மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் – கட்டுரையின் இறுதிப்பகுதி

ஆச்சாரி

Jan 25, 2014

மரபணுத் தொழில் நுட்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிறுவனங்களே தங்கள் சோதனைகளுக்கு அத்தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆய்வகங்களைச் சார்ந்துள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். அந்த நிறுவனங்கள் மிக மேலோட்டமாகத்தான் சோதனைகளை நிகழ்த்துகின்றன. மனித உயிரின் மாண்பு என்பது அந்நிறுவனங்கள் அறியாதது. அவை அறிந்ததெல்லாம் காசு பார்ப்பது ஒன்றே.

நிறுவனங்களின் மேலோட்டமான சோதிப்பு முறைகளுக்கு உதாரணங்கள்:

மபொ உருளைக்கிழங்கு: Bt நஞ்சினைத் தன் மபொ உருளைக்கிழங்கில் மான் சாண்டோ சோதித்தது ஒரு மேலோட்டத்தன்மைக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த உருளைக்கிழங்கு பலபேருக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியது. பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உருளைக் கிழங்கிலிருந்து போதிய அளவு நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்று குழுமம் என்று சாக்குக் கூறியது. ஆகவே Bt மரபணுவை E.கோலை கிருமிகளில் புகுத்தினார்கள். இந்தக் கிருமிகளிலிருந்து வெளிப்பட்ட நஞ்சினைத் தனிமைப்படுத்திச் சோதனைகளில் பயன்படுத்தினார்கள். இந்த நஞ்சு, குறிப்பாக ஒவ்வாமைகளுக்குக் காரணமாக அமையும் தன்மையில் மபொ உருளைக்கிழங்கில் வெளியாகும் அதே நஞ்சாக இருக்க வாய்ப்பில்லை.

பூச்சித்தடுப்புச் சோளம்: (Bt சோளம் என்று சொல்லப்படுவது) மனிதர் உணவுக்கானது. நோவார்ட்டிஸ் நடத்திய உணவுச்சோதனைகள் இந்தச் சோளத்தைப் பயன்படுத்திச் செய்யப்படவில்லை. இதற்கும் ஒரு மாற்று ஏற்பாடுதான். (Bt நஞ்சு, E.கோலையிலிருந்தே பெறப்பட்டது.) இந்தச் சோளத்தைச் சரியாகவும் சோதிக்கவில்லை. மனிதருக்கு பதிலாக எலிகள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்கு இந்த மபொ சோளம் விஷமூட்டும் அளவுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்ற சாத்தியத்தை இந்தக் குழுமம் அறவே புறக்கணித்துவிட்டது.

நட்பான, இலக்கு நிர்ணயிக்காத பூச்சிகளின்மீது Bt சோளத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மோசமானமுறையில் அமைக்கப்பட்டிருப்பது, தனியார் உளவுநிறுவனம் ஒன்றினால் கண்டறியப்பட்டது. யதார்த்தமான முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. பூச்சிகள் அந்த நஞ்சுகளை உண்டனவா என்பதே ஐயத்திற்கிடமானது. இந்நிலையில் எந்த எதிரான விளைவுகளும் அறியப்பட வாய்ப்பில்லை. குழுமத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுச் சங்கிலி எதிர்வினைகளையும் புறக்கணித்துவிட்டார்கள், வேதி நஞ்சுகளைச் சோதிக்கப் போதுமான முறைகளை அவர்கள் கையாளவில்லை.

மான்சாண்டோவின் rBGH: பசுக்கள் மிகுதியாகப் பால் கொடுக்கவேண்டி அவற்றின் உடலில் இந்த மறுசேர்க்கைக் கால்நடை ஹார்மோன் ஊசியாகப் போடப்பட்டது. இதற்கான சோதனை, முப்பது எலிகளின்மீது 90 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. (வழக்கமாக, மனிதர்கள் பயன்பாட்டுக்கான புதிய மருந்தினைக் குறைந்தபட்சம் பல நூற்றுக்கணக்கான எலிகள்மீது இரண்டு ஆண்டுகளேனும் நடத்துவதுதான் முறை.)

ஆனால் அந்தக் குறைந்த நாட்களிலேயே மருந்து எலிகளுக்குத் தீங்குசெய்வது குழுமத்திற்குத் தெரிந்துவிட்டது. எலிகளில் எதிர்ச்செயல்செல்கள், தைராயிடு கழலைகள், புரோஸ்டேட் சுரப்பி பாதிப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. பசுக்களிலும் 20க்கு மேற்பட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புத் தெரிந்தது. தொற்றுகள் அவற்றிடையே மிகுதியாகப் பரவுதல், குறிப்பாகப் பால்மடிகளில் தொற்று, சினைப்பைகளில் குழிப்புண்கள், கருப்பையிலும் செரிப்பு மண்டலத்திலும் ஒழுங்கீனங்கள், உறுப்புகளில் காயம், கால்களில் கோளாறுகள், கன்றுகள் பிறப்புக் குறைபாடு ஆகியவை ஏற்பட்டன. தொற்றுக்கு ஆட்பட்ட பசுக்களின் பாலில் அதிக சீழ், மிகவலுவான கிருமிகள், இரத்தம் ஆகியவை காணப்பட்டன. மற்ற முடிவுகள்: பாலின் சுவை மாற்றம், வீட்டில் வைத்திருக்கும் கால அளவில் குறைபாடு, அதிகக் கொழுப்பு, குறைந்த புரோட்டீன் அளவு போன்றவை. இவ்வளவு குறைகள் இருந்தும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(FDA), rBGHக்கு அனுமதி வழங்கியது. இதனால் தொற்றுகளைத் தடுக்க அதிக அளவில் எதிருயிரி மருந்துகள் தேவையாயின. பாலில் அனுமதிக்கப்படும் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு (10000%) FDA உயர்த்தியது.

அமெரிக்க FDAவுக்கு மான்சாண்டோ அளித்த ஆய்வு, சுதந்திரமான அறிவியல் மதிப்பீட்டுக்கு அளிக்கப்படவே இல்லை. மான்சாண்டோவின் மதிப்பு சரிப்படுத்த இயலாத அளவுக்குக் கெட்டுப்போகும் என்ற கருத்தினால் இதுவரை FDA ஆய்வின் அடிப்படைத் தகவல்களை மதிப்பிட அனுமதி வழங்கவே இல்லை.

