மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாணவர் புரட்சியின் வழித்தடம் (கட்டுரை)

ஆச்சாரி

Apr 1, 2013

           தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பெரியதாக வெடித்திருக்கும் இந்த தருணத்தில் இன்றைய அரசியல் சூழல்களையும், நம்முடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? போராட்டத்தின் வழித்தடங்கள் என்ன என்பதை நாம் நன்கு உணரவேண்டியது அவசியம். போராட்டம் தமிழகம் எங்கும் வெவ்வேறு வடிவங்களில் போய் கொண்டிருக்கும் இந்த வேலையில் போராட்டத்தின் சிறப்பம்சத்தை நாம் சற்று அலசிஆராய்வோம் .

 

1. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி ஒரே அணியில் ஒன்று திரண்டு போராடிக்கொண்டிருப்பது, இப்போராட்டத்தின்  மிகப்பெரிய வெற்றியாகும்.

 

2. இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளை      திக்குமுக்காட வைத்துள்ளது

3. எந்தவொரு வன்முறையும் இல்லாமல் அறப்போராட்டத்தின் வழியில்   போராடுவது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

4. கிராமங்களின் போரின் பாதிப்பையும் அதன் உண்மைகளையும் எடுத்து      சென்றுகொண்டிருப்பது.

5. இவை எல்லாவற்றையும்விட தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று தமிழகம்      முழுக்க ஒரே குரலில் மாணவர்கள் ஒலித்திருப்பது மிகப்பெரிய பலம். இதுவரை தமிழகத்தில் இப்படி ஒரு அழுத்தமான குரல்   ஒலித்ததில்லை. இவர்களின் ஓங்கி உயர்ந்த இந்த குரலால் இன்று தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்களே ‘தனி ஈழம் அல்லது தனித் தமிழ்நாடு’ என்று உரக்க சொல்கிறார்கள்.

 

     தமிழ்ஈழம் என்ற நம் கோரிக்கையில் இருந்து என்றும் பின் வாங்கக்கூடாது. அது அமையுமா? அமையாதா? என்ற சாத்தியக் கூறுகள் பற்றிய ஆராய்ச்சி நமக்கு இப்பொழுது தேவை இல்லை. தமிழகத்தில் தமிழ்ஈழமே தீர்வு என்ற ஒரே குரல் இன்றுதான் ஒலித்துள்ளது. அது ஓங்கி உரைக்கும் ஒட்டுமொத்தத் குரலாக என்றும் அணையாத நெருப்பாக இருக்கவேண்டும் அதுதான் இப்பொழுதைய தேவை. தமிழ்ஈழம் சாத்தியம் இல்லை என்று இன்று தமிழ் உணர்வாளர்களே பிதற்றுகிறார்கள் அதை மாணவர்கள் புறம் தள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழ்ஈழம் வேண்டும் என்பதற்கான தெளிவு இதுவரை நம்மிடம் இல்லை. இன்று உள்ளது. போராடும் மாணவர்களுக்கு தெரியும் அதை எப்படி அமைக்கவேண்டும் என்பது. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

 

இந்திய அரசின் நிலைப்பாடு

 

    இந்திய அரசு எந்த ஒருநிலையிலும் சர்வதேச விசாரணைக்கோ, இனஅழிப்பு என்ற வாசகம் கொண்ட தீர்மானத்தையோ ஆதரிக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் இந்தியா இலங்கையில் நடந்தபோரில் ஆயுதம்கொடுத்து தன் படைகளையும் அனுப்பியுள்ளது. இதை சுப்ரமணியம்சுவாமி போன்றவர்களே வெளிப்படையாக இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாக மிரட்டியுள்ளதை கவனிக்கவேண்டும். சர்வதேச விசாரணை என்று வரும் பொழுது இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய நிலையில் உள்ளது. இதைச் சாதாரணமாக விட்டுவிட முடியாது. இந்தியா என்ற நாடு தேசநலன் என்ற பெயரில் சிலரால் மிகத்தவறான வழியில் வழிநடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட ஒருபெரிய உதாரணம் வேறு ஒன்றுமில்லை. பல நடுநிலையாளர்கள் இது வெறும் தேசநலனுக்காக செய்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நிச்சயமாக இல்லை. தேசநலன் என்ற பெயரில் சில தமிழர்களை நசுக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த சக்திகள் இதைப் பயன்படுத்தி இந்தியாவினை தவறான வழியில் வழிநடத்திக்கொண்டே உள்ளது என்பது தான் உண்மை. 8 கோடி தமிழர்கள் உரக்கக் கூறியும் மாணவர்களின் தீவிரமான போராட்டத்தைப் பார்த்தும் ஒரு நாடு கண்டுகொள்ளாமல் இருக்கிறதென்றால் இது கண்டிப்பாகத் தமிழர்களுக்கு எதிரான நோக்கம் இல்லாமல் இல்லை. இதை நடுநிலையாளர்கள் கவனிப்பது அவசியம். இதில் இந்திய உளவு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் சுப்ரமணியசுவாமி போன்றவர்களும் அடங்குவர். இவர்களுக்கு தேசிய நலனைவிட தமிழர்களை நசுக்கும் நோக்கமே மிக அதிகம்.

