மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருந்தே உன் விலை என்ன? – மக்களுக்கு தேவை மருந்துசார் விழிப்புணர்வு

ஆச்சாரி

Oct 15, 2012

இது அறிவியல் யுகம். மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் காலம். நுகர்வோர் மிகுந்த சாமர்த்தியசாலிகளைப்போல அற்ப விஷயங்களுக்கு நீதிமன்றக் கதவை தட்டுகின்றனர். தமிழக ஊடகங்கள் “நீயா.. நானா..” என்று போட்டி போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஊட்டும் பணியை செவ்வனே செய்கின்றன. ஆனால், எதில் நாம் மிகுந்த விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டுமோ, அதில் கோட்டை விட்டுக்கொண்டு இருக்கிறோம். அது என்ன?

நமது நாட்டில், உடல் நலம் பேணும் மருத்துவத்திற்காக  நாம் செலவிடும் தொகை கணிசமானது. ஆனால், நாம் மருத்துவமனைக்கு செல்கிறோமே, அங்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துக்களின் விலை, அதன் தரம் மற்றும் அதற்கான மாற்று மருந்து பற்றி தெரிந்துகொள்ள ஏதேனும் முயற்சி மேற்கொண்டதுண்டா? நம்மில் பலருக்கு இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வோ அல்லது புரிதலோ இருந்ததுண்டா?

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகள் ஏன் மிகவும் விலை அதிகமாக இருக்கின்றன? ஏன் சில மருந்துக்கள் விலை மிகவும் குறைவாக உள்ளன? என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டா?

இவற்றை அறிவதற்கு முன், மருந்துக்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துகொள்வோம். உதாரணத்திற்கு, நீங்கள் சளி மற்றும் காய்ச்சலுக்காக மருத்துவரிடமோ அல்லது மருந்துக் கடைக்கோ சென்றால், பாரசிட்டமால்(paracetamol) என்ற மாத்திரை தருவார்கள். பாரசிட்டமால் என்பது அந்த மாத்திரையின் வேதியல் மூலப்பெயர்.(generic name). அந்த பாரசிட்டமால் மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் தனக்கு தோதான பெயர்களை வைத்து சந்தையில் அறிமுகப்படுத்தும். உதாரணமாக, க்ரோசின் (Crocin), டோலா (Dola) போன்ற  மக்களிடையே பிரபலம் அடைந்த பெயர்கள்.

மக்களிடையே பிரபலமாக இருக்கும் உடைகள் அல்லது காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருள்கள் விலை, பொதுவாகவே அதிகமாக இருப்பது போலவே, நன்கு பிரபலம் அடைந்த மருந்து நிறுவனங்களின் மருந்து, மாத்திரைகளும் விலை அதிகமானவை தான். ஆனால், சாதாரண   நிறுவனங்கள் ஒரு மாத்திரையை தயாரிக்க ஆகும் செலவே, இந்த பிரபல நிறுவனங்களுக்கும் ஆகின்றன. ஆனால், மாத்திரையின் விலை மட்டும் சாதாரண நிறுவனத்தின் மருந்துகளை விட மூன்று மடங்கு அதிகம். இந்த விலை அதிகமான மாத்திரையையே, பெரும்பாலான மருத்துவர்கள், தங்களிடம் வரும்  நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். இது ஏன்? விலை குறைந்த, பிரபலமில்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் மாத்திரைகள் தரத்தில் குறைந்தவையா? நிச்சயமாக இல்லை. ஏனெனில், மாத்திரைகளை தயாரிக்க பயன்படும் வேதியல் மூலப்பொருள்கள் அனைவருக்கும் பொதுவானவை. அதில், தரம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. சரி, இதையும் விட்டுவிடலாம். மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் மாத்திரையை தான் ஒரு நோயாளி உட்கொள்ளவேண்டுமா? அதே மூலக்கூறுகளில் தயாரிக்கப்பட்ட வேறு நிறுவனத்தின் மாத்திரையை உட்கொண்டால் ஆபத்தா? கிடையாது. இங்கு தான், நமக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது,  அவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மாத்திரைகள் சந்தை விலையை விட அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் விலைகுறைந்த  வேறு நிறுவனத்தின் மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொல்லிக் கேளுங்கள். அவர் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார். கவலைப் படாதீர்கள். பெரும்பாலான மருத்துவர்கள் வேறு வழி இல்லாமல், விலை குறைந்த நிறுவனத்தின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அப்போதும், உங்களை செவிமடுக்க மறுக்கும் மருத்துவர்களை விட்டுதள்ளி, நன்கு பிரபலமான மருந்துக் கடைகளை நாடிச்சென்று, அங்குள்ள  மருந்தாளுனரை(Pharmacist) கலந்தாலோசியுங்கள். அவர் உங்களுக்கு தேவையான மாற்று நிறுவனத்தின் விலைக் குறைவான மருந்துக்களை தர முடியும்.