ரவுண்ட்அப் ரெடி சோயா அவரை (RRS): மீன்களுக்குப் பத்துவார அளவு வரை உணவாக அளிக்கப்பட்ட பின்பு, மான்சாண்டோவின் RRS மனிதர்களுக்குத் தகுதியானது என்று சான்று அளிக்கப்பட்டுவிட்டது. சிறிய எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள், எலிகள், பசுக்களுக்கு சிற்றளவுச் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதிக்கப்பட்ட RRSக்கு ரவுண்ட்அப் களைக்கொல்லி தெளிக்கப்படவே இல்லை. எனவே அதில் பாதிக்கக்கூடிய வேதிப்பொருளான கிளைபோசேட்டின் அளவு மிகக்குறைவாகவே இருந்திருக்கும். முறையான நஞ்சுச் சோதனைகளாக இவை ஏற்கப்படாது என்று மான்சாண்டோவிற்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இதற்கு உடல் நலத்திற்கு ஏதுவான சோதனை என்று குழுமம் பெயர் இட்டது. மேலும் பல விடுபாடுகளும் யூகங்களும் இருந்தன. புதிய புரோட்டீன்கள் பாலில் இருப்பது புறக்கணிக்கப்பட்டது. விவாதிக்கவே படவில்லை. ஒவ்வாமையை உண்டாக்கும் தெரிந்த புரோட்டீன்கள் மட்டுமே சோதிக்கப்பட்டன. சாதாரணப் பசுக்கள், கோழிக்குஞ்சுகளோடு ஒப்பிட்டால், சோதிக்கப்பட்ட சிறிய அளவிலான பசுக்களின் பாலில் அதிகக் கொழுப்பும், கோழிக்குஞ்சுகளுக்கு அதிக மாமிசமும் காணப்பட்டன. ஏன் என்று சோதிக்க மேலும் சோதனை எதுவும் நடத்தப்படவே இல்லை. RRSஇன் சுவை நன்றாக இருந்ததால், அது மிக அதிகமாக உண்ணப்பட் டதுதான் காரணம் என்று மான்சாண்டோ கூறிவிட்டது. அதிக எண்ணிக் கையிலான பிராணிகளை வைத்துச் சோதித்திருந்தால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்திருக்கக்கூடும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரஅமைப்புகள் இத்தகைய ஆய்வுகளை முதலில் எவ்விதம் ஒப்புக்கொண்டன என்பதே விந்தையானது. இப்படிப்பட்ட புதிய உற்பத்திப் பொருள்களை நீண்டகாலம் மனிதர்களுக்குக் குறைந்த அளவில் உணவாக அளித்துச் சோதிப்பது ஒன்றே உணவுப்பாதுகாப்பினைத் தகுந்த அளவு உறுதிப்படுத்த ஒரே வழி.

(குறிப்பு: 1998 மே மாதத்தில் அமெரிக்காவில் அறிவியலாளர்கள், மதத் தலைவர்கள், உடல்நல அதிகாரிகள், நுகர்வோர், உணவுசமைப்போர் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஒன்று FDAவின்மீது வழக்குத் தொடர்ந்தது என்பதில் வியப்பில்லை. கடுமையான சோதனைகள் இன்றியும், அடையாளப்படுத்தப் படாமலும் மபொ உணவுகளைச் சந்தையில் விடுவதன் வாயிலாக FDA உலகம் முழுவதுமுள்ள பொதுமக்கள் நலத்தைப் புறக்கணிக்கிறது, மத சுதந்திரத்தைக் குலைக்கிறது என்பது அதன் சாரம்.

போதுமான பாதுகாப்பு மதிப்பீடுகள் இல்லாததைப் பற்றிக் குழுமத்தின் சொந்த அறிவியலாளர்கள், நலத்திறனாளர்கள் ஆகியோரின் பரவலான எதிர்ப்பையும் எஃப்டிஏ புறக்கணித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுமுகமான ஆவணங்க ளையும் நினைவுக்குறிப்புகளையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியது.)

மருந்துகளிலும், பாரம்பரிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் நமக்கு மரபணுப் பொறியியல் உதவ முடியுமா?

மரபணுநகலெடுத்தல் (குளோனிங்) உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகள் மரபணுப் பொறியியலைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் வேறு முரணான பிரச்சினைகள் எழுகின்றன. இங்கு மபொ உணவுகள் பற்றி மட்டுமே பார்ப்பதால் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இங்கு எழுதஇயலாது. ஆயினும், அதே தவறான தொழில்உத்திகள், கருதுகோள்கள் அடிப்படையில்தான் ஆய்வு அமைந்திருப்பதால், விவசாயத்தில் எழும் அதே பிரச்சினைகளே மருத்துவத்திலும் எழுகின்றன.

நாம் மபொ உணவுகளை உண்கிறோமா? இந்தியாவில் மபொ உணவுகள் விற்கப் படுகின்றனவா?

——————–

மரபணுரீதியில் கெடுக்கப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் உணவுகள்

சீஸ் ஸ்ப்ரெட்-”கிரீம் சீஸ்”

கிரீம்டு ஹனி-”குழந்தைகளுக்கு ஏற்றது”

டெய்ரி மில்க்-சாக்கலேட்

பேபி பிஸ்கட்-”தனியாகக் குழந்தைகளுக்கெனச் செய்யப்பட்டது”

கார்ன் ஆயில்

வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்

குழந்தைகளுக்கான செயற்கைப் பால்

இன்னும் பல.

——————————

மபொ சோயா அவரை (களைக்கொல்லி எதிர்ப்பு) விற்கப்படுகிறது. மற்றசில தாவர வகைகளும்-சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவை விற்கப்படுகின்றன. இவை இயல்பாக விளைந்து வந்த உணவுகள் அல்ல, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பெருங்கடைகளில் கிடைக்கின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

வேகஉணவுத் தொடர்கள், உணவுக்கடைகள் போன்றவை பொதுவாக மற்றொரு ஆதாரம். மெக்டொனால்டு கடைகளின் பர்கர் பன்களிலும், கேஎஃப்சியின் பன்களிலும் ரவுண்ட்அப் ரெடி சோயா பீன்ஸ் இருப்பதை கிரீன்பீஸ் நிறுவனம் கண்டறிந்தது. (இந்த நிறுவனத்தின் சிக்கன்65 விளம்பரங்களைப் பெருநகரங் களில்-ரூ.25க்கு இது கிடைக்கிறதாம்-எங்கும் காணலாம்.)

