மொழிகளின் பரிமாற்றம் 1
ஆச்சாரிApr 15, 2012
பரிமாற்றம், கொள்வினை கொடுப்பினையின்றி சமூக வாழ்க்கையும், சமூகமும் நகர்வு பெறாது. இது மறுக்க முடியாத இயற்கை விதி. ஒரு நாடு, ஒரு இனம் என்ற நிலைபெற்ற வாழ்க்கை முறைக்கு மனித இனம் வரும் முன்னரே நாடோடிகளாய் அலைந்த கால்நடைகளாகிய மனித இனம், கற்றதும் பெற்றதும் இயற்கையிடமே. தற்காப்பு என்ற நிலை கடந்து, தகவல் தொடர்பியல் கருவி என்ற நிலைக்கு மொழியினைப் பயன்படுத்திய நாள் முதலாய், இந்தப் பரிமாற்றம் நடந்த வண்ணமாய் இருக்கின்றது.
சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்த தொல்குடி சமுதாயத்தை ஊடுருவிய நாள் முதலாய் மொழிக்கலப்பு என்பது ஒரு இனப்பெருக்கம் போல தொடர்வினையாய், சங்கிலித்தொடராய்-நிகழ்வுகள், பரிமாற்றம் என்ற நிலையல்லாது, இரண்டறக் கலத்தல் (Mingling) என்ற சுழல் கொண்ட வெள்ளப் போக்காய் ஓடுகின்றது. இப்படிச் சொல்வதற்குக் காரணம் பரிமாற்றம்-கலப்பு என்பதும் அல்லாது, இரண்டறக் கலத்தல் (Mingling) என்பதான தன் மாற்ற மொழி உருவாக்கம், சிந்து சமவெளியிலும் அதனைக்கடந்த நிலப்பகுதிகளிலும் தொடர்ச்சியான சான்று.
பிராகிருதம், சமற்கிருதம் மற்றும் பாலி என்று உருமாற்றத்திற்குப் பின், மேலும் அது உருண்டு இன்றைய வடமொழிகள் எல்லாம் இனப்பெருக்கமாய் இருப்பதும், அதன் நீட்சி, மேக நிழல் போலவும் வேரோடிய நஞ்சாகவும் படர்வது தெலுங்கு,கன்னட மற்றும் மலையாள மொழிகளாகவும், இன்று தென்னவரின் எஞ்சிய தமிழகத்தின் கதவையும் வந்து முட்டிய வண்ணமாய் உள்ளது, பரிமாற்றமல்லாத கலப்பினத்தின் சான்று.
ஆரிய நாடோடிகளின் இடப்பெயற்சி குறித்து திரு. இராகுல சாங்கிருத்தியாயன் என்ற இராகுல்ஜி (வட இந்திய வரலாற்றறிஞர்) கூறும் போது, சிந்து சமவெளியை எட்டிப்பார்த்து வந்த ஒரு ஆரிய நாடோடி, தன் இனத்திற்குச் சொல்லும்போது ” சுடுமண் கற்களைக்கொண்ட பெரிய கோட்டைகளையும், சிறந்த குடியியல் அமைப்பு சார்ந்த வசிப்பிடம் கொண்ட மக்கள் நகரங்களையும் கண்டேன். அதற்கும் மேலாக எல்லையில்லாத நீர் வளம் கொண்ட அலையாடிக் கரைதொடும் கடலையும் கண்டேன்” என்கிறான். இதன் பின்னர் தான் அந்தக் கூட்டம் சிறந்த வாழ்விடமும், ஏற்கனவே பண்பட்ட சமூக அமைப்பைக்கொண்ட, கடல் என்ற நீர் வளத் துறைகளையுடைய சிந்துவெளி நோக்கி நகர்கின்றனர்.
கடலைக் காணாத ஒரு சமூகம் எப்படி சங்கு விளைவதையும் முத்துக்குளிப்பதையும் அறிந்திருக்க முடியும் ?
சங்கு என்பதே ஷங்க்/ஷங்கம் என்றும் பின்னர் சங்கம் என்றதாகவும் ஒரு அமைப்பைக் குறிப்பதற்கும் சொல்லானது. புத்த சங்கம், ஜைன சங்கம் என்பதற்கெல்லாம் முன்னரே தமிழ்ச் சங்கம் முழக்கமிட்டு நாத விளக்கம் பெற்று தமிழில் தொகை நூல்களைத் தொகுக்க சங்கமித்தனர். அந்த ஒருங்கிணைவு தான் மற்ற ஏனைய சங்கத்திற்கும் காரணமாயிற்று.
சங்கம் என்பதும் சங்கு என்பதும் மிக நேரிடையாகத் தொடர்புடைய சொல். சங்கு என்பது ஆழியில்(தமிழில் கடலுக்கு மற்றொரு சொல்) கண்டெடுக்கப்படும் பொருள். சங்கு என்பது உள்ளீடு கொண்ட நீர் வாழ் உயிரியின் ஓடு. இதனில் உள்ளும் புறமும் நிலை பிரித்து விளக்கம் சொல்லும் குறியீடு. இதனைத்தான் ஆண்டாள் தன் திருப்பாவையில் “வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ..?” என்கிறார். அதாவது புறத்திலிருந்து செலுத்தப்படும் காற்று உள் சென்று பேரரவமாய் ( மிகுந்த ஒலியாய்) புறவயமாக பெருக்கெடுக்கின்றது.
புறம் அகத்தூடாகவும் அகம் புறமாகவும் சங்கமிக்கின்றபடியால், தமிழரின் அக-புற வாழ்வியலை ஊடாக இணைத்து தொகுத்து சங்க நாதமாக பாருக்கு அறிவிக்கின்றது. ஆகவே தமிழ்ச் சங்கத்தில் இருந்தே ஏனைய சங்கங்கள் மற்றும் ஷங்க்/ஷங்க்கம் என்ற சொற்கள் பெறப்பட்டன என்பதில் மாற்று ஏதும் இல்லை. ஆனாலும் ஷங்க்/ஷங்க்கம் என்ற வடமொழியில் (சமற்கிருதத்தில்) இருந்து தான் சங்கு/சங்கம் என்ற சொல் தமிழுக்கு ஒட்டிக்கொண்டது அல்லது கடன் வாங்கப்பட்டது என்றோ அடம்பிடிப்பவர்கள் கூற்று “சீரகம்“ என்ற தமிழ்ச் சொல்லை “ஜீரகம்“ என்ற வடமொழிப்படுத்தி வலிந்து பொருள் கொண்டு, இது முதலில் எங்கள் சமற்கிருதத்தில் இருந்துதான் வந்தது என்றால் ஏற்கமுடியுமா?
பரிமாற்றம் தொடரும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொழிகளின் பரிமாற்றம் 1”