மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மின்னும் பொன் நகையின் பின்னால் பொற்கொல்லர்

ஆச்சாரி

Apr 15, 2012

தங்கம். இந்த வார்த்தையைக் கேட்டாலே பெண்களுக்கு முகம் மலரும். ஏன் எல்லோருக்கும்தான் மலரும். இன்றைய உலகில் நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு திருமண விழாவா அங்கு நகை தான் நாயகம். பெரும்பாலும் திருமணப் பேச்சு – எத்தனை சவரன் நகை என்ற வார்த்தையோடுதான் ஆரம்பமாகும்.  தங்க நகைகளை அணிந்து திருமண விழாக்களில் உலா வருவதில் எல்லோருக்கும் தனிப் பெருமிதம். ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை பார்ப்பவர்கள் முதலில் அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளை பார்த்து மதிப்பிட்டுவிட்டுத்தான் மற்றவற்றைக் கண்ணுறுவார்கள். அந்த அளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் மக்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு பக்கம் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது, இன்னொரு பக்கம் தமிழகத்தில் தங்க நகைக் களவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தங்க நகை விலையில் ஏற்றம் அதிகம் இருக்கும், இறக்கம் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் தங்கத்தின் மீதான ஆசை யாருக்கும் குறையவில்லை. தங்கத்தை வெட்டி எடுப்பதிலிருந்து வட்டிக் கடை நடத்துவோர் வரை தங்கம் பெரும்பாலோருக்கு வருமானத்தை அள்ளித் தருகிறது.

தங்க நகை செய்பவர்களான பொற்கொல்லர்களைப் பற்றி அறிய ஆவல் வந்தது. பொன் நகைக்கு என்று மதிப்பும் பெருமையும் உருவானதோ அன்று முதல்  பொற்கொல்லருக்கும் தனிப்பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. புராண இதிகாசங்களில் அரசனுக்கு சமமாக  அமரும் வாய்ப்பு பொற்கொல்லர்களுக்குக் கிடைத்தது என்றும் மன்னனின் வாரிசுக்கு முடிசூட்டுவதாக இருந்தால்
முதலில் பொற்கொல்லரைத்தான் மன்னர் அணுகுவார் என்றும் வரலாற்று நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. இத்தகு சிறப்பு வாய்ந்த பொற்கொல்லர்களின்  இன்றைய நிலை பற்றி அறிய நண்பர் ஒருவரின் உறவினர் நகை செய்யும் தொழிலை விழுப்புரத்தில் செய்து வருவதை அறிந்து விழுப்புரம் சென்றோம். நாம் சென்ற நாளில் நகைக் கடைகள், அடகுக் கடைகள் போன்றவைகள், மத்திய அரசின் தங்கத்தின் மீதான வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடைக்கப்பட்டிருந்தன.

நாம் தேடி வந்த நபர் இருப்பாரா என்ற தயக்கத்துடன் சென்றோம். நல்ல வேளை இருந்தார். விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நகை செய்யும் கடையை நடத்திவரும் திரு, சுப்பிரமணிதான் அவர். அவரிடம் நாங்கள், ‘சிறகு’ இணையப் பத்திரிகையில் இருந்து வருகிறோம்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு- தங்க நகை செய்யும் தொழிலின் இன்றைய நிலை பற்றி நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

நகை செய்யும்  தொழிலை முப்பது வருடங்களாக இவர் செய்து வருகிறார். இது அவருக்குக்குப் பரம்பரைத் தொழில், அவரது தாத்தா, தந்தை ஆகியோரிடம் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.  தங்கத்தை நகையாக்கும் தொழில் என்பதால் இவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படியல்ல.  இப்போது உள்ள நிலையே வேறு. அவர் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இருந்த நிலைமை வேறு என்று கூறி இருவேறு காலகட்டத்தை விவரித்தார்.