அடையாளமிடப்படாததால், குறித்த ஒரு பொருள் மபொவா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. சோயா அவரையைப் பொறுத்தமட்டில், இயற்கையான சோயாபீன்ஸ் உடன் செயற்கை உணவைத் தயாரிப்பாளர்கள் கலந்துவிடுவதால் உங்களால் தனியாக அதைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மபொ உணவுகளின் வகைகள்

பொதுவாக மபொ உணவுகளில் மூன்று வகைகள் உள்ளன:

ஃ புதிதாக வரும் உணவு அல்லது இயற்கைவிளைச்சல்களிலிருந்து மாறுபடும் உணவு. உதாரணமாக, வைட்டமின் ஏ மிகுதிப்படுத்திய அரிசி அல்லது உறைவுஎதிர்ப்பு ஸ்ட்ராபெரிப் பழங்கள்.

ஃ ஓரளவு பதப்படுத்தலுக்கு ஆளாகிய, சோயா பால் போன்ற மபொ உணவுகள் அல்லது உணவுப்பகுதிகள். அவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏ உள்ளது.

ஃ கடைசியாக, மபொ தாவரங்களிலிருந்து பெறப்பட்ட, மிகுதியான பதப்படுத்தலுக்கு ஆளான உணவுகள். உதாரணம், மபொ கரும்பிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை. இவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏவின் அளவு இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது கடினம்.

மபொ உணவைத் தவிர்ப்பது எப்படி?

மபொ உணவுகளைத் தவிர்ப்பது மிகக்கடினமாகி வருகிறது. எதிலும் அடையா ளமிடுவதே கிடையாது என்பதால், நீங்கள் மபொ உணவு எது என்றே கண்டறிய வழியில்லை. ஆகவே வாங்குவதா தவிர்ப்பதா என்பதையும் முடிவெடுக்க முடியாது. மிகச்சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கின்ற மபொ சோயாவை எடுத்துக்கொள்ளுங்கள். வடஇந்தியர்கள் அதிக அளவு சோயா பீன்ஸை உண்கி றார்கள். தமிழ்நாட்டிலும் இப்போது சோயாவை உண்பது அதிகரித்து வருகிறது. பலவேறு சோயா பீன்ஸ் உணவுவகைகளையும் தயாரிப்பு முறைகளையும் தயாரிக்கும் குழுமங்களே அறிமுகப்படுத்துகின்றன. மேற்கிலும்கூட சோயா எண்ணெய், சோயா மாவு, சோயா லெசிதின் போன்ற தயாரிப்புகள் உட்பட அவை எல்லாப் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் 60%க்குக் குறையாமல் உள்ளன. பெரிய முதலீட்டாளர்களின் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம், தானியங்கள், பிஸ்கட்டுகள், குழந்தை உணவு, மரக்கறி பர்கர்கள் முதலியவற்றிலிருந்து சமையல் எண்ணெய் வரை மபொ உணவுகள் தான்.

சோளம், கனோலா போன்றவை சமையல் எண்ணெயிலும் மார்கரீனிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மபொ உணவுகள். தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்க்வாஷ் போன்றவை பிற பொருள்கள்.

உணவுச்சேர்க்கைகளுக்கும் (அமிலேஸ், கேடலேஸ், லாக்டேஸ் போன்ற) என்சைம்களுக்கும் உணவுத்தயாரிப்புத் தொழிலகங்களும் பரவலான பொருள்களைத் தயாரிக்க மபொ உணவுகளையே நம்பியிருக்கின்றன. இவற்றில் ரொட்டி, குழந்தை உணவுகள், சர்க்கரை, கார்ன்சிரப், பழச்சாறுகள், ரொட்டிசோடா, மென்பானங்கள் போன்றவை அடங்கும். இப்போது பாலடைகளைத் தயாரிக்க உதவும் ரென்னெட்டுக்கு மபொ பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் கடைகளில் பாலடை (சீஸ்) கிடைக்காது. இப்போது எங்குபார்த்தாலும் பாலடை கிடைக்கிறது. மபொதான்! நம் உயர்குடி யினர் மொழியிலும், தொலைக்காட்சி மொழியிலும் இது ‘ப(ன்)னீர்’! இப்போது கடைகளில் பன்னீர் என்றால் வாசனைத் தெளிப்பு நீர் கிடைக்காது. பாலடையைத்தான் கொடுப்பார்கள். அந்த அளவு பழக்கத்துக்கு வந்துவிட்டது.

‘பனீர்’ தயாரிப்பில் பக்கவிளைவுகளாகக் கிடைப்பன, சாக்கலேட், மார்கரீன் போன்றவற்றைத் தயாரிக்கப் பயனாகின்றன. ரொட்டி, பரப்பிகள், உணவுச் சேர்க்கைகள், பீட்சா, பீர், ஒயின் போன்றவற்றைத் தயாரிக்க மபொ யீஸ்டு பயன்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கான செயற்கைச் சர்க்கரைகளும் மபொ தயாரிப்புகளே.

அடையாளமிடுதல் இல்லை ஆகையால், நீங்கள் நேரடியாக விளைந்துவரும் உணவுகளை உண்டாலொழிய, மபொ உணவுகளைத் தவிர்க்க இயலாது. சலவைப் பொருள்கள், அழகுசாதனங்கள், சோப்பு, ஷாம்பு, பபிள்பாத் போன்ற தனிமனித பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றிலும் மபொ கலப்புகளை உயிர்த் தொழில் நுட்பத் தொழிலகங்கள் கலந்துவிட்டன. கால்நடைகள், மீன் போன்றவை உண்ணும் பொருள்களிலும் மபொ தயாரிப்புகள் மிகுதியாகக் கலந்து விட்டன. இவை கடைசியாக நமது உணவுத்தட்டுகளுக்குத்தான் வந்து சேர்கின்றன.

