மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவர் கே (1923-2002)

ஆச்சாரி

Sep 1, 2012

இந்த விலங்கு மருத்தவருக்கும் விலங்கிற்குமான முதல் பரிச்சயமே சோகமானது தான். ஏனென்றால், இவர் ஒரு முறைப் பூனைக்குட்டியை குளிப்பாட்ட முற்பட்டபோது அப்பூனை இறக்க நேர்ந்தது. ஆனால் அது கே வின் குழந்தை பருவத்தில் நடந்த ஒன்று.
பின்னாளில் இவர் விலங்கியல் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்தபோது இவரின் தந்தையும் உடன்பட்டு ஊக்குவித்தார். இதுவே சராசரி அப்பாவாக இருந்திருந்தால், “நீ.. சின்ன வயசுலயே பூனைக் கொலைகாரன்! இதுல    விலங்கு மருத்தவரானா இன்னும் எத்தனை கொல்லுவியோ? அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்” என்றிருப்பார்.

யானைகளுக்கான சிறப்பு மருத்துவத்தில் தேர்ச்சிப் பெற்ற இவர் முதலில் தற்போதைய ஆந்திர காட்டுப் பகுதியில் பணி அமர்த்தப்பட்டார். இவர் மாநிலங்கள் மறு இணைப்புக்கு பின் தேக்கடி வனத்திற்கு மாற்றலானார். அது வரை நகரவாசம் கொண்டாலும் இது இவர் விரும்பி பெற்ற காட்டுவாசம் என்பதனால் கடினம் ஒன்றுமில்லை. ஆனால் நம்மில் பலருக்கு காட்டிற்குள் நடப்பதற்கே குலை நடுங்கும். இந்நிலையில் 30+ ஆண்டுகள் காட்டில் வாசம் கொண்ட கே வின் தைரியத்திற்கு தலைவணங்கியே ஆக வேண்டும்.

பொது விலங்கு மருத்துவரான இவர் பழக்கு யானை, காட்டு யானைகளுக்கான சிகிச்சையில் ஆர்வமிக்கவராகவும், கைதேர்ந்தவராகவும் விளங்கினார். மேலும் இவர் தேக்கடியில்தான் யானைகளுக்கும், காட்டுக்கும் பரிச்சயமானார். அன்றிலிருந்து இவருக்கும்-யானைகளுக்குமான பிணைப்பு இன்றியமையாத ஒன்றாகவே விளங்கிவந்தது. சில நேரங்களில்  நாம் மனித முகங்களையே அடையாளம் காண தவறுவது உண்டு ஆனால் இவரோ ஒரு முறை பார்த்த யானையை மறுமுறை சரியாக அடையாளம் காணும் அளவுக்கு வல்லமை கொண்டிருந்தார். யானைகள் மட்டுமல்லாது அங்கு வாழ் காட்டுவாசிகளிடமும்  இவர் நட்பு பூண்டிருந்தார். இவர் காட்டுவாசிகளையே சிறந்த யானைப் பாகன்களாக கருதினார்.

யானைகளை மயக்கமுறசெய்து சிகிச்சை செய்ய அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த குழி வைத்து பிடிப்பது, சங்கிலி மூலம் பிடிப்பது போன்ற யுக்திகள் யாவும் யானைகளை பெருமளவில் காயப்படுத்தியது மற்றும் ஆபத்தானது என கூறி, இவர் தனது பாணியிலேயான சிறிய அம்பில்(dart) மயக்கமருந்து தடவி எய்து யானைகளை பிடிக்கும் யுக்தியையே பயன்படுத்தி சிகிச்சை செய்தவர் இவர் மற்றும் இதுவே யானைகளுக்கான பாதுகாப்பான முறை என்றும் வலியுறுத்திவந்தார். பின்னர் அதையே தமிழ்நாடு அரசு தன் முறையாக ஏற்று செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுவாழ் விலங்கான யானையை கோயில்களில் வளர்த்து வருவதை கடுமையாக எதிர்த்த இவர் அக்கோயில் யானைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களான எடை குறைவு, சர்க்கரை நோய் மற்றும் மனரீதியான மிகுந்த சோர்வும், மன உளைச்சல்களுக்கு உள்ளாவதையும்  சுட்டிக்காட்டினார். எனினும் மதப்பூசல்கள் நிறைந்த இதனை ஓர் இரவில் மாற்றிவிடமுடியாது என்பதை அறிந்ததால் “தமிழக கோயில் யானைகளுக்கான வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை” வழிவகுத்தவர் இவர்.

