மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முன்பயிற்சி இல்லாத முக்கியப் பணி (கட்டுரை)

ஆச்சாரி

Jun 1, 2013

பயிற்சியும் சான்றிதழும்:

மனித சமுதாயத்தில் எந்தப் பொறுப்பான‌ வேலைக்கும் முன்பயிற்சி தேவைப்படுகின்றது. எதிர்பார்க்கப்படுகின்றது; அதனால் அப்படித் தேவையான முன் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. அதில் தேர்வு வைத்துத் தேறியவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

பயணிகள், பாதையில் செல்வோர் எனப் பலரின் உயிர்களுக்குப் பொறுப்பான வேலை செய்யும் பேருந்து ஓட்டுநருக்கு அத்தகைய முன்பயிற்சி, தேர்வு, சான்றிதழ் தேவைப்படுகின்றது. வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகள் என அழைக்கப்படும் ஆசிரியர் பணிக்குக் கல்வித் தகுதி, பயிற்சி, தேர்வு எனப் பலப்பல படிக்கட்டுகள் உள்ளன. அதே போல் மருத்துவப் பணிக்கு, பொறியியல் பணிகளுக்கு, கணக்காயர் பணிக்கு எனத் தகுதியும் முன்பயிற்சியும் தேர்வுச் சான்றிதழ்களும் இல்லாத பணியே இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் சமுதாயத்தின் முக்கியமான இரண்டு வேலைகளுக்கு முன்பயிற்சி எதிர்பார்க்கப்படுவதில்லை.

வாழ்க்கையே பயிற்சிதான் :

திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் குடும்பம் நடத்துவதற்கும் அரசியலில் ஈடுபட்டு அவை உறுப்பினர், அமைச்சர் என அதிகாரம் உள்ள, பொறுப்பான பதவிகளுக்குச் செல்வதற்கும் தகுதி, முன்பயிற்சி, தேர்வு சான்றிதழ் தேவைப் படுவதில்லை; எதிர்பார்க்கப்படுவதில்லை. அதனால் அத்தகைய கல்வியோ, முன்பயிற்சியோ சமுதாயத்தில் இல்லை.

வயதாகி விட்டாலே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்க்கத் தகுதி வந்து விட்டதாகக் கருதப்படுகின்றது. அதே போல் வயது ஆகி விட்டாலே அரசியல், ஆட்சி, அதிகாரத்திற்குத் தகுதி வந்து விடுகின்றது. இதை விட (அரசியலில்) அவலம் என்னவென்றால் அடுத்தவரைத் (ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரை) திறமையாகக் குறை சொல்லத் தெரிந்திருந்தாலே அப்படிக் குறை சொல்பவருக்கு ஆட்சி, அதிகாரம் பெறுவதற்குத் தகுதி இருப்பதாகக் கருதுவது போல் சமுதாயத்தின் நடைமுறை உள்ளது. நேற்று வரை எந்த வேலை செய்து கொண்டு இருந்தவர்களும் இன்று முதல் அரசியலில் குதிக்கவும் செயலாளர், தலைவர், தளபதி என்று அழைக்கப்படவுமான நிலை உள்ளது. பேருந்தை ஓட்டத் தெரியாதவன், அதற்குப் பயிற்சி எடுக்காதவன் பேருந்து ஓட்டுவதை பற்றியும், அறுவை சிகிச்சைக்குப் படிக்காதவன், பயிற்சி பெறாதவன் அறுவைச் சிகிச்சை செய்வதைப் பற்றியும் குறை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிக் குறை சொல்வதில் உண்மை இருக்கின்றது என்பதற்காகக் குறை சொல்பவனிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியுமா?

வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழத் திருமணம் செய்து கொள்ளும் முன் முன்பயிற்சிக்காக ஒரு பயிற்சித் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் வாழ்வின் பல வாய்ப்புகளில் நாம் ஒவ்வொருவரும் எப்படி மனித உறவுகளில் பக்குவப்பட்டுள்ளோம் என்று பார்க்கலாமே. பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன், உறவு சுற்றத்தினருடன், நட்பினருடன், உடன் பணிபுரிவோருடன், அன்றாடம் சந்திக்கும் முன்பின் தெரியாதவர்களுடன் நாம் பழகும் விதம் எப்படி உள்ளது என்று அளவிடலாமே. அதற்கு ஒரு தேர்வு வைக்கலாமே. அப்படித் தேறியவர்களுக்கு மட்டுமே திருமண உரிமம் வழங்கலாமே. அதன் பின் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் முன் அதற்குத் தகுதியான உடல், உள நலங்களைப் பொறுத்தே பெற்றோர் ஆகும் உரிமம் வழங்கலாமே. இவை இன்று ஏளனத்திற்குரியவையாக இருந்தாலும் வருங்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடி வரலாம்.

அதே போல் சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளுக்கு ஒருவர் முன்வந்தால் அவர் இதற்கு முன் செய்துள்ள அவற்றை ஒத்த பொதுப்பணி அனுபவங்கள், அதில் அவரின் சாதனைகள், அவரைப் பற்றி உடன் பணி செய்தவர்களின் கருத்துகள் எனப் பலவகைகளில் சோதனை செய்ய முடியும்; சோதனை செய்ய வேண்டும். இந்த இரண்டிலும் கவனம் செலுத்துவது / புறக்கணிப்பது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிப் பக்குவத்தின் நிலையைக் காட்டுகிறது. இன்றைய போக்கில் போய்க் கொண்டு இருந்தால் உடல் நோயின்மை குறித்த சான்றிதழ் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வராத நிலை சீக்கிரத்தில் வந்து விடலாம். ஆனால் அதே போல் உள நோயின்மை (மனப் பேதலிப்பு, பைத்தியம்…) மட்டும் போதாது; மனித உறவுத் திறன் (people skill maturity) பக்குவம் பற்றிய சான்றிதழும் வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.

 சிக்கலும் தீர்வும் மனமே:

 மனித சமுதாயத்தின் மிக முக்கியமான சிக்கல் மனித உறவுகளே. அதற்கு மிக முக்கியமான காரணம் மனிதர் இயல்புகளே (மனப் போக்குகளே). எனவே சிக்கலுக்கான மிக முக்கியமான தீர்வும் மனிதர்களின் மனப் பக்குவமே. இதை உணர, செயல்படுத்த நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான பங்கு மனிதர்களே, அவர்களுடன் நாம் கொள்ளும் பரிமாற்றங்களே என்பதைப் புரிந்து கொண்டு பின்பற்றினால் தான் முடியும்.

நாம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக பல வழிகளிலும் (மதம், கல்வி, மரபு, கலை, பண்பாடு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், சிறை, தண்டனை…) மனிதர் இயல்புகளைக் கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் தான் செய்து வருகின்றோம். மனிதர் இயல்புகளை அடிப்படையில் நாம் மாற்ற இயலவில்லை; முயலவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. மனிதர் இயல்புகளை நாம் புரிந்து கொள்வதே இன்னும் முற்றுப் பெறாத ஆய்வாக உள்ளது என்பது அதில் முக்கியமாகும்.  இந்தப் பின்னணியுடன் இங்கு சில கருத்துகள் சிந்திக்கவும் கலந்து பேசவும் ஆய்ந்து உணர்ந்து கொள்ளவும் பின்பற்றிச் சோதனை செய்து வளர்த்துக் கொள்ளவும் முன்வைக்கப்படுகின்றன.

எல்லைகளுக்குள் வல்லமை:

 நாம், கடவுளால் மனிதன் படைக்கப் பட்டான் என்று நம்பினாலும் சரி அல்லது கண்மூடித் தனமான இயற்கை போக்குப் பரிணாம வளர்ச்சியால் மனிதன் உருவானான் என்று நம்பினாலும் சரி அல்லது இந்த இரண்டும் பல விழுக்காடுகளில் கலந்த பல விதமான கருதுகோள்களை நம்பினாலும் சரி, மனிதனின் இயல்புகள், பண்புகள், குணங்கள் எதுவும் முழுக்க நல்லது என்றோ தீயதோ என்றோ இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.  ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ (திருக்குறள்: 941) என்ற திருவள்ளுவர் வாக்குப் படி குணங்கள் (அன்பு, வன்பு, பொறாமை, பொறுமை, போட்டி, ஒத்துழைப்பு, சுதந்திரம், கட்டுப்பாடு, தன்னலம், பொது நலம்…) குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இயங்க முயலும் முயற்சியே (வல்லமையே)) வாழ்க்கை (வாழ்க்கைப் போராட்டம்) ஆகும்.

