மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முள்ளிவாய்க்கால் அவலம்: உலகெங்கும் தமிழர்கள் நினைவஞ்சலி(கட்டுரை)

ஆச்சாரி

May 17, 2013

தமிழர்கள் இறந்தவர்களை மறவாமல் அவர்களின் வீரத்தையும், வாழ்வையும் நடுகல் வைத்துப் போற்றிவந்தனர் என்பது சங்கப்பாடல்கள் மூலம் நாம் காணலாம். அப் புறநானூற்றுக் காட்சியை அன்மைகாலம் வரை ஈழத்தில் நாம் கண்டோம். வீரர்கள் அங்கு புதைக்கப் படவில்லை, விதைக்கப்பட்டார்கள். அங்கு மாவீரர்களின் வீரம் போற்றப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்தில் 150,000-ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழகளின் உயிரைப் பறித்தது மட்டும் இல்லாமல் மனித குலத்திற்கு எதிரான சிங்கள அரசு, அம்மாவீரகள் துயிலும் இல்லங்களையும் விடவில்லை, மாவீரர் வரலாற்றை அழிக்கும் நோக்கில்  அவர்கள் துயிலும் இல்லங்களையெல்லாம் அழித்து ஊளையிட்டு வருகிறது. தமிழ்க்குருதி குடித்த சாத்தான்கள் மமதையில், வரலாறு என்றும், எவராலும் மறைக்க முடியாது என்கிற எளிய உண்மையை மறந்து விட்டன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களும், தாய்த் தமிழக உறவுகளும் தமிழ் உள்ளவரை, தமிழன் உள்ளவரை தமிழர்க்கு எதிரான படுகொலையை மறக்க மாட்டோம் என்று உறுதிபூண்டு உலகெங்கும், வீழ்ந்த மாவீரர்களுக்கும், ஈழத்து தமிழ் உறவுகளுக்கும் இந்த வாரம் முழுதும் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றன.

போர் முடிந்து 4 ஆண்டுகளுக்குப் பின்பு அன்மையில் 12 வயதான பாலச்சந்திரனின் நிழற்படங்கள் தமிழகத்தையே புரட்டிப்போட்டது. லயோலாக் கல்லூரியில் மையம் கொண்ட அந்த புயல் முழு தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கியது, எழுந்தது மாணவர்ப்படை. 2009-ல் மாணவர்களுக்கு இந்த படுகொலைச் செய்தி சென்றடையாமல் இருக்க அந்நாளைய அரசு வர்க்கம், அயோக்கியத் தாண்டவமாடி தமிழினப் படுகொலையை வெற்றிகரமாக இருட்டடித்தது. ஆனால் 2013-ல் இந்த அரசால் அதைச் செய்ய இயலவில்லை. மாணவர்களுக்கு எந்த அரசும் அடிபணிந்துதான் ஆக வேண்டும் என்று 2013-ல் மீண்டும் காட்டியது மாணவர் போராட்டம். 800 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகமெங்கும் புலிக்கொடி பறந்தது, தேசியத் தலைவரின் படம் தமிழக வீதிகளை அலங்கரித்தது. 800 ஆண்டுகள் அடிமைகளாக இருந்தது போதும், இனி பொறுக்க முடியாது என்று வீறுகொண்டு எழுந்துள்ளது தமிழனின் மறவர்ப்படை. இனி இந்த எழுச்சியை எச்சக்தியாலும் அழிக்க முடியாது.

இந்த வாரம் தமிழினப் படுகொலையை நினைவுகூறும் வாரமாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனுசரித்துவருகின்றனர். முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அவலத்தை நினைவுகூறும் வகையில் உலகத்தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி அந்த அவலத்தை மறக்க மாட்டோம், அப்படுகொலைக்கு உதவி செய்த அனைத்துலக சமூகத்தை மன்னிக்கவும் மாட்டோம் என்று உறுதிபூண்டு மாண்ட தமிழர்களுக்கு வீர அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

 2009-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ் உறவுகள் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் சான் ஓசே நகரில் சனிக்கிழமை மே 12-ம் நாள் நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வின் முதல் பகுதியில் விதைக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், அடுத்த பகுதியில் தமிழர்கள் இப்படுகொலையை உலகிற்கு உணர்த்த தமிழமைப்புகள் என்னென்ன செய்து வருகின்றன, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவாதமும் நடந்தது.