நான்-ஜிஎம்ஓ, ஜிஎம்ஓ-ஃப்ரீ என்ற வகைகளுக்கான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். (ஜிஎம்ஓ என்றால் ஜெனடிகலி மாடிஃபைடு ஆர்கானிம்-மரபணு மாற்றப் பட்ட உயிரி என்பது பொருள்). நான்ஜிஎம்ஓ என்றால் குறிப்பிட்ட அளவைவிட (1% என்று கொள்ளுங்கள்) அப்பொருளில் கலப்பு குறைவு என்று பொருள். ஜிஎம்ஓஃப்ரீ என்றால் கலப்பு இல்லவே இல்லை என்று பொருள்.

(குறிப்பு: அமெரிக்காவில் 2000இல் ஏறத்தாழ 5 கோடி ஏக்கரில் மபொ பயிர்கள் இடப்பட்டன. இப்போது அயல்மகரந்தச் சேர்க்கையாலும், அளிப்புத்தொடரிலுள்ள கலப்பினாலும், அந்த நாட்டில் மபொ உயிரிக் கலப்பற்ற உணவு என்பதைப் பிரித்துக்கூறவே முடியாது என்கிறார்கள்.)

உணவுப் பகுதிப்பொருள்களிலும் உணவுப்பொருள்களிலும மபொ கலப்புகள்

இயற்கையாக விளைந்தது என்று வெளிப்படையாகக் கூறாமல், கீழே கூறப்பட்ட பகுதிப்பொருள்கள் பொருளின் அடையாளஅட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் ஒருவேளை மபொ கலப்பு இருக்கலாம். வெறுமனே “மாற்றப்பட்ட” ஸ்டார்ச் என்று குறிப்பிட்டிருந்தால், அது மபொ என்று பொருளல்ல. அதற்கு அப்பொருள் வேதிமுறை அல்லது வெப்பம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதே அர்த்தம். (ஆனால் அந்த ஸ்டார்ச் ஒருவேளை மபொ சோளத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.)

பின்வரும் பொருள்களில் மபொ சேர்க்கை இருக்கலாம்

முதல் வகை

* சோயாஅவரை: சோயா மாவு, சோயா எண்ணெய், சோயா பானங்கள், தாவர அல்லது சோயா சாறு, சோயா புரோட்டீன், சோயா தனிப்பிரித்த புரோட்டீன், ஹைட்ரலைஸ்டு தாவர புரோட்டீன். மபொ சோயா சார்புகளைப் பெற்ற பொருள்கள்: வைட்டமின் ஈ, தானியங்கள், மரக்கறி பர்கர்கள், சாஸேஜ்கள், சோயா சாஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம், உறைதயிர், குழந்தை உணவு, சாஸ்கள், புரோட்டீன் பவுடர், மார்கரீன், சோயா சீஸ், நொறுக்குத்தீனிகள், ரொட்டிகள், குக்கிகள், சாக்கலேட், இனிப் புகள், பொரித்த உணவுகள், மேம்டுத்தப்பட்ட மாவுகளும் பேஸ்டாக்களும்.

* மக்காச்சோளம் அல்லது சோளம்: சோள மாவு, சோள ஸ்டார்ச், சோள எண்ணெய், சோளச் செயற்கைச் சர்க்கரை, சோள சிரப். மபொ சோளப் பொருள்களைக் கொண்ட உற்பத்திப் பொருள்களான  வைட்டமின் சி, சிப்ஸ், மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குழந்தை உணவுகள், சாலட் மேலிடுபொருள்கள், தக்காளி சாஸ்கள், ரொட்டிகள், பருப்புகள், ரொட்டி சோடா, ஆல்கஹால், வனிலா, மார்கரீன், சோயா சாஸ், பொரிக் கப்பட்ட உணவுகள், மாவுச்சர்க்கரை, மேம்படுத்தப்பட்ட மாவுகள், பேஸ்டாக்கள்.

* கனோலா: எண்ணெய். மபொ கனோலாப் பொருள்களைக் கொண்டவை-சிப்ஸ், சாலட் மேலிடுபொருள்கள், குக்கிகள், மார்கரீன், சோயா பாலடை, பொரித்த உணவுகள்,

* பருத்தி: எண்ணெய். மபொ பருத்தி அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை:

சிப்ஸ், கடலை எண்ணெய், நொறுக்குகள், குக்கிகள்.

* உருளைக்கிழங்கு: மாவு, உருளைக்கிழங்கு ஸ்டார்ச். மபொ உருளைக்கிழங்கு அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை-அடையாளமிடாத பதப்படுத்திய உணவுகள் (பொரித்தவை, பிசைந்தவை, சுட்டவை, கலந்தவை போன்றவை), சிப்ஸ், நீரகற்றிய உருளைக்கிழங்கு மென்நறுக்குகள், சூப்புகள்.

* தக்காளிப் பொருள்கள்: மபொ தக்காளியை அல்லது தக்காளிப் பொருள்களை உடையவை. சாஸ்கள், பீட்சா, லாசேன்.

*  பசுக்களிலிருந்து பெற்ற பால் பொருள்கள்: கால்நடை வளர்ச்சிக்கான ஹார் மோன்களைக் கொண்டவை (அமெரிக்காவில் rBGH எனப்படுபவை)-பால், பாலடை, வெண்ணெய், மோர், புளிப்புகிரீம், யோகர்ட் (தயிர்), பிற பதப்படுத்திய பொருள்கள்.

* பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள்: பல நாடுகளில், பிராணிகளுக்கான உணவுகளில் மபொ பகுதிப்பொருள்கள் சேர்ந்திருப்பதால், பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள் அலலது அல்லது உப பொருள்கள் யாவுமே பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவில், மபொ வளர்ச்சி ஹார்மோன்கள் (ஏறத்தாழ 6 வகைகள்) கால்நடைகளின் வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியில் இதன் எச்சங்கள் காணப்படும்.

