மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் தேசம் – தொடர் வீழ்ச்சியா?

ஆச்சாரி

Sep 15, 2013

ஒரு மனிதன் தனக்குத் தேவையான அனைத்தையும் தன்னாலேயே உருவாக்கிக்கொள்ளவே அல்லது உற்பத்தி செய்து கொள்ளவே முடியாது. தன்னிடம் உள்ள உழைப்பையே அல்லது தான்னால் செய்யப்பட்ட உற்பத்தியில் உள்ள உபரியைப் பிறரிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறே நாடுகளுக்கிடையே பண்டைய காலங்களில் வாணிபத் தொடர்பு உருவானது. இந்த முறையினைப் பண்டமாற்று என அழைக்கப்பட்டது. இம்முறையில் நடைமுறைச் சிக்கல்கள் பல ஏற்பட்டதால், வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்கள் மாற்றுமையமாகப் புழக்கத்திற்கு வந்தது. இந்த முறையிலும் பல இன்னல்கள் ஏற்பட்டதால் காகிதமுறைப் பணம் பயன்பாட்டிற்கு வந்தது. இக்காகிதமுறைப்பணம் மதிப்புமிக்க உலோகங்களை இருப்பாகக் கொண்டு பணவியலர் (Monetary Authorities, e.g. Reserve Bank of India) பணத்தை வெளியிட்டனர். பணம்வெளியிடும் முறையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொருமுறையினை நடப்பில் பின்பற்றுகின்றன.   இந்தியாவில் குறைந்தபட்ச இருப்பின் அடிப்படையில் (ரூபாய் 200 கோடி மதிப்பளவிற்குத் தங்கம் மற்றும் அயல்நாட்டு-காப்புறுதிகள்) இந்திய ரிசர்வு வங்கி பணத்தை 1956 முதல் பணத்தை வெளியிடுகிறது. பணம் வெளியிடும் அளவு சில காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அளவற்றப் பணம் வெளியிடுவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

       ஒரு நாட்டில் ஏற்படும் வாணிபநிலைகளில் உள்நாட்டுப்பணம் மூலம் பண்டம் மற்றும் பணிகளைப் பெறுவதில்; எந்தச் சிக்கலும் ஏற்படுவது இல்லை ஆனால் நாட்டின் எல்லையைக் கடந்த வணிகத்திற்கு அந்த அந்த நாடுகளின் செலாவணிகள் மூலமாகவே பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் உலகநாடுகள் பல அமெரிக்கச் செலாவணியான டாலரை வாணிபப் பரிமாற்றங்களுக்குப் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் 90 விழுக்காடு டாலர் பரிமாற்றமுறையினைக் கையாளுகின்றன. நாட்டின் பண மதிப்பினை இருவகைகளில் அளவிட முடியும் ஒன்று, பணவீக்கம் (தொடர்ந்து விலை அதிகரிப்பு) மற்றும் பணவாட்டம் (தொடர்ந்து விலை வீழ்ச்சியடைதல்) மற்றொன்று செலாவணிமாற்று வீதம் (Exchange Rate). பணவீக்கக் காலங்களில் பணத்தின் மதிப்பானது குறைந்தும் விலை அதிகரித்தும் காணப்படுவதைக் குறிப்பதாகும். அதாவது பணத்தின் அளிப்பிற்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்காததால் ஏற்படுவதாகும். இக்காலங்களில் குறைவான பொருள் வாங்க அதிக அளவு பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். ஏழைகள் அதிகமாக இதனால் பாதிப்படைவார்கள். இதனை அரசு பணக்கொள்கை (Monetary Policy) மற்றும் நிதிக் கொள்கை (Fiscal Policy) மூலமாகச் சரிசெய்யும்.

