மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லோக்பாலும் மாநிலங்கள் உரிமையும்

ஆச்சாரி

Feb 1, 2012

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில் மாநிலங்களவையில் நடந்த நிகழ்வுகள் இந்தியாவின் மத்திய , மாநில அரசுகளின் உறவின் எதிர்கால சிக்கல்களைத் தெளிவாகக் காட்டுவதாக இருந்தது. இந்தியாவின் வணிக ரீதியான ஊடகங்களாலும், பெரும் முதலாளிகளின் ஆதரவுடனும் பெரும் அழுத்தத்துடன் கொண்டு வரப்பட்ட “லோக்பால் மற்றும் லோக்யுக்தா” சட்டத் திருத்தம் மாநிலங்கவையில் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட முடியாமல் போனது. தமிழக மக்களாலும் , தமிழக அரசியல் தலைவர்களாலும் இந்நிகழ்வுகள் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியவை. லோக்பால் அமைப்பு இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கும். லஞ்சத்தை ஒழிப்பதற்கு மாறாக இன்னொரு லஞ்சத்தின் ஊற்றுக்கண்ணாக மாறும் போன்ற வாதங்களைத் தொடாமல் இந்தக் கட்டுரை லோக்பால் சட்டம் எப்படி மாநில உரிமைகளில் தலையிடுகிறது என்பதை ஆய்வு செய்கிறது.

லோக்பால் சட்டம் மத்திய அரசின் நிர்வாகத்தில் லஞ்சத்தை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளைக் கொண்டது. இதில் லோக் ஆயுக்தா என்ற பகுதி மாநில அரசின் நிர்வாகத்தில் லஞ்சத்தை தடுப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டது. இந்த லோக்யுக்தா தான் மாநில உரிமைகளில் தலையிடுவதாக குற்றம் சாற்றப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

இந்தியா என்பது ஒற்றை ஆட்சி முறை உள்ள அமைப்பு அல்ல. அரசியல் சாசனப்படி இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அரசியலமைப்பில் அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டுள்ளது. அரசியல் சாசனப்படி மத்திய அரசுக்கு மாநில அரசு அடங்கி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியல் சாசனம் உருவாகும் போதே மத்தியில் அதிகாரங்கள் உருவாகும்படி அதை உருவாக்கியவர்களால் பார்த்துக் கொள்ளப்பட்டது. மேலும் கடந்த அறுபது வருடங்களில் அரசியல் அதிகாரம் மத்தியில் குவியும்படியே அரசியலமைப்பு திருத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டன. ராஜீவ் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத் ராஜ் சட்டம் முதல் கடந்த கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்பட்ட “மத மோதல்களை தடுக்கும் சட்டம்” வரை மாநில உரிமைகளைக் குறைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்தன. இந்த லோக்யுக்தா சட்டம் இதற்கு மற்றுமொரு உதாரணம்.

லோக்யுக்தா சட்டம் எப்படி மாநில உரிமைகளில் தலையிடுகிறது?.
லோக்யுக்தா சட்டம் மாநில அரசின் நிர்வாகத்தை சீர்சிருத்தங்களை அடிப்படையாகக் கொண்டது. மாநில அரசு தன்னுடைய நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சட்டங்களை நிறைவேற்ற அரசியல் சாசனப்படி மாநில அரசுக்குத் தான் அதிகாரம் இருக்கிறது. லோக்யுக்தா சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு அரசியல் சாசனத்தில் இருக்கும் சட்ட விதி 253-ன் படி தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறது. சட்ட விதி 253 சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக ,மத்திய அரசு நாடு முழுவதற்கும் சட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இருப்பதாக சொல்கிறது. மத்திய அரசு ஐ.நாவின் லஞ்சத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் ( முழு விவரங்களுக்கும் பார்க்க : http://www.unodc.org/unodc/en/treaties/CAC/index.html ) தான் கையெழுத்திட்டு இருப்பதால் தனக்கு இந்த அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறது. நமக்கு இப்போது ஒரு கேள்வி எழுகிறது. மாநில உரிமைகளில் தலையிடும்படியான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறதா இல்லையா ? மத்திய அரசு அரசியல் சாசனத்தை மதிக்கிறது என்றால் ஐநா வின் லஞ்சத்துக்கு எதிரான ஒப்பந்தத்தை நிறைவேற்ற லோக்யுக்தா அவசியம் என்றால் மத்திய அரசு முதலில் அதை மாநிலங்களின் ஒப்புதலோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்க வேண்டும். பின்பு தான் ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.