 நம் உடலில் வெப்பம் அதிகம் ஆனாலும் குளிர்ச்சி அதிகம் ஆனாலும் நோய் தான். அதே போல் தம்பதியராகத் திருமண வாழ்க்கை, பிள்ளைகளுடன் ஆன குடும்ப வாழ்க்கை, பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கை என்பனவற்றிலும் உரிமையும் கடமையும் போட்டியும் ஒத்துழைப்பும் ஆளுமையும் அடங்கிச் செல்வதும் அறிவும் அன்பும் அமைதியும் ஆர்ப்பாட்டமும் மென்முறையும் வன்முறையும் வழி நடப்பதும் வழி காட்டலும் சுதந்திரமும் கட்டுப்பாடும் பாராட்டலும் கண்டித்தலும் பரிசும் தண்டனையும் மானமும் பெருமையும் புத்திசாலித்தனமும் முட்டாள்தனமும் அதிகமாகவோ குறையாமலோ இருக்கும் போது தான் சிறக்கின்றது. இது ஓர் இயக்கச் சமநிலை (dynamic stability) ஆகும்.

 உடலில் தேவைக்கதிமாகக் கொழுப்பு இருந்தாலும் சிக்கல் தான். நம்மிடம் தேவைக்கதிகமாக செல்வம் இருந்தாலும் அது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் கெடுக்க வாய்ப்புண்டு. அதே போல் நம்மிடம் தேவைக்கதிமாக அறிவு இருந்தாலும் தொல்லை, தீமை வர வழியுண்டு. நம் அறிவை அடக்கி வைப்பதிலும்  (துறப்பதிலும்) பயன் விளையும் சூழ்நிலைகள் உண்டு. அறிவின் எல்லையைத் திருவள்ளுவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். அறிஞர் மு.வ. அவர்கள், “வாழ்க்கையில் பிணக்கு (உரசல், சிக்கல்) ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு இருந்து பயனில்லை; அன்பு இருந்தால் பயனுண்டு” என்று வெற்று, வறட்டு அறிவின் (dry logic / profit – purpose dominated reason / argument) தீமை குறித்து எச்சரிக்கின்றார்.

 பேருந்து ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுப்பது போல், திருமண வாழ்க்கைக்கோ, பிள்ளைகளை வளர்ப்பதற்கோ முன் பயிற்சி முழுமையாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் திருமண வாழ்க்கையே, பிள்ளைகளை வளர்ப்பதே பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கையே பயிற்சிகள் தான். இதைத் தான் திருவள்ளுவர் ‘சாகும் வரை கற்க வேண்டும்’ (திருக்குறள்: 397) என்றார். பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கை என்பதில் அரசியல், ஆட்சி, அதிகாரப் பதவிகள், பொறுப்புகள், உரிமை, கடமைகளும் அடங்கும்.

 தம்பதியராகத் திருமண வாழ்க்கை உறவில் ஒருவரை ஒருவர் பாதித்து அடுத்தவரின் குண நலன்களைச் சிதைக்கவோ செம்மைப்படுத்தவோ செய்கின்றோம். அதே போல் பிள்ளைகள் வளர்ப்பிலும் ஆகும். பிள்ளைகளின் பிடிவாதமோ, நல்ல பழக்க வழக்கங்களோ பெற்றோரின் சொல், செயல்களின் பாதிப்பு இல்லாமல் வந்து விடவில்லை. பிறருடன் கொள்ளும் சமுதாய உறவிலும் இதே கதை தான். அதனால் அரசியல், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மையும் நாம் அவர்களையும் பாதிக்கின்றோம்.

