மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முள்ளிவாய்க்கால்–அவலம் பகுதி 2 (கட்டுரை)

ஆச்சாரி

Jul 15, 2013

தமிழினப்போரிலே தொண்டு நிறுவனங்களுடைய பங்கு மகத்தானதாகும். செஞ்சிலுவைச் சங்கம், ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் முகாமமைத்துப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர். அச்சமயத்தில் போரில் பாதிக்கப்பட்டவர்கள் கையிலும், காலிலும் குண்டடிபட்டு அவதிப்பட்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய துயரைப்போக்கும் விதமாக, தொண்டு நிறுவனங்கள் அங்கே பணிபுரிந்தது. இலங்கை அரசாங்கம் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த யாருக்கும் உயிர் உத்திரவாதம் கொடுக்கவில்லை. மதவெறி அரசாங்கம் ஓர் அறிக்கையை அங்கே உள்ள தொண்டு நிறுவனங்களிடம் போய்ச் சேருமாறு செய்கின்றனர். போர் நடைபெறக்கூடிய பகுதியிலே யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் கிடையாது என்ற ஒரு தகவலை அங்கே பரப்புகின்றனர். அதைத் தாண்டியும் பல தொண்டு நிறுவனங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டது நினைவு கூறத்தக்கது. போர் நடந்து கொண்டிருந்த பொழுது அங்கே எவ்வாறு விமானங்கள் குண்டு மழை பொழிந்தது என்பதை அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு பள்ளிகள் மீது நான்கு முறை குண்டுகள் வீசப்பட்டன. இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் 35 பள்ளிகள் போரினுடைய இறுதி நாட்களில் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளைக் குறிவைத்தும்  குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்வு செய்தது. குறிப்பிட்ட இடத்தில் மக்கள் இடப்பெயர்வு அடைந்தால் அந்த இடங்களில் எந்த விதமான தாக்குதல்களும் நடத்தப்படமாட்டாது என்பதை இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆகவே மக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பூர்வீக இடங்களை விட்டுவிட்டு அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் இடம் பெயர்வு செய்தனர். அவ்வாறு செய்யும் பொழுது மக்கள் ஆங்காங்கே பதுங்கு குழிகளை அமைத்து இடம் பெயர்வு செய்தனர். ஏனெனில் எந்நேரம் வேண்டுமானாலும் விமானங்கள் குண்டு மழை பொழியலாம். ஒரு பதுங்கு குழி அமைக்க சுமார் 50,000ரூபாய் தேவைப்பட்டது. போரின்பொழுது நாளுக்கு நாள் உணவுப்பொருட்களின் கையிருப்பு குறைந்துகொண்டே சென்றது. ஒரு காலத்தில் ஒரு கிலோ அரிசி கிட்டத்தட்ட 1000 ரூபாய் வரை விற்றது. மேலும் உணவுப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தாங்கள் செய்யக்கூடிய கூலி வேலைகளுக்குப் பதிலாக அரிசியைக் கூலியாகப் பெற்றனர். பதுங்கு குழிகள் அமைக்கும் பொழுது மக்கள் எங்கே சென்றாலும் இரண்டு வகையான பொருட்களை எடுத்து சென்றனர். ஒன்று மண்வெட்டி மற்றொன்று சாக்குப்  பை. ஏனெனில் பதுங்குக்குழிகள் வெட்டியவுடன் அந்தச் சாக்குப் பையில் மண்ணை நிரப்பி அந்தப் பதுங்கு குழிகளை ஒட்டி அடுக்கிவைத்தனர். மழை வரும் காலங்களில் மழை நீர் உள்ளே புகாமல் இந்தச்சாக்குப் பையை வைத்துப் பாதுகாத்தனர். ஒரு கட்டத்தில் இந்தச் சாக்குப் பைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே பெண்கள் தங்களுடைய புடவைகளை அந்த சாக்குப் பைகளுக்குப் பதிலாக உபயோகப்படுத்திக்கொள்ளக் கொடுத்தனர். அப்பொழுது ஒரு பெண் தான் திருமணமான பட்டுப்புடவையை இந்தச் சாக்குப் பைக்குப் பதிலாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கொடுக்கிறாள். அது எவ்வளவு பெரிய வேதனைக்குரிய விடயம்? இந்தப் பதுங்கு குழிகளில் பெரும் துயரம் யாதெனில் மழை வரும் காலங்களில் அந்தப் பதுங்கு குழிகளிலே யாரும் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடுமட்டுமல்லாமல் மழை நீரால் பரவக்கூடிய தொற்றுநோய்கள் மக்களை வெகுவாகத் தாக்கியது. ஒரு நபர் கிட்டத்தட்ட  67 பதுங்கு குழிகள் வெட்டினார் என்பது தெரிய வருகிறது. இதிலிருந்து நாம் அறிவது யாதெனில் அந்நபர் எவ்வளவு முறை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வு செய்துள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு இடம் பெயரும் பொழுது மக்களுடைய முக்கிய பிரச்சனை பட்டினி. பட்டினி சாவு என்பது மிகக் கொடியது. “கொடியது கொடியது வறுமை கொடியது, இளமையில் வறுமை அதனினும் கொடியது” என்று ஒளவையார் அவர்கள் பாடியுள்ளார்கள். பட்டினியால் இறந்த நபர்கள் ஆயிரக்கணக்கானோர். போர் நடந்த பொழுது போர் பாதிக்கப்பட்ட பகுதிகளில்,சுமார் 109 மெட்ரிக் டன் அளவே அரிசி கையிருப்பு உள்ளதாகவும் அங்கே உள்ள முகாம்களுக்குத் தேவை 4950 மெட்ரிக் டன் அரிசி தேவை என்றும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

