ரெட்டமலைச் சீனிவாசனாரின் வாக்கும் வாழ்வும்
ஆச்சாரிDec 7, 2013
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் கொளியாலம் என்னும் கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகி தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859-ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய அரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே இம்மண்ணில் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர்.
கள்ளங்கபடமற்ற உள்ளத்தோடு தூய்மையாக ஒளிவு மறைவு இன்றி உண்மையையே பேசி, நல்லவைகளையே நாளும் செய்யும் கொள்கையைக் குணமாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடி மக்களின் முதுபெரும் தலைவர் ரெட்டமலைச் சீனிவாசனார் அவர்கள்.
பள்ளிப்பருவம்:
ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்தில் தஞ்சாவூரிலிருந்து வியாபாரம் சார்பாகச் சென்னைப்பட்டணம் வந்தவர்களே இவரின் முன்னோர்கள். கோயம்புத்தூர் கலாசாலையில் இவர் வசித்த போது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர். ஜாதிக் கோட்பாடுகள் மிகக்கடுமையாய் கவனிக்கப்பட்ட காலம் அது. பிள்ளைகளிடம் நட்பினால் ஜாதி, குடும்பம் இருப்பிடம் முதலானவைகளைத் தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாகத் தன்னை நடத்துவார்கள் என்று பயந்து பள்ளிக்கு வெளியே எங்கேயாவது வாசித்துக் கொண்டிருந்து பள்ளியின் ஆரம்ப மணி அடித்த பிறகே வகுப்பிற்குள் இவர் போவார். பள்ளி முடிந்த பிறகு மற்ற மாணவர்கள் இவரை எட்டாதபடி வீட்டுக்கு விரைந்து செல்வார். மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட முடியாத நிலையை எண்ணி சிறுவயதிலேயே மனம் கலங்கினார்.
இவரின் பள்ளிப்பருவம் இப்படிக் கழிந்ததென்றால் இளமைப் பருவத்திலும் இதே மனநெருக்கடிக்கு ஆளானார். கணக்கர் தொழிலில் தேர்ந்து நீலகிரி என்னும் மலைநாட்டில் ஜரோப்பிய வியாபாரச் சாலைகளில் கணக்கராக இருந்து, பத்து வருட காலம் உழைத்தபோதும், தீண்டாமை என்பதை எப்படி ஒழிப்பதென்னும் கவலையிலே காலம் கழித்தார்.
மணவாழ்வு:
1887-ஆம் ஆண்டு அரங்க நாயகி என்ற பெண்ணை மணந்தார். 1928ஆம் ஆண்டு ரெட்டமலை சீனிவாசனின் துணைவியார் அரங்கநாயகி அம்மாள் தமது 60 ஆம் வயதில் இயற்கை எய்தினார். அம்மையாரின் கல்லறையில் தீண்டப்படாத மக்கள் பொதுச்சாலையில் நடக்கவும், பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்கவும் உரிமை வாங்கித் தந்த 1925 ஏப்ரல் 28 ஆம் நாள் அரசு வெளியிட்ட தீண்டாமை ஒழிப்பிற்கான அந்த அரசு ஆணை பொறிக்கப்பட்டுள்ளது.
இவரின் இல்வாழ்க்கைப் பற்றி இவரே எழுதி இருக்கும் குறிப்பு “நான் கடனுக்குள்ளாகாமல் இருந்து வருவதும், எதிர்த்துப் பேசாத என் மனைவியின் சாந்த குணமும், சமூகத்திற்கு உழைக்க எனக்குச் சாத்தியமாயிருந்தது. இதைச் சென்னை ஓட்டேரி மயானத்தில் அவர் சமாதிக் கல்லில் குறித்திருக்கிறேன்” என்றார்.
