மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மொழிகளின் பரிமாற்றம் – 3

ஆச்சாரி

Jun 1, 2012

ஒரு மொழியில், பண்பாட்டில் இல்லாத செயல் கூறுகளை, நாம் பயன்பாட்டில் கொள்ளும் போது அதனை நாம் அந்த தோற்ற மொழியின் சொல்லையே எடுத்தாட்கொள்வது உலக இயல்பு. இது தான் இயல்பான, மொழிகளின் உலகியல் பரிமாற்றம். எடுத்துக்காட்டாக நாட்டுப்பாடலில் ஒன்றினை செவிமடுத்த கம்பன், அதன் அடுத்த அடியின் முடிவுக்காக பொழுது விடியக் காத்திருந்ததாக செய்தி. அதாவது ” மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே…!!!” இந்த ஏற்றப்பாடல் ஒன்றினைப்பாடிய கழனி வாழ் விவசாயி, ஏற்றத்தை நிறுத்திய போது அந்தப்பாடலின் முடிவையும் முடக்கிவிட்டான். நிகரில்லா கம்பன் இருப்பில்லாமல் காத்திருந்தான் கதிரவன் கண்விழிக்க. ஆம் அந்த இறுதி அடியினை, அந்த விவசாயி ஏற்றத்தை இறக்கி நீர் இறைக்கும் போது இறக்கிவைத்தான். ” ….. தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே…!!!” என்று. காத்திருந்த கம்பனும் மூச்சிறைத்து நின்றான். பனி படரும் போதும் அது நீங்கும் போதும் சொல்லாட்சி பெறுகின்றது ஒன்றுதான்.

இன்று நாம் நாள் தோறும் செய்திகளைக் கேட்கும் போது, “இன்று ஐரோப்பாவில் லண்டன் நகரில் உதிர்பனி பொழிவு”, “வட அமெரிக்காவில் உறைபனி மிகுதி”. இப்படி கால இட மாற்றத் தேவைக்கேற்ப ஒவ்வொரு மொழியிலும் சொற்கள் உருப்பெருகின்றன.கலைச் சொற்களும் கையாளப்படுகின்றன. அப்படி தேவைக்கேற்ப பெற்றதும் கொடுத்ததும் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அது இயல்பான நடைமுறையில் இருக்கவேண்டும். அதுவல்லாமல், இருக்கின்ற போதிய சொற்களை மறைக்க அல்லது அழிக்க, வேறு ஒரு மொழியினை அல்லது சொற்களை ஆட்சிமொழிப்படுத்தினால் அது பரிமாற்றமும் அல்ல இரண்டறக்கலத்தலும் அல்ல, மாறாக வண்திணிப்பே. அது அரசியல் மற்றும் சமூக நிறுவனமயமான மதம் என்ற போர்வையிலும் நடக்கும் வக்கரிப்பே. தமிழில் வண்தினிப்பாகக் கலந்த பல சொற்கள் மேற்படி அரசியல்,மத வழிப்பட்டவைதான். ( இதில் தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறான மதம் என்பதும் ஆட்சி என்பதும் அடங்கும் ).
தமிழில் இப்போது நாம் எளிமையாக மிகப்பரவலாகப் பயன்படும் சில அயல் மொழிச் சொற்களைப் பார்ப்போம்.
1. முக்கியம், 2. பிரதானம், 3. பயங்கரம், 4. உதாரணம், 5. சாதாரணம். இந்த ஐந்து சொற்களை மட்டுமே நம்மில் பலர் தமிழ் என்றுதான் நினைப்பார்கள். இது தான் இன்றைய நிலை. பலருக்கு முக்கியம் என்ற சொல் எப்படி வட மொழி என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ( நான் சொல்வது மிக எளிய மக்களை. மொழியிலும் சொற்களிலும் ஓரளவு திறன் உடையவர்கள் அப்படி அல்ல.)

