மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – ரவைப்பணியாரம், கருப்பட்டி பணியாரம்

ஆச்சாரி

Dec 7, 2013

தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் உலகில் தனித்துவமானது. இதில் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இதிலும் தனியே நமக்கென ஒரு அடையாளம் உண்டு. இம்மூன்று அடிப்படைத் தேவைகளில் முதலாவதாக இருக்கும் உணவில் ஆதிகாலம் தொட்டே சைவம், அசைவம் என அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ்ந்த இனம் நம்மினம். அன்று பெரும்பாலும் சிறுதானியங்களையும், மாமிசங்களையுமே உணவில் அதிகம் எடுத்துக்கொண்டது. பல்வேறு இடத்தில் வாழ்ந்த தமிழர்கள், அந்த இடத்தில் என்ன விளைந்ததோ அதையே உட்கொண்டு வாழ்ந்தனர். பிற்காலத்தில் அந்த உணவில் விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிடும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினர்.

தற்போது தமிழகத்தில் காரைக்குடி(செட்டிநாடு சமையல்), நாகர்கோவில், மதுரை, விருதுநகர், ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், ஆம்பூர் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களின் உணவு முறையில் சில உணவுகள் பிரபலமாகி உள்ளன. இதில் முன்பசிக்கு உண்ணப்படும் சிற்றுணவுகள் அதிகம். அதில் அதிரசம், பணியாரம், பஜ்ஜி, போண்டா, கீரைவடை, உளுந்தவடை, கேசரி, எனப்பட்டியல் நீளுகிறது. இதில் தமிழர்களின் ஆதிகாலம் தொட்டே இருந்து வரும் உணவான பணியாரத்தில் கருப்பட்டிப் பணியாரம் பற்றியும், ரவைப் பணியாரம் பற்றியும் இதன் செய்முறைப் பற்றியும் காண்போம்.

கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1 கிண்ணம்

கருப்பட்டி-3/4 கிண்ணம்

நெய்-50 கிராம்

எண்ணெய் – தேவையானவை

ஏலக்காய் – 3

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் நன்கு உலர்த்தி மாவாகப் பொடிக்கவும். பின்பு கருப்பட்டியைப் பொடித்தபின் கருப்பட்டியையும், மாவையும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும். மறுநாள் உருண்டைகளை உதிர்த்து சிறிது ஏலப்பொடியைத் தூவி தண்ணீர் தெளித்து கரைக்கவும். சட்டியில் நெய், எண்ணெய் ஊற்றி பணியாரமாக ஊற்றவும். நன்கு இருபுறமும் சிவக்க வேக வைத்தப்பின் எடுத்து சூடாக அப்படியே இப்பணியாரத்தைச் சாப்பிடலாம். இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. இப்பணியாரம் 5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

ரவை பணியாரம்:

தேவையான பொருட்கள்:

ரவை- ஒரு கப்

சீனி – அரை கப்

ஏலக்காய் -3

உப்பு – சிறிது

எண்ணெய் – தேவையானவை

செய்முறை:

  • ரவையை நன்கு சலித்துக்கொள்ளவும்.
  • ரவையை வறுக்க வேண்டாம்.
  • ஏலக்காயைத் தட்டித் தூளாக்கவும், சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டுப் பிசையவும். நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவு சிறிது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு இந்த மாவை ஊறவிடவும். இதன் பின் பணியாரச் சட்டியில் பிடித்து ஊற்றினால் ரவைப் பணியாரம் தயார். மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் விழாக்களின் போதும் செய்து சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.

Practice versus review https://www.justbuyessay.com exams and final exam performance

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – ரவைப்பணியாரம், கருப்பட்டி பணியாரம்”

அதிகம் படித்தது