ஐ.நா. ஒப்பந்தத்தை நிறைவேற்ற லோக்யுக்தா அவசியமா?
ஐ.நா. வின் லஞ்சத்துக்கு எதிரான ஒப்பந்தத்தை படித்துப் பார்த்தால் மத்திய அரசு எந்த அளவு பொய் சொல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் பொதுவாக லஞ்சத்தை வகைப்படுத்துவது, லஞ்சத்தை குற்றமாகக் கருதுவது, தனியார் நிறுவனங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்பதைத் தான் பேசுகிறது. இதில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ள சட்டங்கள் மூலமாக ஏற்கெனவே முழுமை அடைந்து விட்டன. மிஞ்சி உள்ள தனியார் நிறுவனங்களில் லஞ்சத்தை தடுப்பது உள்ளிட்ட தலைப்புக்களை பற்றி லோக்பாலோ , லோக்யுக்தாவோ மூச்சு விடவில்லை. இதில் இருந்து இந்த ஒப்பந்தத்துக்கும் லோக்யுக்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறது.

யாராக இருந்தால் என்ன? லஞ்சத்தை ஒழிக்க சட்டம் போட்டால் சரி தானே?

லோக்யுக்தா சட்டம் என்பது ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு மத்திய அரசு மாநில உரிமைகளில் தலையிடும் மேலும் பல சட்டங்களை இயற்றலாம். அவை அனைத்துக்கும் லோக்யுக்தாவை ஒரு உதாரணமாக காட்டும். லோக்யுக்தாவே சில திருத்தங்களுடன் கவர்னர் பதவி போல , சி.பி.ஐ. போல, மாநில அரசை அச்சுறுத்தி பணிய வைக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம். இன்று ஐ.நா ஒப்பந்தம் போடாத எந்த ஒரு தலைப்பும் உலகில் இல்லை. அதைப் பயன்படுத்தி மாநிலத்தின் அத்தனை அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக போதை தடுப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி காவல்துறையை மத்திய அரசு நேரடியாகக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றலாம். இது நிறைவேறினால் மாநில அரசு அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசு மறைமுகமாக எடுத்துக் கொள்ள ஒரு பாதை திறக்கப்பட்டு விடும்.

எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?
பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட விதிமுறை 252 ன் படி லோக்பாலை நிறைவேற்றலாம் என சொல்கிறார்கள். விதி 252 ன் படி இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்களுக்கு தேவையான சட்ட விதிகளை உருவாக்க மத்திய அரசை அணுகலாம். மத்திய அரசு சட்டங்களை அந்த மாநிலங்களுக்காக உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்பட்ட சட்டங்களை எல்லா மாநில அரசுகளும் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம். இது சட்ட விதி 253ன் அளவுக்கு ஆபத்தான சட்டமாக இல்லாவிட்டாலும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இப்படி உருவாக்கப்படும் சட்ட விதிகளை சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் மாற்ற முடியாது. பாராளுமன்றத்தின் மூலம் தான் மாற்ற முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் மாநில அரசை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு நிரந்தரமாக சென்று விடும்.

மாநிலங்களுக்கு எது சரியான தீர்வு?
லோக்யுக்தா தேவை என மாநிலங்கள் விரும்பினால் தாங்களே அதற்கான சட்டங்களை வகுப்பது தான் மாநிலங்களுக்கு நல்லது. லோக்யுக்தா தொடர்பான அனைத்து சட்டங்களும் லோக்பால் சட்ட விதிமுறைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளில் விழிப்பாக இருந்து கண்காணித்து வர வேண்டும்.
இந்தியாவின் அரசியல் களம் இன்று சிதறுண்டு இருக்கிறது. எந்த ஒரு கட்சியும் தனியாக நின்று பாராளுமன்றத்தை ஆட்சி செய்ய முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை இது வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் பல்வறு சமூகங்கள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதின் மூலமே நாட்டை முன்னே கொண்டு செல்ல முடியும். தன்னிச்சையாக யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்த உண்மையை உணராமல் தனது கொள்கைகளைத் திணிக்க ஒரு சிறிய அதிகார வர்க்கம் , அதிகாரத்தை சட்டங்களின் மூலம் கைப்பற்ற முற்படுமேயானால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Similar interprofessional student placements have been described elsewhere, such as interprofessional student teams assessing and providing care for outpatients in http://college-essay-help.org/ ambulatory care clinics in the usa dienst and byl,

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “லோக்பாலும் மாநிலங்கள் உரிமையும்”
  1. Karthik says:

    இந்தியாவின் பல்வறு சமூகங்கள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதின் மூலமே நாட்டை முன்னே கொண்டு செல்ல முடியும் – மிக சிறைப்பான கட்டுரை

அதிகம் படித்தது