தமிழர் விரோத போக்கிற்கு காரணம் என்ன?

1. தமிழர்கள் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமூகமாக வேலைவாய்ப்பில் வெளிநாடுகளில் பலம் மிக்க சமூகமாக இருந்தது பல சமூகத்திற்கு உறுத்தலாக இருந்திருக்கலாம். மற்றும் மத்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தமிழர்களின் ஆதிக்கமும் மிகவும் அதிகம். மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத மிகப்பெரிய இடைவெளியில் தமிழர்கள் உள்ளனர்.

2. மத்திய அரசின் கொள்கை டெல்லியில் தீர்மானிக்கப்படுவதில் இருந்து, இந்தி திணிப்புவரை கொள்கைகள் அதிகாரங்கள் மத்தியமாக்கப்படுவதிலே நடுவண்அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கு தமிழர்கள் எதிரானவர்கள் என்பது நடுவண் அரசை ஆட்டிப்படைக்கும் சக்திகளுக்கு தெரியும்.

3. தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள், பெரியாரின் திராவிடக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்கள் இது போல் சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு  அமைந்தால் சும்மாவா இருப்பார்கள்? முக்கியமாக இவர்கள் தேசிய ஊடகத்தினுள் இருந்து தமிழர்களுக்கு எதிராக பரப்புரை செய்கிறார்கள்.

4. இவ்வெல்லாவற்றையும் விட தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாகிவிடக்கூடாது என்பதில் சில சக்திகள் மிகவும் கவனமாக உள்ளனர். ஈழம் என்ற ஒன்று அமைந்துவிட்டால் தமிழர்களுக்கென்று தனி அடையாளத்தை உலகத்திற்கு கொடுக்கும். அது தமிழர்களுக்கு மிகப்பெரிய பலம் என்பதை அந்த சக்திகள் நன்றாகவே அறிந்துள்ளது. இந்த காரணத்திற்காகவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தனித்தமிழ்நாடு கேட்பார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை ஆரம்பத்தில் இருந்தே இந்த சக்திகள் செய்துகொண்டிருகின்றன.

    இந்த சவாலை எப்படி முறியடிக்கப்போகிறோம்? இதற்கு நீண்ட நெடிய திட்டம் இந்திய அளவில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். முதலில் தமிழர்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும். தமிழ்நாட்டில் நடுநிலையாளர்களிடம் இந்த உண்மையை எடுத்துச் சென்று அவர்களை நம்மேல் திணிக்கப்படும் அடக்குமுறையையும், அநீதியையும் கூறி தமிழர்களுக்கு முழு அதரவாக இருக்கச் செய்யவேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாம் இதில் வெற்றி பெறமுடியும்.

வர்த்தக நிறுவனங்களின் அழுத்தம்

    இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபொழுது இந்திய நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்கள் தங்கள் வர்த்தக உறவை இலங்கையுடன் மேம்படுத்திக் கொண்டிருந்ததை நாம் கவனிக்க தவறிவிட்டோம். இன்று இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு இந்த நிறுவனங்களின் பங்கு மிக முக்கியம். ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய சேவை நிறுவனமாக இலங்கையில் உள்ளது. அதே போல் ரிலையன்ஸ் தயாரிக்கும் டீசல் உலகச் சந்தையில் விற்பதையோ இந்தியாவில் விற்பதைவிட இலங்கையில் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக இருக்கும் இலங்கையில் விற்பது கொழுத்த லாபத்தை ரிலையன்சுக்கு கொடுக்கும். டாட்டாவும் தன் பங்கிற்கு கார் மற்றும் கனரக வாகனங்களை இலங்கைக்கு விற்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு தருவாயிலும் இந்த நிறுவனங்களுக்கு இழப்பு வருவதை இந்திய அரசு விரும்பாது. ஆனால் தமிழர்கள் நினைத்தால் இந்த நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நட்டத்தை ஏற்படுத்தமுடியும். தமிழகத்தில் இவர்கள் வர்த்தகம் செய்யமுடியாதபடி போராட்டத்தை முன்னெடுக்கமுடியும். போராட்டத்தின் யுக்தியை மாற்றி தமிழ்நாடு அரசாங்கத்தை தொலைத்தொடர்புச் சேவையை துவக்குமாறு அழுத்தம் கொடுக்கலாம். அதையே 2014 தேர்தலின் வாக்குறுதியாக கேட்கலாம்.

