மாமல்லைக் கூடங்களில் மனம் அள்ளும் சிற்பங்கள்!
ஆச்சாரிMar 15, 2012
‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்….’ இந்தப் பாடல் வரிகளை சீர்காழி கோவிந்தராசனின் கம்பீரக் குரலில் கேட்கும்போதெல்லாம் சிற்பக் கலையின் சிறப்பு நினைவில் வந்து நிழலாடும். வெறும் கல், சிற்பம் ஆன பிறகு உயிர் பெற்றுவிடுகிறது. மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அந்நாட்டு மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. காலத்தால் அழிக்க முடியாதது சிற்பக் கலை என்பதற்கு தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் காணப்படும் கோயில்களும் சுற்றுலாத் தலங்களும் சான்றாக விளங்குகின்றன.
தமிழ் மன்னர்களும் தமிழகத்தை ஆண்ட பிற மன்னர்களும் சிற்பக் கலையை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் பாடல் வரிகளாகவும் கல்வெட்டுக்களாகவும் உள்ளன. ஒரு பெரிய கல்லைப் பார்க்கும் நமக்கு அது வெறும் கல் என்று தோன்றும். சிற்பியின் பார்வையில் அந்தக் கல்லுக்குள் ஒளிந்து கிடக்கும் சிற்பங்கள் தெரியும். மனம் நெகிழாத ஒருவரை நாம், உன் மனம் என்ன கல்லா என்று சொல்கின்றோம். அந்தக் கல்லுக்குள்ளேதான் நம் மனதை மயக்கும், நெகிழவைக்கும் சிற்பங்கள் பிறக்கின்றன. கல்லைத் துளைக்கும் உளியின் ஓசையும் செதில் செதிலாக கற் சிதைவுகள் சிதறி விழும் சப்தமும் ஒரு சிற்பம் பிறக்கும் முன்பு ஏற்படும் வலி. அந்த வலி நமக்கு சப்தமாகக் கேட்கிறது.
கண்ணுறுவோர் சிந்தனையைக் கவரும் அழகிய சிற்பங்களை உருவாக்கும் சிற்பிகளை மனிதக் கடவுள் என்றால் தவறில்லை. ஒவ்வொரு சிற்பிக்கும் ஒரு சிலை செதுக்குவது என்பது தவம் போன்றது. உளியின் வழியே தங்கள் நுண் திறத்தால் பல வகை சிற்பங்களை வடிக்கின்றனர். ஒரு கைதேர்ந்த சிற்பியின் உளி, கல்லை நெகிழ வைத்து எழில் கொட்டும் சிலையாக்கிவிடும் விந்தை எப்படித்தான் நிகழ்கிறதோ! அதனால்தான் பழங்கால மன்னர்கள் சிற்பிகளுக்கும் ஓவியர்களுக்கும் பாவாணர்களுக்கும் சிறப்பையும் பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து ஆராதித்தனர். இதைப் பல வரலாற்று ஏடுகள் நமக்குக் காட்டுகின்றன.
சிற்பக் கலை சோழர் காலத்திலும் பல்லவர் ஆட்சிக் காலத்திலும்தான் செழித்து வளர்ந்தது. ஆனாலும் இரண்டு ஆட்சிக் கால சிற்பங்களுக்கும் வேறுபாடு இருந்தன. காரணம் சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பது உண்மையென்றாலும், சோழர்கள் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரமாக இருந்ததாகத் தெரியவில்லை . சிற்பங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ‘ஆகம’ விதிகள் பல்லவர்களின் காலத்தில்தான் வடிவம் பெற ஆரம்பித்தன. அதனால், பல்லவர் காலத்துச் சிற்பிகள் தங்கள் விருப்பம் போல், தங்கள் கலைத் திறனையெல்லாம் காட்டிச் சிற்பங்கள் வடித்தனர். சோழர் காலத்தில், ஆகம விதிகள் வலுப் பெற்று இருந்தன. எனவே‘ இப்படித்தான் சிலைகளை வடிக்க வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால், தங்கள் கலைத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் சோழ சிற்பிகளால் முழுவதுமாக சிற்பங்கள் வழியே வெளிக் கொணர முடியவில்லை.
சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான் எனச் சிலம்பு கூறுவதில் இருந்து அப்போதுதான் முதன்முதலாக கற் சிற்பங்கள் தென்னிந்தியாவில் தோன்றின என்று அறிய முடிகிறது.
“புன்மயிர்ச் சடைமுடி புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இரு பிறப்பாளரொடு பெருமலை அரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல்தரான் எனின்
வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை………” (சிலப்பதிகாரம் 28:225-231)
(…முத்தீ வளர்த்து வேள்வி செய்யும் முனிவர்கள் வாழும், இமயப் பெருமலைக்கு அரசன், இளமையிலேயே பெரும் புகழ் பெற்ற பத்தினித் தெய்வத்துக்குச் சிலை செய்ய ஒரு கல் தர மாட்டானா என்ன? தருவான். தரவில்லை என்றால், பிறவி எடுத்த பயன்- வாழும் உயர்வுடைய வாழ்வும் வீணே)
இத்தனைச் சிறப்புகள் கொண்ட சிற்பங்களை பார்த்ததும் நமக்கு உடனே நினைவில் வருவது உலகப் புகழ் கொண்ட மாமல்லபுரம்தான். மாமல்லபுரம் பல ஆயிரம் ஆண்டுக்காலப் பழமைச் சிறப்புடையது. சங்க இலக்கியத்தில் கூட அந்த ஊரின் பெயர் ‘நீர்ப் பெயற்று’ என்று குறிக்கப்படுகிறது. இங்கு துறைமுகங்கள் இருந்ததையும் வெளிநாட்டு வாணிபங்கள் நடந்ததையும் அறிகிறோம். இங்கு பல்லவ மன்னர் கலைநயங்களைப் பாறைகளிலே சிற்பங்களாகவும், குகைக்கோயில்களாகவும், குடவரைக்கோயில்களாகவும், கடற்கரைக் கோவில்களாகவும் அமைத்துள்ளார்கள். அவைகள் இன்றளவும் பழமையின் கர்வத்தோடு கம்பீரமாய் இருக்கின்றன
சிற்பங்களை வடிக்கும் கலை பற்றி அறிய மாமல்லபுரம் பயணமானோம். அருகில் செல்லச் செல்ல பல்லவர் காலத்தில் சிற்பிகள் சிலைகளை வடிப்பது போன்ற ஒரு காட்சி மனத் திரையில் ஓடியது. கடற்கரை காற்றில் கலந்து செவிகளுக்குள் சிற்பம் செதுக்கும் ஓசை விழுவது போல் தோன்றியது. மாமல்லைக் கடற்கரை சிற்பங்களை காணச் செல்வதற்கு முன்பே கிழக்குக் கடற்கரை சாலையின் ஓரத்தில் சிற்பக் கூடங்கள் காணப்படுகின்றன. அவை நம் கவனத்தை இழுத்தன. ஒவ்வொரு சிற்பக் கூடத்திலும் நான்கு ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். சிற்பக் கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதி கல்லாகவும் மீதி உருவமாகவும் இருக்கும் சிற்பக் கற்கள் நின்றுகொண்டு இருக்கின்றன. சிற்பம் படைக்க வழி கொடுத்து விலகிய சிறு சிறு கற் துண்டுகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன.