பத்து பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்பு , மக்கள் இவர்களிடம் (பொற்கொல்லர்கள்) , தங்கத்தைக் கொடுத்து,  திருமண விழாக்களுக்கும் மற்ற மங்கல விழாக்களுக்கும் தங்கள் விருப்பத்துக்கேற்ப விதவிதமான வடிவங்களில், நகைகளை செய்து கொடுக்கச் சொல்வார்கள். காலப்போக்கில் இந்த நிலை மாறி தற்போது பெரும்பாலும் இவர்களிடம் நகை செய்வதை விட நகைக்கடைகளிலேயே அதிகம்பேர் நகை வாங்குகின்றனர்.  மக்கள் இப்போது இவர்களிடம் அறுந்த நகைகளை இணைத்துத் தர, பட்டை தீட்ட இவைகளுக்கு மட்டும்தான் வருகிறார்கள். இதனால் பொற்கொல்லர்களுக்கு வருமானம் மிகவும் குறைந்து விட்டது.

இவர்கள் பழைய நகைகளில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டை என்ற கொட்டை வகை  ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் (தேங்காய் நார் போன்றது)  தேய்த்துத் தூய்மை செய்கிறார்கள். (கில்ட்)

இந்த நகை செய்யும் தொழில் நலிவடையத் துவங்கிய உடன், ஏராளமான  பொற்கொல்லர்கள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில்,ஒரு நாளுக்கு  400 முதல் 500 ரூபாய் ஊதியத்தில், தினக் கூலியாக வேலை செய்கிறார்கள்.  தமிழகம் முழுவதும், 2 லட்சத்துக்கும் அதிகமான பொற்கொல்லர்கள் உள்ளனர். நகை செய்யும் பணி எவ்வளவு புனிதப் பணி என்பதை, திருமணம் என்றாலே தாலி தான் முக்கியத்துவம் பெறுகின்றது அந்தத் தாலியை யார் செய்வார்?  இவர்களால்தான் (பொற்கொல்லர்கள்)   செய்ய முடியுமே தவிர  வேறு யாராலும்  செய்ய முடியாது.

அந்தக் காலத்தில் நகை செய்யும் ஆசாரிகள்  தமது வீடுகளிலேயே பட்டறைகள்  அமைத்திருப்பார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடுவர். நகை தேவைப்படுவோர் தங்கத்தை நகையாகவோ, தங்க நாணயமாகவோ கொடுப்பார்கள். ஒரு நகையின் வகை  போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து  அதில் பதிக்கப்படும் கல், முத்து போன்றவைகளை வகைக்குத்  தகுந்தவாறு  நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல  அம்சத்திலும் பொற்கொல்லர்களின் பங்கு இன்றியமையாதது.  1063 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் தங்கம் உருகும். அப்போது அதன் நிறம் பச்சையாகத் தோன்றும். இதனை தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டுவதும் எளிது.. ராஜ திராவகம் எனப்படும் பாதரசத்தில்தான்  தங்கம் எளிதில் கரையும் என்று நகை ஆகும் முன் தங்கத்தின் இசைவுகள்  பலப்பல உள்ளன.

நகை செய்யும் இவர்களுக்கு சேதாரம் ஏதும் கொடுக்கப்படுவது கிடையாது.  இவர்களுக்கு உண்டான  வருமானம் நகையின் வகையை பொறுத்து அமையும். இதில்  நான்கு முதல் எட்டு சதவீதம் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுவிடும். நகைக் கடைகளில் தொன்று தொட்டு கேட்டுப் பழகிவிட்ட சேதாரம் நியாயமாக இந்த  நகைத்தொழிலாளருக்குத்தான் கிடைக்க வேண்டும். ஆனால் அந்த சேதாரம் நகைக்கடைகாரர்களுக்கு ஆதாரமாகி நகைக் கடை அதிபர்களுக்கு லாபத்தை ஈட்டித் தருகிறது. இதன் மூலம் பொற்கொல்லர்களின் வேதனையும் நகைக் கடைக்காரர்களின் அதீத வருமானமும் நமக்குத் தெரிந்தது.

