மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருந்துக் கடை நாடி- அதன் உண்மை நாடி… – ஒரு ஆய்வு

ஆச்சாரி

Aug 15, 2012

மிக நீண்ட ஒரு அங்காடி வீதி. தேநீர் கடை, பல்பொருள் கடை, ஆடைகள் விற்பனைக் கடை, காய்கறி, பழக் கடைகள் இன்னபிற அங்காடிகளை அந்த அங்காடி வீதியில் நாம் பார்க்கிறோம். நாம் பார்க்கும் கடைகளில் அந்த வீதியில் அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் கடைகள் என்று பார்த்தால் மருந்துக் கடைகள்தான். பத்து அடிக்கு ஒரு மருந்துக் கடை இன்று எல்லா நகரங்களிலும் உள்ளன.    நாடு முழுதும் அதிகம் உள்ள கடைகள் எதுவென்று கேட்டால் அது மருந்துக் கடைகள்தான். நோய்கள் பெருகப் பெருக மருந்து வகைகளும் மருந்துக் கடைகளும் அதிகரித்து வருகிறது. ஒரு நோய்க்கு பல மருந்துகள் என்ற நிலைதான் இதற்குக் காரணம்.

எந்தெந்த மருந்துகள் அதிகம் விற்பனை ஆகின்றன, ஒரு மருந்துக் கடையின் தேவை, மருந்துகளின் வரவு ஆகியவை பற்றி அறிய சென்னையில் சில மருந்துக் கடை நடத்துவோரிடம் பேசினோம். மூன்று வேளை உணவு உண்பது போல மருந்து மாத்திரைகளை சாப்பிடுவோர் பலர் உண்டு. காய்ச்சல், கபம், சளி, வயிற்றுக் கோளாறுகள், இருமல் போன்றவைக்கு மாத்திரை கேட்டுத்தான் அதிகம் பேர் மருந்துக் கடைகளுக்கு வருகிறார்கள்.  

சாதாரண தலைவலிக்கு மருந்துக் கடைகளில்  ஆஸ்பிரின், பாராசிட்டமால், இபுபுரோபின்  போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. காய்ச்சலுக்கு Dolo 650, ஜலதோஷத்துக்கு Coldorin, Coldact, போன்ற மாத்திரைகளே அதிகமாக விற்பனை ஆகிறது. வயிற்றுப் போக்கு, செரிமானம் ஆகாமை ஆகிய பிரச்சினைகளுக்கு மருந்து கேட்டு மக்கள் வருகிறார்கள்.  அது எப்படி மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே மருந்துகளை கடை விற்பனையாளர் கொடுக்க முடியுமா என்று நாம் விசாரித்ததில் சில விளக்கம் கிடைத்தது. ஒருவர் மருந்துக் கடை தொடங்க வேண்டுமென்றால்-

முதலில் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும். உதாரணத்திற்கு ராஜா  மெடிக்கல்ஸ் என்றால் அந்தக் கடையின் பெயரில் பதிவு செய்ய வேண்டும்.

அந்தக் கடையின் உரிமையாளர் பெயரில் drug licence இருக்க வேண்டும். மருந்துக் கடையின் பரப்பளவு குறைந்தது 110 சதுர அடியாக இருக்க வேண்டும்.

மருந்துக் கடை முழுதும் குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும்  மற்றும், குளிர்சாதனப் பெட்டி இருக்க வேண்டும். இது, குறிப்பிட்ட மருந்துகள் எப்போதும் சீரான சீதோஷ்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

மருந்துக் கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை பார்க்க வேண்டும் அதில் ஒருவர் மருந்துகளைப் பற்றிய பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அதாவது B.pharm , D.pharm படித்திருக்க வேண்டும். இந்த படிப்பை முடித்தவர் மாதம் ஒரு முறை சுகாதாரத் துறை அதிகாரியின் முன்னால் கையெழுத்து இட வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

அதனால் சிறிய சிறிய தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்துக் கடை விற்பனையாளரே மருந்து கொடுக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், பெரியவர்களுக்கு ஏற்படும் காது, கண், வாய் தொடர்பான நோய்களுக்கு மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைக்காரர்கள் மாத்திரைகள் வழங்க மாட்டார்கள்.

நாம் சிகிச்சைக்கு செல்லும் சிறு மருத்துவ நிலையங்களை (Clinic) நடத்தும் மருத்துவர்களுக்கும் மருந்துக் கடைகளுக்கும் மறைமுக உடன்பாடு இருக்கிறது. சில மருத்துவர்கள் இந்த உடன்பாட்டை வெளிப்படையாகவே உணர்த்தி விடுகிறார்கள். எப்படி?

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துப் பட்டியலை எழுதித் தரும் சீட்டின் கீழே குறிப்பிட்ட மருந்துக் கடையின் பெயர் குறிப்பிட்டு இருக்கும். அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள் அந்த மருந்துக் கடையில்தான் வாங்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் யுக்தி இது. சில மருத்துவர்கள் இப்படி வெளிப்படையாக அச்சடித்துக் கொள்ளாமல் வார்த்தைகளாலேயே இன்ன கடையில் இந்த மருந்துகள் கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படி மருத்துவர்களுக்கும் மருந்துக் கடைகளுக்கும் உள்ள கள்ள உறவு மாத அடிப்படையில் பணமாக வலுப்பெறுகிறது.

மருந்து பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்த மருந்து பெயர்களைப் பற்றியும் அவற்றின் குணங்களைப் பற்றியும் அவற்றின் மீது உள்ள அரசு (அத்தியாவசிய மருந்துகள் குறித்த) விலை கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பல மருந்துகள் பதிவுரிமை பெற்ற மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால்தான் மருந்துக் கடைகளில் பெற இயலும். “காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாவது மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். ஆனால் மருந்து வாங்குவோர் மருந்துகளின் ஆயுளைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதன் கடைசி நாள் தாண்டியிருந்தாலோ, அதன் மீது புதிதாக விவரச் சீட்டு ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தாலோ, நாள் திருத்தப்பட்டிருந்தாலோ அதை வாங்கக் கூடாது.

பொதுவாக எந்தவொரு மருந்து மாத்திரைக்கும் அதன் ஆயுள்காலம் ( expiry date ) இருக்கும். இந்த கடைசி தேதி முடிவடையும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இது  மருந்துக் கடைகளில் இருந்து , மொத்த இருப்பு வைப்பு இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து  துணை இருப்புவைப்பு இடங்கள்  எனப்படும் சிறு மொத்த விற்பனையாளர்களிடம் அனுப்பப் படுகிறது. இங்குதான் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்று. அவர்கள் தான் மருத்துவர்களையும் மருந்துக் கடைகளையும் தொடர்பு கொண்டு இனிமையாகப் பேசி சிறு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து மருந்துகளை கடைகளுக்கு விற்கிறார்கள். 

அதிகம் படிப்பு அறிவு இல்லாத இடங்களில் உள்ள  மருந்துக் கடைகளில்தான் இப்படிப்பட்ட மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் இப்படி மருந்துகளை விற்பனையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டு தொழிலில் எந்த ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.      –தொடரும்

Teensafe provides read the post here parents the means to view all texts and online activity in one location


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருந்துக் கடை நாடி- அதன் உண்மை நாடி… – ஒரு ஆய்வு”

அதிகம் படித்தது