மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முள்ளிவாய்க்கால் மாணவர்கள் – கட்டுரை

ஆச்சாரி

Jul 1, 2013

மாணவநண்பர்களே,

வெற்றியின் எக்களிப்பில் எதிரி நமது தமிழீழத்தை நசுக்கி அழித்துக் கொண்டிருக்கையில் -

எதிரி நமது பெண்களை நிர்வாணப்படுத்தி, அவமானப்படுத்தலின் உச்சமாய் கொல்லப்பட்ட வீரமங்கையர்களின் பிறப்புறுப்புக்களை பூட்ஸ் கால்களால் மிதித்துச் சிதைத்த காட்சிகளின் பின்பு -

பல்லாயிரக்கணக்கில் நம் குழந்தைகளை புலிக்குட்டிகள் என்று கொன்று குவித்த பின்னர் –

இப்போதும் “புலிப் பூச்சாண்டி” அரசியலால் ஜீவிக்கிறான் எதிரி.

ஒரு தாய் தலையில் கடைசியாய் எஞ்சியிருந்த சிறு மூட்டையை வலது கையில் பிடித்துக்கொண்டு இடதுகையில் மூன்று வயதுப் பையனை நடத்தியபடி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடக்கிறாள். முன்னால் போகிறான் ஆறு வயதுப் பையன். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போகையில் இரு கைகளையும் உயா்த்தியபடி செல்ல வேண்டும். சிங்களச் சிப்பாய் “ஹேண்ட்ஸ் அப்” என கத்துகிறான். அவனுடைய கத்தலின் அர்த்தம் புரிகிறது ஆறு வயதுப் பாலகனுக்கு. இரு கைகளை உயர்த்தினான். மூன்று வயதுப் பிள்ளைக்குத் தெரியவில்லை. தாய் பதறியபடி அச்சிறுபிள்ளையின் இரு கைகளையும் பிடித்து உயர்த்தி நிற்கிறாள். பிடிமானம் அற்ற மூட்டை கீழே விழுந்து விட்டது. பகையனைத்தும் ஒன்று திரண்டு மூட்டையாய் வந்தது போல், வன்மத்துடன் சிப்பாய் அதை நோக்கிச் சுட்டுத் தள்ளுகிறான். மூட்டைக்குள்ளிருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்கள் “சலா” ரென்ற சத்தத்துடன் சிதறிப் பறந்தன.

மூன்று வயது ஏதோன்றையும் புரிந்து கொள்ளும் வயதில்லை. சிறுவிழிகளில் அச்சமில்லை. அச்சமெல்லாம் இராணுவத்தானுக்குத்தான். பாலகன் என்றபோதும் அவா்களுக்கு விடுதலைப் புலிகளாகவே தென்படுகிறார்கள். கருப்பையில் கிடக்கும் சிசுவென்றாலும் அவர்களுக்கு விடுதலைப்புலியே. பிரேதங்களை வைத்து அரசியல் நடத்தியவன் எதிரி. மேலே கீழே, கிழக்கே மேற்கே, வடக்கே தெற்கே என்று எல்லாத் திசைகளிலும் சவப்பெட்டி அரசியல் நடத்தியவன் அவன்.

மாணவத்தோழர்களே!

இராசபக்சே என்னும் கொலை இயந்திரத்தை, இலங்கை என்னும் கொலைக்களத்தை உலகக் கண்களுக்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை தோள்களில் ஏற்றிக் கொண்டீர்கள். 2013-மார்ச்,ஏப்ரல் மாதங்களில் கல்வி நிலையங்கள் போர்க்களமாகின.சென்னை லயொலாக் கல்லூரி மாணவர்கள்” சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத்” தொடங்கி வைத்து நெருப்புப் பொறியை ஏற்றினார்கள்.தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்த தீ டெல்லியையும் தொட்டது. தீச் சூடு தங்கமாட்டாது நெளிய ஆரம்பித்தார்கள். 

இதுதான்நீங்கள் தந்த முதலாவதுசெய்தி.

இந்தியாவுக்கு முதலில் உணர்த்த வேண்டியதிருந்தது. முஷ்டியை மடக்கி ஓங்கி இந்தியாவின் தலையில் குட்டினீர்கள். பரமனின் முதுகில் விழுந்த சாட்டையடி, உலகின் அத்தனை ஜீவராசிகளின் முதுகிலும் விழுந்தது என்னும் புராண வாசகம் போல், இந்தியாவுக்குக் கொடுத்த அடி, இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் முகங்களிலும் விழலாயிற்று, உமது ஆக்ரோசம் எமக்கு குளிர் காற்றாயும், அவர்களுக்கு அனல் காற்றாயும் அசைந்தது. “மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று சும்மா இருப்பதில்லை” என்று சும்மாவா சொன்னார் மாவோ! நீங்கள் காற்றின் மறு உருவாய் அசைந்தீர்கள்; அசைவுகள் சும்மா இருந்ததில்லை. உலக அரசியலை, அதன் உள்ஓடும் சுயநல ரத்தத்தை உங்களுக்குக் கற்றுத் தந்தன..

