அண்டிய வண்டலை நீக்கினால் நீளும் ஆறுகளின் நீர் வளம்!
ஆச்சாரிAug 1, 2012
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். இன்றைய தமிழக நீர் நிலைகளின் நிலைமை நாளுக்கு நாள் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. நீர்த் தேக்கங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக நம் தமிழ்நாட்டின் நீராதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்றைய நிலையில் தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்குக் கிடக்கப் பெறும் நீர் வள அளவு மிகவும் குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா காவிரியிலும், ஆந்திரா பாலாற்றிலும் உரிய நீரளவை வழிவிடாமல் தடுக்கிறது. இன்னும் ஒருபடி மேலேபோய் கேரளா அரசு முல்லைப் பெரியாற்றிலும் நெய்யாற்றங்கரை வலது கால்வாயிலும் நமக்குக் கிடைக்கக் கூடிய நீரளவைத் தர மறுத்து வருகிறது.
எப்போதும் போல பெய்யும் மழை அளவும் இந்த ஆண்டு குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் பெரும் தொழிற்சாலைகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பாட்டிலில் நீரை அடைத்து கொள்ளை விலையில் விற்பதும் மிகுதியாகி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டுமானங்கள் பல மடங்கு பெருகியுள்ளன. மேலும் மேலும் விரிவடைந்தும் வருகின்றன. எனவே இந்தக் கட்டுமானங்களுக்குத் தேவைப்படும் மணலின் (ஆற்று மணல்) அளவு நாளொரு மேனியும் பொழுதொரு குடியிருப்புமாகவே மாறி வருகிறது.
மணல் உருவாக பல நூறு ஆண்டுகள் தேவைப்படுவதாக மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஆற்றுப் படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. ஆனால் இப்போது மணல் சூறைதான் நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.
இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் செல்வம் வாரி வழங்கப்படுகிறது. ஆற்று மணலை விற்பதாலும் அதன்மூலம் நீர் வளத்தையும் சுற்றுச் சூழலையும் கெடுத்து வருவதும் யார் தவறு? மணல் கொள்ளையர்களின் தவறு மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் காரணம். கட்டுமானங்கள் தின்னும் ஆற்று மணலை பாதுக்காக எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உதாரணமாக வண்டல் மண். வேகமாக ஓடும் ஆற்றின் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது மண், ஆற்றின் அடியில் படிந்துவிடும். இதுதான் வண்டல் மண் என்று கூறுகிறார்கள். இந்த வண்டல் மண்ணை கட்டிடங்கள் கட்ட ஓரளவு பயன்படுத்தலாம் என்கிறார்கள் சிலர்.
அகில இந்தியக் கட்டுநர் சங்கம் (தென்னக மையம்) ஓர் கருத்துருவை அரசின் உடனடி கவனத்திற்கு கொண்டுசெல்ல முயல்கிறது. அவர்கள் முன்வைக்கும் கருத்து இதுதான்-
“தமிழகத்தில் உள்ள பெரிய அணைக் கட்டுகளிலும் நீர்த் தேக்கங்களிலும் ஆண்டாண்டு காலமாக வந்து படிந்து மேடிட்டுள்ள பயன்படாத வண்டல் மண்ணை முறைப்படுத்தி (தூய்மைப்படுத்தியும் வகை பிரித்தும்) மணலின் தேவையை பெருமளவுக்குச் சரிக்கட்டலாம். அத்துடன் நீர்த் தேக்கங்களில் உள்ள பயன்பாடு நீரின் கொள்ளளவையும் மேம்படுத்தலாம்.
அரசிற்கு செலவில்லாமல் வருவாயைப் பெருக்கலாம். இதற்கு பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரப் பிரிவின் ஒப்புதலோடும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமுதாய தொண்டு நிறுவனங்களின் கண்டிப்பான கண்காணிப்போடு தனியார் நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்களுக்கு உரிமம் வழங்கலாம். இதற்காக இவர்களுக்கு ஆகும் செலவு போக எடுக்கும் வண்டல் மண்ணின் அளவுக்கு (ஒரு கன மீட்டருக்கு) ஒரு குறிப்பிட்ட தொகையினை தனியார் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் இதற்குரிய வெளிப்படையான தெளிவான வழிகாட்டி நெறிகள் வகுக்கப்பட்டு பொறுப்போடு கடைப்பிடிக்க வேண்டும்”
அந்த அமைப்பு சொல்கிறபடி செய்தால், இது சரியான, பயனான கருத்துரையே என்று கருதவேண்டியுள்ளது. அவர்கள் கூற்றுப்படி செய்தால் பயன்கள் இரண்டு கிடைக்கிறது.
ஒன்று: தமிழ்நாட்டின் பெரிய நீர்த் தேக்கங்களில் உள்வந்து படிந்து மேடு கட்டியிருக்கும் வண்டல் மண்ணை வெளியே எடுத்தால் இவற்றின் கொள்ளளவு பதினைந்து சதவிகிதம் முதல் இருபது சதவிகிதம் வரை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெள்ளக் காலங்களில் நீரைத் தேக்கிவைக்கவும் முடியும். இதனால் வெள்ளச் சேதங்களைத் தடுப்பதோடு கிடைக்கும் நீரை பாசன வசதிக்கும் குடிநீர் வழங்கலுக்கும் பயன்படுத்தலாம்.
இரண்டு: பெரிய நீர்த் தேக்கங்கள், அணைக் கட்டுகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை வெளி எடுப்பதால் கட்டுமானங்களுக்கான ஆற்று மணல் தேவையினை சில ஆண்டுகளில் பெருமளவு குறைக்க முடியும்.
மக்கள் தண்ணீரைத் தங்கள் பண்ணைகளிலிருந்து வடிப்பதற்காக, வெள்ளத் தடுப்புச் சுவர்களை அங்குமிங்குமாக உடைக்கத் தொடங்கினர். வண்டல் மண் நிலத்தில் பரவ வாய்ப்பில்லாமல், நதிப்படுகையிலேயே தங்கியதால் நதியின் கொள்ளளவு குறைந்தது. கட்டுமானர் அமைப்பு சொன்ன இந்த வழிமுறைகளால் இன்றைய சுற்றுச் சூழல் எந்த அளவுக்கும் பாதிக்கப்படப்போவதில்லை. இதைப்போலவே தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள், கண்மாய்களில் தூர்வாரி கிடைக்கும் ஆழப்படுத்தும் வெட்டு மண்ணை தேவைப்படுவோருக்கு விற்கலாம். எனவே வண்டல் மண்ணை தூர்வாரி ஆறு, அணைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தினால் என்ன? தமிழகம் முழுதும் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை தூய்மைப் படுத்தினால் ஆற்று மணல் தேவை குறைய வாய்ப்பு ஏற்படும். இதனால் ஆறுகளும் வளமாக இருக்கும். நீர் கொள்ளளவு அதிகரித்து வெள்ளப் பெருக்கும் தடுக்கப்படும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அண்டிய வண்டலை நீக்கினால் நீளும் ஆறுகளின் நீர் வளம்!”