உதாரணத்திற்கு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற பெரும்பாலும் ஆக்மென்டின் (Augmentin) என்ற மாத்திரை, கவனத்தில் கொள்ளுங்கள், இது ஒரு பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு, நம் தமிழ் திருநாட்டின் சிறந்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பத்து மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை 440 ரூபாய். ஆனால், அதே நோய் எதிர்ப்பு சக்தியை பெற, சிறப்பாக செயல்படும் பல அமாக்சிலின்கள், (ஆக்மெண்டினின் வேதியல் மூலப்பெயர்) வெறும் 110 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இந்த விலை குறைந்த மாத்திரைகளை தாராளமாக மருத்துவர்கள் எழுதலாம். ஆனால், “ஏதோ” ஒன்று அவர்களை எழுதவிடாமல் தடுக்கிறது.

இதைப் போலவே, தடுப்பூசி போடுவதிலும் பெரிய தவறுகள் தெரிந்தே நடந்தேறிக் கொண்டுள்ளன. அவசியமே இல்லாமல், மிக அதிக விலை கொண்ட தடுப்பூசிகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, பெரும்பாலான மருத்துவர்கள், பெர்டுசிஸ் (pertusis ), டிப்தீரியா(diphtheria) மற்றும் டெட்டனஸ் என்ற மூன்று நோய்களுக்காக  “ட்ரைபாசல்”(Tripacel) என்ற  தடுப்பூசியை  பரிந்துரைக்கின்றனர். 0.5 மி.லி. அளவு கொண்ட இந்த ஊசியின் விலை 116 ரூபாய். ஆனால், அதே தடுப்பூசி,  “ட்ரிபிள் அண்டிஜென்”(Trible Antigen) என்ற பெயரில் 0.5 மி.லி., வெறும் 3 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த விலை வித்தியாசம் தெரியாமல், “பிராண்ட்”(Brand) என்ற பெயரில்  நம்முடைய பணம் வீணாய் போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த ஒரே இனத்தைச் சேர்ந்த மருந்துக்களில், “பிராண்ட்”(brand) மருந்துக்களை அசல் என்றும், அதன் அத்தனை குண நலன்களோடும் தயாரிக்கப்படும் ” ஜெனரிக்”(Generic) மருந்துக்களை போலியானது, தரம் குறைவானது என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறானது. இவைகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை.  மருந்தின் அளவு, தரம், குறிப்பிட்ட நோயின் தன்மை, மாத்திரையின் பாதுகாப்பு மற்றும் அதன் பக்க விளைவுகள் என அனைத்தும் ஒன்றுதான்.

உலகின் பல பகுதிகளில், பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டறிவதற்காக, பற்பல மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவ உலகில், புதிதான ஒரு கண்டுபிடிப்பை, நோயை குணப்படுத்தும் மருந்தை தனது ஆராய்ச்சியின் மூலம் நிகழ்த்தும் நிறுவனத்திற்கு, அந்த அரிய மருந்துக்கான காப்புரிமை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அமெரிக்க நிறுவனமான, உணவு மற்றும் நிர்வாக அமைப்பால் (Food and Administration Association) வழங்கப்படுகிறது. இந்த காப்புரிமை பெற்ற மருந்தையோ அல்லது மாத்திரையையோ, மற்ற நிறுவனங்கள் யாரும் தயாரிக்க முடியாது. காப்புரிமை காலம் இருக்கும் வரையில் அந்த மாத்திரையின் விலை, யானை விலையாகவோ, குதிரையின் விலையாகவோ இருக்கலாம். காப்புரிமை காலத்திற்கு பிறகு, மற்ற நிறுவனங்கள் இந்த FDA வில், தாங்களும், அந்த மருந்தை தயாரிக்க விண்ணப்பிக்கும். மற்ற தயாரிப்புகள்  சந்தையில் விற்பனைக்கு வந்தவுடனே, காப்புரிமை பெற்ற நிறுவனம், அம்மாத்திரையின் விலையை  படிப்படியாக குறைத்துவிடும். முதன்முதலில் இந்த மருந்தை கண்டறிந்து காப்புரிமை பெற்ற நிறுவனம், அதற்கான ஆராய்ச்சிக்கு செலவிட்ட பெரும் தொகையை கவனத்தில் கொள்ளும்போது, இது நியாமான ஒன்றுதான்.