பணவீக்கம் பொதுவாக 2 – 3 விழுக்காடு அளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இந்தியாவில் 5 – 5 1/2 விழுக்காடுவரை ஏற்றுக்கொள்ளதக்கது எனப் பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  இதற்குமேல் பணவீக்கம் ஏற்பட்டால் பேரியல் பொருளாதார நடவடிக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வாணிபம் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தியாவில் 1991ஆம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட அதிகஅளவிலான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கொள்கைகள் பல வகுக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 9.6 விழுக்காடு பணவீக்கம் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், அரசு திட்டகாலங்களில் தன் வருவாய்க்கு மேல் செலவினை அதிக அளவில் செய்வதாகும், இது பற்றாக்குறை வரவுசெலவு திட்டம் என அழைக்கப்படுகிறது. இலவசத்திட்டங்கள், மானியங்கள், வளர்ச்சிசாராச் செலவீனங்கள் இதற்கான பொறுப்பாக இனம்காணப்படுகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக இலவசத் திட்டங்களினால் (தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, அரவை எந்திரம், மடிக்கணினி போன்றவை) அரசின் பணம் விரயம் செய்யப்படுகிறது. இந்த இலவசப்பொருட்கள் வழங்குவதால் மக்களின் சந்தைசார்ந்த நுகர்வு அதிகரிப்பதில்லை. இதனால் சந்தையில் பொருட்களின் தேவை குறைகிறது. அதன் விளைவு உற்பத்திகுறைந்து, வேலையின்மையும், தனிநபர் (உண்மையான) வருவாய் இழப்பும், வறுமையும் ஏற்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் மானியங்களும் வரிச்சலுகைகளும் அரசின் நிதிச்சுமையை உருவாக்குகிறது.

இந்தியாவின் மூன்றில்-ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படும் மானியங்கள் மிகக் குறைந்த அளவே ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் நிதிச்சலுகைகள் மிகவும் அதிகமானவை. இதனைப் பயன்படுத்தி இ;ந்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இந்த லாபங்களை அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நாடுகளுக்கே எடுத்துக்கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைகளால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அளவு கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, 1991ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியா எப்போதும் இல்லாத பொருளாதாரா நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

       அடுத்து, ஒரு நாட்டின் பண மதிப்பினைச் செலாவணி மாற்று வீதம் மூலம் அறியப்படுகிறது. அதாவது செலாவணி மாற்று வீதம் என்பது ஒரு நாட்டுச் செலாவணி மற்ற நாட்டுச் செலாவணியுடன் விலைசார்ந்த தொடர்பைப்பற்றி விளக்குவதாகும். இது பன்னாட்டுச்சந்தையினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. பன்னாட்டு அளவில் ஒரு நாட்டின் செலாவணியின் தேவையைப் பொறுத்ததே அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. நாட்டின் ஏற்றுமதி அதிமாகக் காணப்பட்டால் அந்நாட்டின் செலாவணி அதிக அளவில் பன்னாட்டுச் சந்தையில் தேவைப்படும். மாறாக இறக்குமதி அதிகமாகவும் ஏற்றுமதி குறைவாகவும் இருந்தால் அந்நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைவாகக் காணப்படும் காரணம் செலாவணியின் தேவை பன்னாட்டுச்சந்தையில் குறைந்த அளவு காணப்படுவதாகும்.  இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பணமதிப்பின் வீழ்ச்சி இதில் இரண்டாவது வகையைச்சார்ந்தாகும். ஜனவரி 2012ஆம் ஆண்டு இந்திய ரூபாய் 45ஐக் கொடுத்து ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடிந்தது.  ஆகஸ்டு 27, 2013 ஆம் நாள் ரூபாய் 66.85 கொடுத்து ஒரு அமெரிக்க டாலரை வாங்கும் அளவிற்கு இந்தியப் பணத்தின் மதிப்பு அடிபாதாளத்திற்குச் சரிந்தது.  இதுவரை கடந்த 2013ஆம் ஆண்டு மாதங்களில் மட்டும் 20 விழுக்காடு அளவிற்குப் பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. இது 1991ஆம் ஆண்டு 3 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்தியாவின் பணமதிப்பு இழந்து வருவதற்கு அடிப்படைக் கராணம் இதுவரையில்லாத அளவுக்கு இறக்குமதி அதிகரித்திருப்பதாகும். இந்திய இறக்குமதியில் பெரும்பங்கினைப் பெறுவது கச்சாஎண்ணெய், மூலதனப்பொருட்கள் மற்றும் தங்கமாகும். தங்கம் இந்திய சமூக-கலச்சார நடைமுறைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது; ஆனால் பொருளாதார தளங்களில் இதனால் முக்கிய முன்னேற்றம் ஏற்படாது. கச்சாஎண்ணெய் அதிக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளாகப் போக்குவரத்து வாகனங்களுக்குப் பயன்படுகிறது