வன்னி மருத்துவமனையில் சத்தியமூர்த்தி, வரதராஜன் , சண்முகராஜா ஆகிய மருத்துவர்கள் மிகச் சிறந்த சேவை செய்ததற்கான ஆதாரங்கள் நம் ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்றன. அவர்கள் குண்டு மழை மற்றும் ஆயுதத் தாக்குதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அங்கே பாதிக்கப்பட்ட, காயம்பட்ட மக்களுக்கு பேருதவியைச் செய்தனர். போர் நடக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மருத்துவமனைகள் மூடப்பட்டன. மே 13 ம் தேதி வன்னி மருத்துவமனை மூடப்பட்டது. 2008ம் ஆண்டு கிளிநொச்சி மருத்துவமனை மூடப்பட்டது. 2009 ம் ஆண்டு பொன்னம்பலம் மருத்துவமனை மூடப்பட்டது. ஒரு கட்டத்தில் மருத்துவமனைகளே அற்ற நிலை ஏற்பட்டுவிட்டது. செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பாளர் சரசு விஜயரத்தினம் அவர்கள் அந்த மருத்துவமனை மீது ஒரு நாளைக்கு நான்கு முறை குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அவர் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி, இங்கே உள்ள மருந்துகள் போதவில்லை ஆகவே புது மருந்துகள் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுப்பிய பதில் கடிதத்தில் “இந்த மயக்க மருந்துகளை கையாளுவதற்கு சரியான மருத்துவர்கள், அந்த முகாம்களில் இல்லை ஆகவே இந்த மருந்துகளை அனுப்பி என்ன புண்ணியம் ஆகவே இது போன்ற மருந்துகளை அனுப்பப் தேவையில்லை” என்று குறிப்பிடுகிறது. இந்த பாதிக்கப்பட்ட மக்களையும் கொன்றொழிக்க இலங்கை அரசாங்கம் இத்தகைய வஞ்சகச் செயலை செய்தது. மேலும் தமிழ்வாணி என்ற மருத்துவர் தமிழினத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனில் Bio Medicals படித்து முடித்தவர். தன் தாய்நாடு இவ்வாறாக கடும் போருக்குள்ளாகிறது என்று போர் நடக்கும் சமயத்தில் தனது உயிரைத் துச்சமென மதித்து அங்கே மருத்துவ சேவை ஆற்றிவந்தார். அவர் போர் முடிந்த பிறகு சுமார் 4 மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தி அவர் இறுதியாக விடுவிக்கப்படுகிறார். இந்த மருத்துவர் குறிப்பிடுகையிலே இங்கு குண்டடிப்பட்ட மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சரியான கருவிகள் இல்லாததால் மாமிசம் வெட்டக்கூடிய கத்தியையே உபயோகித்து பல முறை காயம் பட்ட பகுதிகளை அப்புறப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறார். நினைத்துப் பாருங்கள் அப்போது எவ்வளவு வலியும், வேதனையும் ஏற்பட்டிருக்கும் என்று?

போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசாங்கம் No Fire zone என்கின்ற பாதுகாப்பு வளையத்தை அமைத்தது. இதன் முக்கியத் திட்டம் மக்களை அங்கே வரவழைத்து மக்களை அடியோடு கொன்று குவிப்பதே அதனுடைய முக்கிய நோக்கமாக அமைந்தது என்பதை மக்கள் பின்னர் தெரிந்து கொண்டனர். 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் நாள் இலங்கை அரசாங்கம் முதல் பாதுகாப்பு வளையத்தை அமைத்தது. அந்த பாதுகாப்பு வளையம் வன்னியிலிருந்து முல்லைத் தீவுக்கு செல்லும் வழியில் விசுவமேடு முதல் சுதந்திரபுரம் வரை சுமார் 35.5 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. இதிலே 1,85,000 மக்களை அடைத்து வைத்திருந்தது. இந்த மக்கள், நாம் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறோம் இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைத்திருந்தனர். ஆனால் அங்கே இலங்கை அரசாங்கம் குண்டு மழை பொழிந்தது. அதிலே பாதிக்கும் மேற்பட்டோர் இறந்து விடுகின்றனர். அந்தக் கொடிய செயல் சர்வதேசப்  பார்வையில் படுகிறது. ஐ.நா. அமைப்பு மற்றும் உலக நாடுகளை சேர்ந்த பல அமைப்புகள் இலங்கை அரசாங்கத்தை வன்முறையாகக் கண்டிக்கின்றன. அந்த கண்டனத்திலிருந்து தப்புவதற்காக இரண்டாவது பாதுகாப்பு வளையத்தை அமைக்கிறது. இந்த பாதுகாப்பு வளையம் சுமார் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது புதுமத்தாளன், அம்பலவாணன், பொக்காணி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்தப் பகுதிகள் கடற்கரை ஓரமாக அமைந்திருந்தது. இரண்டாவது பாதுகாப்பு வளையத்திலிருந்த மக்கள் வெளிநாட்டுக்கப்பல் ஏதாவது வரும் நாம் தப்பிவிடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே. அங்கேயும் இலங்கை அரசாங்கம் தன் கைவரிசையைக் காட்டியது. மீண்டும் சர்வதேசத்தின் பிடியில் இலங்கை அரசாங்கம் சிக்கியது. அச்சமயத்தில் பத்திரிக்கைகள் மிகக்கடுமையாக இலங்கை அரசாங்கத்தை விமர்சித்தன. ஆகவே அதிலிருந்து தப்புவதற்காகக் கடைசியாக மூன்றாவது பாதுகாப்பு வளையத்தை அமைத்தது. இந்த மூன்றாவது பாதுகாப்பு வளையம் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டது.

