மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்

ஆச்சாரி

Feb 15, 2013

இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்றும்,இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழர் கோவில்களை இடித்துத் தள்ளிய மதவெறியன் ராஜபக்சேவை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிப்பதைக் கண்டித்து சென்னை தி.நகரில், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் 07-o2-2013 வியாழன் அன்று காலை 11 மணிக்கு நடப்பதாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

     போராட்ட நாளன்று காலை ஒன்பது மணிக்கே இருநூறு காவல்துறையினர் கோவிலின் முன்பு காவலுக்கு நின்றனர். அப்போது கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பக்தர்கள் சிறு பதட்டத்துடனே ஏழுமலையானை வணங்கிச் சென்றவண்ணம் இருந்தனர்.கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட காவல்துறையின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுப்பிவிடப்பட்டனர். பத்து மணிக்கே காட்சி ஊடகம்,அச்சு ஊடகத் தோழர்கள் கோவிலுக்கு வந்துவிட்டனர். அப்போது அந்தச் சாலையே கொஞ்சம் பதட்டத்துடன் காணப்பட்டது.

              சரியாகப்  பதினோரு மணிக்கு தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் “ராஜபக்சே ஒழிக, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் இந்திய அரசைக் கண்டிக்கிறோம்” போன்ற பல எதிர்ப்பு வாசகங்களை எழுச்சியாக கோஷமிட்டுக்கொண்டே, சங்கிலியால் இணைக்கப்பட்ட பெரும் பூட்டு ஒன்றைக் கையால் எடுத்துக் கொண்டு போராட்டக் குழுவினருடன் வந்தார் தமிழர் எழுச்சி இயக்க பொதுச் செயலர் வேலுமணி அவர்கள். போராட்டக் குழுவினர் கோவிலை நெருங்க, பத்திரிகையாளர்கள் வந்த வேலையை கவனிக்கத்தொடங்கினர்.

               காவல்துறை சும்மா இருக்குமா? கோவிலை போராட்டக்காரர்கள் நெருங்க விடாமல், கோஷமிட்டு வந்த இருபது நபர்களை காவல் பேருந்தில் ஏற்ற முயன்றனர் காவல்துறையினர். அதற்குள் ஊடக நண்பர்கள் சும்மா இருப்பார்களா? வந்த வேலையை முடிக்க முயலும் முனைப்புடன் இவ்வியக்க பொதுச் செயலாளரிடம் கருத்து கேட்க முனைந்தனர். வேலுமணி கூறியதாவது “ தமிழர்களின் உழைப்பிலும்,வேர்வையிலும்,ரத்தத்திலும் கட்டப்பட்ட திருப்பதி கோவிலுக்குள், தமிழர்களின் ரத்தத்தைக் குடித்த ராஜபக்சேவுக்கு பூரணகும்ப மரியாதையா? தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வரும் இந்திய அரசின் இச்செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராஜபக்சே ஒழிக” எனக்கூறுவதற்க்குள் அவரை காவல்துறையினர் பேருந்திற்குள் தள்ளினர்.

                 அப்போது இவ்வியக்கத்தைச் சேர்ந்த மற்றொரு தோழர் ஒருவர் தன் கைகளில் நூறு ரூபாய்களாகக் கொண்ட பத்தாயிரம் ரூபாயை ஊடகத்தினரிடம் காட்டி “ நான் வருடா வருடம் திருப்பதிக்குச் சென்று பத்தாயிரம் ரூபாய் காணிக்கை போட்டு வருவேன்.இந்த நிகழ்வுக்கு அப்புறம் இனி நான் திப்பதிக்குச் செல்லமாட்டேன். அந்த காணிக்கையை இனி நான் தமிழர் கடவுளான முருகனுக்கே காணிக்கை இடுவேன். தயவு செய்து இனி நீங்களும் போகாதீங்க” என மக்களைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். இதற்க்கு மத்தியில் தள்ளு முல்லு ஏற்ப்பட்டது.தமிழ்ப் போராளிகளின் கைகளில் இருந்த ராஜபக்சே பற்றிய எதிர்ப்புத் துண்டறிக்கைகள், காவல் துறையினரால் பிடுங்கிச் சாலையில் வீசப்பட்டது. அதைத் துப்புரவுப் பணியாளர்கள் பொறுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டனர்.  அப்போது கோவிலுக்குள் எந்த பக்தர்களும் அனுமதிக்கப் படவில்லை. கோவில் பூசாரிகள் நடப்பதை, கோவில் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளிருந்தே வேடிக்கை பார்த்தனர்.

