மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீன் குழம்பு

ஆச்சாரி

Dec 1, 2011

தினம் தினம் வித விதமாக குழம்பு வைத்து உண்டாலும், மீன் குழம்பு உண்ணும் போது கிடைக்கும் மகிழ்வும், திருப்தியும் வேறு எந்த குழம்பிலும் கிடைப்பதில்லை. காய்கறிகளை வாங்கி, நறுக்கி, சமைத்து உண்ணும் இயந்திரத்தனமான அனுபவத்திற்கிடையில், மீன்களை தூக்கி, திருப்பி, அழுத்தி பார்த்து வாங்குவது முதல் சுத்தம் செய்து, சமைத்து, குடும்பத்தினருக்கு பரிமாறி, தானும் உண்ணும் வரை அனைத்துமே மகிழ்வான பொழுதுகள். அதிலும் இரண்டு துண்டு மீனுடன் சிறிது குழம்பைத் தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்து மறுநாள் சாதத்துடன் உண்ணும் போது கிடைக்கும் சுவைக்கு ஈடோன்றுமில்லை.
ஆட்டிறைச்சி, கோழிக்கறி போன்று ஒரே சுவையுடன் சலிப்புத் தட்டும் குறையும் மீன் குழம்பினில் இல்லை. வேறு வேறு வகை மீன்களை வாங்கி தினம் கூட சுவை சுவையாக மீன் குழம்பு வைக்க முடியும். நெய் மீன் (சென்னையில் இதை வஞ்சிர மீன் என்றும் கூறுவார்கள்) குழம்பு ஒரு சுவை, நெத்திலி குழம்பு வேறு சுவை, விரால் குழம்பு தனி சுவை என்பதை உண்டவர்கள் அனைவரும் அறிவர்.   சிலர் கடல் மீன் சுவையை விரும்புவர், சிலர் ஆற்று மீன் சுவைக்கு அடிமையாவர், சிலரோ தங்கள் ஊர் குளத்து மீன் சுவைக்கு இணையில்லை என்பர்.

அதிக சுவையான உணவுகள் பெரும்பாலும் உடல் நலத்திற்கு கேடானவைகள் என்பதை மீன்கள் பொய்த்து போகச் செய்துவிடுகின்றன. மீனைப் போன்ற சத்தான உணவை காண்பதரிது. உடல் திறனுக்கும், புத்திக் கூர்மைக்கும் அவசியமான புரதச்சத்து மீனில் அதிகளவு இருக்கின்றது. ஒரு நாளைக்கு நமது உணவில் 45 முதல் 55 கிராம் புரதச்சத்து அவசியம். அடிக்கடி மீன் உண்பதன் மூலம் நமக்கு தேவையான புரத சத்தை எளிதாக பெறலாம்.

அதே நேரம் மீனில்  கொழுப்பு சத்து மிக குறைவாகவே இருக்கிறது. இது மாரடைப்பு வராமல் தடுக்கிறது. மீன் அடிக்கடி உண்ணும் குழந்தைகளின் கல்வி தொடர்பான திறமைகள்  அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன்  கூடுவதாகவும்  ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கடல் மீனில் ஏராளமான  ஒமேகா-3- அமிலம் உள்ளதால் மீன்  மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது என்கின்றனர். குறிப்பாக பாசிநிறம் அதிகமுல்ல அடர் நிறமுள்ள மீன் வகைகளில்  ஒமேகா-3- அமிலம் அதிகளவில் காணப்படுகிறது. மீன் உணவை அதிக அளவில் சேர்த்து கொண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும், வயதான காலத்தில் தாக்கும் மறதி நோய் (Dementia and Alzheimer ‘s disease) வராது என்றும் கண்டறிந்துள்ளனர். ஒமேகா-3 நமது தோலை பளபளவென அழகாக்கும் பணியையும் செய்வது கூடுதல் பலன்.
இத்தனை நலன்களும் மீன் குழம்பால் தான் முழுதாகக் கிடைக்கும். மீனை வறுத்து உண்டால், எண்ணையில் வறுப்பதால் கொழுப்பு சத்து அதிகரித்துவிடும்.

