மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மே 17 – எனது இறந்த நாளல்ல, பிறந்த நாள்

ஆச்சாரி

May 17, 2014

பக்கத்து வீட்டு குழந்தையின் முனகல் நின்று விட்டது. திரும்பி பார்க்க முடியவில்லை. இறந்து விட்டாளோ? கடவுளே, பார்த்துகொள் அக்கா, இரண்டு நாளில் வந்துவிடுகிறேன் என்று பிள்ளையை கொடுத்துவிட்டு போனவளுக்கு என்ன பதில் சொல்ல போகின்றேன்? என் பிள்ளையையாவது காப்பாற்று சாமி, அவன் எங்காவது குழிக்குள் இந்நேரம் ஒழித்திருக்க வேண்டும். இன்னமும் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றதே. சத்தம் அடங்கினால் தானே யாரும் வருவார்கள். இதுதான் எனக்கும் கடைசி நேரமோ? எழுந்து ஓட முயற்சி செய்யலாம் என்றாலும் உடலின் எந்த பாகத்தையும் உணர முடியவில்லையே. ஹெலிகாப்டர் திரும்பி இந்த பக்கம் தான் வருகின்றது போல சத்தம் கேட்கின்றதே. பெரும் வெடிச் சத்தத்திற்குள் எனது உடல் அடங்கிவிடுகின்றது.

எனது உயிர் உடலை பிரிந்து இன்றோடு ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. மே 17, 2009 எனது இறந்த நாள் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அன்று நான் மீண்டும் பிறந்திருக்கிறேன். கயவர்களால் கற்பழிக்கப்பட்ட, காயம் பட்ட ஒரு உடலை தான் நான் அன்று பிரிந்திருக்கிறேன். வீடுள்ளவனுக்கு ஒரு வீடு, வீடற்றவனுக்கு பல வீடு என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போன்று இன்று எனக்கு பல இலட்சம் உடல்கள். என்ன சிறிய வித்தியாசம், ஒரே நேரத்தில் நான் அத்தனை உடல்களிலும் இருக்க முடிகின்றது. சிலரின் உடல்களிலும் அவர்களின்  செய்கைகளிலும் முழுமையாக கலந்திருக்கிறேன், சிலரின் உடல்களில் என்றேனும் அரிதாக வந்து செல்லும் அளவிலேயே அனுமதிக்கப் பட்டிருக்கின்றேன்.

எனக்கு மதமில்லை, சாதியில்லை, பணக்காரன் ஏழை வித்தியாசமில்லை, ஆனால் மொழி மட்டும் இருக்கின்றது. உடமையை, உடலை இழக்கலாம், மொழியை எப்படி தொலைக்க முடியும்? அந்த மொழியினால் தானே இத்தனை இழப்புகள் எனக்கு. என்னை கற்பழித்த இராணுவ வீரனுக்கும்(??) எனக்கும் மொழி வேறுபாடு என்ற ஒற்றைத் தொடர்புதானே இருந்தது. மொழியை விட முடிந்திருந்தால் இன்று உன்னைப்போன்று நானும் எங்கேனும் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேனே? இன்று உன்னிடம் என்னைப் பேச வைப்பதும் இந்த மொழிதானே.

உனக்கு என் முகம் நினைவிருக்கின்றதா?. சமூக வலைத்தளங்களில் எனது படத்தை நீ பார்த்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கூட இரண்டு சிற்பங்களில் என்னை வடித்திருக்கின்றார்கள். அடையாளம் தெரியவில்லை எனில் உன் முகத்தை கண்ணாடியில் பார் நான் தெரிவேன்.

2009 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் எனது பிரச்சனைகளை உரக்க பேசிவந்தீர்கள். காணொளி மற்றும் நிழற்படங்களைத் தேடி தேடி பதிவிட்டீர்கள். ஒவ்வொருத்தரும் தனியாக ஏதும் சாதிக்க முடியாது என்றுணர்ந்து இயக்கம், கட்சி, சாதி என்று பலம் வாய்ந்த அமைப்புகளுக்குள் நுழைந்தீர்கள். ஆனால் இன்று உங்களில் பெரும்பாலானோர் இயக்கம், கட்சி சாதி நிலைப்பாடு சட்டங்களுக்குள் எனது சிக்கலை வளைத்து கத்தரித்து பொருத்தி பார்க்கின்றீர்கள். எனது இந்நிலைக்கு காரணமே ஆரியம் தான், திராவிடம் தான், மதம் தான், சாதி தான், பொதுவுடைமை கருத்து தான், முதலாளித்துவம் தான் என்று பல காரணங்களை அடுக்கி வாதிட்டு கொண்டிருக்கின்றீர்கள். இவைகளை எதிர்ப்பதற்கான அவசியங்களை நான் உணர்கிறேன், உங்களின் உண்மையான செயல்பாடுகளை முழுமனதுடன் ஆதரிக்கிறேன். எவ்வழியில் சென்றாலும் எனக்காகத் தான் செல்கின்றீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் பின் வந்துகொண்டே இருக்கின்றேன்.

சென்னை காவல்துறை ஒதுக்கி தரும் முட்டு சந்து போராட்ட பந்தல் முதல் ஐ.நா. சபை அரங்குகள் வரை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை எனது சிக்கலை உணர்ச்சி பூர்வமாக நீங்கள் எடுத்துரைக்கும் பொழுது எனக்காக எனது சகோதரன் இருக்கிறான், சகோதரி இருக்கிறாள் என்று ஆறுதல் கொண்டிருக்கிறேன். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காகவே என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தெரிந்தாலும் கடந்து செல்கின்ற பக்குவத்தை அடைந்திருக்கிறேன். தமிழகத்தில் என்னால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் சிலர் என்றால் என்னால் வாழ்க்கையை வளர்ப்பவர்கள் பலர். அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கி அமைதியை அணிந்து அலைகிறேன்.