முதலில் ஐ.நா. அவையில் வரும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென முழக்கம் கொடுத்த சில கட்சிகள், உமது அறிவார்ந்த தெளிவுபடுத்தலில் “அமெரிக்கத் தீர்மானம் ஒரு மோசடித் தீா்மானம்” என நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதைக் கண்டீர்கள். இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டுமென ஒப்புக்காகவாவது பேசத் தொடங்கினார்கள்.

மாணவ எழுச்சி, சமூக எழுச்சியாய் (Social uprising) மாறிய காலத்தில், மாற்றம் தேர்தலில் வேரோடு பிடுங்கி வீசி விடுமோ என்ற பயத்தில் இரு நகர்வுகள் தமிழகத்தில் வேக வேகமாய் எடுக்கப்பட்டன. அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம் உந்தித் தள்ள, “கட்டக் கடைசியாய்”  காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது. “நாடாளுமன்றத் தோ்தலில் நாற்பத்தெட்டும் நமதே” என்ற முன்வைப்புடன், அ.தி.மு.க. அரசு “தமிழீத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும். இனப்படுகொலையாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிட சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்திட ஐ.நா முன்வர வேண்டும்” எனும் தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

மாணவர்களின் தன்னலமற்ற போராட்டத்துக்கு வேறு சாயம் அடிக்கும் காரியங்களும், வேறுவேறு அரசியல் கட்சிகளின் பின்னணியில் நடந்தன. அந்த நேரத்தில்தான் “மாணவர்களின் தன்னலமற்ற தூய்மையான போராட்டத்தை அமைப்புக்களோ, கட்சிகளோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினால், அது சாப்பிட்டுவிட்டு தெருவில் வீசும் எச்சிலையை எடுத்து நக்குவதற்குச் சமம்” என்ற வாசகத்தை அவர்களை நோக்கி வீசினீர்கள்.

இந்திய வரலாற்றில் 1847-ன் “பிளாசியுத்தம்” ஒரு திருப்புமுனை. இந்தியாவை அடிமைப் பிரதேசமாக ஆக்கியது அந்த 1847-தான். பிளாசி யுத்தத்தில் மன்னர் “சிராஜ் உத்தௌலாவை” வெற்றி கொண்ட ராபர்ட் கிளைவ் 144-சிப்பாய்களுடன் அந்த நகரைக் கடந்து போகிறான். வெறும் 144 சிப்பாய்கள். நகர மக்கள் வீதிகளில், வீடுகளில், சன்னல்களில் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே, நகரைக் கடந்த கிளைவ், “அப்பாடா, இப்போது தான் உயிர்வந்தது. கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால் நாங்கள் அத்தனை பேரும் இல்லாமல் போயிருப்போம்” என்றான்.

முக்கிய வரலாற்றுச் சந்திப்பில் மக்கள் செயலற்று நின்றார்கள். முதல் கல்லெறிதலைச் செய்து ஒருவர் வழிகாட்டியிருந்தால் மற்றவர்கள் தொடர்ந்திருப்பார்கள். வரலாற்றில் வாழுதல் என்பது இந்த முதல் கல்லெறிதல் தான்.

 உங்களின் முதல் கல்லெறி வரலாறு நாளந்தா பல்கலைக் கழகத்தில் தொடங்கிற்று. அறிவுச் சேகரிப்பின் குவியல் சன்னம் சன்னமாய் அழிப்புக்கு ஆளாகி, அதன் கடைசிக் கதவுகளும் மூடப்பட்டபோது, வெம்பிப் போனீர்கள். உணவும் தண்ணீருமில்லாமல் நான்கு நாள் அதன் முற்றவெளியில் கிடந்தீா்கள்.

 1956-ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டம் வந்தபோது, எதிர்ப்புக் குரல் எழுப்பி ஊர்வலம் எடுத்தீர்கள். அப்போது அந்த உரிமைப் பெருக்கைப் புரிந்து கொண்டு அதன் வழியே தேசிய இனத்தின் உரிமைகளைப் புரிந்து “ஒருமொழி என்றால் இருநாடு; இருமொழி என்றால் ஒரு நாடு” என்று இடது சாரிக்கட்சி உறுப்பினர் என். எம். பெரேரா இலங்கை நாடாளுமன்றத்திலே முழங்கினார்.