தேசிய கட்சிகளின் நிலைப்பாடு

   காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு முக்கியமாக பணம் கொடுத்து ஆதரிப்பவர்கள் ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள். அவர்கள் என்ன கொள்கை எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த கொள்கையை மட்டுமே காங்கிரஸ் பிஜேபி போன்றவைகள் எடுக்கும்.

 

     கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை தனி ஈழத்திற்கு என்றுமே அதரவு தரமாட்டார்கள். இரண்டே மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் இவர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது காலத்தின் கட்டாயம்.

 

    இப்படி நடுவண் அரசிடம் இருந்து எந்தவொரு நடவடிக்கையும் எதிர்பார்க்கமுடியாது என்று தெரிந்தும் இந்த போராட்டத்தை பயனுள்ளதாக எப்படி மாற்றி கொள்வது என்பதுதான் நம்முடன் இருக்கும் முக்கிய கேள்வி.

 

     நம் போராட்டங்களை நடுவண் அரசை நோக்கி இருந்தாலும் சில முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாட்டு அரசாங்கத்தை நோக்கி அழுத்தம் கொடுக்க முடியும். தமிழகம் என்பது ஒரு நாடாக இல்லாமல் போகலாம் ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அது நினைத்தால் ஐநாவில் சில கோரிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதற்கான வழிகளும் வழிமுறைகளும் உள்ளன. சட்டமன்றத்தில் ராஜபக்சே இலங்கை அரசு மட்டுமே போர்க் குற்றவாளி என்று அறிவிக்க முடியும் என்பதில்லை. அது நினைத்தால் இதில் ஈடுபட்ட இந்தியர்களையும் அறிவிக்க முடியும். அப்படி அறிவிக்க முடியுமெனின் அது தமிழர்களுக்கு மிகப்பெரிய வெற்றி இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம்.

 

      சட்டசபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை. 6 கோடி மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு. அதே அறிக்கையை தமிழக அரசு நினைத்தால் ஐநாவுக்கு அனுப்பிவைக்க முடியும். அவை என்றும் வரலாற்றில் அழிக்கப்படாத சுவடாக வரும். தலைமுறைனருக்கு  இருக்கும். ஜெயலலிதா போன்ற தேசிய நலனை முன்னிறுத்தும் தலைவர் அவ்வளவு எளிதாக இதை நிறைவேற்ற மாட்டார். ஆனால் அவருக்கு இது மிகப்பெரிய அரசியல் அழுத்தமாக இருக்கும். இதுவரை மாணவர்களின் கோரிக்கை மத்திய அரசிடம் மட்டுமே என்று நழுவிக்கொண்டிருக்கும் முதல்வரின் மௌனம் கலைந்தே ஆகவேண்டும்.

 

      மாணவர்கள் போராட்டத்தின் தீவிரத்தை விட போராட்டத்தின் தொடர்ச்சியே மிகவும் முக்கியம். போராட்டங்கள் அடையாளமாக இருந்தால் போதுமானதே. போராட்டத்தை அணையாவிளக்காக முன்னெடுத்து செல்லவேண்டும். அதே போல் இந்தப் போராட்டத்தை தேர்தல் அரசியலை நோக்கிக் கொண்டு செல்வதும் அவசியம்.

 

    மாணவர்கள் தேர்தலில் நிற்கவேண்டிய அவசியம் கூட இல்லை. அவர்கள் தேர்தல் அரசியலுக்கான எல்லாவிதமான கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம். மாணவர்களுக்குள் ஒரு சனநாயகம் இருக்குமெனின் பிரிவினைகள் வருவதை தடுக்கலாம். அதே போல் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது என்பதிலும் கவனம் மற்றும் கொள்கைகள் தேவை.

   மொத்தத்தில் இலங்கையில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் கடுமையான தொழில்ரீதியான நெருக்கடி கொடுப்பது அவசியம். தமிழக அரசாங்கத்தின் மீதான நெருக்கடியை 2014 தொடக்கத்தில் இருந்து தேர்தல் தொடங்கும் 6 மாதங்களுக்கு முன் தொடங்கினால் நலம். இப்பொழுது அரசுக்கு எதிராக இறங்கி அரசை மாணவர்கள் பகைத்துக் கொள்வது நல்லதல்ல. மாணவர் புரட்சி வெல்லட்டும்.

 

Readers are especially invited to refer to www.essayprofs.com the chapters on student learning, assessment, lecturing, small group teaching, e-learning and nursing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாணவர் புரட்சியின் வழித்தடம் (கட்டுரை)”

அதிகம் படித்தது