முக்ய என்ற வடமொழியின் சொல்லினை முக்கியம் என்று தமிழ்ப்படுத்தி உச்சரிப்பதினால் அது தமிழ் ஆகி விடாது. அது போலத்தான் சங்கு என்ற தமிழ்ச் சொல்லை ஷங்க் அல்லது ஷங்க்கம் என்று வடமொழிப்படுத்திக்கொண்டால் அது சமற்கிருதம் ஆகிவிடாது.
முக்கியம் அல்லது அவஸ்ய என்ற இரண்டு வட மொழி சொற்களுக்கும் அதன் வருகைக்கு முன்பே நம்மிடம் ” இன்றியமையா” என்ற சொல் உள்ளது, இன்றும் உள்ளது. நாம் தான் அதனைத் தவிர்த்து இதனைப் பயன்படுத்துகிறோம். காரணம், இன்றைய ஊடகம் என்ற பெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற நிறுவனங்களும், அதற்கு முன்னோடியான மத நிறுவனங்களும் அரசியல் நிறுவனங்களுமே.
முக்ய= முக்கியம்
பிரதான்=பிரதானம் ( இவை இரண்டிற்கும் இன்றியமையா மற்றும் முதன்மை என்றும்)
பயம் + ஹர = பயங்கர(ம்) ( மிகக் கடுமையான, அருவெறுப்பான மற்றும் அச்சம் தருவதாகவும் என்றும் )
உதாரன்= உதாரணம் ( சான்று, எடுத்துக்காட்டு என்றும்)
சாதாரன்= சாதாரணம் ( எளிமையான, இயல்பான )
என்றும் பல்வகை சொற்கள் இருக்க, ஏன் இந்த மேற்படி சொற்கள் ? நாம் ஏன் பயன்பாட்டில் கொள்வதில்லை ? இது வண் திணிப்பாலும், ஆட்சிமொழிப்படுத்தலாலுமே. ஆள்பவன் தமிழனாகவே இருந்தாளும் அவனும் ஆளப்படுபவனாகவே இருக்கும் போது இது தவிர்க்க இயலாமல் ஏற்படும் தீங்கு. மதங்கள் என்பது இன்றைய நிலையில் உள்ளவை மட்டுமல்ல அன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் அறம் போதிக்க வந்த அருகரும் சரி, அன்பை போதிக்க வந்த சாக்கியரும் சரி, போதனைக்கு தங்கள் மொழியினையும் அதிகாரத்தால் திணித்தனர். இந்த பயங்கரம் ஏன் நடக்க வேண்டும் ?

ஊர் ஊராகச் சென்று சுவடிகள் தேடிய தமிழ்தாத்தாவிற்கு கிடைத்த ஒரு நூலைப்பார்த்து பயந்தே போய்விடார். ஆம் அவரிடம் கிடைத்த சுவடிகளின் தொகுப்பு ” பயங்கர மாலை” என்ற இடைக்கால பக்தி இலக்கியத்தின் தொகுப்பு. அதனைப்படித்த பின்புதான் அவருக்கும் புரிய வந்தது, இந்த நூல் மன பயத்தை போக்குவதற்காக தோத்திரப்பாடல்களாக எழுதப்பட்ட பயம் + ஹரம் = பயங்கரம் அதாவது, பயம் என்பதனை அறவே இல்லாமல் செய்வது அல்லது மாய்ப்பது( ஹரம்/ ஹர ஹர ) என்பதாக வடமொழிப்பொருள்படும் பெயர் கொண்ட தமிழ் நூல்.
இப்படி தம் தாய் மொழியில் கலைச் சொற்களையும், இயல்பான சொற்களையும் பேணிக்காக்காமல் போனதால் தான் இன்று திராவிட மொழிகளாக பல உருப்பெற்று தேய்ந்து கட்டேறும்பாகி இன்று கண்ணுக்குப் புலப்படாமல் சித்தெறும்பாகி  ஊர்வதறியாமல் உழல்கின்றோம்.

பரிமாற்றம் தொடரும் ….

The effect of prior knowledge on an you can check here immediate and delayed associative learning task following elaborative interrogation

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொழிகளின் பரிமாற்றம் – 3”

அதிகம் படித்தது