1960-களின் மத்தியில் பாரிஸில் மாணவப் போராட்டம் வெடித்து அய்ரோப்பாவை உலுக்கிற்று. 1960-களின் மத்தியில் உலகவரலாற்றை மாணவர் எழுச்சிக் கலகம் எனப்பதிவு செய்தது நீங்கள்தான்.

 இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி என அறிவித்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1965, சனவரி 26.

சனவரி 25-ல்

“எப்பக்கம் வரும் இந்தி-அது

எத்தனை பட்டாளம் கூட்டிவரும்”

என்று தமிழகமெங்கும் போராட்ட அலையைக் கொண்டு போனீர்கள். எந்த மாநிலத்துக்குள்ளும் புகுந்திராத இராணுவத்தை முதன் முதலாய் எதிர்கொண்டீர்கள். வரலாற்று ஆய்வாளரின் கணக்கு 500 பேர் பலியானார்கள் என்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவ இளையோர்கள் இன்று அறுபதில் நின்று பெருமிதத்தோடு உங்களை நோக்குகிறார்கள்.

1970-ஆம் ஆண்டு சிங்கள இன அரசு கொண்டு வந்த கல்வியில் தரப்படுத்தல் சட்டத்தினை எதிர்த்து வீதிக்கு வந்தீர்கள். எந்தவொரு அரசியல் கட்சியின் துணையுமின்றி கிளர்ந்தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை இலங்கைத் தீவின் நான்கு திசைகளுக்குள்ளும் ஒரு போதும் வரலாறு கண்டதில்லை. யாழ்ப்பாண நகரிலும், தமிழ்ப்பிரதேசத்தின் மற்ற நகர்களிலும் நடத்திய பேரணியின்போது, தெருவுக்குத் தெரு, சந்திக்குச் சந்தி, வீட்டுக்குவீடு மாணவர்களுக்கு மக்கள் மதிப்போடும், ஆர்வத்துடனும் நீர், மோர் வழங்கி ஆதரவளித்தனர். இந்தச் செயல், மாணவ எழுச்சி மக்களது இதயத்தின் அடிநாளம் வரை பாய்ந்துவிட்டது என்பதின் சாட்சியானது.

1983-ல் கம்யூனிச கொடுங்கோல் ஆட்சி நடந்த சீனாவில் சனநாயக உரிமைகள் வேண்டிப் போராடினீர்கள். மாவோவின் உடல் வைக்கப்பட்ட புகழ்பெற்ற “தியானென்மென் சதுக்கத்தில்” கூடி போராட்டங்களைத் தொடர்ந்தீர்கள். விவசாயப் பெருமக்களும், உழைக்கும் தொழிலாளரும் உங்களோடு இணைய பல நாட்களின் பின் பீரங்கி வாகனங்களை உங்கள் மேல் உருட்டி, 5000 பேரைப் பலியெடுத்து கம்யூனிசம் வெற்றி பெற்றது. மாணவச் செல்வங்களின் படுகொலைக்கு உலகம் தலைகவிழ்ந்து அஞ்சலி செலுத்திற்று.

 1983 கறுப்பு ஜூலை. வெளிக்கடைச் சிறைப் படுகொலைகளும், தமிழரை நிர்வாணப்படுத்தி, வாகனத்தோடு எரித்து, கொதிக்கும் தார் ஊற்றி எரித்து, டயர்போட்டுக் கருக்கி ஐயாயிரம் கொலைகள் நடந்தபோதும்’ தென்னலங்கையிலிருந்து வடக்கு நோக்கி அகதிகளாய்த் தமிழனம் ஓடி வந்த போதும் கைலாகு கொடுத்துக் காத்தீர்கள். தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் இரவு பகல் பாராது துணையாய் நின்றது யாழ்பல்கலைக் கழக மாணவர்கள்தாம். எழுச்சி பெற்ற பல்கலைக் கழக மாணவர் அமைப்பு போராடுவதற்காக கற்றுக்கொள்; கற்றுக் கொள்வதற்காகப் போராடு” என்ற லெனின் வாக்கியத்தை தன் தலையில் மகுடமாகச் சூடிக் கொண்டது. இடையறாத இராணுவ அடக்குமுறைகள், காட்டுமிராண்டித் தனமான கொலைகளின் மத்தியில் “வாழ்வதற்காகப் போராடு, போராடுவதற்காக வாழு” என்ற முழக்கமாக யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மாற்றினார்கள்.