நினைவேந்தல் நிகழ்வை திரு. இளங்கோ சேரன் மட்டுறுத்தினார். 30 வினாடி அமைதியுடன் துவங்கிய இந்நிகழ்வில், அமெரிக்கத் தமிழர் அரசியலவையைச் சேர்ந்த திரு. காருண்யன் அருளானாந்தன், இளந்தமிழரணியைச் சேர்ந்த திரு. தியாகராசன் வெங்கடாச்சலம், வட கலிபோர்னிய தமிழர் அமைப்பைச் சேர்ந்த திருமதி நளாயினி குணநாயகம், மனித உரிமைப் போராளி திருமதி. கிசாந்தி, வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத் தலைவர் திரு. செயக்குமார் முத்தழகு ஆகியோர் வன்னியில் வாழும் தமிழர்கள் படும் அவலங்கள், அவர்களது தியாகம், வீரம், சிங்கள அரசு இன்றும் செய்து வரும் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பைக் (Structural Genocide) குறித்தும் பேசினர். முடிவில் வந்திருந்த அனைவரும் மலர்த்தூவி உலகின் சதியால் அழிக்கப்பட்ட தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அடுத்தக் கட்ட நிகழ்வில் அரசியல்ரீதியாக தமிழர்களின் செயல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வை திரு. சந்துரு தெய்வேந்திரன் மட்டுறுத்தினார். முதலில் உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் நான் (க. தில்லைக்குமரன்) உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org) தமிழுக்கும், தமிழினத்திற்கும் செய்து வரும் பணியைக் குறித்து உரையாற்றினேன். மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு கொடுப்பதுடன், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டுவருவது குறித்தும் விளக்கினேன். பின்பு முதல் முறையாக கனடா நாட்டின், தொராண்டோ நகரின் நடைபெறவுள்ள வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (www.fetna.org) 26-வது ஆண்டு விழாக்குறித்து படக்காட்சியுடன் விளக்கப்பட்டது.

அதன் பின்பு அமெரிக்கத் தமிழர் அரசியலவையின் (www.ustpac.org) தலைவர் முனைவர் இலியாசு செயராசாஅவர்கள் USTPAC செய்து வரும் பணியை விரிவாக விவரித்தார். பல கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதன்பின் திரு. கேதீசு அவர்கள் அமெரிக்க அரசியல்வாதிகளிடம் எப்படி நம் பிரச்சினையைக் கொண்டு சேர்ப்பது குறித்து பேசினார். அவர் பேசுகையில் குவாட்டமாலாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படுகொலைக்குக் காரணமாகவிருந்த அந்நாளைய அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு இன்று அந்த நாட்டரசே தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழினப் படுகொலையை நடாத்திய இராசபக்சே சகோதரர்களுக்கும் இந்நிலை விரைவில் ஏற்படும் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. பின்பு இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உருப்பினருமான அனைவரும் மதிக்கும் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் இணையத் தொடர்பு (skype) மூலம் பேசினார். பல சிக்கலான கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதன் பின்பு செல்வி. தமயந்தி இராசேந்திரா அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் நடந்ததைக் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். ஜெனீவா சென்று ஒரு வாரகாலம் தங்கியிருந்து பல நாட்டு தூதுவர்களைச் சந்தித்து தமிழின அழிப்பைக் எடுத்துக் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இவருடன் USTPAC-ஐ சேர்ந்த மூன்று பெண்கள் சென்று அருமையாகப் செயலாற்றியதையும் எடுத்துக் கூறினார். அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் பேசினார். அடுத்த இரண்டு கூட்டங்களின் வரிசையில் இலங்கை/தமிழர் பிரச்சினை இடம் பெற்றிருப்பதையும், மனித உரிமை ஆணையர் இன்னும் ஓராண்டில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதையும், அதனால் தமிழர்களுக்கு விளையவிருக்கிற நன்மைகளையும் அவர் விவரித்த போது அரங்கத்திலிருந்த அனைவரின் முகத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியதை காண முடிந்தது. இறுதியில் திரு. தெய்வேந்திரன் அவர்கள் நன்றி கூறி விழாவை இனிதே முடித்துவைத்தார். அறுசுவை உணவுடன் மறக்க முடியாத இந்நிகழ்வு முடிவிற்கு வந்தது.

