மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாற்று வேலை வாய்ப்புகள் பகுதி 2

ஆச்சாரி

Jun 3, 2011

புள்ளியியல்/விளம்பர ஆய்வர்

கணினிகளின் இயங்குதிறன் இன்றைய நாளில் வெகு அதிகமாக ஆகி விட்டது, ஏராளமான தகவல்கள் ஒவ்வொரு துறை குறித்தும், கணினிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது புள்ளியியல் நிபுணர்களின் தேவையை அதிகரித்து உள்ளது, இவர்களின் வேலை குவிந்து கிடக்கும் தகவல்களை ஆராய்ந்து புள்ளியியல் மென்பொருட்களை, முறைகளை பயன்படுத்தி முக்கியமான விவரங்களை கண்டறிவது ஆகும். சந்தை ஆய்வு நிபுணர்களுக்கும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. கணிதம் மற்றும் புள்ளியல் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்.

 

சுற்றுலா

நடுத்தர மக்களிடையே செல்வம் சேர்ந்துவிட்ட நிலையில், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. வெளிநாட்டு பயணிகளும் இந்தியாவுக்கு வருவது அதிகரித்து உள்ளதால் பிரகாசமான வாய்ப்புகள் இத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. சேவை எண்ணமும், பொது மக்களிடையே எளிதில் பழகும் திறமையும், உள்ளவர்கள் இத்துறைக்கு செல்லலாம். விடுதி மேலாண்மை கல்வி நிறுவனங்களும் செயல்பட துவங்கி உள்ளன.

 

போக்குவரத்து

விமான பயணங்கள் அதிகரித்துள்ளதாலும், திறமையான விமான ஓட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் செல்வம் தரும் துறையாக இது உள்ளது. விமானியாக பல வருட கல்வி, பயிற்சி, பல மணி நேர விமான ஓட்டும் பயிற்சி போன்றவை தேவைபட்டாலும் இத்துறையில் பேராவல் கொண்டவர் யாராயினும் பிரகாசிக்கலாம்.

 

சில்லறை வணிகம்

ஒழுங்கு படுத்தபடாத துறையாக இது இருப்பினும் உலகமயமாக்கலுக்கு பிறகு நிலை மாறி பல பெரு நிறுவனங்கள் சங்கிலித் தொடர் சில்லறை வணிக கடைகளை திறந்துள்ளன. மொத்த விற்பனை செய்வோர், கிடங்கு கையாள்வோர், சில்லறை வணிகர், கடை மேலாளர் என்று பல புதிய வாய்ப்புகள் இத்துறையில் வளர்ந்து உள்ளது.

 

வங்கி, நிதி மற்றும் காப்பீடு

வளம் மற்றும் வேலைவாய்ப்புகள் கொழிக்கும் துறையென இதனை விவரிக்கலாம். கணக்காளர்(Auditor) தொழில் செய்வோர் ஒரு நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வாகம் மற்றும் ஆய்வு செய்கின்றனர், பணம் பெருகி போன இந்நாளில் புதிதாக ஏற்பட்டு இருக்கும் வேலை. இது செல்வத்தை முதலீடு செய்யும் வாகனங்களான பங்குகள், பத்திரங்கள், முன்பேரம் போன்றவற்றை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் வேலை ஆகும். மேலும் செய்யப்பட்ட முதலீடுகளை மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு வேலை செய்தல் இவ்வேலையின் மற்ற பொறுப்புகள் ஆகும். காப்பீடு இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் மற்றொரு துறையாகும்.

 

தொலைக்காட்சி, விளம்பரம், திரைப்படம்

இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த ஒற்றை தொலைக்காட்சி என்ற நிலை மாறி இன்று நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள் வந்துவிட்டன, இதனுடன்  இணையமும் சேர்ந்துவிட்ட நிலையில் இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. படைப்பாற்றல் நிறைந்தவர்களுக்கும், தொழில் நுட்ப பணியாளர்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இந்திய ரசிகர்களின் ரசனையும் உயர்ந்து விட்டது, அதனால் இத்துறை வல்லுனர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். நுகர்வு கலாச்சாரம் தன பங்குக்கு விளம்பரத்துறை வேலைவாய்ப்பை வெகுவாக அதிகரித்து இருக்கிறது.

 

விற்பனை

விற்பனை செய்வதில் வல்லமை என்பது வாழ்வில் மிக சிறந்த ஒரு திறமை ஆகும், விற்பனை செய்வோர் வேலை செய்யாவிட்டால் மற்றவர்க்கு வேலை கிடைப்பது அரிது. விற்பனை தொழிலை பயிற்றுவிப்பதற்கு நிறைய கல்வி நிறுவனங்கள் தோன்றி உள்ளன. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மக்கள் தொடர்பு திறமை கொண்டோர் இத்தொழிலை நாடுவது சால சிறந்ததாக இருக்கும். விற்பனை செய்யும் அளவை பொறுத்து இத்துறையில் ஊக்கத்தொகையும் (incentives) வழங்கப்படுகிறது.

 

மேலே விவரிக்கபட்டவை மட்டுமல்லாமல் மொழி வல்லுனர்கள், இதழாளர்கள், வாகன போக்குவரத்துநிபுணர்கள், கப்பல் பணியாளர், பல்துறை ஆசிரியர் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் பெருகி உள்ளது. வேலையின் மீது நல்லெண்ணப்பாடு, கடின உழைப்பு மற்றும் தம் திறமையில்இருந்துவேண்டியதை பெறும் கூர்மதி உள்ளோருக்கு வாய்ப்புகள் குவிந்து உள்ளன. உங்கள் மனதில் பேராவல்,பொங்கும் துறையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள், நிச்சயம் பெருவெற்றி அடைவீர்கள்.

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாற்று வேலை வாய்ப்புகள் பகுதி 2”

அதிகம் படித்தது