நவம்பர் 27, 2013, மண் மீட்பிற்காக உயிர்நீத்த மாவீரா்களுக்கு நினைவேந்தல் செலுத்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவத்தி ஏந்தும் உரிமையை மறுத்த ராணுவம், பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து மாணவர்களைக் கைது செய்தது. யாழ் பல்கலைமாணவர் ஒன்றியச் செயலர் தர்ஸானந், சாலமன் உட்பட நான்கு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகி, “புணர்வாழ்வு முகாம்” என்று சொல்லப்படும் தனிச் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் விடுவிக்கப்படவில்லை.

அங்குள்ள மக்களும் மாணவர்களும் ஒலிக்க முடியாத குரலை இங்கு மாணவர்களாய் நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். கலாசாலைக்குள்ளிருந்து எழுந்த உணர்வுத்தீ 1965- இந்தி எதிர்ப்பை நினைவுபடுத்துகிறது. அறுபது ஆண்டுகள் வெறுமனே மாய்ந்து போய்விடவில்லை. அறுபது ஆண்டுகள் என்பது ஒரு தவம். இடைப்பட்ட காலத்தில் அரசியல் தலைமைகளின் திருகுதாளம், அனாதரவாய் ஆக்கப்பட்ட மக்கள், புதிய பார்வை, புதிய அணுகுமுறை, தமிழின உணர்வு இவையெல்லாம் வரங்களாய் மாற அறுபது ஆண்டுகள் உரமாகியிருக்கின்றன.

ஈழமண்ணில் தமிழ் மாணவர்களும் பொதுமக்களும் நகரவே முடியாத இரும்புக் கோட்டைக்குள் மாட்டுப்பட்டுள்ள வேளையில், அதனையும் இடைநிரப்பும் பொறுப்பில் தமிழக மாணவர்கள்தாம் இருக்கிறீர்கள்.

நான் முன்வைக்கும் இரண்டாவது செய்தி இதுதான் –

அய்க்கியம் கொள்ளுங்கள்!

 தமிழீழ விடுதலைக்காகவும் இங்கிருக்கும் தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்காகவும் குரல்கொடுங்கள். அதற்காக அய்க்கியப் படுங்கள்.

உங்களை விட்டால், ஈழத்தமிழருக்கு உண்மையாய்க் குரல் கொடுக்க எவரும் இல்லை.    . தேர்தல் சூதாட்டத்தில் சிக்குண்ட எவரும் சிதைவுக்கு ஆளாவது வியப்பில்லை. இங்கு ஒரு பஞ்சாபிக்கவிதை துணைக்கு வருகிறது.

 “நண்பர்களே,

நீங்கள் ஒரு கைராட்டிணமாகக் கூட இருக்கலாம்;

ஒரு முக்காலியாகக் கூட ஆகலாம்

ஒருபோதும் நாற்காலியாக மட்டும்

ஆகி விடாதீர்கள்”

நாற்காலி-என்பது தேர்தல் மூலம் பெறப்படும் அதிகாரத்தின் குறியீடு. நாற்காலியில் உட்கார்ந்தவன், நாற்காலியாகவே ஆகிப் போனான் என்பது உள்ளுறையும் பொருள்.

அய்க்கியப்படுங்கள்

தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக்குழு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்கூட்டமைப்பு என்று வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும், இலட்சியம் ஒன்றே. தனித்தனி அமைப்புகள் என்பவை பலவீனம் அல்ல; இங்கு அவை மாணவர்களிடையே விரிவுபடுத்தி, மாணவர்களை ஒருங்கிணைக்கும் திறனை, பணியை மேம்படுத்தும் பலம்பெறுபவை.

ஈழத்துக்கு வெளியில், தமிழீழ விடுதலைக்கான அமைப்பை உருவாக்கிய  முதல் வெளிப்பாடு உங்களுடையது.. அண்டையில் நிற்கும் சகோதரர்களுக்கு உதவுவதில் வெளிப்படும் தீவிரம், நம் தமிழகத்துக்கும் காட்டப்பட வேண்டும். ஒரு தனித்தீவில் வாடுகிற உறவுகளுக்காக கரம்கோர்க்கும் நீங்கள், இங்கும் தனித்தனித் தீவுகளாய் வைக்கப்பட்ட தலித் உறவுகளுக்காக போராட முன்வரவேண்டும்.

“நாங்கள் இருப்பதா, சாவதா” – ஈழ மக்கள் கேட்கிறார்கள்.