சமூகப் பணி
1890-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ‘பறையன்’ என்போரை இதர வகுப்பினரைப்போல் மேல்நிலைக்குக் கொண்டு வந்து மதிக்கும்படி செய்வதெப்படி என்று மூன்று வருடமாய் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தார். 1893-ல் இவர் ‘பறையன்’ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.இந்த இனத்தவர்களின் முன்னேற்றத்தைக் கூற இவர் லண்டன் நகருக்கு பயணித்த போது பத்திரிக்கையை நடத்தச் சரியான நபர் கிடைக்காமல் போனதால் ‘பறையன்’ பத்திரிக்கைப் பிரசுரம் நிறுத்தப்பட்டது. இப்பத்திரிக்கை ஏழு வருடம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கல்வி:
தாழ்த்தப்பட்டும், ஏழைகளாகவும், மௌனிகளாகவும் இருந்த இச்சமூகத்தினரை உயர்த்த வேண்டுமானால் கல்வியை இவர்களுக்குள் பரவச்செய்ய வேண்டுமெனக் கருதி ஜி.3.68/1893 அரசு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டது. இது ஒரு சிலாசாசனமென்றே சொல்லலாம். குறைந்தது ஏழு பிள்ளைகள் வாசிக்க சேர்ந்தால் அதை ஒரு பள்ளிக்கூடமாக அரசு ஒப்புக்கொண்டு ஒப்புதல் கொடுக்க வேண்டும். இன்னும் பல அனுகூலமான விதிகளும் அதில் இருந்தன. தீண்டத்தகாத மக்களுக்கு போதிக்க சாதி இந்துக்கள் முன்வராமலிருந்து விட்டார்கள்.
சென்னை நகரில் மதமாற்றுதலுக்கென்று அவரவர்கள் தொடங்கியிருந்த பள்ளிக்கூடங்களுக்கு அரசு உத்தரவு அனுகூலமாக இல்லாததால் அந்த விதிகளின்படி இந்த இனத்துப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள மனமில்லாதவர்களாக இருந்தார்கள். ஆகையால் அரசு உத்தரவு சென்னை நகருக்குள் பலிக்காமல் போய்விட்டது. இந்த துர்பாக்கியமான நிலையை அரசுக்கு 1898 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி இவர் தெரிவித்தார். இவர் தெரிவித்ததின் பயனாக சென்னை (முனிசிபாலிட்டி) நகராட்சி பாட நூல்களைத் தொடங்க வேண்டி உத்தரவு அளித்தார்கள். இதன் பயனால் நாளுக்கு நாள் உயர்தர கல்வியில் தேர்ந்துவர இவ்வினத்தவர்கள் ஆரம்பித்தனர். 1928-ல் தலித்துக்கள் கல்வியால் தான் முன்னேற முடியும் என்ற அடிப்படையில் ஒரு “கல்விக் கழகத்தை” ஆரம்பித்தார். அதன் மூலம் ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவும் செய்தார்.
மதுவிலக்கு:
மதுவிலக்குவதை ஆரம்பிக்கக் கருதி வாரத்திற்கு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் சாராயக் கடைகள் மூடப்பட வேண்டுமென ஓர் தீர்மானத்தை சட்டசபை முன்பாகக் கொண்டு போனார். அதைச் சபையோர் ஏற்றுக்கொண்டார்கள். சில மாதங்கள் மட்டும் சாராயக்கடைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் மூடிவைத்திருந்தது அரசு. இதனால் கலால் வருமானம் குறைவுபடுகிறதென்று கருதிய இதே அரசு, மதுக் கடைகளை மறுபடியும் வழக்கம் போல் திறந்தது.
காந்தியுடனான உறவு:
1902-ஆம் வருடம் கீழ் ஆப்பிரிக்கா, ஜான்சிபார் தீவிலும் இவர் உரைவீச்சைக் கேட்டிருந்தார். தென்னாப்பிரிக்கா பீனிக்ஸ் என்ற இடத்தில் காந்தி உண்ணாவிரதம் இருந்து முடிவான 10ம் நாள் காந்தியை முதன் முதலாக நேரில் கண்டார். ரெட்டமலையாரைக் கண்டதும் காந்தி உபசரித்து அன்பு பாராட்டினார். அன்று முதல் காந்தியின் நட்பு இவருக்கு உண்டாயிற்று. 1904-ல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள நேட்டலில் உள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்தார். அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த மகாத்மா காந்தி அவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அப்போதுதான் காந்தி அவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழில் கையெழுத்துப் போடுவதற்கு இவர் கற்றுக் கொடுத்ததே காரணம்.