பெரும்பாலும் யானைகள் அதன் தந்தம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யானை கறிக்காகவும் வேட்டையாடப்பட்ட வேலையில்  வனத்தில் பாதிக்கும் மேலான  மிருகங்கள் வேடர்களால் தாக்கப்பட்டே இறக்க நேர்கிறது என சவப்பரிசோதனை முலம் கண்டறிந்த இவர், வனமிருகங்கள் அனைத்திற்கும் சவப்பரிசோதனை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். அச்சவப் பரிசோதனையை பிற விலங்கு மருத்துவர்களின் முன்னிலையில் சிறப்புற விளக்கமளித்து செய்தும் காட்டி பயிற்சி அளித்துவந்தார்.

யானைகளைப் போன்றே இவரும் சைவ உண்ணியாக இருந்த போதிலும் உலகிலேயே அதிக யானைகளுக்கு சவப்பரிசோதனை செய்த மருத்துவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ( 2002 ம் ஆண்டு முறையே). அதுமட்டுமின்றி அதிக யானைகளுக்கு பிரசவம் பார்த்தவரும் இவரே ஆவார். இவர் பணியாற்றிய காலத்தில் முன்னூறுக்கும்  மேற்பட்ட யானைகளுக்கு சிகிச்சை புரிந்திருக்கிறார்.

இவரது  முப்பது ஆண்டு கால மருத்துவ பயணத்தில் ஒரு முறை கூட யானையால் தாக்க பட்டதில்லை அப்படி ஒரு புரிதல் இவருக்கும்-யானைக்கும் மற்றும் இவர் பின்பற்றிய முறையின் மூலம் யானையை மயக்கப்படுத்தி சிகிச்சை செய்ததில் ஒரு யானை கூட சிகிச்சையின் போது இறந்ததில்லை. இதுவே ஒரு சாதனை அல்லவா?
இவரது ஓய்வுக்குப்பின், இவரை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நீலகிரி வனமேம்பாட்டகராக அமர்த்தியது. கேரளாவில் இவரது ஆசிய யானை நல பாதுகாப்பை பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கினர். வனப் பேணுநர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான “வேணு மேனன் ஏலிஸ் விருதை” 2000 ஆம் ஆண்டு பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

இவர் பல்வேறு சர்வதேச அரங்கிலான பல யானை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் அங்கமாக இருந்தார். மேலும் இவர் உலகப்புகழ்பெற்ற பல அறிவியலிதழ்களுக்கு கட்டுரை எழுதியிருக்கிறார். பல ஆராய்ச்சியாளர்கள்  தனது கட்டுரைகள் இடம்பெற விரும்பும் கனவு புத்தகமான ஆங்கில ஆய்விதழ் ‘நேச்சரில்’ இவரது கடைசி கட்டுரை  2000 ஆம் ஆண்டு வெளிவந்தது எழுத்தால் மட்டுமில்லாமல் தனது, யானைகளை பற்றிய அறிவின் உரையாடல் மூலமும் பல ஆராய்ச்சியாளர்களை கவர்ந்திழுத்தார் மேலும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் பெரிதும் மதிக்கப் பட்டுவந்த இத்தமிழரை நம்மில் பலர் அறிந்தாரில்லை.

இலக்கியத்தில் ஆர்வமிக்க இவர் லார்ட் பைரனின் கவிதைகள் மேல் பேரார்வம் கொண்டிருந்தார், மேலும் சங்கீதத்திலும், பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்திலும் நல்ல ரசனை கொண்டவராய் இருந்தார். நட்பு பாராட்டுவதில் முதல்வனாக திகழ்ந்தார். இவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் உரியவராக விளங்கினார்.  இதுபோன்ற பல தமிழனுக்கே உரித்தான அரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் மருத்துவர் கே என்று அழைக்கப்பட்ட திரு. வி.கிருஷ்ணமுர்த்தி ஆவார். தனது வாழ்நாள் முழுதும் யானைகளின் நலனுக்காக அர்ப்பணம் செய்த இவர் டிசம்பர் 9 2002 ஆம் ஆண்டு இயற்கை ஏய்தினார்.

Org/apastyle/ view blog american psychological association

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மருத்துவர் கே (1923-2002)”
  1. Franklin says:

    Super Manoj

  2. கிராமத்தான் says:

    தமிழர்கள் பல சிறப்பான செயல்கள் செய்திருந்தாலும், ஊடகங்களின் குறுகிய சிந்தனையால் வெளிவருவதில்லை – மக்களுக்கும் தெரிவதில்லை. மாறாக, மஞ்சள் பத்திரிக்கையாகவும், கையூட்டு பெற்று சார்பாக எழுதும் நிலை தான் உள்ளது. உண்மையைச் சொல்லும் ஊடகங்கள், மக்களை நல்வழிபபடுத்தும் – ஊக்குவிக்கும் சிறகு போன்ற மல்ர்கள் இப்போதைய தேவை. வாழ்க, வளர்க!

அதிகம் படித்தது