மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வன்னி எலி – குறும் பட அலசல்

ஆச்சாரி

Mar 1, 2012

என்ன தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதே என்று படத்தைப் பார்க்க ஆவலாயினேன்.
படமும் சற்றே விசித்திரமான படம்தான், காரணம் – படத்தின் நாயகன் எலி தான்! எலி என்றதும் ஆச்சர்யத்தில் புருவங்கள் நெளிந்தன. படம் பார்த்து முடித்ததும் கண்கள் கசிந்தன; நெஞ்சம் கனக்கிறது; எல்லா படங்களையும் திரையில் காண்பிப்பார்கள்தானே. படம் முழுக்க திரை மறையில் நடக்கும் அநியாயத்தையும் , மனிதஉரிமை மீறல்களையும் ஒரு புத்தம் புதிய சிந்தனையில் அணுகி இருக்கிறார் இயக்குனர் தமிழியம் சுபாஷ். இப்போது படத்திற்குள் நுழைவோம் .

ஓர் இருண்ட சூழல் – அது அகதி முகாம் . திரை கட்டியிருக்கிறார்கள். எலிகள் இரண்டு தனது பயணத்தை திரைக்குப் பின்னால் ஆரம்பிக்கிறது . எலிகள் – ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போது , அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் நெஞ்சை உலுக்குகின்றன . இவையாவும் திரைக்குப் பின்னால் நடப்பதால் நாம் ஒலியை மட்டும்தான் கேட்க முடியும். சோகமே வழிந்து ஓடும் அந்த முகாமில் , ஒரு பச்சிளம் குழந்தை தன் தாயிடம் பசிக்கு சோறு கேட்கிறது. ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத அந்த முகாமில் – தாய் காலை வரை பொறுத்துக்கொள் என சமாதானப்படுத்துகின்றாள்.

அடுத்த இடம் நோக்கி எலிகள் செல்கின்றன . அங்கே, ஒரு குழந்தை சிங்களத்தில் பாடுகிறது , அந்த மொழித் திணிப்பை உணராத சிறுமியிடம் , தாய் அவ்வாறு பாட வேண்டாம் எனப் பணிக்கின்றாள். இது அவர்களிடத்தில் தாய் மொழியைக் குறைத்து வேற்று மொழி பலாத்காரமாக ஊருடுவிடுகிறது என்பதை நாசுக்காக காட்டுகின்றார் இயக்குனர்.

எலி அடுத்த இடத்திற்கு நோக்கி நகர்கிறது . அங்கே, தம்மை மனிதகுலம்தான் கைவிட்டுவிட்டது , குறைந்தபட்சம் தெய்வமாவது காக்குமா ? என பிரார்த்தனை செய்கிறார்கள்.

அடுத்த இடம் – பயத்தின் சாரம் உறைந்த ஒருவர் , ராணுவத்தினர் வந்திடுவார்களோ என்ற பயத்திலேயே அலைபேசியில் பேசுகின்றார். இது அவர்களின் பயம் இன்னும் சற்றும் குறையவில்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது.

எலியின் அடுத்த நகர்வு – அந்த இடத்தில் நடக்கும் கொடூரம் நம்மை எல்லாம் உறைய வைக்கின்றது . கால் இழந்த அப்பாவி ஒருவரை, போராளி கூட்டத்தைச் சேர்ந்தவன் தானே நீ – என ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக அடிக்கின்றனர் . அவரின் மரண ஓலம் நம்மை உலுக்குகின்றது. கடைசியாக ஒரு பெண்ணை ராணுவக் கூட்டத்தினர் வன்புணர்வு செய்வது நம்மை உறைய வைப்பது மட்டுமில்லாமல் – இப்படியும் மானுடர்களா ? இதைக் கண்டு கொள்ள யாருமே இல்லையா என நம் மனது குமுறுகின்றது . ராணுவத்தினர் இப்படி ஒரு காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றிவிட்டு, அவர்கள் எலியை தாண்டி அடுத்த இடத்திற்கு வெளியேறுகிறார்கள்.

அப்போது தான் நமக்கு உரைக்கிறது. இந்த மானுடம் குலமும் அந்த எலி செய்ததைத்தான் செய்தது என்று . ஆம் – என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும் , தெரிந்தும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கினோம்.

இது அனைவரின் மனதிலும் நெருடியதால் தான் இந்தப் படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது . ஒரு எலியை வைத்து செய்தியை சொல்லும் இது ஒரு புதிய முயற்சி . புதிய சிந்தனைகள் மட்டுமே ஒரு நாட்டை உயிர்ப்பிக்கும் என்பதை இயக்குனர் உணர்ந்திருக்கிறார் . படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வன்னி எலி – இது பெரும் சோகத்தின் எதிரொலி .

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “வன்னி எலி – குறும் பட அலசல்”
  1. siraku rasikan says:

    அருமையான விமர்சனம்

அதிகம் படித்தது