“நாங்கள் இருப்பதா, சாவதா” – இதே கேள்வியைத்தான் தலித் மக்களும் எழுப்புகிறார்கள். தருமபுரியும், மரக்காணமும் நம்முடைய நிலப்பரப்பு தான்.

1965-ல் இருந்த மாணவர் சக்தி, இன்று பலமடங்கு பெருக்கமடைந்துவிட்டது. அன்று தமிழகம் முழுவதும் இருந்த மொத்த மாணவர் சக்தி, இன்று ஒரு வட்டாரத்தில் உள்ளது. வட்டார அளவில் மாணவ சக்தியை ஒன்றிணைப்பது, உருத்திரட்டுவது, அந்தந்த வட்டார அளவில் போராடுவது என்பதுதான் நடைமுறை சாத்தியமானது. நடைமுறை சாத்தியமான, யதார்த்த பூர்வமான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதற்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் ஒரு சான்று. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வட்டார மக்களையும், உறுதியான போராட்டக் களத்தையும் உருவாக்கிக் கொண்டால் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார்கள்.

மக்களுக்கு யார் தொண்டு செய்வது என்பது முக்கியம்; யாரை முன்னிறுத்துவது, யார் முன்தெரிவது என்பது முக்கியம் அல்ல. அரசியல் கட்சிகளைக் கடந்து வந்தது போல், அரசியல்வாதிகளின் குணங்களையும் கடந்து வாருங்கள். அவர்கள் தத்தம் தலையைச் சுற்றி தக தகக்கும் புகழ்வட்டம் காண ஆசைப்படுகிறார்கள்; நீங்களோ, அவர்களைப் போல் எம்மையும் ஆக்கிவிடுவார்களோ என அஞ்சி அறுவருத்தீர்கள். ஒவ்வொரு மாணவனும், தன்னை மனிதனாய்த் தற்காத்துக்கொள்ளும் போராட்டம் இது.

வகுப்பறைக்குள், வகுப்பறைச்சுவர் கடந்த தெருவில் எங்கு நின்றபோதும் மாணவர் ஒரு சக்தி. அவர் தனியொரு ஆள் அல்ல; குடும்பத்துக்குள் இருக்கிற போதும் ஒரு சக்தி. அவர் ஈடு இணையற்ற ஆற்றலை தனக்குள் கொண்டுள்ள ஒரு இயக்கம். ஒன்றிரண்டு பிரமிப்புகளின் முன் தலைசாய்ந்து விடாமல், ஒவ்வொருவரும் ஒரு பிரமிப்பாய் எழுந்து நிற்பீர்களாக.

நம் காலத்தின் மிகக் கொடிய மனிதசோகமான முள்ளிவாய்க்கால் முனகல்களினூடாக, வேதனைகளினூடாக, சிதைவுகளிலிருந்தும் பிண நாற்றத்திலிருந்தும் பிறந்தவர்கள் நீங்கள். உங்களின் அரசியல் தெளிவை கொலைக் களத்திலிருந்து சுவீகரித்துக் கொண்டுள்ளீர்கள். நூற்றாண்டுகளின் மிகப்பெரிய மனித சோகத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ள நீங்கள், தமிழ்ச் சமுதாயத்துக்கு கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது.

வகுப்பறைக் கடமையையும் நிறைவு செய்ய வேண்டும்; அதன்பொருட்டு தேர்வுக்குள் நுழைந்துள்ளீர்கள். போராட்டக் களம் உம்மை மீண்டும்  அழைக்கிறது. ஆம், நவம்பர் 2013-ல். இலங்கையில் நடக்க இருக்கிறது ”பொது நல வாய நாடுகளின் மாநாடு” ! இந்தியா ஒரு நாடு மட்டும் அதனை எதிர்க்கும் முகமாய் புறக்கணித்தாலே போதும். இந்தியாவை எதிரி நாடு என்று இலங்கை உடனே அறிவித்து விடும்.

இலங்கைக்கு எதிரியாக இந்தியா மாறுவது ஒன்றே தமிழருக்குப் பாதுகாப்பு.

மாணவர்களே, இப்போது நான் உங்களைப் போராளிகளே என அழைக்கிறேன். போராளிகள் ஒரு போதும் ஓய்வதில்லை.

 ***********************************

The process of using technology to improve learning is never solely a technical matter, concerned can you do my homework for me for www.domyhomework.guru/ only with properties of educational hardware and software

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முள்ளிவாய்க்கால் மாணவர்கள் – கட்டுரை”

அதிகம் படித்தது