மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முல்லைபெரியாறு – 35 ஆண்டுகள் – 6 அடிகள் – பல்லாயிரம் கோடிகள்

ஆச்சாரி

May 10, 2014

கடந்த புதன்கிழமை முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கின்றது. தமிழ் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் தீர்ப்பை பாராட்டி இருக்கின்றார்கள். தென் தமிழ்நாட்டில் பல இடங்களில் இனிப்பு வழங்கி தீர்ப்பு கொண்டாடப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தமக்கும் இத்தீர்ப்பிற்கும் எந்தத் தொடர்பும் பயனும் இல்லை என்று இதை ஒரு அரசியல் நிகழ்வாகவே பார்க்கின்றனர். இது தமிழ் நாட்டின் சில மாவட்டங்கள் மட்டும் பலனடையும் அல்லது பாதிக்கப்படும் பிரச்சினை அல்ல. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததால் 1980 இல் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை மட்டுமே தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 40000 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருக்கின்றது. 2005 ஆம் ஆண்டிலிருந்து இன்று 2014 வரை தமிழகம் இழந்தது இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகள்? இவ்விழப்பு தவிர்க்கப்பட்டிருந்தால் தமிழகத்தின் உணவு உற்பத்தி உயர்ந்திருக்கும், விலைவாசியும் சற்றேனும் குறைந்திருக்கும். நேரடியாகவோ மறைமுகவாகவோ நீங்களும் நானும் நிச்சயம் பல ஆயிரங்களாவது பயனடைந்திருப்போம்.

இன்று 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கே மகிழ்வடைகின்றோம் ஆனால் 1960கள் வரை 155 அடி உயரத்திற்கு நீர் தேக்கப்பட்டு வந்தது. 1961 ஆம் ஆண்டு பருவமழை கடுமையாக பெய்ததால் இந்தியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பீகாரில் மட்டும் ஆயிரம் மக்களுக்கு மேல் வெள்ளத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. அதனடிப்படையில் அஹமதாபாத் தபால் துறையில் பணி  செய்த பி.எஸ்.நாயர் என்பவர் 1962 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பம்பாய் பதிப்பில்  ஒரு பத்தி செய்தி வெளியிடுகின்றார். பத்திரிகைச் செய்தியை ஆராயாமல், எந்த ஒரு துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ளாமல், கேரள தலைமைச் செயலர் அச்செய்திக் குறிப்பை தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு அனுப்பி இந்த நீண்டகால பிரச்சினைக்கு  முன்னுரை எழுதிவிட்டார். பின்னர் 1964 ஆம் ஆண்டில் இரு மாநில அதிகாரிகளும் வல்லுனர்களும் சோதனைகள் நடத்தி கேரளா கேட்டுக்கொண்டதன் படி 155 அடி உயரத்தை 152 அடி உயரமாக குறைத்துகொள்வது என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த இப்பிரச்சினை இடுக்கி அணையால் மீண்டும் எழுந்தது. 1976 ஆம் ஆண்டு இடுக்கியில் 555 அடி உயரம் உள்ள பெரிய அணையை கேரளா எழுப்பியது. அதில் 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தையும் அமைத்தது. ஆனால் கேரளா எதிர்பார்த்த அளவிற்கு இடுக்கி அணைக்கு நீர் வந்து சேரவில்லை, மின் உற்பத்தியும் நடைபெறவில்லை. இடுக்கி அணையின் தோல்வியை சமாளிக்க கேரள அரசு, முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரை இடுக்கி அணைக்கு திருப்பிவிடும் பேராசையில் இறங்கியது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துவிட்டால் இடுக்கி அணைக்கு போதுமான நீர் வந்து சேரும், மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கேரளா மின்துறை அதிகாரி பரமேஸ்வரன் நாயர் வெளிப்படையாக பரிந்துரைத்தார். கேரளஅரசு பீர்மேடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாமஸை களத்தில் இறக்கி முல்லைப்பெரியாறு அணை உடையப்போகின்றது நாம் போராட வேண்டும் என மக்களைத் தூண்டியது. இப்பிரச்சினை படிப்படியாக சில போராட்டங்களின் மூலமும் பத்திரிகை செய்திகளின் மூலமும் வளர்த்தெடுக்கப்பட்டது.