வட்டமேஜை மாநாடு:
1930 லண்டன், முதல் வட்டமேசை மாநாட்டிலே 5 வது ஜார்ஜ் மன்னரிடம் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு மன்னரோடு கை குலுக்கினார்கள். ஆனால் ரெட்டமலைச் சீனிவாசன் தன் கோர்ட் பாக்கெட்டில் “ராவ் சாகிப் ரெட்டமலைச்சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்” எனப் பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்திருந்தார். மன்னர் கைகுலுக்க முன்வந்தபோது ரெட்டமலைச் சீனிவாசன் அதை மறுத்து “நீங்கள் என்னைத் தொட்டால் தீட்டு உங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருக்கிறதே? நான் எப்படி உங்களுக்கு கை கொடுக்க முடியும்?” எனக் கேட்டார். இந்தியாவில் உள்ள தீண்டாமை, சாதிக்கொடுமை பற்றி உங்களோடு விவரிக்க எனக்குத் தனியாக நேரம் கொடுக்க உறுதியளித்தால் நான் உம்மோடு கை குலுக்குகிறேன்” என்றதும் மன்னர் சரி என்றார். பின் அருகில் சென்று மன்னரோடு கை குலுக்கினார். இம்மாநாட்டில் தீண்டப்படாத மக்களுக்கு அரசியல் அதிகாரம், கல்வி கற்க உரிமை வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, சட்டசபையில் அரசியல் பிரிதிநிதித்துவம் போன்ற மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அந்த காலகட்டத்தில் சீனிவாசனார் அம்பேத்கருடன் தீவிர அரசியல் பணி மேற்கொண்டிருந்தார்.
இந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு மன்னர் அரசாணை பிறப்பித்தார்.
ஜார்ஜ் மன்னர் அளித்த அரசு ஆணையாகிய தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமையை எதிர்த்து மகாத்மா காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அனைத்துச் சாதி, மதத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி புரட்சியாளர் அம்பேத்கரிடம் காந்தியைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் 1932 செப்டம்பர் 26ஆம் நாள் அனைவரும் ஒன்றுகூடி பூனாவில் தலித் மக்களுக்கு கிடைத்த தனித்தொகுதி உரிமையில் சில மாற்றங்களுடன் ஒப்புக்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் காந்தி.
அரசியல் பணி:
ரெட்டமலைச் சீனிவாசனார் 1922-ல் சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார்.
1923ஆம் ஆண்டு முதல் 1938 ஆண்டுவரை சென்னை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பணியாற்றினார். அப்போது தலித்துக்களை பிற சாதி இந்துக்கள் போல் சரி சமமாக நடத்தப்பட வேண்டும். பொதுச்சாலையில் நடக்கவும் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களில் அரசு அலுவலகங்களில் நுழைவதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என சட்டசபையில் உரையாற்றினார். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தான் 1925ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை அரசுப் பதிவிதழ் 1A/2660(No.L.X.M)–ன் கீழ் தலித் மக்களும் பிறரைப்போல் சமமாக மதிக்கப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டது. இவ்வாறு இவர் சமூக சேவை புரிந்ததைப் பாராட்டி 1926ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் இவருக்கு “ராவ் சாகிப்” என்ற பட்டத்தை அரசு வழங்கி கௌரவித்தது.
1936 ஜனவரி 1ல் ரெட்டமலைச் சீனிவாசனின் சமூகப் பணிகளைப் பாராட்டி அரசு அவருக்கு “திவான் பகதூர்” பட்டம் கொடுத்து ஊக்குவித்தது. 1937ல் இவரின் தொண்டுகளைப் பாராட்டி திரு.வி.க அவர்கள் “திராவிட மணி” என்ற பட்டத்தை வழங்கினார். அவரது சொல் வேறு, செயல் வேறு என்பதை அவரின் விரோதிகூடக் கூறமாட்டான். அத்தகைய பண்பு மிக்க அன்பு உருவமாகத் திகழ்ந்தார்.
மறைவு:
பதவி–புகழ் இவைகளைப் பற்றிச் சிறிதும் எண்ணாமல், விரும்பாமல் தொடார்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் தலித் விடுதலைக்காகத் தொடர்ந்து அரும்பணி ஆற்றிய மாபெரும் போராளி ரெட்டமலைச் சீனிவாசன் அவர்கள் தனது 85வது வயதில் 1945 செப்டம்பர் 17ஆம் நாள் இயற்கை எய்தினார். அண்ணாரின் பெருமையைப் போற்றுவோம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரெட்டமலைச் சீனிவாசனாரின் வாக்கும் வாழ்வும்”