             சுமார் முப்பது நிமிடமே நீடித்த இந்தப் போராட்டம் காவல் துறையினரால் வந்த இருபது பெரும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்துக்குள் அமர்ந்து கொண்டும் இருந்த தோழர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இவ்வாகனம் கிளம்பி அரைமணி  நேரத்தில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பூஜைகளும் நடந்தன. இப்படியொரு போராட்டம் இங்கு நடந்ததாக அங்கே கிடந்த ஒரு துண்டறிக்கை மட்டுமே அடையாளமாக இருந்தது.

 இதே நேரத்தில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், ராஜபக்சே வருகையை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டனர். மற்றபடி ராஜபக்சே வருகையை எதிர்த்து எந்த அமைப்பும் போராடியதாகத்  தெரியவில்லை. தமிழர்களின் இந்த அமைதி இலங்கை அதிபரை வரவேற்ப்பது போலவே தோன்றியது.

இப்போராட்டத்தின் கண்டனங்கள்

  1. இரண்டு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளி, ராஜபக்சேவை கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  2. 600 க்கும் மேற்ப்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளிய கொலைகாரன் ராஜபக்சேவை பீகாருக்குள் அனுமதிக்கும் பீகார் அரசை  வன்மையாகக்  கண்டிக்கிறோம்.
  3. இலங்கையில் 1,607  தமிழர் கோவில்களை இடித்துத் தள்ளியதாக இலங்கை அரசே நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிறகும், புத்த மத வெறியன் ராஜபக்சேவை ஆந்திராவுக்குள் அனுமதிக்கும் ஆந்திர அரசைக் கண்டிக்கிறோம்.
  4.  தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதொடு . . . .இந்தியாவின் இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதோடு . . .இலங்கையைப் பங்காளியாகவும், தமிழர்ளை பகையாளியாகவும் பார்க்கின்ற இந்திய அரசின் நிலையைக்  கடுமையாகக் கண்டிக்கிறோம்.

 திருப்பதி தேவஸ்தானத்தை  இழுத்து மூடும் போராட்ட அறிக்கை 

        தமிழகத் தமிழர்கள், இந்தியர் என்ற உணர்வோடு. . . .குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டபோது அங்குள்ள மக்களுக்காக களத்தில் இறங்கி பெருமளவில் உதவி செய்வதில் முதன்மையாக இருந்தனர். கார்கில் போரின் போதும் அதிக நிதியுதவி அளித்தவர்களில் முதன்மையாக இருந்தனர். இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு துயரங்களுக்கும், இழப்புகளுக்கும் முதலில் குரல் கொடுத்து துணை நிற்பது தமிழர்களே.

     ஆனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நம்முடைய தொப்புள் கோடி உறவுகளான ஈழத்தமிழர்களைப் போர்க் குற்றத்திற்கு எதிரான வகையில்,மனித குலத்திற்கு எதிரான முறையில் கொடூரமாக ராஜபக்சேவின் இலங்கை அரசு கொன்று குவித்தபோதும். . . 600  க்கும் மேற்ப்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற போதும் . . .இந்திய அரசோ அல்லது இந்தியாவிலுள்ள மாநில அரசுகளோ ஆறுதலுக்குக் கூட தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.மாறாக இன்றும் அந்நாட்டுக்கு போர்க்  கருவிகளையும், படைப்பயிற்சிகளையும், நிதி உதவிகளையும் இந்திய அரசு வழங்கி வருவதோடு . . .ஆண்டுக்கு மூன்று முறை ராஜபக்சே இந்தியா வந்து செல்கின்ற வகையில்,சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, தமிழர்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது. இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக ஒதுக்கப்படுகிறார்கள்.