இலங்கைப் போரின் உச்சக்கட்டத்தில் மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டனர். இந்த இடத்தில் இலங்கை ராணுவம் பயன்படுத்திய வெடிகுண்டுகள் பற்றிய தகவல்கள் அனைவரையும் அதிரவைக்கின்றன. முதலாவதாக ஆட்லறி எரிகணை  என்ற வெடிகுண்டு. இந்த வெடிகுண்டு மக்களுடைய கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில், அவ்வளவு வேகமாகப் பறந்து சென்று மக்களைக் கொன்றொழிக்கும்., எப்பொழுது நாம் இறப்போம் என்று சொல்ல முடியாத வகையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் துயரப்பட்டுக் கொண்டிருந்தனர். இரண்டாவது வகையைச் சேர்ந்த வெடிகுண்டுகள் கொத்தானிக் குண்டுகள் எனப்படும் குண்டுகள். இந்த ஒரு குண்டு, பல நூறு குண்டுகளாகப் பிரிந்து பல நூறு உயிர்களை ஒரே நேரத்தில் கொன்றொழிக்கும் சக்தி படைத்தது. இந்தக் கொத்தானிக் குண்டுகள் சர்வதேச விதிமுறைகளின் படி விலங்குகளை வேட்டையாடும் போது மட்டும் சோதனை முயற்சியில் உபயோகப்படுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் அதையும் மீறி இந்தக் கொத்தானிக் குண்டுகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. மூன்றாவது வகையான வெடிகுண்டுகள் அனல் குண்டுகள் என்று சொல்கின்றனர். இந்த அனல் குண்டுகள் யாரும் தாங்கிக்கொள்ள முடியாத வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டது.  இந்த வெப்பத்தில் சிக்கியவர்கள் அப்படியே சாம்பலாகி விடுவார்கள். இது போன்ற குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியது. நான்காவதாக பல்குழல் எரிகணை என்ற வெடிகுண்டு இது கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய வலிமை கொண்டது. இந்த ஒரு ஏவுகணை 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அங்குள்ள  300, 400 எண்ணிக்கையிலான மக்களை கூண்டோடு கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்த எரிகணையையும் இலங்கை அரசாங்கம் இறுதிப் போரின் போது பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஏப்ரல் 28 ஆம் தேதி,  இந்த பல்குழல் எரிகணை சுமார் 2827 எண்ணிக்கையிலும், மார்ட்டார் குண்டுகள் 2837ம்,ஏவுகணைகள் சுமார் 685ம் குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், ஒரு நாளைக்கு 10 முதல் 100 பேர் வரை தினமும் போரினால் இறந்தனர். 2009 ஆம் ஆண்டு ஆரம்ப கட்டத்திலே ஒரு நாளைக்கு 33 பேர் இறந்தனர். 2009 மே மாத வாக்கில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000 பேர் அளவுக்கு ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமாகும். முக்கியமாக முள்ளிவாய்க்கால் பகுதியிலே இறந்தவர்களுடைய எண்ணிக்கை மட்டுமே 1 லட்சத்தைத் தாண்டுகிறது. இறுதியாக இந்த இலங்கை அரசாங்கம் இனப்போரை தங்களுக்குச் சாதகமாக நடத்தி அப்பாவி தமிழர்களையும், தமிழ் மக்களையும் கொன்றொழித்தனர்.

தன் நாட்டு தமிழ்க் குடி மக்களையே கொன்று குவிக்க இந்தியா ஆயுத உதவியை இலங்கைக்குச் செய்தது. இப்போருக்கு ஒரு நாள் இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக பதில் சொல்லியாகத்தான் வேண்டும். கயவன் ராஜபக்சேவை தூக்கில் ஏற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. போர் முடிந்த பிறகு சர்வதேசத்தில் பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றன. உதாரணமாக USTPAC (United State Tamil Political Action Council) என்ற அமைப்பு அங்கே உள்ள போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக இவர்கள் நடத்தக்கூடிய “இலங்கை பொருட்களைப்  புறக்கணிப்போம்” என்ற போராட்டம் பெருமளவில் உலகம் தழுவி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்ததற்கும் இந்த அமைப்பு முக்கிய பங்களிப்பை வகுத்துள்ளது. வஞ்சத்தால் வெற்றி கொண்டவர்கள் என்றும் சரித்திரத்தில் நிலையாக நின்றதில்லை. சூது வெல்லும் ஆனால் தர்மம் மறுபடியும் ஒருநாள் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். தற்காலிகமாக இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்று விட்டதாக நினைத்துள்ளார்கள். ஆனால் கண்டிப்பாக வருங்காலத்தில் அங்கே உள்ள தமிழ் மக்கள் தன்னாட்சி பெற்று, சுய அதிகாரம் பெற்று தனித்தமிழீழத்தை மீட்டெடுப்பார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இதற்கு நாம் செய்யவேண்டியது யாதெனில் போரில் பாதிக்கப்பட்ட நம் தமிழ் உடன் பிறப்புகளுக்குப் போதிய உதவிகளைச் செய்வது, இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்பது மற்றும் உலகளாவிய அமைப்புகளுக்கு இலங்கையில் என்ன நடந்தது என்று தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் மேல் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு ஓர் நல்வழி காட்டப் பாடுபட வேண்டும்.

They are in control and decide what to research, and because they all research every learning http://paper-writer.org issue, the debate during feedback is often at a very high level and enormously stimulating for the staff to listen to

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முள்ளிவாய்க்கால்–அவலம் பகுதி 2 (கட்டுரை)”

அதிகம் படித்தது