இந்த ஒரு முக்கியமான காரணத்தினாலேயே, “ஜெனரிக்”(Generic) மருந்துக்கள் சந்தையில் விலை குறைவாக கிடைக்கிறது. ஏனெனில், இவை ஆராய்ச்சிக்காக,பெரும் தொகையை செலவிடுவதில்லை. நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட ஒரு மருந்தை, அப்படியே, அதே வேதியல் மூலக்கூறுகளின் அடிப்படையில் தயாரிப்பதால், தயாரிப்புச் செலவு மட்டுமே இந்நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இதனால், இதன் தரமும், காப்புரிமை பெற்ற நிறுவனத்திற்கு நிகரானதுதான். ஆனால், மருத்துவர்கள், இந்த விலை குறைந்த மாத்திரைகளை, நோயாளிகளுக்கு பரிந்துரைக்க, பெரும் பிரபலமடைந்த மருந்து நிறுவனங்கள் விடுவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா, வீட்டிற்கு தேவையான அதிநவீன அலங்காரப் பொருட்கள் மற்றும் கணிசமான பணம் போன்றவற்றை கொடுத்து, விலை அதிகமான மருந்துக்களையே, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கச் செய்கின்றன.

மருத்துவர்களை கடவுளின் அவதாரமாகவே இன்னும் தமிழன் பார்ப்பதுதான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம். உயிர் காக்கும் மருத்துவரும், பணம் என்ற சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான். சாலை விபத்தில் படுகாயமுற்றோ, நள்ளிரவில் நெஞ்சை பிடித்துகொண்டோ பிரபல மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கணவன் சேர்க்கப்படும்போது, மனைவி சொல்லும் உலகப் பிரச்சித்தி பெற்ற வாக்கியமான,”எவ்ளோ செலவு ஆனாலும் பரவா இல்ல டாக்டர், அவர எப்படியாவுது காப்பாத்துங்க,” என்ற சொற்றொடர் நமது மருத்துவர்களை தவறான வழியில் செல்ல வைக்கிறதோ என்ற பயம் எனக்கு எப்போதும் உண்டு.

மேலும், பெரிய அரசுத்துறை சார்ந்த மருத்துவமனைகளுக்கு, ஒப்பந்தப் புள்ளி வழியாக, இந்த பிரபல மருந்து நிறுவனங்கள் மருந்துகளை விற்கும்போது, அதன் விலை சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உள்ளது. அதுவும், ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிட்ட விலையிலேயே குறைந்தது மூன்று ஆண்டுகளாவது மருந்துகளை தந்தாக வேண்டும். உதாரணத்திற்க்கு, அமாக்சில் 250(amoxil 250) என்ற வேதியல் மூலப்பெயர் கொண்ட மாத்திரைகள் பத்து,  37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், ஒப்பந்தப் புள்ளியில் இந்த அமாக்சில் 250 யை, ஒரு ஜெர்மன் மருந்து நிறுவனம், அதன் குறைந்த பட்ச விலையாக வெறும் 6 ரூபாய்க்கு தர முடிகிறது எனில், வெளிச் சந்தையில் மட்டும் ஏன் இந்த அநியாய விலை?

இன்னும் எத்தனையோ வகையில், உயிர் காக்கும் உயர் மருத்துவம் என்ற பெயரில், சாமானியனின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அந்த சாமானியன் விழிப்புணர்வு கொண்டால் மட்டும் போதாது. தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

ராஜஸ்தான் மாநில அரசின் உதவியோடு, மருத்துவர். சமீத் சர்மா என்பவர், அம்மாநிலம் முழுவதும், சுமார் நூறு “ஜெனரிக்” மருந்துக்கடைகளை திறந்து இருக்கிறார். இங்கு, “பிராண்ட்”(brand) மருந்துகளுக்கு மாற்றாக , அதே தரத்தில், குறைந்த விலை கொண்ட மருந்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மட்டும் அல்ல, நல்ல வசதி படைத்தவர்கள் கூட பெரும் பயனை அடைவதாக ராஜஸ்தான் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதுகின்றன. பிரபல மருந்து நிறுவனங்களின் கடும் எதிர்ப்புக்கிடையில், தனி ஒரு மனிதனாக நின்று, இதனை மருத்துவர். சமீத் சர்மா சாதித்து இருக்கிறார்.

தமிழகத்திலும் ஒரு சமீத் சர்மா இருக்கக்கூடும்.

In my notice this opinion, this makes them very relaxed, kind and helpful people


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருந்தே உன் விலை என்ன? – மக்களுக்கு தேவை மருந்துசார் விழிப்புணர்வு”

அதிகம் படித்தது