வரிசையாக உள்ள சிற்பப் பட்டறைகளில் ஒன்றில் மட்டும் சிலைகள் நிறைய காணப்பட்டது. அந்தப் பட்டறைக்குள் சென்று நாங்கள் ‘சிறகு’ இணைய ஊடகத்திலிருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் துவங்கினோம். அந்த சிற்பக் கூடத்தின் உரிமையாளர் காரைக்குடியைச் சேர்ந்த செந்தில் குமார் சிற்பம் வடிக்கும் முறைகள், உளிகளின் வகைகள் பற்றி விளக்கினார். அவர் கூறியது;-
“கல்லினால் வடிக்கப்படும் சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
- பிரதிமை உருவங்கள் என்பவை சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும்.
- தெய்வ உருவங்கள் என்பவை சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட கடவுள் உருவங்கள் ஆகும்
- கற்பனை உருவங்கள் என்பவை காமதேனு, கற்பகமரம் போன்றவை ஆகும்
- இயற்கை உருவங்கள் என்பன மரம், செடி, கொடிகளாகும்.
சிற்பங்களை செதுக்கும் கற்களை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் லிங்கபுரம் என்ற கிராமத்தில் இருந்து வாங்கி வருகிறோம். கன அடி மதிப்பில் இந்தக் கற்களை வாங்கி வருகிறோம். திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலும் சிற்பம் செய்யும் கற்கள் கிடைக்கின்றன. இந்த லிங்கபுரம் எங்களுக்கு பக்கம், இந்த ஊர் கல் விலையும் குறைவு. அதனால் லிங்கபுரத்திலேயே கல் வாங்குகிறோம். பக்கத்தில் இருக்கும் அரசு சிற்பக் கல்லூரியில் எனது தாத்தா, எனது தந்தை ஆகியோர் பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சிற்பம் செய்வதைக் கற்றுக் கொண்டேன். நாங்கள் கருங்கல் சிற்பம், சுதை (சிமெண்ட்) சிற்பம் போன்ற சிற்பங்களை செய்கிறோம். இதோ இந்த சிற்பம் செய்ய (மூன்று அடிகொண்ட கல் சிற்பத்தைக் காண்பிக்கிறார்) பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஆகும். இதன் விலை 15000 ரூபாய். இங்கு சிலைகளை செய்து கடற்கரைக் கோவில் அருகில் உள்ள எங்கள் விற்பனைக் கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம்.
பெரும்பாலும் கோவில்களுக்குத்தான் அதிகமான சிலைகள் செய்யக் கேட்டு வந்து முன்பணம் கொடுப்பார்கள். அதிலும் வட மாநிலங்களில் இருந்துதான் நிறைய பேர் வருவார்கள். தமிழகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் தங்கள் பண்ணை வீடுகளில் வைக்க இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள் போன்ற வகைகளில் சிலைகளை செய்யச் சொல்வார்கள். அந்தக் காலத்தில் வெறும் உளியைக் கொண்டுதான் சிற்பம் செதுக்கினார்கள். இப்போது கற் துண்டுகளை அறுக்க இயந்திரம் இருக்கிறது. முதலில் கல்லில் சாந்துக் கலவையால் குறித்து விடுவோம். பின்னர் அறுத்து எடுக்க வேண்டிய பகுதிகளை கல் அறுக்கும் இயந்திரத்தால் நீக்கிவிட்டு உளிகளால் சிலை செய்யத் தொடங்குவோம். உளிகள் கூர்மை மழுங்கினால் பக்கத்தில் (பள்ளம் தோண்டியுள்ள பகுதியை காட்டுகிறார்) உள்ள உளி தீட்டுக் கலனில் கரித் துண்டுகள், உமி போன்றவற்றை போட்டு விசைக்காற்று செலுத்தும் இயந்திரத்தால் தீ உருவாக்கி உளிகளை கூர் தீட்டுவோம்.
