மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்க தமிழ் விழா

ஆச்சாரி

Aug 1, 2011


வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையானது, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். பேரவையானது, ஆண்டு தோறும் அமெரிக்க விடுதலைநாள் விடுமுறையின் போது, வட அமெரிக்க நகர் ஒன்றில் தனது ஆண்டு விழாவைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

தென் கரோலைனா மாகாணம் சார்ல்சுடன் நகரில் கடந்த சூலை 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பேரவைத் திருவிழா இனிதே நடைபெற்றது. சூலை மாதம் முதல் நாள், வெள்ளிக்கிழமை மாலையில் கொடையளித்த தமிழார்வலர்களும் விருந்தினரும் கலந்து கொண்ட ’விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியானது நடைபெற்றது.

சூலை இரண்டாம் நாள், விழா நடைபெற்ற கெய்ல்யார்டு அரங்கம் சிறப்பாக அழகுற அமையப் பெற்றிருந்தது. விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவைத் துணைத்தலைவருமான முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் அவர்கள் விழாவிற்குத் தலைமை ஏற்றுப் பேசினார். ’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ எனும் தலைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களது தலைமையிலான கவியரங்கம், ’தனித்தமிழே நனிச்சிறப்பு’ எனும் தலைப்பில் தமிழறிஞர் துரை எழில் விழியன் அவர்களது உரை, புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி, நடிகர் சார்லி அவர்களின் ஓரங்கநாடகம், கோடைமழை வித்யா அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ நாட்டியநாடகம்’ முதலானவை இடம் பெற்றன. பிற்பகலில், ’மேலைப் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்’ எனும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களது உரை, ’தான் கடந்து வந்த பாதை’ எனும் தலைப்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபைஈசன் அவர்களது உரை, ’தமிழ்த் திரைப்படங்கள்’ எனும் தலைப்பில் நடிகர் நாசர் அவர்களது உரை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிறைவாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசைக் கச்சேரி இடம் பெற்றது.

சூலை மூன்றாம் நாள், திருக்குறள் மறைமொழி ஓதலுடன் இரண்டாம் நிகழ்ச்சிகள் துவங்கின. ’தமிழர் பண்பாட்டு ஆய்விதழ்’ எனும் தலைப்பில் முனைவர் பிரான்சிசு முத்து அவர்களது உரை, பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள் நடத்திய ’தமிழ்த்தேனீ’ எனும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி, நாஞ்சில் பீற்றர் அவர்கள் வழங்கிய ‘இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சி, ’அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம்’ அறிமுகம் செய்த முனைவர் அரசு செல்லையா அவர்களது உரை, வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து நடத்திய பட்டிமண்டபம் நிகழ்ச்சி, ’தமிழின் இன்றைய நிலை’ எனும் தலைப்பில் முனைவர் சு.பழனியப்பன் அவர்களது உரை, நடிகர் சார்லி மற்றும் புதுகை பூபாளம் குழுவினர் இணைந்து நடத்திய நகைச்சுவை நாடகம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திண்டுக்கல் சக்தி குழுவினர் வழங்கிய தமிழரின் தனிச்சிறப்பு வாய்ந்த தப்பாட்டத்தில் அரங்கமே அதிர்ந்து, வந்திருந்தோர் உணர்வுப் பெருக்குடன் ஆர்ப்பரித்தனர். விழாவில், அகில உலக மனித உரிமை ஆர்வலர் கரென் பார்க்கர் அவர்கள் சிறப்பிக்கப்பட்டு, உரையாற்றும் போது இலங்கையில் எவ்வாறெல்லாம் மனித உரிமைகளுக்கெதிரான பாதிப்புகள் இடம் பெற்றன என எடுத்துரைத்தார். அடுத்துப் பேசிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு உருத்திரகுமாரன் விசுவநாதன் அவர்கள், தமிழினத்தைக் காப்பது நம் கடமை எனக் குறிப்பிட்டு மிக விரிவாக, அழுத்தந்திருத்தமாகப் பேசியது முக்கிய நிகழ்வாக அமையப் பெற்றது.

பிரதான அரங்கில் விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற, இணை அரங்குகளில் இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி, உலகத்தமிழர் அமைப்பின் கருத்தரங்கம், அமெரிக்க தமிழ் அரசியற் செயலவையின் கூட்டம், முனைவர் சொர்ணம் சங்கர் நடத்திய தமிழ்மணம் பயிற்சிப் பட்டறை, பதிவர் பழமைபேசி நடத்திய பதிவர் சந்திப்பு, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கலந்துரையாடல் முதலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம் பெற்றன.

சூலை மாதம் நான்காம் நாள், இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் முன்னாள் தலைவர் க.தில்லைக்குமரன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். முனைவர் பிரான்சிசு சவரிமுத்து அவர்கள் பண்பாட்டு ஆய்விதழை அறிமுகம் செய்து பேசினார். சங்ககாலத் தமிழரின் வாழ்வியல் எனும் தலைப்பில் பேசிய முனைவர் இரா.பிரபாகரன் அவர்கள், பல சங்ககாலப் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். சங்ககாலம் பொற்காலமே எனும் தலைப்பில் பேசிய பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். முனைவர் இளங்கோவன் அவர்கள், சிலப்பதிகாரத்தில் இசை நுணுக்கம் எனும் தலைப்பில் தன் இசை ஞானத்தோடு பேசியது சிறப்பாக அமைந்தது. கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் திரைப்படப் பாடல்கள் குறித்துப் பேசினார். முனைவர் சு.பழனியப்பன் அவர்கள், பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் சங்ககாலப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு, ஆகச்சிறந்த ஆய்வுப் படைப்பினைத் தன் பேச்சில் வெளிப்படுத்தினார். சங்ககாலத் தமிழர் வாழ்வில் சாதியமைப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நகர்ச்சில்லுகள் மூலம் திறம்பட எடுத்துரைத்தார். திரு.துரை எழில் விழியன் அவர்கள், ’இரந்தும் ஈத்துவக்கும் இன்பம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

முடிவில், இணை ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான முனைவர் சுந்தர வடிவேலு அவர்கள் நன்றி கூறினார் .

Student induction student induction is normally thought of as being the first week of the academic year, but some induction processes https://www.homework-writer.com need to extend for the whole of the first term or semester, or the first level of study

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “வட அமெரிக்க தமிழ் விழா”
  1. Thiags says:

    The article reflects only what happened on that event. If it talks about some of the important inside speech aspects, it would have been great.

அதிகம் படித்தது