மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

ஆச்சாரி

Sep 1, 2011

ஊழல் ஒழிப்பு அமைப்பின் பொது செயலாளர் து. ரத்னபாண்டியன் அவர்களிடம் நேர்காணல்:



உங்களை பற்றியும் , இந்த அமைப்பை பற்றியும் ஒரு அறிமுகம் தாருங்கள்?

என் பெயர் ரத்ன பாண்டியன், அரசு சிமெண்ட் கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான் கடந்த ஐந்து வருடமாக இந்த பணியை செய்து வருகிறேன். இந்த அமைப்பானது நாற்பது லஞ்ச ஒழிப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகும். எங்களின் நோக்கம் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்பதே. அதற்கு பெரிய தடையாக இருப்பது லஞ்ச ஊழல் தான், இந்தியர் ஆக பிறந்த அனைவரும் பிறப்பால் பெரும் பணக்காரர் ஆவர். சூழ்நிலையின் காரணமாக இந்த நிலையில் இருக்கிறோம்.

உங்களுடைய பணிகளை பற்றி கூறுங்கள்?

இந்தியாவில் ஊழலை இருவகையாக பிரிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் எண்பது சதவிகிதம் உள்ள மத்திய தர மற்றும் கீழ் தட்டு மக்கள் கொடுக்கும்,வாங்கும் லஞ்சம் வெறும் இருபது சதவிகிதமே ஆகும். மீதமுள்ள எண்பது சதவிகித லஞ்சம் மக்கள் தொகையில் இருபது சதவிகிதமே உள்ள பெரும் பணக்காரர்கள் தங்கள் காரியங்களை சாதிக்க தரும் லஞ்சம் ஆகும். நாங்கள் இப்போது செய்யும் பணி முதலாவதாக குறிப்பிட்ட லஞ்சமே. இதுவே உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டு வீணடிக்கப்படுவதற்கு காரணமாக உள்ளது. ஊழலில் ஈடுபடும் மனிதர்களுக்கு எதிராக புகார் நடவடிக்கைகள் எடுத்து தண்டனை வாங்கி தர முயல்கிறோம். தகவல் பெரும் உரிமை சட்டம் வாயிலாக பல ஊழல்களை வெளிக்கொணர்ந்துள்ளோம். மேலும் மக்கள் ஊழலுக்கு எதிராக விழிப்படைய பணிகள் செய்து வருகிறோம்.

ஊழல் நடக்க முக்கிய காரணம் என்ன?

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். வாழ்வில் நாம் பல்வேறு அரசாங்க துறைகளை சந்திக்க வேண்டி வரும். ஒவ்வொரு துறையிலும் நெறிமுறைகள், சட்டங்கள், வழி காட்டல்கள் உள்ளது, ஆனால் இவற்றை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை. உதாரணமாக புதிதாக திருமணம் ஆன ஒருவர் ரேசன் அட்டை பெற வேண்டுமானால் முதலில் தமது பெயரை பெற்றோரின் அட்டையில் இருந்து நீக்கி பெயர் நீக்க சான்றிதழ் பெறவேண்டும். பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெயர் நீக்க சான்றிதழை இணைத்து தங்கள் பகுதி அலுவலகத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது மிக முக்கியம், விண்ணப்பத்தை எந்த அதிகாரியாவது வாங்க மறுத்தால் அதனை பதிவு தபாலில் அனுப்பி அந்த ரசீதை பத்திரமாக வைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் தெரியாததால் தான் நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது. எனவே அரசாங்க விதிமுறைகள் தெரிந்து இருப்பது மிக அவசியம்.

தகவல் பெரும் உரிமை சட்டத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

பல உலக நாடுகளில் இந்த சட்டம் இருந்தாலும் இந்தியாவில் இருப்பது தலை சிறந்த ஒன்றாகும். அரசிடம் இருந்து தகவல்களை பெறவும், ஒளிவுமறைவற்ற போக்கை ஏற்படுத்தவும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும் இது. பல்வேறு ஊழல்கள் வெளிவர இந்த சட்டம் முக்கிய பங்காற்றியது. கேட்கப்பட்ட தகவல் தரப்படவில்லை என்றால் அபராதம் தரப்படவேண்டும் அதுவும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று உள்ளது. மேலும் இதில் கேட்கப்படும் கேள்விகள் மனுவாக நீதி மன்றம் வரை செல்லும் சக்தி வாய்ந்தது. இந்த சட்டத்தை பயன்படுத்தி திருவண்ணாமலை நம்பேடு ஊராட்சி மன்றத்தலைவர், தவறு செய்த காரணத்தால் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். பாலவாக்கம் பகுதியில் ஒருவரது மனையில் நேர்ந்த ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டது. இப்படி பல வேறு உதாரணங்களை அடுக்க முடியும்.

உங்கள் பணியில் நீங்கள் எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறீர்களா?

ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளோம். அமைப்பு ரீதியாக நின்று போராடுவதால் சமாளிக்க முடிகிறது. முன்னாள் மந்திரி ஒருவர் என்னைத் தாக்க குண்டர்களை அனுப்பினார், அவசர போலீஸ் நூறை அழைத்து தப்பினேன். இது போல பல எதிர்ப்புகளை சமாளித்து தான் இந்த பணியை செய்து வருகிறோம்.

ஊழல் ஒழிப்பு பணியில் அரசாங்க அமைப்புகள் உதவுகின்றனவா?

ஊழல் ஒழிப்புக்கென்று அரசாங்கத்தில் அமைப்புகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் ஆட்சி செய்பவர்களுக்கு கட்டுப்பட்டவையாக உள்ளது, குற்றவாளிகளை நாங்கள் பிடித்து கொடுத்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது இல்லை. தகவல் ஆணையம் இருக்கிறது அதன் தலைவரை அரசு தான் நியமிக்கிறது, தகவல் அறியும் உரிமை சட்டம்  அமலுக்கு வந்த சில காலம் வரை நாங்கள் பலவேறு ஊழல் எதிர்ப்பு காரியங்களை சாதித்தோம். அதன்பிறகு ஆணையர் மாற்றம் நடந்து, புதிய ஆணையர் வந்தார், தற்போது அதிகாரிகள் தகவல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிப்பது இல்லை. அதிகாரிகளிடம் அபராதம் வாங்க, சட்டத்தில் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்த போதும் அதனை செயல் படுத்துவது இல்லை. வளைந்து கொடுத்து செல்லும் அமைப்பாக மாறி வருகிறது.

அப்படியானால் இதனை எப்படித்தான் சரிசெய்து ஊழலை ஒழிப்பது?

நல்ல கேள்வி, மக்கள் போராட்டம் தான் இதனை மாற்றும், மக்கள் விழிப்புடன் என்று கேள்வி கேட்க தொடங்குகிறார்களோ அன்று தான் மாற்றம் வரும். சோம்பேறித்தனமாக இருப்பது, சுயநலமாக தமது குடும்பத்துக்கு மட்டும் உழைப்பது என்று இருந்தால் மக்கள் சொத்து கொள்ளை தான் போகும். மேலும் பல்வேறு விடயங்களில் விழிப்புணர்ச்சியும், அறிவும் மக்களுக்கு வளரவேண்டும். அதற்கு உங்களைப் போன்ற ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது, மக்கள் நலனுக்காக ஊடகங்கள் செயல்பட வேண்டும்.

மக்கள் விழிப்புணர்வுக்கு என்ன மாதிரி பணி செய்கிறீர்கள்?

முக்கியமாக பயிற்சி தருகிறோம், தகவல் தரும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி தருகிறோம். அதிகாரிகளை எதிர்கொள்வது பற்றிய பயிற்சி தருகிறோம், நாங்கள் சொல்வது “மாறுங்கள் , மாற்றுங்கள்! லஞ்சம் பெறாதீர்கள், லஞ்சம் தராதீர்கள்” என்பதே. நாங்கள் தரும் அனைத்து பயிற்சிகளும் இலவசம். மக்களை தன்னார்வ தொண்டு செய்ய தூண்டுகிறோம். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று கூட்டங்கள் நடத்துகிறோம். அதன் மூலம் இது குறித்த அறிவை பரப்புகிறோம்.

மக்கள் அரசாங்க அதிகாரிகளை கண்டு பயப்பட கூடாது. மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெரும் இவர்கள் மக்களின் சேவகர்கள், ஒரு சேவகனை கண்டு பயப்படுவோமா நாம்? அவர்களை துணிந்து நாம் கேள்வி கேட்க வேண்டும்.

மக்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

மக்கள் பல விடயங்களில் பொறுமை காக்க தவறுகிறார்கள். அரசாங்க அலுவலகங்களில் தமது வேலைகள் உடனே முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், இது மிகத் தவறு. விதிமுறைகளை முறையாக அறிந்து கொண்டு சரியானபடி விண்ணப்பித்து உரிய காலம் வரை காத்து இருந்து வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும்.

அமைப்பின் தொடர்பு விவரம்:

இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு,

55, இரயில்வே பார்டர் ரோடு,

மேற்கு மாம்பலம்.

சென்னை –33

90940 24005 / 044- 64569800

Factindia33@gmail.com

www.factindia.org

The programme also offers students the opportunity to take one term at another university or do an how to write a film essay internship in denmark or abroad.

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்”
  1. Sanjeevan says:

    To stop bribery concerned officers must act as flying squads in government public service department. Anti correption department very well knows the facts of bribery how, when, where & why it occurs, if any request or applications given by the public to government department, most of the government offices nobody is giving any acknowledgement or copy of proof is not given for the public for received request or application. government must make acknowledgement cumpulsary. in tamilnadu slum clearence board if request is given for receiving patta no body is explaining the correct procedure for getting patta instead they are asking bribe for every purpose and delaying the process.

அதிகம் படித்தது