இரண்டாம் வகை

மபொ மூலங்களிலிருந்து தயாரித்தவற்றைக் கொண்ட சேர்க்கைகளும் பதப்படுத்தும் உதவிப்பொருள்களும்

சோயா லெசிதின்/லெசிதின்(E322), காரமெல் நிறப்பொருள்(E150), ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி2), கைமோசின் போன்ற என்சைம்கள் (மரக்கறிப் பாலடை தயாரிக்க உதவும் மபொ என்சைம்), வெள்ளைச் சர்க்கரை செய்ய உதவும் ஆல்ஃபா அமிலேஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்கள், சத்துமிக்க கார்போஹைட்ரேட் இனிப்பாக்குபொருள்கள் (கார்ன் சிரப்), அடுமனைத் தயாரிப்புகளைப் புத்தம்புதிதாக வைக்கப்பயன்படும் நோவாமைல்(TM), புல்லுலானேஸ் (உயர்அளவு ஃப்ரக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் தயாரிக்க உதவுவது). விற்பனைப் பொருள்களின் லேபில்களில் என்சைம்களைக் குறிப்பிடத் தேவையில்லை-காரணம், அவை பீர்கள், ஒயின்கள், பழச்சாறுகள், சர்க்கரை, எண்ணெய்கள், பால்பொருள்கள், அடுமனை உணவுகள் போன்றவற்றில் சேர்க்கப்பட்டாலும் உணவுப் பொருள்களாகக் கருதப்படுவதில்லை.

மூன்றாம் வகை

மபொ மூலங்களிலிருந்து பெறப்பட்டாலும், பெருமளவு மபொ சேர்க்கைகளைப் பதப்படுத்துதல் நீக்கிவிடும் தன்மை பெற்றவை

சோயா எண்ணெய், தாவர எண்ணெய், ஹைட்ரஜனேற்றம் செய்த தாவர எண்ணெய்,

தாவரக் கொழுப்பு, மாற்றப்பட்ட சோள ஸ்டார்ச், குளூகோஸ் சிரப், சோளச்சர்க்கரை, சோள சிரப், டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்.

மபொ உணவுகளை அடையாளப்படுத்த வேண்டுமா?

கட்டாயம். நமது உணவு மபொ வா இல்லையா என்பதை அறியும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பும் உணவுப்பொருளைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை. அடையாளப்படுத்துதல் அறியும் உரிமையை காக்கிறது. வெறும் சுவைக்காகவோ விருப்பத்திற்காகவோ மட்டுமின்றி, உடல்நலத்துக்காகவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், பிற நெடுங்கால நோய்கள் உள்ளவர்கள் மட்டுமல்ல, எடைகுறைப்பவர்கள், குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்கள், விளையாட்டுவீரர்கள், மரக்கறிஉணவை உண்பவர்கள் போன்றவரும் தங்கள் உணவு களைப் பற்றிப் பெரிதும் கவலைப்படுவார்கள்.

உணவு ஒவ்வாமை உடையவர்களும் அவ்வாறே. வேர்க்கடலை, பிற கொட்டைகள், ஷெல்மீன், பால், பால்பொருள்கள் போன்றவை ஒவ்வாமைக்குக் காரணமாகலாம். தினவு, தடிமன்கள் முதலாக மூச்சிறைப்பு, வேற்றுப்பொருள்களால் ஏற்படும் ஒவ் வாமை அதிர்ச்சிகள் உட்பட இவற்றின் எதிர்வினை உடனடியானது.

மரபணுப் பொறியியல் உணவுகளில் ஆபத்தானவைகளைச் சேர்ப்பதால், உடல்நல முள்ளவர்களும் நீண்டகால அளவில் மபொ உணவுகளை உண்ணும்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மபொ பற்றி-குறிப்பாகத் தாறுமாறாகப் புதிய புரோட்டீன்களை உண்டாக்குவது பற்றி இன்னமும் மிகப்பெரிய அளவிலான அறிவியல் நிச்சயமின்மை காணப்படுகிறது. இவற்றின் எதிர்பாராத விளைவுகளைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது, டிரிப்டோஃபனில் கண்டது போல, எந்த விஞ்ஞானியும் எதிர்பாராத விளைவு ஏதும் 100% ஏற்படாது என்று உறுதிகூற இயலாது. விளைவுகள் வெளிப்படச் சில பத்தாண்டுகள்கூட ஆகலாம். மேலும் அடையாளப்படுத்தல் இன்றி, சுகாதார அதிகாரிகள், பிரச்சினைகளின் மூலத்தைத் தேடியறிய முடியாது.

கடைசியாக, நுகர்வோர் பாதுகாப்புக்காக அல்லாமல், ஒழுக்கவியல் காரணங்களுக் காகவும் பலர் மபொ உணவுகளைத் தவிர்க்க விரும்பலாம். அவர்கள் இந்தச் சிந்தனைக்கும் அல்லது முழுத் தொழிலுக்குமே ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும்.

அடையாளப்படுத்தலுக்கும் மேலாக இதில் பிரச்சினைகள் உண்டா?

தகவல் தராமை நுகர்வோர் சரியான தேர்ந்தெடுப்பைச் செய்கின்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகிறது. அடையாளமிடுதல் இன்றி நுகர்வோர்கள் அறியாமையில் தள்ளப்படுவது மட்டுமல்ல, ஏதேனும் தவறாகப் போகும் நிலையில், மூலங்களை அல்லது காரணங்களைக் கண்டறிவதும் மிகக் கடினமாகிவிடும். டிரிப்டோஃபன் விஷயத்தில், புதிய விசித்திர நோயின் மூலத்தையும் உற்பத்தியாளரையும் அறிவதில் அமெரிக்க அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்குள் குழுமம் தன் சேமிப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டதால் எவ்விதச் சோதனையும் செய்ய இயலாமல் போயிற்று.

அடையாளமிடுதல் இன்மை முறையான வாணிகமும் அல்ல. நுகர்வோரைத் தவறான வாங்குதலுக்குட்படுத்தல், ஏமாற்றுதல் இதில் உள்ளது. நுகர்வோர்கள் அடையாளமிடு தலை அமைப்புகள் வாயிலாகக் கேட்கும்போது, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் உரிமம்பெறும் அலுவலகத்திற்குத் தங்கள் பொருள்கள் இயற்கைப் பொருள்கள் போன்றவை என்று கூறியவாறு உரிமம் பெற ஓடுவதைப் பார்த்தாலே இது தெளிவாகும்.