       இப் பொருட்களின் இறக்குமதியினால் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது (ஏற்றுமதி மூலம் பெறும் அந்நியச் செலாவணியைவிட இறக்குமதிக்காகச் செலுத்தும் அந்நியச் செலாவணி அதிகமாக காணப்படுதல்). 2012-13ஆம் ஆண்டில் மொத்த இறக்குமதி அமெரிக்க டாலர் மதிப்பில் 490.88 பில்லியனாகும், மொத்த ஏற்றுமதி 300.46 பில்லியனாகும். நடப்புக்கணக்கின் பற்றாக்குறை 190.42 பில்லியன் டாலர் ஆகும். இந்தியாவில் தங்கப் பயன்பாட்டை அடுத்து அதன் மீது முதலீடு செய்வது சிறந்தது என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கியதால் தங்க இறக்குமதி 2004-05ஆம் ஆண்டு 10.5 பில்லியன் டாலராக (மொத்த இறக்குமதியில் 9 விழுக்காடு) இருந்தது 2012-13ஆம் ஆண்டு 55.79 பில்லியன் டாலராக (மொத்த இறக்குமதியில் 11.4 விழுக்காடு) அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி 2004-05ஆம் ஆண்டு 29.8 பில்லியன் டாலராக (மொத்த இறக்குமதியில் 25 விழுக்காடு) இருந்தது 2012-13ஆம் ஆண்டு 169.3 மில்லியன் டாலராக (மொத்த இறக்குமதியில் 34.5 விழுக்காடு) அதிகரித்துள்ளது (EPW, 13.07.2013, p.59).  1991ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலங்களில் தாராளமயமாக்கல் கொள்கையின் பலனாகப் பல வாகனம் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் தொழிலைத் துவங்கியது. இதனால் மோட்டார் வாகனங்கள் அதிக அளவில் இந்தியச் சந்தையில் விற்கத்தொடங்கியது. வருவாய் அதிகரிப்பு மற்றும் எளிதான கடன் போன்ற காரணங்களால் தனிநபர் வாகனங்களான (Personalized vehicles) கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பதிவு (2011Mk; Mz;L gjpT nra;ag;gl;lJ 12.11 Nfhb – GoI, 2012)  அண்மைக்காலமாகக் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதால், பெட்ரோலியப்பொருட்களின் தேவையும் அதிக அளவில் உயர்ந்து 1998ஆம் ஆண்டு ஒரு பாரல் கச்சாஎண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் 9.64 அமெரிக்க டாலராக விற்பனையானது.  2013ஆம் ஆண்டு 116.04 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.  இந்தியா, ஈரான், ஈராக், குவைத், சௌதி அரெபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நாடுகள் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்கின்றன. இதனால் இந்தியாவில் அந்நியச்செலவாணி வைப்பு அதிக அளவில் குறைந்து விடுகிறது. மேலும் இந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் 2013-14ஆம் ஆண்டு 1.5 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிதி இழப்பு அதிக அளவில் உயர்ந்து வருகிறது. சீனாவுடனான வாணிபத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 2001-02ஆம் ஆண்டில் 0.66 பில்லியன் டாலராக இருந்தது. 2012-13ஆம் ஆண்டில் 40.77 பில்லியன் அதிகரித்துள்ளது.  இது மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் (2012-13ஆம் ஆண்டு) 54 விழுக்காடாகும். 2012-13ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மதிப்பு 13.52 பில்லியன் டாலராகும், சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்பட்டதன் மதிப்பு 54.30 பில்லியன் டாலராகும். அதாவது சீனா இந்தியாவிடம் ஒருமடங்கு இறக்குமதி செய்தால் நான்கு மடங்குப் பொருட்களை அது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