            இவ்வாறு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல்களின் தொடர்ச்சியாக . . .கொலைகாரன் ராஜபக்சே பிப்ரவரி ஏழாம் நாள் கொழும்பில் இருந்து தனி வானூர்தி மூலம் பீகாருக்கு வரவழைக்கப் பட்டுள்ளார். அங்கு புத்தகயாவில் வழிபாடு நடத்திவிட்டு, ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்துவிட்டு மீண்டும் கொழும்பு திரும்புகிறார்.

             சிறையில் அடைக்கப் படவேண்டிய ராஜபக்சேவை, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்சே நுழையமுடியாத நிலை உருவாகி உள்ளது. ஆனால் ஒன்பது கோடி தமிழர்கள் வாழ்கின்ற இந்தியாவில் இந்திய அரசின் திட்டமிட்ட சூழ்ச்சியோடு தொடர்ந்து ராஜபக்சே வரவேற்கப்படுகிறார். இந்திய அரசால் தமிழர்களின் உணர்வுகளை உயிர் இழப்புகளை மதிக்கப்படாமல் இருப்பதும், புறக்கணிப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.

                ராமர் பாலத்திற்க்காக சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கத் தெரிந்த இந்துக் கட்சிகள், பாகிசுத்தான் கிரிக்கெட் வீரர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே என்று போராடுகிற இந்து இயக்கங்கள் . . புத்த வெறியன் ராஜபக்சேவை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியதுதானே? ? ? தமிழர்களாகிய எங்கள் உணர்வுகளைத்தான் மதிப்பதில்லை . . .அவர்கள் சொல்கின்ற இந்துக் கொள்கைக்காவது ராஜபக்சேவின் வருகையைத் தடுத்து நிறுத்த போராடி இருக்கலாமே??? இவர்களை போன்ற தமிழர்களின் நிலத்தில், உழைப்பில், பொருளியலில் கட்டப்பட்ட திருப்பதியை தமிழர்களிடம் பரித்துக் கொண்டதோடு. . .இன்றும் தமிழ்ப் பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கையைச் சுரண்டுகின்ற நன்றி உணர்வுகூட இல்லாத ஆந்திர அரசும், திருப்பதி தேவஸ்தானமும் ராஜபக்சேவைத் தடுத்து நிறுத்தாமல், கால்கழுவி வரவேற்பது வியப்பாக உள்ளது. ஆக இந்த ஆளும் கூட்டத்திற்கெல்லாம் இந்துக்களின் பகைவர்களை விட . . .இந்தியாவின் வெளிநாட்டு எதிரிகளை விட . . .இந்தியாவின் ஓர் அங்கமாக வாழ்கின்ற தமிழர்களே முதன்மைப்  பகையாக, அழிக்கப்பட வேண்டிய இனமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். இந்தியா முழுவதும் மக்களின் ஆதரவோடு வந்துகொண்டிருக்கிறார் என்று உலகிற்கு பொய் முகத்தைக் காட்டி, கொலைகார ராஜபக்சேவின் இலங்கை அரசைக் காக்கின்ற பகைவர் கூட்டமாக இந்திய அரசையும், அதில் இடம்பெற்றுள்ள மாநில அரசையும், வன்மையாகக் கண்டிக்கிறோம்.

                     எனவே தமிழர்களின் உணவுகளைப் புறக்கணிப்பவர்களுக்கு  இனி தமிழகத்தில் இடமில்லை என்ற உணர்வோடு . . .கொதிக்கும் நெஞ்சோடு . . .கொடுமையின் வலியோடு . . . உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாய் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்”

அதிகம் படித்தது