கடல் மீன்களில் நெய்மீன் (வஞ்சிரம்) , வாளை மீன், கிழங்கா மீன், சென்னகரை (சங்கரா மீன்), பாறை மீன், வாவல் மீன் (வவ்வால் மீன்) போன்றவைகள் சுவையானவை. கடலில் கரையோரம் பிடிக்கப்படும் கரைவலை போன்ற மீன்களும் சுவை மிகுந்தவை. நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் தனி சுவையுடையது. (இதன் தலையை உண்ண மாட்டார்கள் நச்சு உள்ளது என்றும், சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்பர்).
நம் ஆறுகளில் இருந்து பல வகை மீன்கள் கிடைத்தாலும் ஆற்று மீன் என்றாலே நாக்கு நினைவூட்டுவது கெழுத்தி மீனைத்தான். நன்றாக மழை பெய்த உடன் 15 நாள்களில் கெழுத்தி மீன்கள் கிடைக்கத் துவங்கும். மண் சட்டியில் கெழுத்தி குழம்பு வைத்து சாப்பிட்டால், அந்த அருமையான சுவை எத்தனை ஆண்டுகளானாலும் மறக்காது.
ஏரி, அணைக்கட்டு மீன்களில் கெண்டையும், விராலும் சுவை மிகுந்தவைகள். மேட்டூர் அணையில் கிடைக்கும் மீன் சுவை ஊரறிந்தது.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு மாற்றங்களுடன் மீன் குழம்பு சமைக்கப்படுகிறது. மீனிற்கு பெயர் போன இராமநாதபுர மாவட்டத்து மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ கிராம்
நல்லெண்ணெய் – 50 மில்லி.
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி  150 கிராம்
புளி -  50 கிராம்
புளி கரைக்க தண்ணீர் – 300 மில்லி லிட்டர்
பச்சை மிளகாய் – 3
மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
மல்லிப்போடி – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
சிறிதளவு மல்லி, கறிவேப்பிலை இலைகள்

மீனை நன்றாக தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மீன்  வாடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் கழுவுவதற்கு முன் மீனில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கழுவினால் வாடை குறைந்துவிடும்.
புளியை நன்றாக ஊறவைத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
முக்கால் பகுதி வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து கரகரப்பான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
கரைத்த புளி தண்ணீரில் அரைத்த வெங்காயம், தக்காளி விழுதையும், மல்லிப்பொடியையும், பச்சை மிளகாய்களையும், சிறிது மல்லி இலையையும் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்.  இந்த கரைசலில் கழுவிய மீனையும் சேர்த்து  தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் சட்டியை வைத்து சூடேறியவுடன் வெந்தயம் தாளித்து , கறிவேப்பிலை, வெங்காயம், மல்லி இலை போட்டு வதக்கவேண்டும் .
பிறகு மீதமுள்ள அறிந்த வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் இரண்டு தேக்கரண்டி மிளகாய்ப் பொடி சேர்த்து, புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பின் தணலை மிதமாக்கவும்.
பதினைந்து நிமிடம் மிதமாக தீயில் வைத்து பச்சை மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
பின் எண்ணெய் மிதந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும் . அதிக நேரம் வேக வைத்தால் மீன் துண்டுகள் உடைந்து விடும்.

வெற்றி, சுவையான மீன் குழம்பு சமைத்து விட்டீர்கள். சாப்பிட்டு உங்கள் அனுபவங்களை வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.



Additionally, the only way two users are trymobilespy.com able to message each other within tinder is if they mutually expressed interest by liking’ each other, which results in a match

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மீன் குழம்பு”
  1. john jayaprakash says:

    படிக்கும் பொழுதெ நாவில் நீர் ஊருகிரது.
    குழம்பு கொதிக்கும் பொழுது மீனை போட வேன்டும.னன்ரி

  2. kasi visvanathan says:

    மீன் குழம்பில் இத்தனை செய்திகளா..? அதற்குத்தான் இப்படி பாடினார்களோ..!? நித்தம் நித்தம் நெல்லிசோறு நெய் மனக்கும் கத்திரிக்காய் …நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா…நெஞ்சுக்குள்ள அந்த நினைப்பு இன்னும் இருக்குதய்யா..!! இதை படித்தபின்பு இதுதான் நிலை. குழம்பு வைத்தபிறகு சுவை கூற வருகிறோம். நன்றி.

  3. rajapriya says:

    எப்ப மீனை போட வேண்டும் என சொல்லவில்லை.

    • raja says:

      செய்முறை பத்திகளில் , கடைசி பத்திக்கு முன் பத்தியில் மீனை விட்டுவிட வேண்டியதுதான் தோழர்!

அதிகம் படித்தது