மூலதனப் பொருட்களின் இறக்குமதி 2012-13ஆம் ஆண்டில் 86.04 பில்லியன் டாலராகும், இது மொத்த இறக்குமதியில் 17.5 விழுக்காடாகும். மூலதனப் பொருட்களின் இறக்குமதியும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 79 விழுக்காடாக அதிகரித்துள்ளது, இதனால் தேசிய உற்பத்தி அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு உயராமல் 56 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்திய சந்தையை அயல்நாடுகளுக்குத் தங்குதடையின்றித் திறந்து விடப்பட்டதால் 40 விழுக்காட்டினை இந்தியாவின் மொத்த ஏற்றுமதியைப் பெற்றுள்ள சிறுதொழில்கள் பெரிய பாதிப்புக்குள்ளாகியது. உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக மிகக் குறைவான அளவிற்கே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1991ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாரளமயமாக்கல் கொள்கையினாலும், 1995ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பினாலும் வாணிபக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவில் அயல்நாட்டுப் பொருட்கள் இந்தியச் சந்தையில் குவியத் துவங்கியது, மலிவான விலையிலும் கிடைக்கத்துவங்கியது. ஆனால் இந்திய நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் உள்ளீட்டுச் செலவு உயர்ந்துள்ளதால் சந்தைகளில் அயல்நாட்டுப் பொருட்களுடன் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தேவை குறைந்துவிட்டது. மேலும் பல வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா), சில வளரும் நாடுகளும் (குறிப்பாக சீனா) இந்தியாவைத் தங்களின் பொருட்ளை விற்கும் சந்தையாக கருதிக்கொண்டுள்ளது. ஒரு சிறிய கடையில்கூடச் சீன நாட்டின் பொருட்கள் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையினைத் தற்போது காணமுடியும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதுடன் பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன, வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. இவ்வாறு 2000ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டதை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் பல நாடுகள் இந்தியாவிலிருந்து மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்து அதனைப் பயன்படுத்தி முழுமைபெற்ற (finished goods)  பொருட்களாக இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்வதும் நடந்துவருகிறது. இதன்விளைவு வாணிபச் சமநிலையில் (Balance of Trade) பற்றாக்குறை 2004-05ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சாஎண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப்பொருட்கள் மற்றும் டீசலின் விலைகள், கச்சாஎண்ணெய் உயர்கிற மடங்கிற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை. அதிக அளவிலான மானியங்களை அரசு அளிப்பதால் அரசின் நிதிச் சுமை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்த மானியங்களினால் பயன் பெறுபவர்கள் யார் என்று பார்த்தால் பொருளாதார அளவில் உயர்நிலையில் இருப்பவர்களே. எனவே இது தொடர்பான ஒரு கட்டுப்பாட்டு முறையினைக் கொண்டுவருவது அவசியமாகிறது. இந்த நிலையினால் நடப்புக்கணக்கின் பற்றாக்குறை அதிகமான அளவாகத் தற்போது 339 பில்லியன் டாலராக (ஒட்டுமொத்தம்) உயர்ந்துள்ளது.

        இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகச் சுட்டப்படுவது நிதிபற்றாக்குறையாகும் (அரசு வருவாயைவிடச் செலவு அதிகம் செய்யப்படுவது). பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான தேவை முதலீடாகும். குறிப்பாக அரசு முதலீடு மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் வளர்ச்சிசெலவில் அரசு செய்யும் முதலீடு போதுமானதாக இல்லாததால் தனியார் முதலீட்டை நாடவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக அந்நியமுதலீடுகளைப் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. இந்த அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களை வரிச்சலுகைகள் மூலமாக ஈர்ப்பதினால் அரசின் வருவாய் இழப்பு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டுவந்துள்ளது. இவ்வரிச்சலுகைகளை அளித்ததன் காரணமாகக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 27 லட்சம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகம் பயன்பெற்றவர்கள் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், பெரிய தொழில் நிறுவனங்களுமே ஆகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9 விழுக்காடாகும். இதனைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான நிலை ஏதும் எடுக்கவில்லை.  இது போன்றே சுங்க வரிச்சலுகையால் அரசின் வருவாய் 2007-08ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்தது, 2009-10ஆம் ஆண்டில் 0.83 கோடியாகக் குறைந்துள்ளது அதாவது 17 விழுக்காடு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் ஆண்டுகளில் இறக்குமதி 56 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறுகியகாலக் கடனாக 70 பில்லியன் கோடி டாலராகவும், வெளிக்கடன்களாக 396 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. அந்நியச்செலாவணியின் கையிருப்பு அளவும் 2013ஆம் ஆண்டு 292 பில்லியன் டாலராகப் பல நிலைகளில் காணப்படுகிறது. இது 1991ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிதிப்பற்றாக்குறை, நடப்புக்கணக்கு பற்றாக்குறை, அதிகரிக்கும் கடன் மற்றும் முதலீட்டுக்கான வட்டி போன்றவை இந்தியப் பொருளாதாரத்தைப் அன்மையில் பெருமளவில் பாதித்துள்ளது.

       அமெரிக்காவில் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட பணக்கொள்கையினால் (அரசின் நிதியளிப்பைக் குறைத்தது, பணவெளியீட்டு முறையிலான மாற்றங்கள்) வளரும் நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, பிரேசில், ரசியா, துருக்கி, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்சு மற்றும் தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் செலாவணி மதிப்புகள் வீழ்ச்சியடைய ஒரு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா பெரிய அளவிற்குப் பண மதிப்பு இழப்பினை எதிர்கொண்டுள்ளது.  மேலும் சிரியா நாட்டின் மீது அமெரிக்கா போர்தொடுக்கக்கூடும் என்பதாலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தகுந்த முன்னேற்றம் (GDP growth rate April-June 2.5 per cent) ஏற்படுவதாலும், அமெரிக்க டாலரின் தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என ஊகிக்கப்படுவதால் டாலரின் இருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்தியா இறக்குமதிக்காகச் செலுத்தப்படும் செலாவணியில் 80 விழுக்காடு டாலராக இருப்பதால் அதிக அளவில் அயல்நாட்டு செலாவணியினை இந்தியா நம்பிக்கொண்டு இருக்கிறது. இக்காரணங்களால் இந்தியப் பணத்தின் மதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுகிற அரசு, நாட்டின் சுகாதாரம், சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருதல் அவசியம். இந்தியாவில் உணவின்றி வாடுபவர்களைவிட ஊட்டச்சத்தின்றி வாடுபவர்கள் மிகவும் அதிகமாகும். எனவே ஊட்டச்சத்து சார்ந்த பாதுகாப்பு நிலை தேவை. இவ்வுணவு பாதுகாப்பு சரியான மக்களுக்குச் சென்றடைதல் மட்டுமல்ல பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்காமலும் இருத்தல் அவசியம். தற்போது உள்ள பணமதிப்பு வீழ்ச்சியால் இதற்கான மானியம் அதிகரிப்பதால் மேலும் அரசின் நிதிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.  தனிநபர் வாகனம் பெருகுவதைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் போக்குவரத்து, பேருந்து, மிதிவண்டி, நடத்தல் போன்றவை ஊக்குவிக்கப்பட வேண்டும்.  அதேபோன்று தவணை முறையிலான வாகனக்கடன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