நமது மத மற்றும் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் மபொ உணவுகளுக்கும் என்ன தொடர்பு?

நிறைய இருக்கிறது. இந்தியா, வெவ்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் கொண்ட பலவேறு இனத்தவர் வாழும் நாடு. ஹராம் அல்லது தடைசெய்யப்பட்ட உணவு முஸ் லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும். அறியாத அல்லது அடையாளமிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்திய மபொ உணவுகளின் இயல்பு (ஹலால்) பற்றி இயல்பாகவே அவர்கள் கவலைப்படுவர். குறிப்பாக இது வரை உணவாகப் பயன்படுத்தப்படாதவை பற்றிக் கவலை இருக்கும். பன்றியின் மரபணுக்களைப் பயன்படுத்தியவைகளையும், இஸ்லாமிய முறைப்படி கொல்லப்படாத பிற பிராணிகளையும் அவர்கள் உண்ண விரும்பமாட்டார்கள்.

இந்துக்களும் பௌத்தர்களும்-குறிப்பாக மரக்கறி உணவு உண்பவரும், மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் விலங்கு மரபணுக்கள் கொண்ட உணவுகளைப் பற்றிக் கவலைப்படுவார்கள். மரக்கறி உணவுப்பழக்கமுள்ளவர்கள், விலங்குகள் அல்லது மனித மரபணுக்களைக் கொண்ட எந்த உணவையும் எதிர்ப்பார்கள்.

வலுவான மத நம்பிக்கை உடையவர்கள், கடவுளின் படைப்புக்கு மரபணுப பொறியியல் மாறானது என்ற அடிப்படையில் மபொ உணவுகளை எதிர்ப்பார்கள். உயிர்ப் பிராணிகளுடைய வாழ்வின் பாரம்பரிய அமைப்புகளை மாற்றுவதும் கலப்பதும் கடவுளின் ஆட்சிக்கும் அவரது தெய்விகத் திட்டத்திற்கும் மாறானது என்று கருதுவார்கள்.

உலகத்தில் வறுமையையும் பசியையும் மாற்றித் தங்கள் மபொ பயிர்கள் உணவளிக்கும் என்ற உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களின் பேச்சை நாம் நம்பமுடியுமா?

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் வணிக நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது ஒரு மிகப்பெரிய வாணிகம். 1999இல் மபொ பயிர்களுக்கு ஜப்பான், கிழக்கு ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தடைவிதித்தபோது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு ஒரு பில்லியன் (நூறுகோடி) டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விவசாயத் தொழிலகங்கள் கணக்கிட்டன. ஹார்மோன் பயன்படுத்திய அமெரிக்க மாட்டிறைச் சிக்குக் கிழக்குஐரோப்பிய நாடுகள் இறக்குமதித் தடைவிதித்ததால் மட்டும் 20 முதல் 30 கோடி டாலர் இழப்பு ஓராண்டில் அமெரிக்காவுக்கு ஏற்படுகிறது.

ஆகவே நுகர்வோருக்கு மபொ உணவுகளினால் விளையுமென எதிர்பார்க்கும் நன்மை நிஜமாக இதுவரை உண்டாகவில்லை. இதுபற்றி மிகையாகச் சொல்லப்படுகிறது. ஆபத்துகளும் எதிர்மாறான விளைவுகளும் வெளியிடப்படுவதில்லை. ஏழை நாடுகளில் பசியையும் பஞ்சத்தையும் போக்க, அதிகரித்துவரும் உலக மக்கள் தொகையைக் காப்பாற்ற, நமக்கு மரபணுப் பொறியியல் தேவை என்பது புதிதாக இக்குழுமங்கள் கண்டுபிடித்த வாதம்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான உணவைப்போல இப்போதே ஒன்றரை மடங்கு இருக்கிறது. உலக மக்கள் தொகையின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற, மபொ அற்ற உணவுகளே போதுமானவை என்று 2000 ஜூலையின் அறிக்கையில் உணவு விவசாய நிறுவனம் கூறியிருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைந்த மக்களுக்கென அதிகச் சத்துவாய்ந்த பயிர்களை (வைட்டமின் ஏ மேம்படுத்தப்பட்ட அரிசி போன்றவற்றை) உருவாக்குவதாக உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறினாலும், அவை யாருக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறதோ அவர்கள் அவற்றை வாங்கவும் இயலாது. இதற்குத் தீர்வு விவசாயத்துக்கு வெளியில் தான். (அதாவது ஏழைகளின் வருவாயைப் பெருக்குதல் போன்றவை). உணவு தானியங் களைக் கால்நடைகளுக்குத் தீனியாகக் கொடுத்தல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோல மபொ வளரும் நாடுகளுக்கு உதவ இயலுமா?

மாறாக, இருக்கும் பிரச்சினைகளை மரபணுப் பொறியியல் மேலும் மோசமாக்கவே முடியும். நிறுவனங்களின் வாக்குறுதி ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் முதல் உலகத்தின் உதவிக்கு அலையவும் அவர்களிடம் கடன்பெறவும் அவர்களைச் சார்ந்திருக்கவும் நேரிடும். மபொ பயிர்கள் “அதிநவீன” விவசாயத்தொழில் நிறுவனங்களுக்கானவை. வேதிப்பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்ற, ஒரேமுறை பயிர்செய்கின்ற, (மிக அதிகமான நீர், வேதியுரங்கள், களைக்கொல்லிகள் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்ற) பெரிய பண்ணைகளை வைத்திருக்கின்றவர்களுக்கானவை. வளரும் நாடுகளில் இவை சிறிய, குடும்ப விவசாயநிலங்களை வைத்திருப்பவர்களை பலியாக்கும். உணவுப்பயிர் வளர்ப்பது மேலும்மேலும் பெரிய நிறுவனங்களின் ஒற்றை மேலாண்மையின்கீழ் வருவதால், நிலமின்மை, ஏழ்மை ஆகியவற்றை மபொ அதிகரிக்கச் செய்யும்.