கேரளா அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குத் துணைப்போகும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று குஜராத்தில் மச்சு (இரண்டு) அணை உடைந்து 1800 மக்கள் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையும் இதுபோன்று ஒரு நாள் உடைந்துவிடும் என்று பெரும் போராட்டங்களை நடத்தி இப்பிரச்சினையை உச்சகட்டத்திற்கு எடுத்து சென்றனர் கேரள அரசியல்வாதிகள். வேறுவழியின்றி மத்திய நீராணையம் அணையின் வலிமையைக் கண்டறிய பல சோதனைகளை நிகழ்த்தியது. பின்னர் கேரள அரசிற்கு ஆதரவாக அவசரகால நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள், நீண்டகால நடவடிக்கைகள் என்று பெரும் பட்டியலை சமர்ப்பித்தது. அதில் முக்கியமான நடவடிக்கை உடனடியாக அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது என்பது. அன்று தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அதற்கு ஒப்புக்கொண்டு கேரளாவின் விருப்பப்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொண்டார்.

ஓராண்டிற்குப் பின்னர் 1980 இல் மத்திய நீராணையம் அவசரகால மற்றும் இடைக்கால நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. பின்னர் 1986 இல் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றிய பின்னர் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அனைத்து பணிகளுக்கும் கேரளஅரசு கடும் இடைஞ்சல்களை கொடுத்து வந்தது.

ஒரு வழியாக தமிழக அரசு பெரும்பாலான பணிகளை 1997 இல் முடித்து, அணையின் உயரத்தை பழைய நிலைக்கு கூட்ட அனுமதி கோரியது. இனியும் தடுப்பதற்கு வழியில்லை என்பதால் கேரளஅரசு உயர்நீதி மன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகளை தொடுத்தது. நீதிமன்றம் அறிவுறுத்திய முதலமைச்சர்கள் சந்திப்பு, ஆணையங்கள் கூட்டம் அனைத்தும் தோல்விகள் அடைந்தன. பின்னர் 2006ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அணையின் உயரத்தை 142 அடியாக கூட்ட வேண்டும் என்றும் மீதி இருக்கும் பணிகளைத் தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்று கிடைத்த அதே மகிழ்ச்சி அன்றும் கிடைத்தது. ஆனால் கேரள உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி தன் மாநில அளவில் ஒரு புதிய சட்டத்தை இயற்றி நீர் மட்டத்தை உயர்த்த விடமால் தடுத்தது. அந்த மாநில சட்டம் செல்லுபடியாகாது என்று போராடி மீண்டும் 2006 தீர்ப்பை தான் இன்று பெற்றிருக்கின்றோம்.

இதுவாவது உண்மையான வெற்றியா என்பதை காலம் தான் காட்ட வேண்டும். அன்று 1979 ஆம் ஆண்டு இழந்ததில் ஒரு பகுதியை, வெறும் ஆறு அடி உயரத்தை நீதிமன்றத்தில் பெறுவதற்கே 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை நடை முறைப்படுத்துவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ? 1979 இல் இருந்த 152 அடி நிலையை மீண்டும் அடைவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ? அதுவரை தமிழகம் இன்னும் எத்தனை ஆயிரம் கோடி உற்பத்திகளை இழந்து கொண்டிருக்க வேண்டுமோ?

கேரளா அரசியல்வாதிகளுக்கு இருக்கும் மாநில நலனும், கேரள மக்களுக்கு இருக்கும் போராடும் திறமையும் தமிழகத்தில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிவருகின்றது. அடுத்த முறை உணவுப் பொருள் விலை ஏற்றத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுதாவது முல்லை பெரியார் அணை உங்கள் எண்ணத்தில் வரவேண்டும்.

Institute of physics physics building a flourishing future report of justbuyessay.com/ the inquiry into undergraduate physics

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “முல்லைபெரியாறு – 35 ஆண்டுகள் – 6 அடிகள் – பல்லாயிரம் கோடிகள்”
  1. Pon.Elumalai says:

    This dispute explicitly proves that all parties including COMMUNIST PARTY ( Marxist) have no NATIONAL POLICY &
    OUTLOOK. THE TIME TAKEN FOR THE PROCESS OF GETTING THE JUDGEMENT FROM SUPREME COURT AND GETTING IT NOTIFIED IN GAZZET CLEARLY SHOWS THAT THIS IS NOT A COUNTRY GOVERNED BY LAWS. THE EXPLICIT SCANT RESPECT FOR RULE OF LAW BY THE UNION GOVERNMENT,BY ASSOCIATING WIYH THE TRAITER STATE- KERALA.REVEALS THAT “INDIA” is not at all a country , as described…???? ESPECIALLY THE C.P.I.(M) party
    Stands exposed. The day is not far off that the so called INDIA WILL DISINTEGRATE BY IT’s own misdeeds. I am 63 years old; I hope and wish to see that it happens in my life time. I will be the happiest man to die in TAMILNAADU ,
    A COUNTRY, FREE FROM THE CLUTCHES OF INDIA. I FEEL ASHAMED TO TELL MYSELF AS INDIAN, but inevitable
    At this juncture.

அதிகம் படித்தது