உடலில்லாமல் உரிமையில்லாமல் ஐந்தாண்டுகளாக சுற்றிவருகின்றேன். இன்னும் எத்தனை நாட்கள், ஆண்டுகள் நான் இந்நிலையில் இருக்க வேண்டுமோ தெரியவில்லை? அவ்வப்பொழுது தற்பொழுது இருக்கும் உயிருக்கும் கடும் நெருக்கடியை உணர்கிறேன். என்னால் முடியவில்லை. முழுவதும் அமைதியாகி விட விரும்புகின்றேன். ஆனால் அதற்குமுன் சிலவற்றை காண துடிக்கிறேன்.

அச்சம் களைந்த அரசு அலுவலகங்கள்

இராணுவம் இல்லாத வீதிகள்

பாகுபாடு பார்க்காத பாடசாலைகள்

நீதியை நிலை நிறுத்தும் நீதிமன்றங்கள்

குற்றங்கள் குறைந்த காவல்துறையினர்

உண்மையை உரைக்க உரிமைகள்

என் மொழிக்கென ஒரு நாடு இல்லாமல் இவைகள் கிடைக்கபோவதில்லை என்பதை அறிந்தே இருக்கின்றேன். நாடு கிடைத்த உடன் தேனாறும் பாலாறும் ஓடிடப் போவதில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்று ஊழலில் ஊறியவர்களாகவும் உரிமையை விற்பவர்களாகவும் எங்களை  ஆளுபவர்கள் அமையலாம். இருப்பினும் என் பிள்ளைகளும் உங்களது பிள்ளைகளைப் போன்று கண்ணியமாக தலை நிமிர்ந்து தெருவில் நடக்க முடியும் என்று நம்புகின்றேன். காலையில் வெளியில் செல்லும் கணவர் மாலையில் வீடு திரும்புவார் என்று அமைதியாக இருப்பார்கள் எனது சகோதரிகள். தீபாவளிக்கு மட்டுமே வெடிச் சத்தத்தை கேட்பார்கள் எங்களது குழந்தைகள். அந்நிய மொழி அறியாமலே அனைத்தையும் அடைவார்கள் எனது சொந்தங்கள்.

இவைகள் உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். சுவாசிப்பதற்கு திணறுபவளுக்குத் தான் தெரியும் ஒரு முறை சுவாசத்தை இழுத்து வெளியில் விடுவதற்கு எத்தனை உறுப்புகள் ஒத்திசைய வேண்டும் என்று. எனது பிள்ளைகளும் உங்களைப் போன்று சிரமமில்லாமல் சுவாசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

நான் சொர்க்கத்தை கேட்கவில்லை. எனது சொந்த உரிமையைத் தான் கேட்கிறேன். என்னிடம் இருந்து பறித்து என் கண் முன்னரே கண்ணாடி பெட்டியிலே பூட்டி வைத்திருக்கும் எனது உரிமைகளைத் தான் கேட்கிறேன். பூட்டை திறந்து விடுங்கள் எனது உரிமை என்னிடம் பறந்து வரட்டும் என்று தான் மன்றாடுகின்றேன்.

பூட்டின் சாவி கொழும்பில் இருக்கின்றது என்கின்றனர் சிலர். இல்லை எங்களிடம் டில்லியில் பத்திரமாக இருக்கின்றது என்கிறார்கள் சிலர்., இல்லை இல்லை நாங்கள் சாவியை பார்த்தோம் அது அமெரிக்காவில் தான் இருக்கின்றது என்கின்றனர் சிலர். அமெரிக்காவில் இருப்பது கள்ள சாவி ஐநாவில் தான் அசல் சாவி இருக்கின்றது என்கின்றனர் சிலர். ஆனால் எனக்கு தெரியும் சாவி எங்கிருக்கின்றது என்பது. அது உன்னிடம் தான் இருக்கின்றது. உனது வார்த்தைகளில் பொதிந்திருக்கின்றது. எனக்காக நீ நடக்கும் பொழுது உனது காலனியில் பதிந்திருக்கின்றது. எனக்காக செயல்படும் உனது கைகளில் கலந்திருக்கின்றது.

நொடிக்கு ஒரு முறை உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீ ஆண்டிற்கு ஒரு முறையேனும் என்னை நினைக்க வேண்டுமே என்று. சூரியகாந்தி பூ சூரியனையே நோக்குவது போன்று உன்னையே நோக்கி இருக்கின்றேன். இலட்சம் உறவுகள் ஊற்றும் நீரிலே வளர்ந்தாலும் உன்னுடைய ஒரு துளி நீருக்காகவும் காத்திருக்கின்றேன். நீயும், உனது நட்புகளும், உறவுகளும் ஊற்றும் நீரில் ஒரு நாள் நானும் மலர்வேன், எனது குழந்தைகளும் மலரும், சொந்தங்களும் மலரும், ஊரே மலரும். அன்று என் நாடும் உலக வரைபடத்தில் மலரும். அதுவரை நானிருப்பேன் நம்பிக்கையோடு.

Users are required to contact a match within a 14-day window or the trackingapps.org/ match disappears

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மே 17 – எனது இறந்த நாளல்ல, பிறந்த நாள்”

அதிகம் படித்தது