt உணவை மிக அதிக அளவில் உண்ணும் நுகர்வோருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், அல்சருக்கான மருந்துகளை அல்லது வயிற்று அமிலத்தன்மையைக் குறைக்க ஆண்டாசிடுகளைப் பயன் படுத்துவோரிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மபொ பயிர்களை வளர்ப்பதால் வேறுபிற எதிரான விளைவுகள் உண்டா?
உண்டு. மரபணு மாசுபாடு என்பது பெட்ரோல் அல்லது கச்சாஎண்ணெய் பரவியதைத் துடைப்பதைப் போல எளிதில் துடைத்துவிடக் கூடியதல்ல. மபொ உயிரிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் வெளிச்சூழலில் விடப்படும்போது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ மீட்டுக்கொள்ளவோ இயலாது. மரபணுக்களில் நிகழ்த்தப்பட்ட தவறுகளைச் சரிசெய்வது கடினம். ஏனெனில் இவை வேதி மாசுகளைப் போன்றவை அல்ல. இவை வளர்கின்ற, வாழ்கின்ற, மாற்றமடைகின்ற, இனப்பெருக்கம் செய்கின்ற உயிரிகள். இதன் விளைவாக, விலங்குகளிலும், சுற்றுச்சூழலிலும் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்துமாறு சூழலியல் மாசுபடலாம்.
இப்போதே மபொ பயிர்களிலிருந்து மகரந்தம் காற்றாலும் மழையாலும் அடித்துச் செல்லப்படுகிறது, வண்டுகள், மகரந்தத்தைப் பரப்பும் தேனீக்கள் போன்ற காட்டு உயிரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, பண்ணைப் பயிர்களுக்கும், மைல் கணக்கில் தொலைவிலுள்ள அப்பூச்சிகளின் இனங்களுக்கும் பரவுகின்றன.
உள்வளரும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட மபொ பயிர்கள் தீங்குசெய்யும் பூச்சிகளை மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்வனவற்றையும், தீங்கான பூச்சிகளை உண்டு உதவுவனவற்றையும் கொல்லும் இயல்பு படைத்தவை.
இப்படியிருப்பினும், இந்தப் புதிய பயிர்கள் வளர்க்கப்படுவதும் உணவாக விற்கப்படுவதும் ஏன்?
மிகப் பெரிய அளவிலான பணம் இவற்றில் கொட்டப்பட்டிருக்கிறது. (2000இல் உலக அளவிலான உயிர்ப்பொருள் சந்தையின் மதிப்பு 2000 பில்லியன் அமெரிக்க டாலர், இது இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது.)
உயிர்த்தொழில் நுட்பம், உணவு, சேர்க்கைப்பொருள்கள், மருந்துப்பொருள்கள், வேதிப் பொருள்கள், விதைகள் ஆகிய தொழில்களில் கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இறங்கியிருப்பவை ஒருசில இராட்சசத் தொழிலகங்களே. இந்த பன்னாட்டுத் தொழிலகங்கள், தாங்கள் பெரும்பணம் செலவிட்டு வளர்த்த மபொ விளைபொருள்களின் உரிமைகளையும் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளன. ஆகவே போட்டியாளர்களை மீறிச் சந்தைகளை அடைய அவை வேகமாகச் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் பாதுகாப்பு நிபந்தனைகளைத் தளர்த்தவும் விரைகின்றன.
இதனால்தான் உணவுப் பயிர்கள், பிராணிகள் போன்றவற்றை மரபணுப் பொறியியல் மாற்றம் செய்வது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்ணைகளில் நடைபெறும் இயற்கையான வளர்ப்புமுறையின் ஒரு வகையே என்று உயிர்த் தொழில்நுட்பத் தொழிலகங்கள் கூறிவருகின்றன. அவற்றின் வாதங்களைச் சுருக்கிச் சொன்னால்-
* மபொ உணவுகள், நாம் உண்ணும் இயற்கை உணவுகளோடு ஒத்தவை ஆதலின் (சாராம்சச் சமன்மை என்பது இங்கு பயன்படுத்தப்படும் சொல்) அவைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல.
* மபொ உணவுகள், இயற்கை உணவுகளைப் போன்றவையே ஆதலின், அவற்றை மிகுந்த பணச்செலவு பிடிக்கக்கூடிய, மனிதர்கள், விலங்குகள் மீதான முழுமையான நீண்டகாலச் சோதனைக்கு உட்படுத்துவது தேவையில்லை;
* ஆகவே இம்மாதிரி மபொ உணவுகளைத் தனியாக அடையாளமிடுவதுகூடத் தேவையில்லை, ஏனெனில் அவை இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று அத்தொழிலகங்களின் வாதம் செல்கிறது.
அரசாங்கங்களும், பன்னாட்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் (எஃப்ஏஓ, டபிள்யூஎச் ஓ போன்றவை) இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவேதான் இப்போது எங்கு பார்த்தாலும் மபொ பயிர்களை வளர்ப்பதும் விற்பனை செய்வதும் நடக்கிறது, அடையாளமிடப்படாத செயற்கை உணவுகள் எங்கும் கிடைக்கின்றன.