நகை செய்வோர் தங்கத்தைக் கழுவிய நீரை சாக்கடையில் கொட்டிவிடு வதில்லை. அந்த நீரைக் காய்ச்சி அதில் இருக்கும் தங்கத் துகள்களை  எடுத்து விடுகிறார்கள். இப்படி எடுக்கும் தங்கத் துகள்களில் சிறு சிறு நகைகள் செய்துவிடுகிறார்கள். (நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்துச் செல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.)

தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு  செம்பு அல்லது  வெள்ளியைக் கலந்து செய்யப்பட்ட  நகை,  நாணயம்,  பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும்.  இன்றைய நகை செய்வோர் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் என்ற உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள் . செம்பை பொன்னோடு கலந்து அதன் வன்மையைக் கூட்டி மாழைக் கலவையை  உருவாக்கி நகை செய்யத் தொடங்கிய பின் தான், கலவையின் தரம் அறியத் தொடங்கினர்.   இப்போது வெள்ளி, நாகம், நிக்கல், ரோடியம், பல்லேடியம் போன்றவற்றைப் பொன்னோடு கலக்கிறார்கள்.

தங்கத்தில், எவ்வளவு பொன், எவ்வளவு செம்பு இருக்கிறது, என்று தெரிந்துகொள்ள  இரண்டு முறைகள் உண்டு. ஒன்று திண்ணிமையை (திண்ணிமையை அடர்த்தி என்றும் கூறுவது உண்டு.) அளந்து கண்டு பிடிப்பது;  இன்னொன்று உருகு வெம்மை வைத்துக் கண்டுபிடிப்பது. இந்த இரண்டு வழிகளில்தான் கலவையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இவர்களிடம் விழுப்புரத்தில் உள்ள நகைக் கடையினர் சிறிய சிறிய நகைகளைத்தான் செய்யச் சொல்கிறார்கள். பெரிய பெரிய நகைக் கடையினர் கோயம்புத்தூரில் உள்ள நகைப் பட்டறையில் செய்யச் சொல்கிறார்கள். ‘பத்து வருடங்களுக்கு முன் இருந்த வருமானம் இப்போது இல்லை. அதனால் இவரது மகனுக்கு இந்தப் பணி செய்ய ஆர்வமில்லாமல் சென்னையில்  வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.   “ நகைகள் மீது மக்களுக்கு ஆசை இருக்கும் வரை இவர்களின் தொழிலுக்கும் வருமானம் கிடைக்கும்” என்று பொற்கொல்லர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

நம்மிடம் இத்தனை தகவல்களைப் பகிர்ந்து கொண்டவரிடம் நன்றி கூரை விடை பெறும்போது, ஒரு பெண்மணி வந்து ‘ஏங்க ஆச்சாரி, அறுந்த இந்த செயினை பத்த வச்ச அடியாளம் தெரியாம ஒட்ட வச்சி கொடுங்க’ என்று கூறி ஒரு தங்கச் சங்கிலியைக் கொடுத்தார். தங்கத்தை உருக்கி அழகிய ஆபரணங்களை செய்யும் இத்தொழில் செய்வோருக்கும் தங்கத்தைப் போல நாளுக்கு நாள் மதிப்பு உயராதா என்றி எண்ணியபடி அங்கிருந்து புறப்பட்டோம்.

The smallest proportion, those classified as stopgap students, college-homework-help.org were studying because they could think of nothing else to do, wanted to defer taking a decision, or simply wanted to enjoy themselves for three years

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மின்னும் பொன் நகையின் பின்னால் பொற்கொல்லர்”
  1. kondraivendhan says:

    நல்ல தகவல் கட்டுரை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத்தொழிலில் உள்ள குடும்பஙள் நசிவடைந்து வருகிறது. மேலும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவையில் பல குடும்பஙள் போண்டோடு தற்கொலை செஇது கொண்டனர்.முதன்மைக்காரணஙள் நம் கலை உலக நடிகர்கள் மலையாண்டிகளின் ஏக போக நகைக்கடைகளில் குத்து விளக்கேற்றி வைத்து இவர்கள் வேட்டை இருட்டாக்குவது தான். நேரடியாய் சென்று தகவல் சேகரித்து தந்த கட்டுரையாளருக்கு நன்றி.

அதிகம் படித்தது