முக்கியமாக, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் தங்கள் விதைகளுக்கு உரிமம் வாங்கி விடுகின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தும் விவசாயிகள், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் செய்துவருவதுபோல, அந்த விதைகளை விற்பனை செய்யவோ, பிறரிடம் பரிமாறிக்கொள்ளவோ, அடுத்த ஆண்டுக்கெனச் சேமித்து வைக்கவோகூட முடியாது. இந்த விதைகளைப் பகுப்பாய்வு செய்யவோ இவற்றை ஆராய்ச்சிக்குட்படுத்தவோ முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குமேல், மான்சாண்டோ போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பக் கட்டணம் ஒன்றையும் வசூலிக்கின்றன. சோயா விதையின் 25கிலோ கொண்ட பை ஒன்றுக்கு ஆறரை டாலர் கட்டணம். (1998இல் இந்தக் கட்டணமே இக்குழுமத்திற்கு 200 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெற்றுத்தந்தது.)

ஒவ்வோராண்டும் இத்தகைய கட்டணம் செலுத்தி இந்த விதைகளை வாங்க மூன்றாம் உலக விவசாயிகளால் முடியுமா? தொன்றுதொட்டுத் தாங்கள் விதைகளைச் சேமித்து வைக்கும், பரிமாறிக் கொள்ளும் உரிமையை அவர்கள் விட்டுத்தரமுடியுமா? (அமெரிக்க விவசாயிகள் தங்கள் ஒப்பந்தங்களை முறித்ததற்காக மபொ நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன. உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் விதைத் திருட்டுச் செய்வ தாக ஆயிரக்கணக்கான வழக்குகள்.)

பயிர்கள் அழுகுவதைத் தடுக்கவும், அவற்றை நீண்டகாலம் சேமித்து வைக்கவும், அவற்றில் நோய்களைத் தடுக்கவும், பூச்சிவிழுவதைத் தடுக்கவும், அவற்றிற்கு நல்ல தோற்றத்தை அளிக்கவும் பெருங்குழுமங்கள் செய்த முயற்சிகள் யாவும் ஏற்றுமதிக்காரர்கள், வேதிவிவசாயக் குழுமங்கள், உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகள் ஆகி யோருக்குப் பயன்பட்டனவே தவிர, மூன்றாம் உலகத் தேவைகளுக்குப் பயன்படவேயில்லை. நிலநடுக்கோட்டு விரைவுப் பயிர்களுக்கு பதிலாக மாற்றுகளைப் பயிரிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் (சான்றாக, தென்னை, பாமாயில், வனில்லா, கோகோ) மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்குநாடுகளின் ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஊறுசெய்தன.

உண்மையில் மபொ தொழில் நுட்பம், உலகத்தின் செல்வத்தை மிகச்சில ஒற்றை யாதிக்கக் குழுமங்களுக்கே குவியச்செய்யும்.
உயிர்த்தொழில் நுட்பம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  

மரபணுத் தொழில் நுட்பத்தின்மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஈரடியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஒருபுறம் அது பொதுமக்கள் ஆரோக்கியம், பாது காப்புப் பற்றித் தன் அக்கறையினைத் தெரிவிக்கிறது; மறுபுறம் விவசாயத்திற்கு இரு பத்தோராம் நூற்றாண்டின் தேர்வாக உயிர்த்தொழில் நுட்பத்தை ஆதரிக்கிறது.

சர்வதேச அளவில் மலேசியாவின் நிலைப்பாடு உதாரணநிலையில் உள்ளது. உயிர்ப் பாதுகாப்பு பற்றிய கார்ட்டெக்னா உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது. உடல்நலம், சுற்றுச்சூழல் மீது உயிர்த்தொழில்நுட்பத்தின் கோளாறான விளைவுகளைக் குறைக்க இது ஒரு முன்வரைவாகும். கார்ட்டெக்னா ஒப்பந்த உடன்படிக்கை மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகளின் பயன்பாடு, இட மாற்றம், கையாளுகை, எடுத்துச்செல்லுதல், புகுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்து கிறது. இறக்குமதி செய்யும் நாடுகள் முழுஅளவு அறிவியல் ஆபத்துகள், இடர்ப்பாடு களின் நிச்சயின்மை பற்றித் தெரியாமல் இவற்றைத் தடைசெய்யவும் கட்டுப்படுத்த அனுமதிக்கவும் இவற்றுக்கு அடையாளமிடவும் அது வழிசெய்கிறது. ஜிஎம்ஓக்களை நிர்ப்பந்தமான தரநிர்ணயித்தலின் வாயிலாக நாடுகள் ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.

தேசிய விவசாயக் கொள்கை, விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கு உயிர்த் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கருவியாக நோக்குகிறது. இதனால் விளைச்சலை மேம்படுத்தவும், தாவரப்பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பினைக் குறைக்கவும், உழைப்பு மற்றும் நிலத்தின் விளைவை முன்னேறச்செய்யவும் நினைக்கிறது. கார்ட்டெக்னா உடன்பாடு 2003இல் அமுலுக்கு வந்தது.

கூட்டாக எஃப்ஏஓ-டபிள்யூஎச்ஓ உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைத்த நிபுணர் ஆலோசனையையே-அதாவது, பாரம்பரிய முறைகளால் வளர்க்கப்பட்ட இயற்கை உணவுகளுக்கு மபொ உணவு ஒப்பானது என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான வளரும் நாடுகளின் உடல்நல அமைச்சகங்கள் பின்பற்றுகின்றன.
உயிரியல் பலதரத்தன்மை பற்றிய அமைப்பு முன்வைத்துள்ள முன்னெச்சரிக்கைக் கொள்கையின் சார்பாக இந்நாடுகள் நின்றிருக்கலாம். நிச்சயின்மை இருக்கும்போது, அதாவது ஜிஎம்ஓக்களின் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருள்களின் பாதுகாப்பு பற்றிய தெளிவான சான்று கிடைக்கும்வரை, அவற்றின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் மறுப்பது என்பதுதான் அந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை.