பணவீக்கம் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி, பொருளாதார வளர்ச்சி சரிவு, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை போன்றவற்றைப் போக்க ஏற்றுமதியினை ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக, சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவித்து ஏற்றுமதியினை உயர்த்த வேண்டும். அண்மையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது (April – July 2013> 18 விழுக்காடு வளர்ச்சி) குறிப்பிடத் தகுந்தது. நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க உற்பத்தி மற்றும் சுங்கவரியின் சலுகைகளைத் திரும்பப்பெறுதல். பெட்ரோலியப் பொருட்களின் மானியத்தின் அளவினைக் குறைத்தல்வேண்டும். தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தவேண்டும். ஆடம்பரப்பொருட்கள் இறக்குமதி மீது கட்டுப்பாட்டினை விதிக்கவேண்டும்.  உள்நாட்டில் ஏற்படும் பணவீக்கத்தைப் போக்க உற்பத்திசார்ந்த செலவுகளை மேற்கொள்ளவேண்டும், தேவையற்ற மானியங்களைக் குறைக்கவேண்டும். வரும் நாட்களில் பெய்ய இருக்கின்ற தென்மேற்கு, வடகிழக்கு மழையும் நாட்டினைக் காப்பாற்ற வழிவகையை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் அறிவுசார் பொருளாதார வளர்ச்சி (Knowledge based economy) நீண்டநாள் நிலைத்து பொருளாதாரத்தை உயர்த்தாது, எனவே உற்பத்திசார்ந்த பொருளாதாரமே (Manufacturing based economy) நீடித்த நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதற்கான முன்னெடுப்பு தற்போது தேவைப்படுகிறது. அரசு நினைப்பதுபோல் ரூபாயின் மாற்று மதிப்பு அதிகரிப்பதும் வீழ்ச்சியடைவதும் இயல்பானதே என்று நம்மால் இந்த நிலையில் நினைக்கத் தோன்றவில்லை. ஒரு பொறுப்புள்ள இந்தியனாக நினைப்பது மட்டுமல்ல, வாழ்வதும்கூட முக்கியமே.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ரூபாய் தேசம் – தொடர் வீழ்ச்சியா?”
  1. N.Palaniraj, Associate Professor, Pach. College, Kpm. says:

    Dear Anbazhagan, your article given above are highly standard. Of course, the money is very important for human life. But at the same time managing the money matters at the all India level will be very tough. Being Indian economy is a part and parcel of black economy, value of money cannot be stabilised unless the blackmoney is ruled out completely from India. But my sincere thanks for publishing such a wonderful article. Thanking you, Dr. N. Palaniraj, Kanchipuram.

  2. Miles Vargas says:

    இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.59 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களைப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது.

  3. பாலா says:

    நாட்டின் உள்கட்டமைப்பு (infrastructure) வ‌ளர்ச்சி குறைவு பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சாலைகளில் ஒரு 5 மைல் போவதற்கு அரை மணி நேரம் ஆனால் நல்ல‍ வேளை என்று நினைத்த‍க்கொள்வோம். நல்ல‍ சாலை வசதி இருந்தால், எவ்வ‍ளவு எரிபொருள் சேமிக்க‍ப்படும் என்று எண்ணுப் பார்க்க‍வேண்டும். கட்டமைப்பு என்று ஒதுக்க‍ப்ப‍ட்ட‍ பணத்தை அரசயல்வாதிகள் கொள்ளை அடிப்ப‍தும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

  4. murthy r says:

    பேராசிரியர் அன்பழகனுக்கு வாழ்த்துக்கள்
    அவரின் கட்டூரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.உணவு பாதுகாப்பு மசோதாவைவிட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அரசு செய்ய வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று
    மூர்த்தி
    மாநிலக் கல்லூரி
    சென்னை

  5. murthy r says:

    Congrats to Prof Anbalagan.
    His article is fundamental and an essential one for every person to know about the things explained in it.

    murthy r

அதிகம் படித்தது