முரண்பாடு(சிறுகதை)
ஆச்சாரிApr 15, 2013
வீரராகவன் அந்த மேடையில் கையை ஆட்டி, ஆட்டிப் பேசிக் கொண்டிருந்ததை அரங்கம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
“……ஆகவே பெண்களே, நீங்கள் இதுவரை பொறுத்தது போதும் இத்தனை காலமும் அடிமைகளைப் போல் வாழ்ந்தீர்கள். உங்கள் அடிமைச் சங்கிலியை அறுத்து எரியுங்கள்…”
கூட்டம் ஆரவாரமாய் கைதட்டியது. வசுந்தரா முன் வரிசையில் நான்காவது ஆளாய் உட்கார்ந்திருந்தாள். தன் கணவன் வீரராகவன் பெருமிதமாய் பேசிக்கொண்டிருப்பதை சலனமற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“…..உங்கள் மூளையை மழுங்கடிக்கும் எந்தச் செயலையும் குப்பையில் தூக்கி எறியத் தயங்காதீர்கள். ஆடவர் கிழித்த கோட்டை உங்கள் பெருமூச்சால் அழித்துவிடுங்கள். உங்கள் உணர்வுகளை மதிக்காத ஆடவனைப் புறந்தள்ளத் தயங்காதீர்கள். இது உங்களுக்கான உலகம்.
அமர்ந்திருந்த பெண்கள் “ஹோ “ வென்று கூச்சலிட்டார்கள். வசுந்தரா மெதுவாய் திரும்பி கூட்டத்தைப் பார்த்தாள். பெண்கள் கூட்டம் முழுவதும் வீரராகவன் பேச்சில் அசந்து போயிருந்தது. எழுவதும், கைதட்டுவதும், உற்சாகத்தில் கத்துவதும் அந்தப் பெண்கள் கல்லூரி முழுவதும் எதிரொலித்தன.
வசுந்தரா, வீரராகவனைப் பார்த்தாள். கைத்தட்டுதலில் அவன் இன்னும் கொஞ்சம் குளிர்ந்து போயிருக்க வேண்டும். எந்தக் கல்லூரியில் தமிழ் விழா நடந்தாலும் அங்கு சிறப்புப் பேச்சாளர் நான்தானாக்கும் என்கிற பெருமிதம் அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
வசுந்தராவிற்கு அவன் சீக்கிரம் தன் பேச்சை முடித்துக் கொண்டால் தேவலம் போலிருந்தது. ஏழு மணிக்கு மேல் குழந்தைகள் இரண்டும் தூங்கிப் போய்விடும். இப்பவே மணி ஏழாயிற்று. இனி இவன் பேச்சை முடித்து வீடு போய்ச்சேர எப்படியும் எட்டாகிவிடும். தாயம்மா சாப்பிட ஏதும் கொடுத்திருப்பாளோ என்னவோ என்று நினைத்துக் கொண்டாள்.
வீரராகவன் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தான். வசுந்தராவிற்கு அவனை நினைத்து வியப்பாய் இருந்தது. எப்படி இவனால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு இப்படி எல்லாம் பேச முடிகிறது. “உணர்வுகளை மதிக்காதவர்களைப் புறந்தள்ளிவிடுங்கள்“ என்றான். இவன் என்றைக்காவது என் உணர்வுகளை மதித்திருக்கிறானா? என்று நினைத்துப் பார்த்தாள். ஒரு போதும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பி வரும் போது கூட அவன் அவளை நிம்மதியாய் கிளம்பவிடவில்லை.
“ஏய்…. என்ன இது? போடி… போய் நல்ல புடவையா கட்டிட்டு வா“
சந்தன வண்ணத்தில், சிவப்பு பூக்கள் போட்ட அந்தப் பருத்திச் சேலை அவளுக்கு நன்றாகவே இருந்தது.
“போய் நல்லா அகலமா சரிகை போட்ட புடவையைக் கட்டிட்டு வா”
அதிலும் கூட வசுந்தராவுக்கு மெலிதாய் சரிகை போட்ட பட்டுப் புடவைதான் விருப்பம். ஆனால் அவனுக்கு சரிகை போட்ட சேலைதான் அவள் கட்டிக்கொள்ள வேண்டும். வசுந்தராவிற்கு அவனோடு பேசிப் பயனில்லை என்று வேறு சேலை மாற்றிக்கொண்டு வந்தாள்.
வீரராகவன், அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர். கல்யாணம் முடிந்த மறுநாளே வசுந்தராவை வேலையை விட்டுவிடச் சொல்லிவிட்டான். அவளும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். அவன் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். “மாப்பிள்ளைக்குப் பிடிக்கலன்னா வேலைய விட்டுரும்மா” என்றனர் பெற்றவர்கள். வசுந்தரா மனதில்லாமல் வேலையை விட்டாள்.
அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்று கிளம்பிப் போய் பார்த்துவிட்டு வந்தவளை “ஏன் சொல்லாமல் போனாய்” என்று பளாரென்று அறைந்தான். அம்மாவிற்கு என்ன, ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. கல்லூரிக்கு ஒருநாள் போன் பண்ணி “குழந்தைக்கு உடம்பு சரியில்லை, சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்டதற்கு “ஒண்ண மாதிரி வேல வெட்டி இல்லதவன்னு நெனச்சியா?- என்று அவளைப் பந்தாடினான்” வசுந்தராவிற்கு வெகுசீக்கிரம் அவனுடனான வாழ்க்கை அலுப்புத் தட்டியது. கல்லூரிப் பேராசிரியர் இங்கிதமாய் இருப்பார் என்று நினைத்து கல்யாணத்திற்கு சரி சொன்னது தவறோ? என்று நினைத்தாள். ஆனால் காலம் கடந்து போயிருந்தது.