இடர்க் கணிப்பு முறை :

நம் நாட்டில் பழங்கள், காய்கறிகள், நெல், சோயா, ஆர்க்கிடுகள் போன்ற துறைகளில் சோதனைகளுக்காகப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆய்வக மற்றும் களச்செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளும், உயிர்ப்பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் உருவாக் கப்பட்டு, உரிய இடம் அளிக்கப்படும்வரை, இடர்க்கணிப்பு என்பது வெறும் வாய்ச் சொல்லாகவே இருக்கும். பாதுகாப்பைப் பற்றிய பல பிரச்சினைகள் மற்றும் சூழலியல் தாக்குதல்கள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.

இந்த நாடும், ஏனை வளரும் நாடுகளைப் போல, பன்னாட்டுக் குழுமங்கள் பரிந்துரைக்கும் உள்ளார்ந்த அபாயகரமான ஆய்வுகளுக்குச் சோதிக்குமிடமாகவும் அவற்றின் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் மாறிவிடக்கூடும் என்று நாம் கவலைப்படுகிறோம். மேலும் இப்போது மேற்கில் மபொவுக்கு எதிராக நுகர்வோரின் எதிர்ப்புக்குரல் எழுச்சி பெற்றிருப்பதால், மபொ குழுமங்கள் தங்கள் குவிமையங்களையும் திட்டங்களையும் கிழக்குநாடுகளையும், வளர்ச்சி குறைந்த நாடுகளையும் நோக்கித் திருப்பியுள்ளன. மபொ உணவின் உடல்நல ஆதாயங்களை விளம்பரப்படுத்துகின்றன. மபொவை உலக அளவில் பசிக்கும் வறுமைக்கும் ஒரு தீர்வாகவும் இவை முன்வைக்கின்றன.

அமெரிக்கா, கானடா, ஆர்ஜெண்டினா ஆகிய மூன்று நாடுகளும்தான் அதிகபட்சமாக மபொ உணவுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவை. இவற்றிற்கு மியாமி நாடுகள் என்று குறிப்புப் பெயர். இவை கார்ட்டெக்னா உடன் பாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வந்த நகோயா உடன்பாட்டையும் ஒதுக்கி யிருக்கின்றன.

வளரும் நாடுகள் பல, பூச்சிகளுக்கும் களைக்கொல்லிகளுக்கும் தடைச்சக்தி பெற்றுள்ள, அழுகாத இந்த “அற்புதப்” பயிர்களுக்குக் கதவுகளைத் திறந்துள்ளன. பெருங்குழுமங்களின் இலவச முன்னோட்டங்களுக்கும், தொழில்நுட்பத் திட்டங்க ளுக்கும் இந்நாடுகள் தடைசொல்வது கடினம்தான். தங்கள் சொந்த நலன்க ளுக்கு மட்டுமே பாடுபடும் நம் நாட்டு அமைப்புகளின் பக்கபலமும் இவற்றுக்கு உள்ளது. அமெரிக்க வணிகத் துறை அல்லது எஃப்டிஏ, உலகவங்கி, யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள் உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்களுக்கும் வளரும் நாடுக ளுக்கும் இடையில் சமரசம் செய்கின்ற விவசாயத்தொழில் பயன்பாடுகளை ஏற்கும் சர்வதேசச் சேவை போன்ற அரசுசாராத் தன்னார்வ அமைப்புகள் போன்றவை பின்னணியில் பேரத்தில் ஈடுபடுகின்றன. இவை போகும்போக்கில் வளரும் நாடுகளின் தொழில்நுட்பத் தேவைகளைக் கண்காணிப்பதோடு, அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் பயிற்சிதருகின்றன.

நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?  

நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும் உடல்நலத்துக்காகவும், பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்:

ஃ மபொ சோயா அவரை உள்ளிட்ட எல்லாவிதமான மபொ உணவுகள் மற்றும் விளைபொருள்களின் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைச் சட்டப்படி நிறுத்தி வைக்கவேண்டும்.
இத்துறையில் புறவயமான, அறிவியல் பூர்வமான, கட்டுத்திட்டமான, தன்னிச்சையான சோதனைகளை நிகழ்த்தவேண்டும். மபொ உணவுகள், விளைபொருள்கள் பாதுகாப் பானவை என்று நிரூபிக்கும் பொறுப்பை அவற்றை உற்பத்தி செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும்தான் ஏற்க வேண்டும்.
ஃ உடல்நலத்தின்மீதும் சுற்றுச்சூழலின்மீதும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, மரபணுப்பொறியியல் உருவாக்கிய உயிரிகளை உற்பத்திசெய்து சுற்றுச்சூழலமைவில் நுழைக்கும்விதமான விவசாய மற்றும் பிறதுறை சார்ந்த மரபணுத் தொழில்நுட்பம் தடைசெய்யப்பட வேண்டும்.
ஃ பன்னாட்டு உயிர்ப்பாதுகாப்பு விதித்தொகுப்பினை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்படி, கடுமையான தேசிய உயிர்ப்பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவை சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தரங்களை ஏற்றிருக்க வேண்டும்.
ஃ மபொ உணவுகளும் விளைபொருட்களும் கண்டிப்பாக அடையாளமிடப்பட வேண் டும். தாங்கள் எதை உண்கிறோம் என்று அறிந்துகொள்ளும் உரிமை, அதுவும் அபாயங்கள் இருக்கும்போது, மத மற்றும் ஒழுக்க விதிகளோடு அது சம்பந்தப்பட்டி ருக்கும்போது, நுகர்வோருக்குக் கண்டிப்பாக உண்டு.
ஃ விவசாயிகளுக்கும் அந்தந்த வட்டார மக்களுக்கும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவிதமான நீண்டகாலப் பயனுடைய விவசாய, உற்பத்தி முறைகளில் முதலீடு செய்யவேண்டும். இப்போதுவரை, பெரிய, பன்னாட்டுக் குழுமங்களுக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற, போதிய அளவு சோதிக்கப்பெறாத, தொழில்நுட்ப விரைவு ஒட்டு வேலைகளுக்கே அதிக அழுத்தம் அரசினால் தரப்பட்டு வந்துள்ளது.

At the same http://phonetrackingapps.com/ time we need to understand how respecting our teens’ privacy helps them grow into independent adults and they do not have an obligation to tell us everything

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் – கட்டுரையின் இறுதிப்பகுதி”

அதிகம் படித்தது