சாராம்சச் சமன்மையினால் ஏற்படும் பிரச்சினை
சாராம்சச் சமன்மை என்ற வாதத்தின் காரணமாகத்தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மபொ உணவுகளை நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்கள். பாரம்பரியத் தாவர அல்லது பிராணி வளர்ப்பு முறையின் சற்றே மாறிய வடிவமே மபொ என்று தொழிலகங்கள் சொல்வதைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஊட்டச்சத்துப்பொருள்கள், ஒவ்வாமை பயக்கும் வேதிகள், இயற்கை நஞ்சுகள் போன்ற சில அடிப்படைகளில் மட்டுமே மபொ உணவுகள் சோதிக்கப்படுகின்றன. அவற்றில் புதிதாக நஞ்சாகவோ, தீங்குபயப்பதாகவோ இருக்கக்கூடிய தெரியாத பொருள்களைச் சோதனைகள் கருத்தில் கொள்வதில்லை.
டிரிப்டோஃபனால் கொடிய விளைவுகள் ஏற்பட்டபோதிலும் அந்தக் குழுமம், சாராம்சச் சமன்மை என்ற கோட்பாட்டு அடிப்படையில், தனது மபொ விளைபொருள், “தூய்மையானது”, இயற்கைப்பொருளைப் “போன்றே உள்ளது” என்று காட்டமுடிந்தது. விலங்கு அல்லது மனிதன் மீது இந்தப் பொருள் சோதிக்கப்பட்டிருந்தால், இந்த விளைபொருள் இயற்கையான டிரிப்டோஃபனைப் போன்றது அல்ல என்று உடனே தெரிந்திருக்கும்.
“மமா உணவு பாதுகாப்பானது. பாரம்பரிய உணவு சோதிக்கப்படுவதை விட அது இன்னும் முழுமையாகவே சோதிக்கப்படுன்றது. ஆகவே மேலும் பாதுகாப்பானதாகவே இருக்கும்” என்று உயிர்த்தொழில்நுட்பத் தொழில் சொல்கிறது. இதை நாம் நம்ப முடியுமா?
இந்தத் தொழில்நுட்பம் இன்னும் புதியது தான். 30 வயது கூட ஆகவில்லை. மரபணுக்களின் நடத்தையைப் பற்றிப் போதிய அளவு நமக்குத் தெரியாது. ஆகவே இவ்வகை உணவு பாதுகாப்பானது என்ற கூற்றை ஒப்புக்கொள்ள முடியாது. மான்சான்டோ போன்ற முன்னணி நிறுவனம்கூட, “மபொ உணவுகளை நீண்டகாலம் உண்பதன் விளைவுகளைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்கள் விளைபொருள்களைப் பாதுகாப்புக்கென மனிதர்கள்மீது ஒருபோதும் சோதித்துப் பார்த்ததில்லை” என்று ஒப்புக்கொள்கிறது.
தொழில்நிறுவனங்கள் அபாயங்கள் இல்லை என்று கூறினாலும், இவ்வளவு சிக்கலான ஆபத்துகளும், ஏதேனும் தவறாகப் போனால் யார் பொறுப்பு என்னும் கேள்வியும் எழுவதால் காப்பீட்டுக்கழகங்கள் தொழிலைக் காப்பீடு செய்வதற்கான செலவைக் கணிக்க முடியாமல் திணறுகின்றன.
எந்த மபொ உணவிலும் மரபணுக்களைத் தாறுமாறாக மாற்றுவதே முன்கணிக்க இயலாத விளைவுகளைக் கொண்டதுதான். எந்த அபயாகரமான பொருளையும் கண்டு பிடிக்க முழுமையாக நம்பத்தகுந்த முறை எதுவும் இப்போது கிடையாது.
மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்கும் இப்போதுள்ள முறைகள் மிகவும் செலவு பிடிப்பவை, காலம் எடுத்துக்கொள்பவை. அப்படியும் அவையும்கூட, சந்தையில் புதிதாகப் புழக்கத்துக்கு வரும் மருந்துகளில் 13% அளவு ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இம்மாதிரிச் செலவுமிகுந்த நீண்டகால சோதனைகளைத் தவிர்க்க, உயிர்த்தொழில் நுட்பப் பெருந்தொழில், மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளைப் பாரம்பரிய வளர்ப்புமுறையின் ஒரு மாறுபாடுதான் மரபணுப் பொறியியல் என்று நம்பவைத்துள்ளது.
வேடிக்கை என்ன என்றால், ஒழுங்குபடுத்தும் அமைப்புகளே விளைபொருள்களைச் சோதிக்கவும் மதிப்பிடவும் மேற்கண்ட உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களைத்தான் சார்ந்துள்ளன.
நீதிபதியே தீர்ப்புச் சொல்லக் குற்றவாளியை நம்பியிருக்கும் நிலைதான்!
அரசாங்கத்தின் அமைப்புகளிலுள்ள விஞ்ஞானிகளுக்கு இவை எல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் அரசாங்கத்துக்கு பயந்தோ, பெரிய குழுமங்களிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைகளுக்கு ஆசைப்பட்டோ அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அணுவின் ஆபத்து தெரிந்தும் கூடங்குளங்களை வரவேற்கும் விஞ்ஞானிகள் போலத்தான். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் பொறுக்கினால் போதும். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் மபொ நஞ்சுகள் எல்லார் உடலிலும் கலந்தால் யாரும் விளைவுகளைத் தவிர்க்க இயலாது. பணமுள்ளவர்கள் லஞ்சம் கொடுத்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை வளரும் நாடுகளின் அரசாங்கங்கள், இம்மாதிரி உணவை உண்டு மக்கள் தாங்களாகவே தங்கள் தொகையைக் குறைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்களோ என்றும் நினைக்கவேண்டியுள்ளது.
(அடுத்த வாரம் இக்கட்டுரையின் இறுதிப்பகுதி)
—–
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் (முன் கட்டுரையின் தொடர்ச்சி)”