 இந்தப் புரிதல் வந்தால் பிறரின் (வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், சமுதாய உறுப்பினர்) சொல், செயல் நம்மை முள்ளாகக் குத்தும் போது, அவர்கள் மேல் வெறுப்பும் பகைமையும் வருவதற்குப் பதிலாக அந்த முள் முள்ளாக வளர, குத்த நேர்ந்ததில் நம் பங்கு என்ன என்று ஆய்வு செய்வோம். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கும். மாற்றம் என்பதால் பொறுமை, சகிப்பு, விட்டுக் கொடுத்தல் என்று மட்டும் பொருள் கொண்டு விடக் கூடாது. அந்த மாற்றம் எதிர்ப்பு, போர்க்குணம், கண்டிப்பு, வன்முறை, தண்டனை என்பனவற்றையும் தேவையைப் பொறுத்து உள்ளடக்கும்.

 திறன் 10% – பண்பு 90%:

ஓட்டுநர் பயிற்சி கூடச் சான்றிதழ் வாங்கியதும் முடிந்து விடுவதில்லை. திறமையான பாதுகாப்பான ஓட்டுதல் (safe and skillful driving) என்பது 10 விழுக்காடு (%) தொழில் திறன் (technical skill) என்றும் 90 விழுக்காடு மனப்பான்மை (attitude – எவ்வாறு சாலையில் பிறருக்கு வழி விட்டும் பிறரிடம் வழி கேட்டும் மதித்து நடப்பது) என்றும் சொல்லப்படுகின்றது.திருமண வாழ்வும் பிள்ளைகளை வளர்ப்பதும் பிறருடன் ஆன சமுதாய உறவுகளும் அவ்வாறே. இவற்றிற்கு முன் பயிற்சி, தேர்வு, சான்றிதழ் இன்று இல்லை; நாளை வரலாம். என்றாலும் அவை 10 விழுக்காடே. 90 விழுக்காடு அன்றாட வாழ்வில் விழுந்து எழுந்து கற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் அந்த 10 விழுக்காடு மிக முக்கியம். அது தான் மீதி 90 விழுக்காட்டை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இல்லாவிடில் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருப்போம். இன்றைய (தனி நபர், திருமண, குடும்ப, சமுதாய) வாழ்க்கையைப் பார்த்தால் நாம் இப்படி மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து உழன்று கொண்டு இருப்பது விளங்கும்.

 நான் – பிறர் – நான்:

அதனால் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே தொடர்ந்து கற்றுக் கொண்டு வளர ஒரு வாய்ப்பாகப் பார்த்தால் பின்பற்றினால் நடைமுறைப்படுத்தினால் சிறக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த பொது அறிவு தான் என்றாலும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அதை நாம் நம் மையமான‌ குணமாக (central character) மாற்ற முடியும்.

புதிய மனிதன் இன்றிப் புதிய சமுதாயம் சமைக்க முடியாது. புதிய மனிதன் என்றால் கூடுதலாக இரண்டு கைகள், பின்னால் இரண்டு கண்கள் என்று (இயற்கைப் பரிணாம வளர்ச்சியாலோ, அறிவியல் தொழில்நுட்ப சாதனையாலோ) பெறுவதன்று. புதிய மனிதன் என்றால் புதிய சிந்தனைகள், மனப்போக்குகள், அணுகுமுறைகள் அவனின் மையமாகப் (core) பெறுவதாகும். மனிதனை மாற்ற அவனைப் பற்றி அவனுக்குப் புரிய வைப்பதுதான் முதல் கட்டம்.  இதிலும் என்னைப் பற்றி நான் புரிந்து கொள்வதைப் பிறர் தம்மைப் பற்றிப் புரிந்து கொள்வதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டும் ஒரு சேரப் பிறந்து உறவு கொண்டு வளரும், வாழும். நான் மாறப் பிறர் மாற நான் மாறி உதவ வேண்டும்.

Besides http://www.cellspyapps.org losing our trust, we have to contend with a variety of haunting questions about our teens’ whereabouts, actions, and safety

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “முன்பயிற்சி இல்லாத முக்கியப் பணி (கட்டுரை)”
  1. prabhu says:

    sir really superb

அதிகம் படித்தது