சிற்பம் செய்யும் வேலைக்கு வருவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து சிற்ப வேலைக்கு வரும் மாணவர்களை விட, தன் தந்தையிடமோ அல்லது வேறு எவரிடமோ தொழில் கற்றவர்கள்தான் சிற்ப வேலைக்கு வருகின்றனர். மன்னர் காலத்தில் பெரும் புகழோடு இருந்த கல் சிற்பக் கலைஞர்கள் நாளைடைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு கல் சிற்பங்கள் மூலம் கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவது குறைந்தது. கல் சிற்பத் தொழிலாளர் பலர் வேலையிழந்து மாற்றுத்தொழிலுக்குச் சென்று விட்டனர். தற்போது குறைந்தளவே தொழிலாளர்கள் கல் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் சிற்பம் செய்யும் பணி ஒரு ஆத்ம சுகத்தைக் கொடுக்கிறது.” என்று அவர் கூறினார்.
அந்த சிற்பக் கூடத்தில் பணியாற்றும் மனோகர், ஏழுமலை ஆகியோர் கூறும்போது, “நாங்கள் சிற்பக் கல்லூரியில் படித்துவிட்டு இங்கு வேலைக்கு வந்தோம். எங்களுக்கு ஒரு நாளைக்கு 250, 300 ரூபாய் ஊதியம் தருகிறார்கள். ஆனாலும் எங்களைப் போன்ற இளைஞர்கள் சிற்ப வேலைக்கு வரத் தயங்குகின்றனர். தொழில் நுட்பப் படிப்புகளில் அதிக சம்பளம் கிடைப்பதால் இது போன்ற வேலைக்கு வரத் தயங்குகின்றனர்.” என்றார்கள். அவர்கள் சொன்ன பக்கத்தில் இருந்த சிற்பக் கல்லூரிக்குச் சென்று சிற்பக் கலை படிப்பு பற்றி தகவல்கள் அரிய அக்கல்லூரிக்குச் சென்றோம்.
கல்லூரிக்குள் சென்று அங்கு ஒரு பேராசிரியரிடம் சிற்பப் படிப்புப் பற்றி கேட்டோம். அவர் கூறியது: “தமிழகத்திலேயே மாமல்லபுரத்தில் மட்டும்தான் அரசு சிற்பக் கல்லூரி உள்ளது. இங்கு கோவில், கட்டடக் கலை, மரபு சிற்பம், கல் சிற்பம், சுதை சிற்பம், மரச் சிற்பம், உலோக சிற்பம், மரபு ஓவியம் மற்றும் வண்ணம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இவைகள் நான்கு ஆண்டு படிப்பு ஆகும். ஆண்டுக்கு மாணவர்களிடம் மிகவும் குறைந்த அளவே அதாவது ஆண்டுக்கு 2500 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெறுகிறோம். ஆனாலும் ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை குறைந்த அளவே இருக்கிறது. இக்கல்லூரியில், கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி கல்லூரி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது”
அந்தக் கல்லூரியை பார்த்தபோது, ராசராச சோழன் தஞ்சை பெரிய கோயில் அமைக்க சிற்பிகளை இருத்தி வைத்த இடம் போல் காட்சியளித்தது. கூடவே, பொறியியற் கல்லூரிகளை போட்டி போட்டுக் கொண்டு தனியார்கள் தொடங்குகின்றனர். அதற்கு அரசும் நிதி உதவியும் ஊக்கமும் அளிக்கிறது. இந்த சிற்பக் கல்லூரிக்கு இன்னும் நிதி அளித்து ஊக்கம் தந்து சிற்பக் கலையின் சிறப்பைப் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்லூரியை மேம்படுத்தினால் சிற்பக் கலை சிதையாமல் இருக்குமே என்ற எண்ணமும் தோன்றியது. அரசு ஆவன செய்தால் நல்லதுதான். செய்வார்களா? என்ற கேள்வியோடு திரும்பும்போது சாலையில் உள்ள சிற்பப் பட்டறையில் இருந்த சிற்பங்கள் வழி அனுப்பி வைத்தன.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சிற்பக்கலை..சென்னையில் வேரு எஙகு சொல்லி தருகின்ரனர்