தமழர்களுக்கு நடந்த இந்த இனவழிப்பை நாங்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம் என்கிற உறுதிமனப்பான்மை இந்நிகழ்வுகள் தெள்ளத்தெளிவாகத் எடுத்துக்காட்டுகிறது. தமிழகமெங்கும் இவ்வாரம் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. தமிழக மாணவர் பேரவை தமிழகமெங்கும் தியாகச்சுடரேந்தி ஊர்வலம் செல்லத் திட்டமிட்டுள்ளனர். முடிவில் தஞ்சையில் அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒன்று கூடவும் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்த் தேசியவாதிகளும், முதன்மை அரசியல்வாதிகளும் அங்கு ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் அவலத்தை உலகிற்கு உணர்த்தி சிங்கள இனவெறி அரசை கூண்டுக்குள் ஏற்றும் வரை ஓய மாட்டோம் என்று உலகிற்கு உணர்த்தவுள்ளனர். சென்னையில் கண்ணகி சிலையின் முன்பு ஒரு மாபெரும் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அது போல் இந்தியா முழுதும் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர்க்கு நேர்ந்த அவலத்தை மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம் என்று உணர்த்தவுள்ளனர் வீரத்தமிழர்கள்.

இந்த தமிழின படுகொலையை இலங்கை அரசு மட்டும் செய்து முடிக்கவில்லை. 30ஆண்டுகளாக வீழ்த்த முடியாத தமிழ்ப்படையை நம்மால் வீழ்த்த முடியாது என்பதை நன்கறிந்த இராசபக்சே என்கிற இரத்தக் காட்டேறி உலக நாடுகளை ஏமாற்றி அவர்களின் உதவியை பெற்றான். அதற்கு உலகிற்கு அமைதியையும், அறத்தையும் காட்டிய இந்திய அரசும் உதவியது. காந்தியும், புத்தனும், வள்ளாலாரும், விவேகானந்தரும், மாகாவீரரும் இன்றிருந்தால் இந்திய அரசின் இந்த மனித குலத்திற்கு எதிரான துரோகத்தை நினைத்து அவமானமடைந்திருப்பார்கள். இப்படுகொலை இலங்கை மட்டும் பங்கெடுக்கவில்லை, இந்தியாவும் பங்கேற்றிருப்பதை பல நிழற்படங்கள் மூலம் ஊடகங்கள் காட்டியுள்ளன. இது இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வெட்கக்கேடு. இப்போரில் மாண்ட 150,000-ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு இலங்கையும், இந்தியாவும், மற்ற உலக நாடுகளும் பதில் கூறியே ஆகவேண்டும். ஐ.நா. வின் பன்னாட்டு விசாரணையில் இலங்கை அரசுடன் இந்தியா மற்றும் உலகத்தலைவர்களையும் உட்படுத்த வேண்டும். அன்று முதல்வராக இருந்த திரு. கருணாநிதியிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கைக்குச் சென்றுவந்த திரு எம்.கே நாராயணன், திரு. சிவசங்கர மேனன் அவர்களையும் விசாரணைக்குள் உட்படுத்த வேண்டும். ஐ.நா.செயலரின் ஆலோசகரான திரு விஜய் நம்பியார், அன்று வெளியுறவுச் செயலராகவிருந்த திருமதி நிருபமா இராவ் (இன்றைய இந்தியாவின் அமெரிக்கத் தூதர்) போன்றோர்களுடன், திரு. ப. சிதம்பரம், திருமதி. சோனியா காந்தி, திரு. மன்மோகன் சிங் மற்றும் திரு. பிரணாப் முகர்ஜி (இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர்) போன்றோரையும் விசாரணை செய்ய வேண்டும். இறுதியில் இப்படுகொலையில் பங்குபெற்ற அனைவரையும் தண்டிக்க வேண்டும். அவர்கள் பன்னாட்டு விசாரணை மன்றத்தில் நிறுத்தி தக்க தண்டணை வழங்கப்படவேண்டும். ஈழத்தில் வாழும் நம் தமிழ் உறவுகள், தக்க அரசியல் உரிமைகளுடனும், அமைதியுடனும், வளத்துடனும் வாழ நாம் செய்யவேண்டியது வெகுதொலைவில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்று இந்நாளில் உறுதிபூண்போம்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!

தமிழர் தாகம் தமீழீழத் தாயகம்!


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முள்ளிவாய்க்கால் அவலம்: உலகெங்கும் தமிழர்கள் நினைவஞ்சலி(கட்டுரை)”

அதிகம் படித்தது