எது எப்படியோ இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள். இரண்டுமே பையன்கள் என்பதில் வீரராகவனுக்கு ஒரே பெருமை. முதல் பையனுக்கு அடுத்து உதித்த பெண் குழந்தையை வலுக்கட்டாயமாய் இழுத்துக் கொண்டு போய் கலைத்துவிட்டு வந்தான். வசுந்தரா வெறுத்துப் போனாள். “வெளியில் இதுபற்றி யாரிடமும் சொன்னால் முதல் குழந்தையையும் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான். வசுந்தரா ஒரு கட்டத்தில் அவனோடு பேசுவதையே தவிர்த்துக் கொண்டாள். தன் வலிகள் பற்றியெல்லாம் யாரிடமும் அவள் சொல்லிக் கொள்வதில்லை. தன் குழந்தைகளோடு ஒன்றிப்போனாள்.
அவன் தேவைகளுக்காய் அவள் இருந்தாள். அவளின் விருப்பம் பற்றியெல்லாம் கவலைப்படதவனாய் அவன் இருந்தான். அவளின் உடலும், மனதும் இரணப்பட்டுப் போயிருந்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் வாழ்க்கையை வெகுதூரம் கடந்து விட்டிருந்தாள். இனி அவன் தன்னை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்பது புரிந்தவுடன் அவள் தன் எதிர்பார்ப்புகளை அழித்துக் கொண்டாள். தன் விருப்பங்களைக் கொன்று போட்டாள்.
அவன் எங்கெல்லாம் கூப்பிடுகிறானோ அங்கெல்லாம் கொலுபோம்மை போல் கூடவே போய் வரவும், அவன் சிரிக்கச் சொன்னால் சிரிக்கவும் அவள் பழகிப் போயிருந்தாள்.
வசுந்தரா என்கிற அவளின் அழகான பெயர் கூட அவளுக்கு மறந்து போனது. அவன் எப்போதும் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதே இல்லை. ஏய் ——– இவளே ……………… எருமை ………………. இப்படித்தான். ஆரம்பத்தில் அவளுக்கு எழுந்த கோபம் கொஞ்சம், கொஞ்சமாய் அடங்கிப் போனது. அவன் “ஏய்” என்று ஆரம்பிக்கும் போதே ஓடிப்போய் நின்று விட அவள் பழகிருந்தாள். யாரேனும் வசுந்தரா என்று கூப்பிட்டால் கூட “அட நாம் தான்” என நினைக்கும் அளவிற்கு அவள் மனதிற்க்குள்ளே செத்துப் போயிருந்தாள்.
ஆக இன்குலாப் மிக அழகாகச் சொல்வார். ஆடவர் சொன்ன அசைவில் அல்லாது உனது இயல்பில் நீ நட’ – பெண்களே உங்கள் இயல்புகளை ஒரு போதும் தொலைத்துக் கொள்ளாதீர்கள். பெண்கள் இந்நாட்டின் கண்கள். இந்தக் கண்களை நான் என் இருகை கூப்பி வணங்குகிறேன்.
கூட்டம் ஆர்ப்பரித்தது. பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கியவனைப் பெண்கள் கூட்டம் ஏக்கமாய் பார்த்தது. “இவர் பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் இல்லடி? “என்று பெண்கள் பேசிக்கொள்வது வசுந்தரா காதில் விழுந்தது. அவள் விரக்தியாய் சிரித்துக் கொண்டார்.
“ அய்யா, அடுத்து எங்க கல்லூரியில் நடக்கிற கவியரங்கத்துக்கு நீங்க அவசியம் வரணும்”
“ கண்டிப்பா – தமிழ் இருக்குமிடமேல்லாம் இந்த வீரராகவன் இருப்பான்”.
“ஆமாம்”.
“நீங்க ரொம்பவே பெருமைப்பட்டுக்கலாம். பெண்களை மதிக்கிற, அவங்க உணர்வுகளை மதிக்கிற இந்த மாதிரி ஒரு கணவன் கிடைக்க நீங்க ரொம்பவே கொடுத்து வச்சுருக்கணும்”.
வசுந்தரா, அந்தப் பெண்களை ஒரு உயிரில்லாத பார்வை பார்த்தாள். அவளிடமிருந்து மகிழ்ச்சியான புன்னகையை எதிர்பார்த்த அந்தப் பெண்கள் ஒரு சின்ன ஏமாற்றத்தோடும், கேள்விக்குரியோடும் அகன்றார்கள்.
“ஏய் வீட்டுக்கு வா – இனிமே எப்பவுமே நீ சிரிக்க முடியாதபடி பண்றேன்” – என்று அவளுக்கு மட்டும் கேட்கிறமாதிரி பல்லைக் கடித்தான். வசுந்தரா எப்போதும் போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை சலனமற்று உயிரற்றுப் போயிருந்தது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
ஷீபா
இப்படிப் பட்ட ஆண்கள் இப்பொழுது வெகுவாகக் குறைந்து விட்டார்கள். இன்றைய தமிழகத்தில் கணவன்களை அடக்கி ஆளும் பெண்கள் நிறைய உருவாகி விட்டார்கள். மெல்ல மெல்ல இது ஒரு பெண்களின் உலகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
ரவி