மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா

ஆச்சாரி

Jul 16, 2012

வட அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியமாக, கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் வெள்ளி விழா, மேரிலாந்து மாகாணத்தில் இருக்கிற பால்டிமோர் நகரில் 2012 ஜூலை 5ஆம் நாள் துவக்கம் ஏழாம் நாள் வரை வெகுகோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கிட்டத்தட்ட 2400 பேர் வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர், பேரவையானது, தான் நடததும் ஒவ்வோர் அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவையும் தமிழறிஞர்களுக்குச் சிறப்புச் செய்யுமுகமாக அவர்தம் நினைவாக விழாவைக் கொண்டாடி வருகிறது. அவ்வரிசையில், 2012ஆம் ஆண்டுத் திருவிழா மற்றும் பேரவை வெள்ளி விழாவினை முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாக அறிவித்துச் சிறப்பித்தது. இத்தகைய விழாவின் இயன்மொழியாக, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் வாசகம் கடைபிடிக்கப்பட்டது.

முதன்முறையாக வெள்ளிவிழாவின் ஓர் அங்கமாகத் தமிழிசை விழா இடம் பெற்றது. ஜூலை மாதம் ஐந்தாம் நாள் மாலையில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் ஆகியோரது முன்னிலையில் மூன்று மணி நேரத்தில் இவ்விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.
அன்று மாலை கொடையாளர்களும் வெள்ளி விழா விருந்தினர்களும் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், முனைவர் கலை.செழியன், நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலாபால், ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடகக்குழுவைச் சார்ந்த இயக்குநர் ஸ்ரீராம் சர்மா மற்றும் மணிமேகலை சர்மா, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் அறிமுகவுரை ஆற்றினர்.

விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி, 2012 ஜூலை மாதம் 6ஆந் தேதி காலை 8 மணிக்குத் துவங்கியது. மங்கல இசை, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கேற்றுதல் ஆகியவற்றுக்குப் பின்னர், பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினர்.
வரவேற்புரையைத் தொடர்ந்து வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், பனைநிலத் தமிழ்ச்சங்கம், சார்லட் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே, முனைவர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றி தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நிழற்படங்களுடன் நினைவுகூர்ந்து விரித்துரைத்தார். பினாங்கு துணை முதல்வர் இராமசாமி பழனிசாமி அவர்கள் தமிழர்தம் உரிமைகள் என்பது குறித்து உரையாற்றினார்.

தொடர்ந்து பகடிக் கலைஞர் மதுரை முத்து நிகழ்ச்சி, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை, எழுபது கவனகர் கலை.செழியனின் கவனக நிகழ்ச்சி, நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாடகம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நடத்திய, “இதயங்கள் இயங்கட்டும்” எனும் தலைப்பில் கவியரங்கம் ஆகியன இடம் பெற்றன. கனடியத் தமிழர் பேரவையின் நாட்டியம் வந்திருந்தோரை வெகுவாக ஈர்த்தது.
தமிழ் நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ, வாழும்கலைப் பயிற்சி நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி ஆகியோரது உரை வீச்சும் விழாவில் இடம் பெற்றிருந்தன.
கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்களது தமிழிசையில் அரங்கம் திளைத்தது எனச் சொல்வது மிகையாகாது. முதல்நிகழ்ச்சியின் நிறைவாக இடம் பெற்ற ‘வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம் முதல்நாள் நிகழ்ச்சியின் தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த்து.

பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் தமிழ்ப் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள் பல இடம் பெற்றன. அவற்றினிடையே, தமிழ் மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள், தமிழ்ப்பன்முகத் திறன் போட்டி, நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் ‘இலக்கிய விநாடி வினா’, முதன்முறையாக இடம்பெற்ற ”தமிழன் தமிழச்சி” போட்டி முதலானவையும் இலக்கியச் சுவையையும் கலைச்சுவையையும் வந்திருந்தோருக்கு ஊட்டியது.
கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன் நடத்திய விவாதமேடை, பலகுரல் நிகழ்ச்சி பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. திரைப்படக் கலைஞர் பரத், அமலா பால் மேடையில் சிறப்புத் தோன்றி கலந்துரையாடினர்.
வெள்ளி விழாவினை முன்னிட்டு பேரவையின் முன்னாள் தலைவர்கள் பலருக்குச் சிறப்பளிக்கப்பட்டது. இலந்தை திரு இராமசாமி, முனைவர் சவரிமுத்து ஆகிய இருவரது உரையும் இடம் பெற்றன. தோழர் நல்லகண்ணு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியாளர் சகாயம் ஆகியோரது சிறப்புரைகள் வெவ்வேறு தலைப்புகளில் இடம் பெற்றன.
விழாவினிடையே மலர் வெளியீடு, 2012-2014ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழு அறிமுகம், முக்கிய விருந்தினருக்குச் சிறப்பு, அக்சயா அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு, தொழில் முனைவோருக்குச் சிறப்பு முதலானவையும் இடம் பெற்றன.
சின்னகுயில் சித்ரா, வித்யா வந்தனா சகோதரிகள் முதலானோர் மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தத்தம் பங்களிப்பை நல்கினர்.

முக்கிய அரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளல்லாது, இணையரங்குகளில் நாட்டாரியல் கண்காட்சி, முன்னாள் மாணவர் சந்திப்பு, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகக் கூட்டம், திருமண தகவல் சேகரிப்பு நேரம் முதலானவையும் இடம் பெற்றன. 2013ஆம் ஆண்டுக்கான திருவிழா கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இடம் பெறுமனவும் அறிவிக்கப்பட்டது.
வெள்ளி விழாவுக்காக உழைத்த தன்விருப்பத் தொண்டர்கள் அனைவரும் மேடையில் ஏற்றப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டனர். இப்படியாக நிறைவுற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவானது, பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட ஒரு விழாவாகவும், தமிழ்க்கலை, பண்பாடு குறித்த நிகழ்ச்சிகள் செறிவாக அமைந்த ஒரு விழாவாகவும் அமைந்தது.

Many experts tell parents to be informed and have a good understanding cell phone number tracker from http://www.trackingapps.org/ of a child’s online behaviors

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா”

அதிகம் படித்தது